Published:Updated:

ஜெ.ஜெயலலிதா என்னும் நான்... - அம்மாவின் கதை! - 1

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
ஜெ.ஜெயலலிதா என்னும் நான்... - அம்மாவின் கதை! - 1
ஜெ.ஜெயலலிதா என்னும் நான்... - அம்மாவின் கதை! - 1

எஸ்.கிருபாகரன் புதிய தொடர்

பிரீமியம் ஸ்டோரி

ரை நூற்றாண்டு காலம் திரையுலகிலும் அரசியலிலும் மின்னிய ஜெயலலிதா என்ற நட்சத்திரம் மறைந்துவிட்டது. 

ஆண்களே ஆதிக்கம் செலுத்திய துறைகளில் ஒரு பெண் பரபரப்பாக இயங்கி, வெற்றிக்கோட்டையில் பெருமிதமாக வீற்றிருந்தார் என்பது பெரும் வியப்பு. துணிச்சல், மிடுக்கு, யாருக்கும் எதற்கும் வளைந்து கொடுக்காத கம்பீரம்... இதுதான் ஜெயலலிதா!

புறம் பேசமாட்டார்... பரபரப்புப் பத்திரிகையாளர் களிடம் பத்தடி தள்ளியே இருப்பார்... ஷாட் முடிந்த  அடுத்த நொடியே மேக்கப் கலைத்து, கார் நிற்கும் போர்டிகோவை நோக்கி அவர் கால்கள் விரையும். இதுதான் நடிகை ஜெயலலிதா!

ஜெ.ஜெயலலிதா என்னும் நான்... - அம்மாவின் கதை! - 1

1968-ம் ஆண்டு, வார இதழ் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், `உங்களிடம் உள்ள கெட்ட குணம் எது?' என்ற கேள்விக்கு தயக்கமே இன்றி, இப்படி பதில் சொன்னார் - “என் முன்கோபம். அதைக் கட்டுப்படுத்த நினைக்கிறேன்... முடியவில்லை. எனக்குப் பிடிக்காத விதத்தில் நடந்துகொள்கிறவர்களை என்னால் மன்னிக்க முடியவில்லை. பொய் பேசுபவர்கள், எனக்கு விரோதமாக நடந்துகொள்கிறவர்கள் மீது பெரும் கோபம் வருகிறது. வருங்காலத்தில் அதை கட்டுப்படுத்த நினைக்கிறேன்.”

மனதில் பட்டதை பளிச்சென கூறும் துணிச்சல் எப்போதும் ஜெயலலிதாவுக்கு உண்டு!

`உங்களை கர்வம் பிடித்தவர் என சொல்கிறார்களே?' என்ற கேள்விக்கு அவர் அளித்த பதில் இன்னும் ஆச்சர்யம்.

“பெரிய கம்பெனி படங் களில் பெரும்பாலும் பெரிய கதாநாயகர்கள் தான் நடிப்பார் கள். அந்தப் படங்களில் அவர்களின் சர்வாதிகாரம் கொடி கட்டிப் பறக்கும். அவர்களை முகஸ்துதி செய்து நடக்க வேண்டும். எனக்கோ, மற்றவர் முன் கை கட்டி அடங்கி நடக்கும் இயல்பு ஒருபோதும் கிடையாது.

எனக்கென ஒரு தனித்தன்மை இருக் கிறது. பிடித்தவர்களுடன்தான் பேசுவேன். பிடிக்காதவர்களிடமிருந்து ஒதுங்கிவிடுவேன். நான் உண்டு, என் வேலை உண்டு என்று ரிசர்வ்டாக இருப்பேன். இதனால் என்னைக் கர்வம் பிடித்தவள் என்பார்கள். அதைப் பற்றி நான் கவலைப்படுவதில்லை!”

இந்தப் பேட்டி, ஜெயலலிதா திரையுலகில் கொடிகட்டிப் பறந்த காலகட்டத்தில் அளித் தது. இப்படிப் பேசுவது தனது திரையுலக வாழ்க்கையைப் பாதிக்கும் என்ற கவலையெல்லாம் அவருக்கு இல்லை. தன் திறமை யின் மீது நம்பிக்கையும், எவரை யும் எதிர்கொள்ளும் துணிச்சலும் அவருக்கு உண்டு!

ஜெ.ஜெயலலிதா என்னும் நான்... - அம்மாவின் கதை! - 1

ஜெயலலிதாவுக்கு இப்போது கிடைத்துள்ள புகழ், பெருமை எல்லாம் ஒரே நாளில் கிடைத்தததல்ல... அதற்கான விலை அதிகம். அரசியல் உலகில் அவர் சந்தித்த அவமானங்கள் இன்னும் அதிகம். எந்தத் தாக்குதலையும் தனக்கான பலமாகவே மாற்றிக்கொள்ள அவரது இயல்பான துணிச்சல் உதவியது. அதுதான் பின்னாளில் அவர் பெற்ற வெற்றிகளுக்கு காரணமானது.

ஸ்ரீரங்கத்தை பூர்வீகமாகக் கொண்டவ ரானாலும் ஜெயலலிதாவின் தாய்வழிக் குடும்பம் நெல்லூரில் வசித்தது. ஜெயலலிதாவின் தாய்  சந்தியாவோடு (அப்போது அவரது பெயர் வேதவல்லி) பிறந்தவர்கள் 3 பேர். சீனிவாசன், அம்புஜா என்கிற வித்யாவதி மற்றும் பத்மா. சந்தியாவின் பெற்றோர் ரங்கஸ்வாமி ஐயங்கார் - கமலம்மாள். பின்னாளில்,  சூழல் காரணமாக நெல்லூரிலிருந்து சந்தியாவின் குடும்பம் பெங்களூருக்கு இடம்பெயர்ந்தது. சந்தியாவின் தந்தை இந்துஸ்தான் ஏரோநாடிகல் நிறுவனத்தில் கடைநிலை ஊழியராகச் சேர்ந்தார்.  சந்தியாவுக்கு 14 வயதாகும்போதே திருமண ஏற்பாடு நடந்தது. அன்றைய மைசூர் மகாராஜா கிருஷ்ணராஜேந்திர உடையாரின் அரண்மனை மருத்துவர் ரங்காச்சாரி, தன் மகன் ஜெயராமுக்காக பெண் கேட்டு வந்தார். ஜெயராம் - சந்தியா திருமணம் சிறப்பாக நடைபெற்றது.

பிற்காலத்தில் ஜெயலலிதாவிடம் பலரும் பாராட்டிய `எல்லாவற்றிலும் நேர்த்தி' குணத்துக்கு விதை போட்டது, அவருடைய தாத்தா ரங்காச்சாரிதான். எல்லாவற்றிலும் பர்ஃபெக்‌ஷனிஸ்ட் ரங்காச்சாரி. அரண்மனை போன்ற அவரது வீட்டைப் பராமரிப்பதற்காகவே நிறைய வேலைக் காரர்களை அமர்த்தியிருந்தார். துரதிர்ஷ்ட வசமாக அவரைக் காணும் பாக்கியம் ஜெயலலிதாவுக்குக் கிடைக்கவில்லை. (பின்னா ளில், தன்னிடம் உள்ள பல குணங்கள் தாத்தா
விடமிருந்து வந்தததாக தாயார் சொல்லக்கேட்டு பெருமைப்பட்டிருக்கிறார் ஜெயலலிதா).

16 வயதிலும் குழந்தைத்தனமாகவே இருந்த சந்தியாவுக்கு, அந்த வீட்டிலிருந்த பெரிய நூலகம்தான் பல திறமைகளை வளர்த்துவிட்டது. ஓரளவு பக்குவமும் ஏற்பட்டது. இதற்கிடையே சந்தியாவுக்கு முதல் ஆண் குழந்தை (ஜெயக்குமார்) பிறந்தது.

ஜெ.ஜெயலலிதா என்னும் நான்... - அம்மாவின் கதை! - 1

ரங்காச்சாரியின் மறைவுக்குப் பிறகு, சந்தியாவின் வாழ்க்கை ஆட்டம் காணத் தொடங்கியது. ஜெயராம் திசை மாறத் தொடங்கினார். தந்தையின் செல்வச் செழிப்பில் திளைத்து, வேலைக்குச் செல்ல மறுத்த ஜெயராம், எந்நேரமும் சுகபோகத்தில் மூழ்கத் தொடங்கினார். இந்த நேரத்தில் சந்தியாவுக்கு இரண்டாவது குழந்தை பிறந்தது. பெண்குழந்தை... ஆம்... ஜெயலலிதா பிறந்தார்! வீட்டில் தாய்வழிப்பெயராக `கோமளவல்லி' என்றே அழைத்தனர்.

மகள் பிறந்த பிறகும் ஜெயராமின் நடத்தையில் மாற்றமில்லை. குழந்தைகளின் எதிர்காலம் குறித்து கொஞ்சமும் அலட்டிக் கொள்ளவில்லை. டிப்டாப் உடை அணிந்து காலையில் கிளப்புக்குச் சென்றால், வீடு திரும்ப நள்ளிரவாகிவிடும். பல நேரங்களில் மறுநாள்தான் வருவார்.  சில ஆண்டுகளிலேயே தந்தையின் சொத்துகளில் பெருமளவை செலவழித்தார். கடைசியாக மிஞ்சியது இரு  சிறிய வீடுகள்தான். மகனையோ, மகளையோ அவர் கொஞ்சியதுகூட கிடையாது (அதனால்தானோ என்னவோ, தாயின் மீது ஜெயலலிதாவுக்கு அதிக பாசம். பின்னாளிலும் தந்தையைப் பற்றி அதிகம் பேசியதில்லை).

வறுமை சூழ ஆரம்பித்ததை உணர்ந்த சந்தியா கணவரிடம் குழந்தைகளின் எதிர் காலம் குறித்து மன்றாடினார். தவறை உணர்ந்தாலும்கூட, வாழ்வின் பெரும்பகுதியை கேளிக்கைகளில் கழித்துவிட்ட ஜெயராமினால், தன்னை சரிப்படுத்திக் கொள்ள முடியவில்லை. ஆனால், ஒரு கட்டத்தில் மெள்ள மெள்ள தவறுகளை திருத்திக்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. மீண்டும் தொழிலில் ஈடுபாடு காட்டினார். சந்தியாவுக்கு நம்பிக்கை பிறந்தது. இந்தச் சூழலில் சந்தியா எதிர்பாராத சம்பவம் ஒன்று நிகழ்ந்தது... அது ஒட்டுமொத்தக் குடும்பத்தின் சந்தோஷத்தையும் புரட்டிப்போட்டது.

(அம்முவின் கதை அறிவோம்...)

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு