Published:Updated:

ஜெ.ஜெயலலிதா என்னும் நான்... - அம்மாவின் கதை! - 2

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
ஜெ.ஜெயலலிதா என்னும் நான்... - அம்மாவின் கதை! - 2
ஜெ.ஜெயலலிதா என்னும் நான்... - அம்மாவின் கதை! - 2

மெரினா நினைவுகள்எஸ்.கிருபாகரன்

பிரீமியம் ஸ்டோரி

“சென்னையில் எனக்கு மிகவும் பிடித்த இடம் மெரினா. 4 வயதில் சென்னைக்கு முதன்முதலாக வந்தபோது, சித்தி வித்யாவதியுடன் அடம்பிடித்து மெரினா பீச்சுக்குச் சென்றேன்...”

- மனம் திறந்த ஒரு பேட்டியில் ஜெயலலிதாதான் இப்படிச் சொல்லியிருந்தார்.  அரை நூற்றாண்டு காலத்துக்குப் பின், லட்சக்கணக்கான மக்கள் கதறி நிற்க...  ராணுவ மரியாதையுடன் கௌரவமாக, தற்போது அடக்கம் செய்யப்பட்ட மெரினாவில் நின்றபடிதான், அன்று ஜெயலலிதா தனக்குப் பிடித்தமான கடலின் அழகை ரசித்துக்கொண்டிருந்தார்.

ஜெ.ஜெயலலிதா என்னும் நான்... - அம்மாவின் கதை! - 2

மொத்தக் குடும்பத்தைப் புரட்டிப்போட்ட அந்த ஒரு நிகழ்வு மட்டும் இல்லாமல் போயிருந்தால், அன்பான கணவர், அழகான குடும்பம், மணிமணியாக சில குழந்தைகளுக்கு மட்டுமே அம்மாவாக, ஒரு நடுத்தர குடும்பத்து நங்கையாக ஜெயலலிதா வாழ்ந்திருப்பார்... வரலாற்றின் பக்கங்களில் இடம்பெறாமலே போய் இருப்பார். ஆனால், வாழ்வை வழிநடத்துவது விருப்பங்கள் மட்டும் அல்லவே!

அந்த நிகழ்வுக்கு வருவோம்... தன் தவறுகளை உணர்ந்து மெள்ள மெள்ள இயல்பு வாழ்வுக்கு திரும்பிக்கொண்டிருந்தார் ஜெயலலிதாவின் தந்தை ஜெயராம். ஆனாலும், பொருளாதாரச் சிக்கல் குடும்பத்தை வதைக்கத் தொடங்கியது. ஓரிரு நாட்களில் எல்லாச் சிக்கல்களுக்கும் தீர்வோடு வருவதாகக் கூறி, மனைவி மற்றும் பிள்ளைகளை பெங்களூருக்கு வழியனுப்பிவைத்தார். மனம் திருந்திய கணவரால் தன் வாழ்க்கையில் வசந்தம் வீசப்போவதாக எண்ணி, அன்றிரவு நிம்மதியாக உறங்கப்போனார் சந்தியா. வீசியது வசந்தம் அல்ல... வர்தாவைப் போன்ற புயல்!

இரண்டு தினங்களில் திரும்பிவந்தது ஜெயராம் அல்ல; அவரது உடல்!

நள்ளிரவில் லாந்தரை வைத்துக்கொண்டு உறவினர்கள் வாசலில் காத்துக்கிடக்க, சிவப்பு நிற சேலையில் மகள் அம்முவை மடியிலும், மகன் ஜெயக்குமாரை கையிலும் தாங்கிப்பிடித்தபடி, வழிந்த கண்ணீருடன் எதிர்காலம் புலப்படாத வெறுமையான ஓர் உணர்ச்சிக் கொந்தளிப்பில் சந்தியா உறைந்து நின்றார். இருளைக் கிழித்தபடி வந்து நின்ற கறுப்பு காரில் வெள்ளையாகச் சுற்றப்பட்ட உடல் இறக்கப்பட்டது. அடுத்த நொடி அங்கு எழுந்த கதறல் ஒலி, அந்தப் பகுதியையே நடுங்கச் செய்தது. தாயை இன்னும் இறுகப்பிடித்துக் கொண்டார்  சிறுமி அம்மு. ஏதோ நடந்திருப்பது புரிந்தது. அழுகை பீறிட்டது. அது தந்தையின் மரணம் தந்த அதிர்ச்சி அல்ல... இதுவரை தன் தாய் இப்படி அழுததில்லையே என்ற விநோத பயம். முடிந்தது, எல்லாம் முடிந்தது!

ஜெயராமின் எதிர்பாராத மரணம் தற் கொலையா, கொலையா என்கிற ஒரு வழக்கு பல ஆண்டுகளாக நடந்தது தனிக்கதை. `வாழ்க்கையில் என்னைப் பாதித்த முதல் சம்பவம்' என தந்தையின் இறப்பை பின்னாளில் ஒரு பேட்டியில் பதிவுசெய்தார் ஜெயலலிதா.  “உண்மையில் என் தந்தை தற்கொலைதான் புரிந்துகொண்டார் என்றால் நிச்சயம் அவர் எடுத்த முடிவு கோழைத்தனமான - சிறிதும் பொறுப்பற்ற, நியாயமற்ற செயல் என்றே கருதுகிறேன்...” - பொறுப்பற்ற தந்தையின் எதிர்பாராத மரணத்தால் தனது குடும்பத்தின் நிம்மதி குலைந்து தாங்கள் அலைக்கழிய நேரிட்டதால் அவர் மனதில் ஏற்பட்ட ரணங்களே இப்படி வார்த்தைகளாக வெளிப் பட்டன.

ஜெ.ஜெயலலிதா என்னும் நான்... - அம்மாவின் கதை! - 2

ஜெயராமின் மரணத்துக்குப்பின் குடும்பச் சூழல் இன்னும் இடியாப்பச் சிக்கலாகிவிட, இரு குழந்தைகளுடன்  மீண்டும் பிறந்தகத்துக்கே திரும்பினார் சந்தியா. தங்கை வித்யாவதி, சந்தியா குடும்பத்தின் பொருளாதாரச் சிக்கலை சமாளிக்க  உதவினார். சந்தியாவும் அப்போது இன்கம்டாக்ஸ் அலுவலகத்தில் பணியாற்றி வந்தார். இந்த நேரத்தில்தான் சந்தியாவுக்கு சினிமா வாய்ப்பு தேடி வந்தது. கெம்பராஜ் என்பவர் எடுக்கவிருந்த திரைப்படத்துக்கு கதா நாயகி  தேடிக்கொண்டிருந்தார். தற்செயலாக சந்தியா ஒருநாள் அவர் கண்ணில்பட, `கண்டேன் கதாநாயகியை' என அவரிடமே நேரில் கேட்டுவிட்டார். 

மனதில் பட்டாம்பூச்சி பறந்தாலும் ஆசா ரமான குடும்பப் பின்னணியையும், கறார் தந்தையையும் நினைத்துப்பார்த்த சந்தியா, `வீட்டில் கேட்டுச் சொல்கிறேன்' என்று  கூறிவிட்டார். தந்தையிடம் தகவலைச் சொல்ல, அவர் போட்ட கூச்சலில் வீடு இரண்டாகிவிட்டது. பறந்துகொண்டிருந்த பட்டாம்பூச்சிகள் பயந்து பதுங்கிக்கொண்டன. துவண்டு போனார் சந்தியா. ‘கற்கோட்டை’ என்ற அந்தப் படத்தில் கதாநாயகியாக வேண்டிய சந்தியாவின் மனக்கோட்டை தகர்ந்தது.

ஜெயலிதாவுக்கு அப்போது மூன்றரை வயது. வீட்டுக்கு அருகிலிருந்த பள்ளியில் கிண்டர் கார்டன் வகுப்பில் சேர்க்கப்பட்டார். பின்னாளில் நுனிநாக்கில் ஆங்கிலம் பேசும் திறனும், ஆழ்ந்த அறிவுத்திறமையோடும் திகழ்ந்த ஜெயலலிதா, பள்ளியில் சேர்க்கப்பட்ட நாளில் செய்த அமர்க்களம்  கொஞ்சநஞ்சமல்ல. தாய், தந்தை, தாத்தா, பாட்டி, சித்திகள் புடைசூழ செல்லமாக வளர்ந்த ஜெயலலிதாவுக்கு பள்ளி என்பது சிறைவைத்தது போலாகிவிட்டது. சிலபல நாட்கள் அழுது தீர்த்துவிட்டார்.

ஜெ.ஜெயலலிதா என்னும் நான்... - அம்மாவின் கதை! - 2

சென்னையில் தங்கியிருந்து விமானப் பணிப் பெண்ணாக பணியாற்றிக்கொண்டிருந்தார் அவருடைய சித்தி வித்யாவதி. பணிக்கேற்றபடி நுனிநாக்கு ஆங்கிலம், பாப் தலை, முழங்கால் வரை ஏறிய உடை என நவநாகரிகத் தோற்றத்தில் ஒரு சினிமா நடிகை போன்றே இருப்பார். மிகத் துணிச்சலானவரும்கூட!

குடும்பத்துக்கு விரோதமான இந்தத் தோற்றத்தினால் கோபமடைந்த அப்பா ரங்கஸ்வாமி, அவரை வீட்டிலேயே சேர்க்க மறுத்து விட்டார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். ஒருவகையில் ஜெயலலிதாவின் துணிச்சல் குணத்துக்கு சித்தி வித்யாவதிகூட ஆதர்சமாக இருந்திருக்கலாம்.

வித்யாவதி பெங்களூரு வரும் தகவல் கிடைத்தால், வீட்டில் உணவு சமைத்து விமான நிலையத்துக்குக் கொண்டு செல்வார் சந்தியா. அம்முவும் உடன் செல்வார். அப்படி ஒரு சந்திப்பில் ‘அம்முவை என்னோடு அனுப்பி வையேன்’ எனக் கேட்டார் வித்யாவதி. சாதாரணமாகவே, வித்யாவதி எங்கேயாவது தனியாக அழைத்துச் சென்றால் குஷியாகி விடுவார் அம்மு. காரணம் சாக்லேட், கேக், ஐஸ்க்ரீம், விதவிதமான உடைகள்... இப்படி எதை கேட்டாலும் வாங்கித்தருவார்  வித்யாவதி. இப்போது சென்னை... அதுவும் இரண்டு நாட்களுக்கு.

மகளின் ஆசைக்கு தடை போடவில்லை சந்தியா. தலையசைத்துவிட்டார். மனதில் ஆயிரம் கனவுகளுடன் சித்தியுடன் சென்னை புறப்பட்டார் அம்மு.

மெரினா பீச், ரெஸ்டாரன்ட்டுகளில் வித விதமான உணவு, பிரபல துணிக்கடைகளில்  புதுப்புது நிறங்களில் உடைகள் என அம்முவை பிரமிக்க வைத்தார் வித்யாவதி. சென்னையில் அவரைக் கவர்ந்த இடம் மெரினா கடற்கரை. அந்த 2 நாட்களில் சித்தியுடன் பலமுறை மெரினாவுக்கு சென்று அதன் அழகை ரசித்து மகிழ்ந்தார். முன்பே சொன்னதுபோல இதுதான் விதியின் விளையாட்டு!

(அம்முவின் கதை அறிவோம்...)

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு