Published:Updated:

ஜெ.ஜெயலலிதா என்னும் நான்... - அம்மாவின் கதை! - 3

ஜெ.ஜெயலலிதா என்னும் நான்... - அம்மாவின் கதை! - 3
பிரீமியம் ஸ்டோரி
News
ஜெ.ஜெயலலிதா என்னும் நான்... - அம்மாவின் கதை! - 3

சென்னையும் சித்தியும்எஸ்.கிருபாகரன்

ஜெ.ஜெயலலிதா என்னும் நான்... - அம்மாவின் கதை! - 3

சென்னையில் இரண்டு நாட்கள்... அம்முவுக்கு மிகவும் பிடித்துப் போயிருந்தது. மற்ற எல்லாவற்றையும்விட சித்தி வாங்கித்தந்த உடைகள். அவற்றை அணிந்து அணிந்து பூரித்துப்போனார். ஆம்... விதவிதமான உடைகள் அணி வதில் அந்த நாளிலிருந்தே அம்முவுக்கு விருப்பம் அதிகம். விசேஷங்களுக்கு டஜன் கணக்கில் உடைகளை வரவழைத்து, மகளை மகிழ்ச்சிப்படுத்துவார் சந்தியா.  உடைகளின் மீதான ஆசை இறுதிவரையிலும் அவருக்கு இருந்தது. “விதவிதமான துணிமணிகள் அணிவது என் வீக்னஸ்” என்று ஜெயலலிதா ஒரு பேட்டியிலும் தெரிவித்துள்ளார்.

படப்பிடிப்புக்காக உள்நாடு,  வெளிநாடு  என  எங்கு சென்றாலும் ஓய்வுநேரத்தில் அங்குள்ள பாரம்பர்ய துணிக்கடைகளுக்குத்தான் விஜயம் செய்வார். தனக்கான உடைகளில் மட்டுமல்ல... ‘கர்ட்டன்’ துணிகளிலும்கூட கவனம் செலுத்துவார். வேதா நிலையத்தின் அழகழகான கர்ட்டன் துணிகள் பல ஆண்டுகளாக கொல்கத்தா வில் உள்ள ஒரு துணிக்கடையில்தான் வாங்கப்பட்டன.

தன் வாழ்நாளில் விதவிதமாக உடைகள் மூலம் தன்னை அலங்கரித்துக் கொள்வதை ஒரு குழந்தைபோல ரசித்து அனுபவித்த ஜெயலலிதா, தனக்கு அணிவிக்கப்பட்ட ஒரே ஓர் உடையை மட்டும் கண்டு மகிழ முடியாதவராகிப்போனார். அது ராணுவ மரியாதையுடன் இறுதியாக அவர் உடல் மீது போர்த்தப்பட்ட தேசியக் கொடி. ஒரு பெண்ணாக அரசியல் உலகில் தனித்துவத்துடன் இயங்கிய அவருக்கு, இந்தத் தேசம் அளித்த மாபெரும் கவுரவம் அது.

சரி... சென்னைக்கு வருவோம்.

சென்னையைச் சித்தியுடன் கொண் டாடித் தீர்த்த அம்மு, பெங்களூரு செல்லும் நாளும் வந்தது. ஊருக்குத் திரும்புவதில் துளியும் விருப்பமில்லை அந்தக் குட்டிப்பெண்ணுக்கு. வலுக்கட்டாயமாக பெங்களூரு சென்றார். ஆனால், சென்னைக்கும் அவருக்குமான பந்தம் அதோடு முடியவில்லை என்று சொல்லாமல் சொல்லி விதி சிரித்தது.

ஜெ.ஜெயலலிதா என்னும் நான்... - அம்மாவின் கதை! - 3

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

அம்முவின் குடும்பத்தில் சந்தியா வும் ஜெயலலிதாவும்தான் நாமறிந்த திரைக்கலைஞர்கள். உண்மையில் ஜெயலலிதா குடும்பத்தில் முதன்முதலாகத் திரைப்பிரவேசம் நிகழ்த்தியது வித்யாவதிதான். விமானப் பணிப்பெண்ணாக இருந்த வித்யாவதிக்கும் சினிமா ஆசை இருந்தது. தீவிரமாக வாய்ப்புத்தேடி வந்தார். அவரது தோற்றப் பொலிவுக்கு அந்த வாய்ப்பு எளிதாகவே கைகூடியது. சிறுசிறு வேடங்களில் நடித்துவந்த அவருக்கு 1953-ம் ஆண்டு சித்தூர் வி.நாகையா இயக்கி நடித்த `என் வீடு’ திரைப்படம் பெரும் புகழை அளித்தது.

‘என் வீடு’ படத்தின் கதை இதுதான். சமூகத்தில் பெரும் மதிப்பும் மரியாதையும் அந்தஸ்துடன் வாழ்ந்துவருபவர் பேங்கர் சிவராமன். மனைவி ராஜகுமாரி மற்றும் இரண்டு பிள்ளைகளுடன் மகிழ்ச்சியாக வாழும் சிவராமன், இசை மீது பெரும் விருப்பம் கொண்டவர். தன் இரு பிள்ளைகளை பெரிய இசைக்கலைஞர்களாக ஆக்க முயன்றுவரும்போது, வங்கியின் பணப்பரிவர்த்தனை தொடர்பாக மும்பை செல்கிறார். பணத்தை எடுத்துக்கொண்டு ஊர் திரும்பும்போது விதி அவர் வாழ்வில் விளையாட்டை தொடங்குகிறது. தனராஜ் என்ற மோசடி பேர்வழியினால் லீலா என்ற பெண்ணின் நட்பு ஒருநாள் இரவு அவருக்குக் கிடைக்கிறது. லீலாவும் தனராஜும் திட்டமிட்டுச் சிவ ராமனின் பணத்தை அபகரிக்கின்றனர். இதனால் வங்கிப்பணத்தை திருடிய குற்றத்துக்கு சிவராமன் சிறை செல்கிறார். வறுமை அந்தக் குடும்பத்தையே சிதைக்கிறது. சிறை மீளும் சிவராமன் குடும்பத்தை மீண்டும் பழைய நிலைக்குக் கொண்டுவர, கையில் கிடைத்த வேலைகளைச் செய்து பாடுபடுகிறார். இந்தச் சூழ்நிலையில் சிவராமன், தன் பிள்ளைகளுக்கு கொடுத்த இசைஞானத்தால் பிள்ளைகள் பெரிய இசைக்கலைஞர்கள் ஆகின்றனர். வறுமை மறைந்து மீண்டும் அந்தக் குடும்பம் செல்வச்செழிப்பான நிலைக்கு வருகிறது. இதில் சிவராமன் கதாபாத்திரத்தில் சித்தூர் வி.நாகையாவின் உருக்கமான நடிப்பு, படத்தை வெற்றிப் படமாக்கியது. வித்யாவதி..? நாகையாவை நடுத்தெருவுக்குக் கொண்டுவரும் நடன மாது அவர்தான்!

ஜெ.ஜெயலலிதா என்னும் நான்... - அம்மாவின் கதை! - 3


திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கியிருந்த வித்யாவதி ஓரளவு புகழடைந்துவந்தார். தனக்குத் துணையாகச் சென்னைக்கே வந்து தங்கிவிடும்படிசந்தியாவை வற்புறுத்த ஆரம்பித்தார். ஏற்கனவே ‘கற்கோட்டை’ தகர்ந்த நிலையில் இருந்த சந்தியா, சகோதரியின் கோரிக்கைக்குத் தலையசைத்தார். தன் இரு குழந்தைகளுடன் நிரந்தரமாகச் சென்னைக்கு வந்திறங்கினார்.

இனிதான் சென்னைப்பெண் என்பதில் அம்முவுக்கு அளவிலா ஆனந்தம். எந்த ஒன்றுக்கும் விலை உண்டல்லவா? இந்த மகிழ்ச்சிக்கு அவர் இழந்தது தன் தலைமுடியை. ஆம்... நாகரிக மங்கையான வித்யாவதி, தன் சகோதரி மகளும் தன்னைப்போல இருக்கட்டும் என நினைத்தாரோ என்னவோ, சென்னை வந்து சேர்ந்த சில நாட்களில் அம்முவின்  நீளமான அழகிய கூந்தலை சைனீஸ் டைப் ‘பாப்’  செய்து அழைத்து வந்துவிட்டார். அழுது தீர்த்துவிட்டார் அம்மு.

எவ்வளவோ சமாதானப்படுத்தியும் அழுகையை நிறுத்தவில்லை. பின்னாளில் அரசியலில் பலமுறை (மணி) முடியிழந்ததற்காக வருத்தம்கொள்ளாத ஜெயலலிதா, அந்நாளில் சாதாரண தலைமுடிக்காக போர்க்கோலம் கொண்டுவிட்டார் என்பது ஆச்சர்யம்தான். முடி இழந்த சோகத்தை மாற்ற, பிரபல புகைப்பட நிபுணரை வரவழைத்து ‘பாப்’ தலையுடன் புகைப்படம் எடுக்க வைத்தார் சித்தி வித்யாவதி. கோபம் குறையாத ஜெயலலிதா அந்தப் படத்தைப் பார்க்கவே விரும்பவில்லை. அத்தனை கோபம் தன் சித்தி மீது. இதெல்லாம் சில மாதங்களுக்குத்தான். ஒரே நாள் இரவில் அந்தக் கோபம் கொண்டாட்டமாக மாறியது! 

உச்ச சினிமா நட்சத்திரம், பரபரப்பான அரசியல்வாதி என அரை நூற்றாண்டுக் காலம் இயங்கிய ஜெயலலிதாவை, லட்சக்கணக்கான புகைப்பட ஃப்ளாஷ்கள் விழுங்கியிருந்தாலும், சென்னையில் முதன்முதலாக அவர் எடுத்துக்கொண்ட புகைப்படம் இதுதான். அன்று பார்க்கவே விரும்பாத இந்தப் புகைப்படத்தைத்தான் பின்னாளில் தன் மாளிகையின் பல அறைகளிலும் அத்தனை பெரியதாக மாட்டிவைத்து பெருமிதப்பட்டார் ஜெயலலிதா. ஆமாம்... அவரது கோபம் குறைந்த மாயம் என்ன?

(அம்முவின் கதை அறிவோம்!)