Published:Updated:

ஜெ.ஜெயலலிதா என்னும் நான்... - அம்மாவின் கதை! - 4

ஜெ.ஜெயலலிதா என்னும் நான்... - அம்மாவின் கதை! - 4
பிரீமியம் ஸ்டோரி
ஜெ.ஜெயலலிதா என்னும் நான்... - அம்மாவின் கதை! - 4

அம்முவின் அன்புஎஸ்.கிருபாகரன்

ஜெ.ஜெயலலிதா என்னும் நான்... - அம்மாவின் கதை! - 4

அம்முவின் அன்புஎஸ்.கிருபாகரன்

Published:Updated:
ஜெ.ஜெயலலிதா என்னும் நான்... - அம்மாவின் கதை! - 4
பிரீமியம் ஸ்டோரி
ஜெ.ஜெயலலிதா என்னும் நான்... - அம்மாவின் கதை! - 4

ஜெயலலிதாவின் கோபம் கொண்டாட்டமாக மாறக் காரணம், டெல்லியிருந்து வந்த ஒரு கடிதம்.

புதுடெல்லியில் நடந்த அகில இந்தியப் புகைப்படக் கண்காட்சியில் ஜெயலலிதா வின் போட்டோ முதல் பரிசுக்கு தேர்ந் தெடுக்கப்பட்டு, அதற்கு தங்கப்பரிசு அறிவிக்கப்பட்டிருந்ததாகச் சொன்னது கடிதம். ஆச்சர்யத்தில் மூழ்கினர் அனைவரும். எப்படி நடந்தது இது? புகைப்படக்காரர் வந்து புதிரை உடைத்தார்.

அம்மு பார்க்க விரும்பாத அந்தப் புகைப்படத்தை யாருக்கும் சொல்லாமல் அந்த வருடப் புகைப்படப் போட்டிக்கு அனுப்பி வைத்திருந்திருக்கிறார் அவர். அதற்கே முதற்பரிசு கிடைத்திருக்கிறது. புகைப்படக்காரருக்கு அன்று சந்தியா வீட்டில் சிறப்பு விருந்து. தன் புகைப்படத்துக்குத் தங்கப்பதக்கம் பரிசாகக் கிடைத்த மகிழ்ச்சி அன்றிரவு ஜெயலலிதாவைத் தூங்கவிடவில்லை. தன் அழகு பற்றி அவர் பெருமிதப்பட்ட முதல் தருணம் அது.

ஜெ.ஜெயலலிதா என்னும் நான்... - அம்மாவின் கதை! - 4

20 வருடங்களுக்குப் பின் ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லத்தில் கிரஹப்பிரவேசம் நிகழ்ந்தபோது அதே படத்தை பெரிய அளவில் பிரின்ட் செய்து பரிசாக அளித்தார் புகைப்படக்காரர் புவனாஸத்யம். தங்கமுலாம் பூசப்பட்ட அந்தப் புகைப்படம் வேதா இல்லத்தின் ஜெயலலிதாவின் படுக்கை அறையை இன்றும் அலங்கரித்துக்கொண்டிருக்கிறது. `தன் அழகின் மீது தனக்கே பொறாமை ஏற்படுத்திய புகைப்படம்’ என்று பின்னொரு நாளில் ஜெயலலிதாவால் சிலாகிக்கப்பட்ட படம் அல்லவா அது!

வித்யாவதியின் வீட்டுக்குப் படையெடுத்து வந்த திரைப்படத் தயாரிப்பாளர்களில் சிலரது பார்வை, சந்தியாவின்மீது பட்டது. சந்தியாவுக்கும் சினிமா கதவுகள் திறந்தன. தெலுங்கு மற்றும் கன்னடப் படங்களில் நடிக்கத் தொடங்கினார். அழகும் நளினமான அவரது நடிப்புத்திறமையும் படங்களின் எண்ணிக்கையைக் கூட்டியது. தனக்கு உதவியாக இருக்க, தான் வரவழைத்த சகோதரிக்குத் தானே உதவியாக வேண்டிய சூழல் வித்யாவதிக்கு உருவானது. மளமளவென படங்களில் நடிக்கத்தொடங்கிய பின், சந்தியாவால் பிள்ளைகளின் மேல் கவனம் செலுத்த முடியவில்லை. பொருளாதார ரீதியாக வலுப்பெற்றது குடும்பம். பிள்ளைகள் எது கேட்டாலும் வாங்கித்தர ஆட்களை நியமித்திருந்தார் சந்தியா. மாதவன் என்பவர் பொறுப்பிலேயே குழந்தைகள் வளர்க்கப்பட்டனர். ஒன்றுக்குப் பத்தாகப் பணியாளர்கள் இருந்தாலும் ஒரு தாயின் அரவணைப்புக்கு ஈடாகுமா அத்தனையும்?

சென்னையில் ஹோலி ஏஞ்சல்ஸ் பள்ளியில் படித்துவந்த அம்முக்கும் சகோதரர் ஜெயக்குமாருக்கும் தாயைப் பார்ப்பதும் கொஞ்சி மகிழ்வதும்கூட அரிதான சந்தர்ப்பங்களாகின. படப்பிடிப்பு முடிந்து பின்னிரவில் சந்தியா வீடு திரும்பும்போது பிள்ளைகள் ஆழ்ந்த தூக்கத்தில் இருப்பார்கள். காலையில் குழந்தைகள் எழும் முன்பே சந்தியா படப்பிடிப்புக்குச் சென்றிருப்பார். பிள்ளைகளின் எதிர்காலத்துக்குச் செல்வம் சேர்க்க வேண்டும் என்கிற  உறுதி சந்தியாவின் தூக்கத்தைத் தொலைத்து ஓட வைத்தது. ஆனாலும், குழந்தைகளுக்கான அடிப்படை தேவைகளை நிறைவேற்றுவதில் அவர் தவறியதில்லை.

சிறுவயதில் நாட்டியம் கற்க விரும்பி அது நிறைவேறாமல் போன தன் மனக்குறையை  பிள்ளைகள்மூலம் தீர்த்துக்கொள்ள விரும்பினார் சந்தியா. அம்மு பிறந்தபோதே அவருக்கு இந்த ஆசையும் பிறந்தது.

அந்நாட்களில் பாலசரஸ்வதி, சாயி, சுப்பு லட்சுமி ஆகியோரின் நடன நிகழ்ச்சிகளில் முதல்வரிசையில் சந்தியாவையும் குழந்தை களையும் காணமுடியும். நடனத்தின்மீது அத்தனை பிரியம் சந்தியாவுக்கு. மகளிடம் ஒருநாள் தன் ஆசையை வெளியிட்டார். ‘I hate dance mummy... நீதானே நல்லா படிச்சு டாக்டர் அல்லது இன்ஜினீயர் ஆகணும்னு சொல்லுவே... அப்போ எனக்கு எதுக்கு டான்ஸ் கிளாஸ்லாம்’ என மறுத்தார் அம்மு. சந்தியா, தன் இளமைப்பருவ ஆசையைச் சொன்னதும் அரை மனதுடன் சம்மதித்தார் அம்மு.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஜெ.ஜெயலலிதா என்னும் நான்... - அம்மாவின் கதை! - 4

அம்முவின் இயல்பான ஒரு குணம், அவரிடம் எதையும், யாரும் வேண்டுகோள் வைத்துதான் சாதிக்க முடியும். அதட்டியோ, அதிகாரம் செலுத்தியோ அவரை பணியவைக்க முடியாது. ‘ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது’ என்பதுபோல பெரிய சினிமா நட்சத்திரம், பரபரப்பான அரசியல் தலைவர் என உருமாறிய பின்பும் இந்தக் குணம் தொடர்ந்தது. இதுவே பெரும் சங்கடங்களைத் தந்தது என்றாலும், அதற்கு அவரை மட்டுமே பொறுப்பாக்க முடியாது. துரதிர்ஷ்டவசமாக அரசியல், சினிமா என்று தான் சாதித்த இரண்டு துறைகளிலும் தன்னை அதிகாரம் செலுத்தும் மனிதர்களையே ஆரம்பத்தில் அவர் அதிகம் எதிர்கொண்டார். ஒரு பெண்ணாக  மூர்க்கத்தனமாக அவர் எதிர்கொண்ட பிரச்னைகள் அவரை அதே குணத்துடன் தொடர வைத்தன என்பதுதான் நிஜம்.

பின்னாளில் நாட்டியக்குழு ஒன்றைத் தொடங்கி இந்தியா முழுக்க வெற்றிகரமான நாட்டிய மங்கையாகத் திகழ்ந்த ஜெயலலிதா, ஆரம்பத்தில் நாட்டியத்தை அறவே வெறுக்கக் காரணமானது அப்படி ஒரு சம்பவம்தான். அது...

(அம்முவின் கதை அறிவோம்!)

ஜெயலலிதாவின் குழந்தைகள்!

ஜெ.ஜெயலலிதா என்னும் நான்... - அம்மாவின் கதை! - 4

1973-ம் வருடம் ஆனந்த விகடனுக்கு அளித்த பேட்டியில், “இவ்வளவு பெரிய மாளிகையில் தனியாக வசிக்கிறீர்களே... போரடிக்கவில்லையா?” என்ற கேள்விக்கு, “யார் சொன்னது நான் தனியாக வசிக்கிறேன் என்று! என் வீட்டில் நான், என் சித்தி, சித்தப்பா, என் 7 குழந்தைகள் மற்றும் 12 வேலையாட்கள் வசிக்கிறோம்” என பதில் தர நிருபருக்கு அதிர்ச்சி. “நான் குழந்தைகள் எனச் சொன்னது நான் வளர்க்கும் நாய்களை!” என ஜெயலலிதா விளக்கிய பிறகே குழப்பம் தீர்ந்தது.
 
இப்படி மனிதர்களிடமிருந்து பேதம் பார்க்காமல் நாய்கள்மீது அத்தனை பிரியம் கொண்டிருந்தார் அவர். பெங்களூரில் பாட்டி வீட்டில் வளர்ந்தபோது சித்தி பத்மா, தந்தையின் எதிர்ப்பையும் மீறி 15-க்கும் அதிகப் பூனைகளை வளர்த்து வந்தார் அம்மு. தெருவில் உலவிவந்த சில நாய்களுக்கும் அவ்வப்போது உணவு அளிப்பார். ஜெயலலிதா சென்னை திரும்பிய தினத்தன்று, காரில் ஏறி அமரப் போனவரை `போகாதே’ என்பதுபோல அந்த நாய்கள் பரிதாபத்துடன் கத்திக்கத்தி, பிரிவின் துயரை வெளிப்படுத்தின. பூனைகளோ இயல்பாக விளையாடிக் கொண்டிருந்தன. நாய்களின் இந்த நன்றிகாட்டும் குணம் ஜெயலலிதாவை ஆச்சர்யப்பட வைத்தது.

சென்னை வந்தபோது குழந்தைகளின் பாதுகாப்புக்காகச் சில நாய்களை வளர்த்தார் சந்தியா. ஒருவகையில் சென்னையில் ஜெயலலிதாவின் முதல் நண்பர்கள் அவைதான். நடிகையான பின் படப்பிடிப்பு முடிந்து எப்போது வீடு திரும்பினாலும் கதவைத் திறந்தால் வரவேற்பவை இந்த நாய்கள்தான். அவற்றுடன் நேரம் செலவிடாமல் ஜெயலலிதாவும் படுக்கைக்குச் சென்றதில்லை.

பொமேரியன், அல்சேஷன், ஜெர்மன் டெரியர் மற்றும் பல ரகங்களில் ஒரு நாய் கண்காட்சி நடத்துகிற அளவு எண்ணிக்கையில் 30-க்கும் மேற்பட்ட நாய்கள் எல்லா காலங்களிலும் வேதா இல்லத்தில் வளைய வந்தன.

ஊட்டி ரசிகர் ஒருவர் ஜெயலலிதாவின் ஒவ்வொரு பிறந்தநாளின்போதும் அவருக்கு உயர்ரக நாய்க்குட்டி ஒன்றைப் பரிசளிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார். இப்படி சேர்ந்தவைதான் இவை. அரசியல் போராட்டக் காலங்களில் ஜெயலலிதாவின் மன அழுத்தத்தைக் குறைத்தவையும் இந்த நாய்கள்தான்.

முதன்முறை முதல்வரானபோது அரசியல்கட்சித் தலைவர்கள், கட்சித்தொண்டர்கள் என வேதா இல்லம் பரபரப்பானதை அடுத்து இடையூறுகளைத் தவிர்க்க வெளியிடங்களில் அவை வளர்க்கப்பட்டன.

ஒருமுறை படப்பிடிப்பில் ஓய்வாக அமர்ந்திருந்த போது அங்கிருந்த தெரு நாய்களை ஸ்டுடியோ ஊழியர்கள் விரட்டியடித்ததை ஜெயலலிதா கண்டார்.  மீண்டும் ஷாட்டுக்குக் கிளம்பியபோது காலில் ஏதோ உறுத்த குனிந்து பார்த்தவர் அதிர்ச்சியடைந்தார். பிறந்து 2 மாதமே ஆன நாய்க்குட்டி, `என்னை விரட்டாதே’ என்பதுபோல பரிதாபமாகப் பார்க்க, அதை காரில் ஏற்றி வீட்டுக்குக்கொண்டு வந்தார் ஜெயலலிதா.  ‘பூச்சி’ என அதற்குப் பெயரும் சூட்டினார். 8 மாதங்களுக்குப்பின் ஜெயலலிதா படப்பிடிப்புக்குச் சென்றிருந்த நிலையில் ஒருநாள் வேலையாள் ஒருவர் கதவைத் திறக்க தன் எஜமானியைப் பார்க்காமல் பல நாட்கள் ஆன ஆர்வத்தில் ஜெயலலிதாவின் கார் நிற்கும் இடத்துக்கு ஓடி வந்தது. அப்போது சாலையில் சென்று கொண்டிருந்த ஜீப் அதன் மீது மோதி சம்பவ இடத்திலேயே இறந்தது. வீடு திரும்பியபின் தகவலைக் கேட்டு கதறி அழுத ஜெயலலிதா, வேலையாட்களை உச்ச ஸ்வரத்தில் திட்டித் தீர்த்தார்.

“என்னதான் பாலும் தேனுமாகக் கொடுத்து பாசத் துடன் பூனைகளை நீங்கள் வளர்த்தாலும் வீட்டையோ, ஊரையோ காலி செய்துகொண்டு கிளம்பும்போது அது உங்களைப் பின்தொடர்ந்து வராது. அடுத்து அங்கு வருபவர்களுடன் நேசத்தைத் தொடரும். நாய் அப்படியில்லை... ஒருநாள் உணவிட்டாலும்கூட அது காலம் முழுவதும் உங்களைச் சுற்றிச்சுற்றி வரும். எங்குச் சென்றாலும் உங்களைப் பின்தொடர்ந்து வரும். அதுதான் நாய்களின் நன்றி குணம். அதுதான் நான் நாய்களை வளர்க்கக் காரணம்.”

தான் வளர்த்த நாயிடம்கூட நன்றியை எதிர்பார்த்த ஜெயலலிதாவுக்குத் தன்னால் வளர்க்கப்பட்ட மனிதர்களிடம் இருந்து குறைந்தபட்ச நன்றியாவது கிடைத்ததா? காலம்தான் பதில் சொல்ல வேண்டும்!