Published:Updated:

ஜெ.ஜெயலலிதா என்னும் நான்... - அம்மாவின் கதை! - 5

ஜெ.ஜெயலலிதா என்னும் நான்... - அம்மாவின் கதை! - 5
பிரீமியம் ஸ்டோரி
ஜெ.ஜெயலலிதா என்னும் நான்... - அம்மாவின் கதை! - 5

நாட்டியம் பயின்ற கதைஎஸ்.கிருபாகரன்

ஜெ.ஜெயலலிதா என்னும் நான்... - அம்மாவின் கதை! - 5

நாட்டியம் பயின்ற கதைஎஸ்.கிருபாகரன்

Published:Updated:
ஜெ.ஜெயலலிதா என்னும் நான்... - அம்மாவின் கதை! - 5
பிரீமியம் ஸ்டோரி
ஜெ.ஜெயலலிதா என்னும் நான்... - அம்மாவின் கதை! - 5
ஜெ.ஜெயலலிதா என்னும் நான்... - அம்மாவின் கதை! - 5

அம்மாவும் அம்முவும்

ட்டுப்பெட்டியாக வளர்க்கப்பட்டதால், விருப்பம் இருந்தும் நாட்டியம் கற்க முடியாமலே போய்விட்டது சந்தியாவுக்கு. இறுதிக்காலம் வரை அந்தக்குறை அவர் மனதில் இருந்தது. அதைத் தன் மகள் மூலம் நிறைவேற்றிக்கொள்ள ஆசைப்பட்டார் அவர். நிச்சயமாக அது சினிமா வாய்ப்புகளுக்காக அல்ல... படிப்போடு பல திறமைகளிலும் மகள் ஜொலிக்க வேண்டும் என விரும்புகிற ஒரு தாயின் இயல்பான ஆசையே!

அப்படித்தான் மகளுக்கு நாட்டிய வகுப்பை ஏற்பாடு செய்தார் சந்தியா. ஆனால், அந்த முதல் முயற்சி நாட்டியத்தின்மீதே ஜெயலலிதாவுக்கு வெறுப்பை ஏற்படுத்தியது. என்ன காரணம்?

அம்முவின் ஐந்தாவது வயதில் அவருக்கு நாட்டியம் சொல்லித்தர முத்துஸ்வாமிப் பிள்ளை என்ற பிரபல நட்டுவனாரை வீட்டுக்கே வரவழைத்தார் சந்தியா. தடித்த உருவம், முறுக்கிய மீசை, சிடுசிடு பேச்சு என, குழந்தைகளுக்கு அச்சம் தரும் தோற்றம் அவருடையது. முதல் நான்கு நாட்களுக்குப் பின் முரண்டு பிடிக்க ஆரம்பித்தார் அம்மு. அடுத்தடுத்த நாட்கள் ஆசிரியர் வரும் நேரத்தில் ஏதேனும் ஒரு காரணத்தைக் கூறி, நாட்டிய வகுப்பைத் தவிர்த்து வந்தார். பொறுத்துப் பொறுத்துப் பார்த்த சந்தியா, ஒருநாள் பொங்கி எழுந்துவிட்டார். “இத்தனை செலவு செய்து நாட்டியம் கற்க ஏற்பாடு செய்திருக்கிறேன். நீ இப்படி வீணடிக்கிறாயே... என்னதான் உன் பிரச்னை?” என்றார் கோபமான

குரலில். “மம்மி... எனக்கு அந்த ஆசிரியரைப் பிடிக்கவில்லை. சிடுசிடுவெனப் பேசுகிறார், அதட்டுகிறார். அதையெல்லாம்கூடப் பொறுத்துக் கொள்ளலாம். அவர் இன்னொன்றையும் செய்யச்சொல்லி வற்புறுத்துகிறார். அதனால் அவர் வேண்டாம். வேறு ஒரு பெண் ஆசிரியரை ஏற்பாடு செய்” எனக் கூற... அதிர்ச்சியாகிவிட்டது சந்தியாவுக்கு. “அப்படி என்ன செய்யச் சொல்கிறார்?'' எனப் படபடப்பு குறையாமல் கேட்க, அதற்கு ஜெயலலிதா சொன்ன பதிலைக் கேட்டு விழுந்து விழுந்து சிரித்தார் சந்தியா.

“மம்மி... அந்த டீச்சர் பயமுறுத்தற மாதிரி பேசறார். அதைக்கூடப் பொறுத்துக்கலாம். ஒவ்வொரு நாளும் கிளாஸ் தொடங்கும்போது `குரு வணக்கம்'ங்கற பேர்ல அவர் கால்ல விழச்சொல்லி வற்புறுத்தறார். நீதானே மம்மி சொல்லுவே... எதற்காகவும் யார் கிட்டவும் தாழ்ந்துபோகக்கூடா துன்னு. எனக்கு அவர் வேண்டாம், வேற லேடி டீச்சரை ஏற்பாடு பண்ணு மம்மி...”

சிரித்து முடித்தபின், சிந்திக்க ஆரம்பித்தார் சந்தியா. மகளுக்கு இப்போது `குரு வணக்கம்' பற்றி வகுப்பெடுத்தார்.

“பெரியவர்களை மதிப்பதும் ஆசி பெறுவதும் நம் வளர்ச்சிக்கு நல்லது. சுயநலத்துக்காகத் தகுதி யற்றவர்களின் கால்களில் விழுவது தான் அவமானத்துக்குரிய செயல். அப்படி விழுபவர்கள் ஆபத்தானவர்கள்” என மகளுக்குப் புரியவைத்தார். அரசியல் என்ற வார்த்தையையே ஜெயலலிதா கேட்டிருக்க முடியாத வயதில் ஜெயலலிதாவுக்குச் சந்தியா ‘அரசியல் வகுப்பு’ எடுத்திருப்பது ஆச்சர்யமான விஷயம்தான்!

ஓரிரு நாளில் துளசி என்ற பெண்மணி, நாட்டிய ஆசிரியராக நியமிக்கப்பட்டார். 

50-களின் முற்பகுதியில் சித்தி வித்யாவதியும், தாய் சந்தியாவும் ஆளுக்கொரு திசையில் சினிமா வாய்ப்புகளை மறுக்காமல், ஓடிக் கொண்டிருந்தனர். பிள்ளைகள் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் அதிகாலை நேரத்தில் சந்தியா படப் பிடிப்புக்குப் புறப்பட்டுப் போய் விடுவார். வீடு திரும்பும்போதும் இதே சூழல்தான். பல நாட்கள், பல மாதங்கள் இதே நிலைதான்.

இந்தக் காலகட்டத்தில் அம்மு வையும் அவரது சகோதரனையும் கவனித்துக்கொண்டது வேலை யாட்கள்தான். மாதவன்  என்பவர் அவர்களை கவனிக்கும் பொறுப்பில் இருந்தார். கார் டிரைவர் முதல் கார்டியன் வரை அவர்தான் எல்லாமே. குழந்தைகள் கேட்பது எதுவானாலும் உடனே அவற்றை வாங்கித் தரவேண்டும் என்பது அவருக்கு இடப்பட்ட பணி. தவிர, பிள்ளைகளுக்கென கார் ஒன்றை வாங்கியிருந்தார் சந்தியா. பள்ளியிலிருந்து திரும்பியதும், மாலையில் காரில் கடற்கரையை வலம் வருவார்கள் அம்முவும் சகோதரனும். லாரல்-ஹார்டி படங்கள் திரையிடப்பட்டிருந்தால் அன்று கொண்டாட்டம்தான். குழந்தைகளுக்கெனத் தனி சமையல்காரரையும் நியமித்திருந்தார் சந்தியா. எல்லாம் இருந்தாலும் அது அம்மாவுக்கு ஈடாகுமா? அம்முவுக்கு சோகம் ஏற்பட ஆரம்பித்தது. பிள்ளைகளைக் கவனிக்க முடியாத வருத்தம் சந்தியாவின் மனதுக்குள்ளும் இருந்தது. பிள்ளைகளுக்காக சினிமா வாய்ப்புகளைக் கைகழுவ முடியாது. சினிமா வாய்ப்புகளுக்காக பிள்ளைகளையும் விட்டுவிட முடியாது. முன்பின் தெரியாத யாரிடமோ குழந்தைகள் வளர்வதைவிட, உறவுகளிடம் வளரட்டும் என ஒருநாள் தீர்க்கமாக முடிவெடுத்தார் சந்தியா.

மீண்டும் பெங்களூரு பயணப்பட்டார்கள் அம்முவும்  அண்ணனும். சென்னை - பெங்களூரு கார்ப் பயணம். அம்மாவுடனேயே எப்போதும் வசிக்க வேண்டும் என்கிற ஆசையும் கனவும் அம்முவின் கண்களில் உதிர்த்த கண்ணீரில் கரைந்து வழிந்துகொண் டிருந்தன மௌனமாக.  இரண்டே வருடங்களில் சென்னை வாழ்க்கை முடிவுக்கு வந்ததும், இனி தாயைப் பிரிந்திருக்க வேண்டிய சூழலும் சேர்ந்து வேதனை தந்தாலும், அம்முவின் மனது அந்தச் சிறுவயதிலும் அதை ஏற்கும் பக்குவத்தைப் பெற்றிருந்தது. அதற்குக் காரணம், சில மாதங்களுக்கு முன் நடந்த சம்பவமும் அதைத் தொடர்ந்து அம்மா தந்த அறிவுரையும்.''

ஜெ.ஜெயலலிதா என்னும் நான்... - அம்மாவின் கதை! - 5

“எந்த ஒரு ஏமாற்றத்திலும் உன்னை இழந்துவிடாதே! எந்த விஷயமும் நிரந்தரம் என்று நினைத்து உன்னை ஏமாற்றிக்கொள்ளாதே!” - சந்தியாவிடமிருந்து அம்மு இந்த அறிவுரையைப் பெறக் காரணமான அந்தச் சம்பவம் நிகழ்ந்து சில மாதங்கள்தான் ஆகியிருந்தன.

அது 1954-ம் ஆண்டு.  `குண்டூசி' பத்திரிகை அன்றைய சினிமா பிரபலங்கள் வீட்டுக் குழந்தைகளிடையே போட்டி ஒன்றை நடத்தியது. அறிவு, திறமை, அழகு - இவற்றின் அடிப்படையில் சிறந்த குழந்தையைத் தேர்ந்தெடுத்து முதற்பரிசு வழங்குவதே அந்தப் போட்டி. நடிகை சந்தியா வீட்டுக்கும் நிருபர் குழு சென்றது. மற்ற பிரபலங்களின் வீடுகளில் நிருபர் குழுவுக்கு ஏற்பட்ட எந்தச் சங்கடமும் சந்தியாவின் வீட்டில் நிகழவில்லை. புகைப்படக்காரருக்குச் சிரமம் தராமல் தானே விதவிதமான உடைகளை அணிந்து, போஸ் தந்தார் அம்மு. இன்னும் ஆச்சர்யமாக வீட்டிலிருந்த சிதார் இசைக்கருவியை எடுத்து மடியில் அமர்த்தி அதை இசைப்பது போலவும் போஸ் தந்து, “அங்கிள், இப்படி எடுத்தா நல்லா இருக்கும்” என அவர்களை ஆச்சர்யப்பட வைத்தார். மகளின் முதிர்ச்சியான செய்கைகளை சந்தியா ஓர் ஓரமாக நின்று முகத்தில் பெருமிதம் படர கவனித்துக்கொண்டிருந்தார். நறுக்குத்தெறித்த ஆங்கிலம், துறுதுறு செய்கை, எதைக் கேட்டாலும் சட்டென பதில்... விடைபெறும் வேளையில் நிருபர் சொன்னார்... “பாப்பா நீதான் வின் பண்ணப் போற... எனக்கு இப்பவே தெரிஞ்சுடுச்சு...' என்று. நிருபர் சொல்லிச் சென்ற இந்த வார்த்தைகள் அம்முவுக்கு தனக்குத்தான் பரிசு கிடைக்கும் என்கிற நம்பிக்கையை பலமாக ஏற்படுத்தியிருந்தது. பள்ளித்தோழிகளிடம் எல்லாம் அதுபற்றிச் சொல்லிப் பெருமிதப்பட்டார் அம்மு. போட்டி முடிவுகள் வெளியாகின. அம்முவுக்கு ஏக அதிர்ச்சி. முதற்பரிசுக்கு இன்னொரு பிரபல நடிகையின் குழந்தை தேர்வாகியிருந்தது.  இப்படி ‘குண்டூசி’ அந்தச் சின்ன இதயத்தைக் குத்திவிட்ட வருத்தம் அம்முவுக்குப் பல நாட்கள் இருந்தது. மகளை ஏமாற்றத்திலிருந்து மீட்பதற்காகவே ஒருநாள், படப்பிடிப்பை ரத்து செய்துவிட்டு, மகளை அழைத்துக்கொண்டு அன்றைக்கு முழுவதும் சென்னையை ஒரு முழுச் சுற்றுச் சுற்றிக் காட்டி மகிழ்வித்தார் சந்தியா. அன்றிரவு வீடு திரும்பியபின் அம்முவுக்குத் தன் கையாலேயே உணவு ஊட்டியபடி சொன்ன அறிவுரைதான் அது!

அந்தச் சம்பவத்தையும் அம்மா சொன்ன அறிவுரையையும்  திரும்பத் திரும்ப மனதுக்குள் ஓடவிட்டுக்கொண்டிருந்த அம்மு, பெங்களூரில் தாத்தா வீட்டு வாசலில் கார் வந்துநின்றபோது அயர்ந்து துாங்கிவிட்டிருந்தார்.

பெங்களூரு பிஷப் காட்டன் பள்ளியில் அம்முவும் அண்ணனும் சேர்க்கப்பட்டனர். சில நாட்கள்தான் அம்மாவின் நினைவு. தோழிகள் சேர்ந்ததும் ஏக்கம் குறைந்தது.

எம்.ஜி.ஆரின் முதற்படத்தை இயக்கிய அமெரிக்க இயக்குநர் எல்லிஸ் ஆர்.டங்கன், 1994-ம் ஆண்டு அன்றைய முதல்வர் ஜெயலலிதாவை மரியாதை நிமித்தமாகத் தலைமைச் செயலகத்தில் சந்தித்தார். சந்திப்புக்குப் பின் பத்திரிகையாளர்களைச் சந்தித்த அவர் ஜெயலலிதா பற்றிப் பேசியதில் ஆச்சர்யமாகக் குறிப்பிட்ட ஒரு விஷயம், ஜெயலலிதாவின் ஆங்கிலப்புலமை. “நான் அமெரிக்கனா இருந்தபோதும் கொச்சை ஆங்கிலம்தான் பேசினேன். ஆனால், உங்கள் முதல்வர் ஜெயலலிதா என்னைவிடவும்  மிக அழகான, நேர்த்தியான ஆங்கிலத்தில் என்னுடன் பேசியது ஆச்சர்யமளித்தது. நீங்கள் ஒரு திறமைசாலியைத்தான் முதல்வராகப் பெற்றிருக்கிறீர்கள்” என்றார் டங்கன்!

அமெரிக்கரான எல்லிஸ் ஆர்.டங்கனாலேயே பாராட்டப்பெற்ற ஜெயலலிதாவின் ஆங்கிலப்புலமைக்கு அடித்தளமிட்ட இடம் பெங்களூரு பிஷப் காட்டன்ஸ் பள்ளிதான்.இதை, நடிகையான பின், ஜெயலலிதாவே ஒரு பேட்டியில் குறிப்பிட்டிருக்கிறார். பெங்களூரு நாட்கள் அழகாகவே நகர்ந்தன ஜெயலலிதாவுக்கு. ஆனால், அதே பள்ளியில்  அவர் செய்த ஒரு காரியம் எவ்வளவு குறும்புத்தனமானது, தெரியுமா?

(அம்முவின் கதை அறிவோம்!)