Published:Updated:

ஜெ.ஜெயலலிதா என்னும் நான்... - அம்மாவின் கதை! - 7

ஜெ.ஜெயலலிதா என்னும் நான்... - அம்மாவின் கதை! - 7
பிரீமியம் ஸ்டோரி
ஜெ.ஜெயலலிதா என்னும் நான்... - அம்மாவின் கதை! - 7

முதல் படம்எஸ்.கிருபாகரன்

ஜெ.ஜெயலலிதா என்னும் நான்... - அம்மாவின் கதை! - 7

முதல் படம்எஸ்.கிருபாகரன்

Published:Updated:
ஜெ.ஜெயலலிதா என்னும் நான்... - அம்மாவின் கதை! - 7
பிரீமியம் ஸ்டோரி
ஜெ.ஜெயலலிதா என்னும் நான்... - அம்மாவின் கதை! - 7
ஜெ.ஜெயலலிதா என்னும் நான்... - அம்மாவின் கதை! - 7

குழந்தை நட்சத்திரமாக முதன்முறையாக ஜெயலலிதா கேமரா முன் நின்ற அந்தப் படத்தின் பெயர் `ஸ்ரீசைல மகாத்மியம்'. கன்னடப் படம்.

தாயார் பிரபல நடிகைதான்.  எனினும் ஜெய லலிதாவுக்கு சினிமா பற்றிய பெரிய ஈர்ப்பு அந்த வயதில்  இருந்ததில்லை. நடிகர் நடிகைகளைப் பார்ப்பதிலோ, படப்பிடிப்புக்குச் செல்வதிலோ ஆர்வம் காட்டியதில்லை.

ஒருமுறை பெங்களூரில் இருந்து பிள்ளைகள் சென்னை வந்தபோது, சந்தியா விடியவிடிய படப்பிடிப்பில் கலந்துகொள்ளவேண்டிய சூழல். அதேநேரம், அரிதான இந்தச் சந்தர்ப்பத்தில் குழந்தைகளைப் பிரிந்திருக்கவும் விருப்பமில்லை சந்தியாவுக்கு. “தனியாக இருக்க வேண்டாம்.  என்னுடன் ஸ்டூடியோவுக்கு வாங்க” என்று அன்றைய தினம் படப்பிடிப்புக்கு அழைத்துச்சென்றார் அம்முவையும் ஜெயக்குமாரையும்.

ஜெ.ஜெயலலிதா என்னும் நான்... - அம்மாவின் கதை! - 7

அன்றைய படப்பிடிப்பில் சந்தியாவுடன் சிறுவயது பார்வதியாக ஒரு குழந்தை நடிக்க வேண்டியிருந்தது. படப்பிடிப்பு தொடங்கிய சில நிமிடங்களில், `அந்தச் சிறுமிக்குக் கடும் காய்ச்சல், இன்று அவள் படப்பிடிப்புக்கு வரமாட்டாள்' என்று தகவல் வந்து சேர்ந்தது. தயாரிப் பாளர்களுக்கு அதிர்ச்சி. முக்கியமான பாத்திரம் அது. அவள் இல்லையென்றால் அன்று படப்பிடிப்புக்கான ஏற்பாடுகள் அத்தனையும் வீண். அதன்பிறகு என்ன நடந்தது? ஜெயலலிதாவே விவரிக்கிறார்...

“விடுமுறைக்காக ஒருமுறை சென்னை வந்திருந்தபோது, நான் என் தாயாருடன் இரவு படப்பிடிப்புக்குப் போயிருந் தேன். அன்று அவருடன் நடிக்கவேண்டிய சிறுமி எதிர்பாராதவிதமாக வரவில்லை. இரவு நேரம்... மறுநாள் செட்டைப் பிரிக்க வேண்டும். தயாரிப்பாளர்களுக்கும், டைரக்டருக்கும் ஒன்றும் புரியவில்லை. கையும் ஓடவில்லை; காலும் ஓடவில்லை. அப்போது அவர்கள் கண்களுக்கு அம்மாவின் அருகில் அமர்ந்திருந்த நான் தென்பட்டேன். உடனே அவர்கள் அம்மாவிடம் வந்து, ‘உங்கள் மகள் அழகாக இருக்கிறாள். அவள் வேண்டுமானால் இந்த வேடத்தில் நடிக்கட்டுமே!’ என்றார்கள்.

இதற்குமுன் என் அம்மாவைப் பார்க்க வீட்டுக்கு வரும் தயாரிப்பாளர்கள், என்னைப் பார்த்துவிட்டு, `உங்கள் குழந்தைகூட சினிமாவில் நடிக்கலாமே!' என்று சொல்லியிருக்கிறார்கள். இதில் குறிப்பிடத்தக்கவர் காலஞ்சென்ற சாணக்யா. என் தாயார் அப்போ தெல்லாம், ‘நான் படும்பாடு போதும்... என் மகளுக்கு அந்தக் கஷ்டங்கள் வேண்டாம்’ என்று மறுத்துவிடுவார். ஓரிரு முறை அவர் என்னிடம் இதுபற்றிக் கேட்டபோது, நானும், ‘எனக்கு சினி மாவே வேண்டாம்!’ என்று
சொல்லியிருக்கிறேன்.

அதனால், செட்டில் என் அம்மாவிடம் அந்தக் கன்னடப் படத்தின் தயா ரிப்பாளர்கள்  இதுபற்றி கேட்ட போதும், ‘அதற் கெல்லாம் அவள் ஒப்புக் கொள்ள மாட்டாள்!’ என்றே சொல்லி விட்டார். அவர்களோ விடுவதாக இல்லை!

ஜெ.ஜெயலலிதா என்னும் நான்... - அம்மாவின் கதை! - 7

‘எதற்கும் ஒருமுறை கேட்டுப் பாருங்களேன்’ என்று அவர்கள் மீண்டும் வலியுறுத்தவே, அம்மாவும் என்னிடம், ‘என்ன நடிக் கிறியா?’ என்று கேட்டார். அன்று எனக்கு ஏதோ நல்ல ‘மூட்’ போலிருக்கிறது. ‘சரி’ என்று சொல்லிவிட்டேன். அம்மாவுக்கு, நான் இப்படிச் சொன் னது வியப்பாக இருந்தது. மறு நிமிஷமே அந்த வேஷத்துக்கு நான் தயார் செய்யப்பட்டு, கேமரா முன் நிறுத்தப்பட்டேன்.

எந்தவிதக் கூச்சமோ, பயமோ இல்லாமல், ஒரே தடவையிலேயே திருப்தி கரமாக எடுத்து முடிக்கும்படியாக நான் நடித்தேன். என் திறமையைக் கண்டு, படத்தில் என் வேஷத்தை இன்னும் கொஞ்சம் வளர்த்து, ஒரு தனிப் பாடலிலும் நடிக்க வைத்தார்கள்.

என் சினிமா உலகப் பிரவேசம், நட்ட நடு நிசியில், யாரும் எதிர்பாராத வகையில் நடந்து விட்டது!''

-  தன் முதல்பட வாய்ப்பு குறித்த நினைவுகளை இப்படி சொல்லி  முடித்திருந்தார் ஜெயலலிதா.
 
பெங்களூரு திரும்பிவந்தபோது ஜெயலலி தாவை கொண்டாடினர் சக தோழிகள் - ``ஏய்... நம்ம ஜெயா சினிமாவில் நடிச்சுட்டாடீ... படம் வந்தா அவ செலவில் நம்மையும் அழைச்சிட்டுப்போவா...''

வீட்டிலோ நேர் எதிரான நிலை.  “இதுங்கதான் சினிமா பித்து பிடிச்சு அலையுதுன்னா, இப்போ அம்முவையும் அப்படி ஆக்கப் பார்க்கிறாளே வேதா... இனி சென்னைக்கு அழைச்சிட்டுப்போக விடக்கூடாது...''

- கறார் உத்தரவு பிறந்தது அம்முவின் தாத்தா பாட்டியிடமிருந்து!

(அம்மு கதை அறிவோம்!)

கலைக் குடும்பம்!

ஜெ.ஜெயலலிதா என்னும் நான்... - அம்மாவின் கதை! - 7

பொதுவாக சினிமாத் துறையில் ஒரே குடும்பத்தில் பலரும் திரைக்கலைஞர்களாக இருந்தால், அவர்களை `கலைக்குடும்பம்' என்பார்கள். விஜயகுமார், டி.ராஜேந்தர், ராதாரவி போன்றோரை இப்படிக் குறிப்பிடுவதுண்டு. உண்மையில் திரையுலகில் முதல் கலைக்குடும்பம் சந்தியாவினுடையதுதான்.

ஜெயலலிதா, சந்தியா, சித்தி வித்யாவதி - இவர்கள்தாம் இதுவரை சினிமாவில் நடித்திருப்பவர்கள் என கருதிக்கொண்டிருக்கிறோம். ஆனால், ஜெயலலிதா வின் சகோதரர் ஜெயக்குமாரும் இரண்டு படங்களில் நடித்திருக்கிறார்  என்பது பலரும் அறியாத தகவல்! 

ஆம்... சந்தியா முதன்முதலாக நடித்த `கற்கோட்டை' தான் அவரது முதற்படம். பின்னாளில் சந்தியா பிரபல நடிகையான பிறகே இப்படம் வெளியானது. தனது ஆறு வயதில் ஜெயக்குமார் அப்படத்தில் நடித்திருக் கிறார். சந்தியாவுடன் இந்தப் படத்தின் படப்பிடிப்புக்கு சென்றிருந்தபோதுதான், படத்தில் மாஜிஸ்திரேட் சேகரின் மகனாக வரும் சுட்டிப்பையன் கண்ணன் கதாபாத் திரத்துக்கு இயக்குநர், ஜெயக்குமாரை தேர்வு செய்தார்.

கண்ணனின் தாய் மங்களம், கண வனின் முதல்தாரத்துப் பிள்ளைக்கு சூழ்ச்சி செய்து விஷம் கொடுக்க முயற்சிக்கிறாள். இதை அறிந்த கணவன் அங்கு வர, தான் அகப்பட்டுக்கொண்டதை அறிந்து அதிர்ச்சியான மங்களம், தானே அந்த விஷத்தைக் குடிப்பதோடு, மகன் கண்ணனுக்கும் கொடுத்துவிடுகிறாள். தாயின் சதித்திட்டத்துக்குத் தானே பலியாகிறான் கண்ணன்.

படம் முழுக்க சுட்டிப்பையனாக நடித்து ஜமாய்த் திருக்கும் ஜெயக்குமார் இறுதியில் பரிதாபமாகப் பலியாகும் காட்சி ரசிகர்களை நெகிழவைத்துவிடும். சென்டிமென்ட் விரவிக்கிடக்கும் சினிமாத் துறையில், முதல் படத்திலேயே இறந்துவிடும் காட்சியில் தன் ஆசை மகனை நடிக்கவைத்த சந்தியாவின் முயற்சியைப் பாராட்டத்தான் வேண்டும்.

ஜெயக்குமார் நடித்த மற்றொரு படம் பற்றிய தகவல்  கிடைக்கவில்லை.

‘ஜெய’ குடும்பம்!

ஜெயலலிதாவின் குடும்பத்தினருக்குப் பெரும்பாலும் `ஜெய' என்ற வார்த்தைகளிலேயே பெயர்கள் தொடங்கும். ஜெயராம், ஜெயக்குமார், ஜெயலலிதா... இப்படி! இவை தற்செயலாக வைக்கப்பட்ட பெயர்கள் அல்ல. இதற்குப் பின்னணிக் காரணமும் உண்டு.

ஜெயலலிதாவின் தந்தைவழிப் பாட்டனார் டாக்டர் ரங்காச்சாரி அன்றைய மைசூர் மகாராஜா கிருஷ்ண ராஜேந்திர உடையாரின் அரண்மனையில் மூத்த மருத்துவராகப் பணியாற்றியவர். தனியே ஒரு மருத்துவமனையும் நடத்தியவர். மைசூரில்  டாக்டர் ரங்காச்சாரி குடும்பம் மிகப் பிரபலமானது. அந்தக் காலத்திலேயே ஆபரேஷனுக்கு 100 ரூபாய் கட்டணம் வாங்கியவர் என்றால், இவரது திறமை விளங்கும். தன் மருத்துவச் சாதனைகளுக்காக  ஆங்கிலேயரிடம்  ‘சிப்பர் ஃபீல்ட்’ விருது பெற்றவரும்கூட!

அன்றைய காலத்தில் மைசூர் மகாராஜா குடும்ப உறுப்பினர்களின் பெயர் `ஜெய' என்றே தொடங்கும். மரியாதை காரணமாக மகாராஜா வழிவந்தவர்கள் தவிர, பிறர் அந்தப் பெயரை சூட்டிக்கொள்ள மாட்டார்கள். ஜெயலலிதாவின் தாத்தா ரங்காச்சாரி, மகாராஜா குடும்பத்தினருக்கு செய்த சேவையின் காரணமாக பெயரில் ‘ஜெய’ சேர்த்துக்கொள்ளும் சிறப்பு அனுமதியை வழங்கியிருந்தார் மன்னர். இப்படிதான் ‘ஜெய’லலிதா பிறந்தார்.

என்ன காரணத்தாலோ, ஜெயலலிதாவின் அண்ணன் குடும்பத்தினர் இந்த வழக்கத்தைப் பின்பற்றவில்லை.

ஜெயலலிதா எனப் பெயர் சூட்டப்பட்டாலும், அவரை வீட்டில் `அம்மு' என்றே அழைத்தனர். பள்ளியில் படித்த காலத்தி்ல் தோழிகள் அவரை 'ஜெயா' என்றும் `லலிதா' என்றும் இருவிதங்களில் அழைத்தனர்.

ஜெயலலிதாவின் இறுதிக்காலம் வரை, சோ போன்ற அந்நாளைய குடும்ப நண்பர்கள் சிலர் மட்டுமே `அம்மு' என்று அழைத்தனர்.

எம்.ஜி.ஆரும் `அம்மு' என்றே அழைப்பார். தனது நெருங்கிய வட்டம் அல்லாத நபர்கள் தன்னை  இப்படி அழைப்பதை ஒருபோதும் விரும்ப மாட்டார் ஜெயலலிதா!