Published:Updated:

ஜெ.ஜெயலலிதா என்னும் நான்... - அம்மாவின் கதை! - 8

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
ஜெ.ஜெயலலிதா என்னும் நான்... - அம்மாவின் கதை! - 8
ஜெ.ஜெயலலிதா என்னும் நான்... - அம்மாவின் கதை! - 8

பகுத்தறிவும் பக்தியும்எஸ்.கிருபாகரன்

பிரீமியம் ஸ்டோரி
ஜெ.ஜெயலலிதா என்னும் நான்... - அம்மாவின் கதை! - 8

`தான் சினிமாவில் நடிப்பதோடு மகளையும் நடிக்கவைக்கிறாளே' என்று சந்தியாவின் மீதான ரங்கசாமியின் கோபமெல்லாம் சில நாள்களுக்குத்தான். மறுமுறை வந்தபோதே அப்பாவைச் சமாதானப்படுத்திவிட்டார் சந்தியா!

ஆறு வயது முதல் பத்து வயது வரை, ஜெயலலிதா பெங்களூரில் வசித்தார். ஜெயலலிதாவின் பலங்களாக நாம் அறிந்த விஷயங்களுக்கு அடித்தளமிடப்பட்டது இங்குதான்.

படிப்பில் திறமைசாலி, குறும்பில் கெட்டிக்காரி - இவை மட்டுமே அல்ல ஜெயலலிதா... எட்டு வயதிலேயே எந்த ஒரு விஷயத்தையும் பகுத்துப்பார்க்கும் திறன் பெற்றிருந்தார் அவர். வாழ்க்கையின் மீதான பற்று அதிகரித்து, பதவி, புகழ், அதிகாரத்தின் மீது ஆசை ஒருவருக்கு அதிகமாகும்போது, காலம் அவரின் சுயத்தைக் கரைக்க ஆரம்பிக்கிறது. சாமான்யனோ, சரித்திரம் படைத்தவரோ - அவர்களது வாழ்வு விட்டுச் சொல்லும் சேதி இதுதான். ஜெயலலிதா மட்டும் அதில் விதிவிலக்கா, என்ன!

தன் அரசியல் பயணத்தின் பிற்பகுதியில் தன்னைக் கடவுள் நம்பிக்கை மிகுந்தவராக வெளிப்படுத்திக்கொண்ட அவர், ஆரம்பகாலத்தில் பகுத்தறிவுவாதியாகவே இருந்திருக்கிறார்.

ஜெயலலிதாவின் ஆட்சிக்காலத்தில் அதிகம் விமர்சிக்கப்பட்ட விஷயங் களில் அவரது அதீத ஆன்மிகப்

ஜெ.ஜெயலலிதா என்னும் நான்... - அம்மாவின் கதை! - 8

பற்றும் உண்டு. ஆன்மிகம், ஜோதிடம் ஆகியவற்றில் அளவுக்கு மீறிய நம்பிக்கை கொண்ட அவர், இந்த விஷயங் களுக்காக பலமுறை எதிர்க்கட்சிகளால் தாக்கிப் பேசப்பட்டிருக்கிறார். நாத்திகக் கருத்துகளைப் பரப்பிய திராவிட இயக்கத்தின் நீட்சியாக உருவான ஒரு கட்சியின் தலைமைப் பொறுப்பில் அவர் இருந்ததே, இந்த விமர்சனங்களுக்குக் காரணம். நடிகையாக இருந்த காலங்களில் தன் வேதா இல்லத்திலிருந்து எப்போது கிளம்பினாலும், தெருமுனையில் பூ விற்கும் பெண்மணியைப் பார்த்து புன்னகைத்துவிட்டே கிளம்புவார். அது தனக்கு ராசி என அவர் கருதினார். இப்படி பல பற்றுகளைக்கொண்டிருந்த ஜெயலலிதா, சிறுவயதில் பகுத்தறிவுவாதியாகவே இருந்திருக்கிறார்!

அவருக்குக் கடவுள் நம்பிக்கை உண்டே தவிர, தெய்வங்களை வெவ்வேறு பெயர்களில் வணங்குவதை எதிர்த்திருக்கிறார். கடவுள் விஷயத்தில் பெரியவர்களுடன் தர்க்கத்தில் ஈடுபடும் அளவுக்கு அவர் அறிவு பெற்றிருந்தார். இது மிகையான செய்தி அல்ல. ஜெயலலிதா தன் 10 வயதுக்குள்ளாகவே ராமாயணம், மகாபாரதம் உள்ளிட்ட பல இதிகாசக் கதைகளைப் படித்து முடித்திருக்கிறார்... பாட்டியின் உதவியுடன்.

அந்த வயதில் எதற்கெடுத்தாலும் கடவுளைத் துதிக்கச்சொல்லி, தாய் சந்தியா அவரை வற்புறுத்துவது வழக்கம். ஆனால், தேவையான நேரங்களில் மட்டுமே அதைச் செய்வார். இதற்காக, தாத்தா பாட்டியுடன் தர்க்கம் செய்வதும் அவருக்கு வழக்கமான விஷயம்.

ஒருமுறை பெங்களூரு பிஷப் காட்டன் பள்ளியில்  பரீட்சை தொடங்கியது. ஆனால், ஏனோ ஒழுங்காகப் படிக்க முடியவில்லை. அத்தனை கடினமாக இருந்தது கணக்குப்பாடம். பரீட்சை நெருங்க நெருங்க... பயம் அவரைத் தொற்றிக்கொண்டது. தாத்தா பாட்டியிடம் சொல்லி அழுதார். அவரை சமாதானம் செய்த பாட்டி, ‘`பரீட்சை தொடங்கும் முன் விநாயகரை வேண்டிக்கொள். எல்லாம் சரியாகிவிடும்!’’ என அறிவுரை சொன்னார். ‘படிக்காவிட்டாலும் கடவுளை வேண்டிக்கொண்டால் பாஸ் ஆவோம் என்பது மூடநம்பிக்கை’ என மனதில் நினைத்துக்கொண்டாலும், பாட்டியின் வற்புறுத்தலால் அப்படியே வேண்டிக்கொண்டார். பெரும் ஆச்சர்யம்... தேர்வு முடிவு வந்தபோது கணக்குப் பாடத்தில் நூற்றுக்கு நூறு மார்க்குகள் வாங்கியிருந்தார்!

பின்னர், ஜெயலலிதா பாட்டுக் கற்றுக்கொள்ள விரும்பினார். கோபால கிருஷ்ண சர்மா என்ற பாட்டு வாத்தியாரை ஏற்பாடு செய்தார் பாட்டி. பேத்தி நல்லமுறையில் சங்கீதம் கற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காக பாட்டு வகுப்பின் முதல்நாள், வீட்டில் பூஜை ஒன்றுக்கு ஏற்பாடு செய்திருந்த பாட்டி, பேத்தியை அழைத்து, ``எடுத்த காரியம் வெற்றிகரமாக முடிய விநாயகரை வேண்டிக்கொள்'' என்றார்.

`‘விநாயகரை வேண்டிக்கொள்வதால் மட்டும், நான் எது செய்தாலும் அது வெற்றிகரமாக முடிந்துவிடுமா என்ன?'' என்று துடுக்குத்தனமாக கேட்டார் ஜெயலலிதா. உடனே பாட்டி, கணக்குப் பரீட்சையை அவருக்கு நினைவு படுத்தினார்.

ஜெ.ஜெயலலிதா என்னும் நான்... - அம்மாவின் கதை! - 8

``கணக்குப் பரீ்ட்சையில் நான் பாஸ் செய்ததற்குக் காரணம் அதிர்ஷ்டமோ, கடவுள் அனுக்கிரகமோ இல்லை... என் திறமையும் உழைப்பும்தான்! ஒருவேளை நான் படிக்காமல் தேர்வுக்குப் போயிருந்தாலோ, படித்துவிட்டு தேர்வுக்குப் போகாமல் இருந்தாலோ நான் பாஸ் ஆகியிருப்பேனா?’' என்று ஜெயலலிதா கேள்வி எழுப்ப, வாயடைத்துப்போனார் பாட்டி.

தொடர்ந்து, ``நான் இன்று விநாயகரைக் கும்பிடாமல் பாட்டு கற்றுக்கொள்ளப் போகிறேன். என்ன ஆகிறதென்று பார்க்கலாம்!'' என்று சொல்லிவிட்டார்.

கடவுளை வணங்காமலேயே பாட்டு வகுப்பு ஆரம்பமானது. ஒரு சில நாள்கள் சென்றிருக்கும். அடுத்தடுத்து ஏதோ சிறுசிறு காரணங்களால் பாதியிலேயே நின்றது பாட்டு வகுப்பு. சென்னை வந்த பின்னும் பாட்டு முயற்சியைத் தொடர்ந்தார் ஜெயலலிதா. இறுதிவரை அவரது பாடல் கற்கும் ஆசை முழுமையடையவே இல்லை. பின்னாளில் பெரிய நடிகை ஆனபின் இந்தச் சம்பவங்களை மனதில் அசைபோட்டு, தன் எண்ணங்களை மாற்றியமைத்தார். விநாயகரே அவரின் இஷ்ட தெய்வம் ஆனார். காலையில் குளித்து முடித்து விநாயகருக்கு பூஜை செய்த பிறகே அன்றாடப் பணிகளைத் தொடங்குவது ஜெயலலிதாவின் வழக்கமானது.

புதிய சொத்துகள் வாங்குவதானாலும், புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதானாலும், வேறு எந்த முக்கிய விஷயமாக இருந்தாலும், விநாயகரைத் தொழாமல் அவர் ஈடுபட்டது இல்லை. ஆனாலும் அளவுக்கு மீறிய பக்தியை அவர் வளர்த்துக்கொண்டதில்லை. எந்தச் செயலிலும் தன் பகுத்தறிவைப் பொருத்திப்பார்க்க அவர் தவறியதில்லை.

``ராஜாஜி அவர்கள் எழுதிய `சக்கரவர்த்தி திருமகன்', `வியாசர் விருந்து' புத்தகங்களை நான் படித்திருக்கிறேன். இம்மாதிரி புராணங்களைப் படித்திருப்பதோடு, விஞ்ஞான உலகில் நிகழ்ந்துவரும் அற்புதங்களையும் கவனித்து வருகிறேன். இவை எல்லாவற்றையும் ஒன்று சேர்த்துப் பார்க்கும்போது ஏதோவொரு சக்தி எங்கும் நீக்கமற நிறைந்து நம்மை ஆட்டிப்படைப்பதை உணர்ந்துகொண்டேன். அப்படியானால், புராணங்களை நான் நம்புவதில்லையா? அவற்றில் சொல்லியிருப் பவை நடந்திருக்கக்கூடாதா?

உதாரணமாக, நாரதர் ஆகாயத்தில் மேகக் கூட்டத்தினிடையே நடந்து வருவதாக புராணம் சொல்கிறது. சினிமாவிலும் நாடகத்திலும் அவ்வாறே காட்டப்படுகிறது. ஆகாயத்தில் ஒருவன் - அதாவது அந்தரத்தில் ஒருவன் எந்தப் பிடிப்புமின்றி நடப்பது சுலபமா? நடக்கக் கூடிய காரியமா?

நாரதர் கட்டைப்பிரம்மச்சாரி. தவ வலிமை மிக்கவர். ஆகவே, அவரால் அப்படிச் செய்ய முடிந்தது. வரவர நம்மிடையே இந்த தவ வலிமை குறைந்துவிடவே, நமக்கு அவரது செயல்கள் அற்புதங்களாக தெரிகின்றன. அவர்களை தேவர்களாகவும் கடவுளாகவும் அற்புதப் பிறவிகளாகவும் நினைத்துவிட்டோம்.

விஞ்ஞான வளர்ச்சியினால் நாம் இப்போது நிலவில் காலடி எடுத்துவைத்திருக்கிறோம். வருங்காலத்தில் மக்கள் இந்த அற்புதத்தை நிகழ்த்தியவர்களையும் நாரதர் போன்று தேவர்களாகவோ, கடவுளர்களாகவோ நினைக்கலாம் அல்லவா?”

- ஒரு பேட்டியில் ஜெயலலிதாவிடமிருந்து தெறித்து விழுந்த  இந்த வார்த்தைகள் எவ்வளவு பகுத்தறிவானதாகவும் தர்க்கமுள்ளதாகவும் இருக்கின்றன!

ஜெயலலிதா மூடநம்பிக்கைகளுக்கு எதிரானவர் என்பதற்கு அவரது முதல்படமே சாட்சி.  கதாநாயகியாக அவர் முதன்முதலில் அறிமுகமான வேதாந்தம் ராகவய்யா இயக்கிய `நன்னகர்த்தவ்யா' என்ற கன்னட மொழிப் படத்தில் ஜெயலலிதா ஏற்றது இளம் விதவை வேடம். ஜெயலலிதாவின் திரைப்பட வாழ்க்கை மட்டுமன்றி, சொந்த வாழ்க்கையின்மீதும் பெரும் அக்கறைகொண்டிருந்த சந்தியா, தன் மகளின் வாழ்க்கையை நிர்ணயிக்கப்போகும் முதல் படத்திலேயே விதவை வேடத்துக்கு ஒப்புக்கொண்டது ஆச்சர்யம். இதுபற்றி உறவினர்கள் சந்தியாவிடம் கேட்டபோது ‘நெருப்பு என்றால் வாய் சுட்டுவிடுமா?’ என்றே பதில் அளித்தார்.
 
ஜெயலலிதா தமிழில் அறிமுகமான `வெண்ணிற ஆடை'யிலும் அவருக்கு விதவை வேடம்தான். முதல் படத்தில் விதவை வேடம் ஏற்றது குறித்து பிரபல நடிகையானபின் அவரிடம் கேட்கப்பட்டது. ``நானோ, என் அம்மாவோ அதுபற்றிக் கவலைப்பட்டதே இல்லை. இன்று நான் உங்கள் முன் தென்னிந்தி யாவின் சிறந்த நடிகை என்கிற புகழோடு நிற்பதிலிருந்தே தெரியவில்லையா அதெல்லாம் மூடநம்பிக்கைகள் என்று!'' - இப்படித் தன் பகுத்தறிவை மீ்ண்டும் ஒருமுறை பளிச்சென வெளிப்படுத்தினார்.

இப்படிப்பட்ட ஜெயலலிதாவின் பிம் பத்தைத்தான் காலம் கருணையின்றி எப்படி எல்லாம் சிதைத்துப்போட்டுவிட்டது!
 
(அம்முவின் கதை அறிவோம்!)

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு