Published:Updated:

``தமிழ்நாடு அதிர்ஷ்டம் நிறைந்த மாநிலம்!'' - எம்.எல்.வி இசை விழாவில் நிர்மலா சீதாராமன்

``தமிழ்நாடு அதிர்ஷ்டம் நிறைந்த மாநிலம்!'' - எம்.எல்.வி இசை விழாவில் நிர்மலா சீதாராமன்
``தமிழ்நாடு அதிர்ஷ்டம் நிறைந்த மாநிலம்!'' - எம்.எல்.வி இசை விழாவில் நிர்மலா சீதாராமன்

``தமிழ்நாடு அதிர்ஷ்டம் நிறைந்த மாநிலம்!'' - எம்.எல்.வி இசை விழாவில் நிர்மலா சீதாராமன்

தனது கந்தர்வக்குரலால் கர்னாடக இசை உலகை மட்டுமல்லாது திரையிசை உலகிலும் இசை ராஜ்ஜியம் நடத்தியவர் `எம்.எல்.வி' என்றழைக்கப்படும் மெட்ராஸ் லலிதாங்கி வசந்தகுமாரி. இவரின் 90-வது பிறந்த நாள் விழா, சென்னை மியூசிக் அகாடமியில் நடைபெற்றது.

மயிலிறகு வருடிய அரங்க அமைப்பின் நடுவே இசைவாணி எம்.எல்.வி-யின் உருவப் படம், இசை ப்ரியர்களின் உள்ளங்களை நிறைத்தது. இசைக்காகத் தன்னையே அர்ப்பணித்துக்கொண்ட அவரின் இசைப்பயணத்தின் இனிய தருணங்களை நினைவுகூரும் வகையில் `எம்.எல்.வி - 90' விழாவை, அவருடைய மாணவிகளில் ஒருவரான சுதா ரகுநாதன் சமுதாய பவுண்டேஷன் சார்பில் ஏற்பாடு செய்திருந்தார்.

விழாவில் மாஸ்டர் ராகுல் `சரணம் சித்தி விநாயகா...', `சந்திர சூட சிவசங்கர பார்வதி...',  `பாரோ கிருஷ்ணய்யா...' போன்ற பாடல்களைப் பாடி அரங்கத்தைத் தன்வசப்படுத்தியபோது கைத்தட்டல் ஓய, ஓரிரு நிமிடமானது. சந்தங்களை ராக பாவ ஆலாபனையுடன் பாடிய ராகுலுக்கு எம்.எல்.வி-யின் ஆசி பரிபூரணமாகக் கிடைத்திருக்கும்.

அவரைத் தொடர்ந்து திருச்சூர் ராமச்சந்திரனின்  வாய்ப்பாட்டு நிகழ்ச்சி. `வின்னு விநாவேரெவரு...' கீர்த்தனையை, பார்வையாளர்கள் ரசிக்கும்படி பாடியபோது இசையால் அரங்கை அதிரவைத்தார். அதிர்ந்த இசை அரங்கை, அன்பால் அரவணைத்துப் பாடினார், சாருமதி ராமச்சந்திரன், மகள் சுபஸ்ரீ ராமச்சந்திரனுடன். `நகுமோமு கணலேனி...' என்ற பாடலுடன் தனக்கான நேரத்தை வாய்ப்பாட்டின் வழியே வர்ணஜாலம் செய்தார் சுபஸ்ரீ. வசியப்படுத்தக்கூடிய குரலில் பாடி, பார்வையாளர்களை ஈர்த்த சுபஸ்ரீ, அடுத்து என்ன பாடுவது எனச் சாருமதியைக் கேட்கத் தவறவில்லை. சாருமதியின் உத்தரவுப்படி `கிருஷ்ணா நீ பேகனே பாரோ...' எனப் பாடி இசைப் பெருமக்களின் இதயங்களில் `பாரோ' செய்தார் சுபஸ்ரீ. தான் வந்ததுக்கான முத்திரையுடன் இந்த விழாவை நிர்வகித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துவிட்டு, `சரணம்பவ கருணாமயி...' எனும் சந்தத்தின் வழியே தனது குருவான எம்.எல்.வி-க்கு குரு வணக்கம் தெரிவித்தார் அவரின் மாணவியான சாருமதி.

வார்த்தைகளைக்கொண்டு இசை வசியம் செய்ததைத் தொடர்ந்து, வயலின் வழியே இதயங்களை வாரி அணைத்துக்கொண்டார் ஏ.கன்யாகுமாரி. இசையின் கலைவண்ணத்தைத் தன் விரல்களில் வெளிப்படுத்தினார் இவர். அமைதி ஸ்வருபமாக விளங்கும் இவரின் இசை மீட்டலோ, ஆரம்பம் முதலே அதிரடிச் சரவெடிதான். இவரின் குழுவினர்,  சமகாலத்து இசை ரசிகர்களையும் கர்னாடக ஸ்வரங்களை தாள கதியுடன் ரசிக்கவைக்க முடியும் என்பதை நிரூபித்தனர். இடையில் ``சாருமதி, சுதா, நான் மூவரும் சேர்ந்து, எம்.எல்.வி அவர்களின் பிறந்த நாள் விழாவைச் சிறப்பாக நடத்த எண்ணினோம். எண்ணியதை எண்ணியபடி செய்தோம்'' என்று கூறினார். எம்.எல்.வி-யின் சஷ்டியப்தபூர்த்தி திருப்பதியில் நடந்ததை வார்த்தைகளில் நினைவுகூரி `கோவிந்தா ஹர கோவிந்தா வேங்கட ரமணா கோவிந்தா...' எனும் கீர்த்தனையை வயலின் வழியே அவர் வாசித்தபோது பார்வையாளர்கள் அனைவரும் அவருடன் சேர்ந்து கைத்தட்டி ரசித்த ஒவ்வொரு கணமும் எம்.எல்.வி அவர்களுக்கே சமர்ப்பணம்.

சமுதாய பவுண்டேஷன் சார்பில் தயாரிக்கப்பட்ட குறும்படம் திரையிடப்பட்டது. `கொஞ்சும் புறாவே...', `அவர் இன்றி நான் இல்லை கண்ணே...' போன்ற திரைப்பாடல்கள் ஒலித்தபடி, ஒளிவடிவம் வழியே எம்.எல்.வி-யுடனான இசைப் பயண அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டனர் ஏ.கன்யாகுமாரி,  மன்னார்குடி ஈஸ்வரன் போன்றோர்.

முதன்மை விருந்தினராக மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், சிறப்பு விருந்தினராக மத்திய தகவல்தொடர்பு மற்றும் ரயில்வே துறை அமைச்சர் மனோஜ் சின்ஹா கலந்துகொண்டனர். அப்போது `எந்த நேரமும் உந்தன் திருவடி...', `வான மழை நீ எனக்கு வண்ண மயில் நான் உனக்கு...', `இடது பாதம் தூக்கி ஆடும்...' போன்ற பாடல்கள் ஒலிபரப்பப்பட்டன.

விழாவில் சோல்ஃப்ரீ அறக்கட்டளைக்குச் சமுதாய பவுண்டேஷன் சார்பில் ரூபாய் ஒரு கோடிக்கான காசோலையும் வழங்கப்பட்டது. இதை அந்த அறக்கட்டளையின் நிறுவனர் பிரீத்தி சீனிசாசன் பெற்றுக்கொண்டு, ``சமுதாயத்தில் ஸ்பைனல்கார்டு இழப்பினால் அவதிப்படுவோர், வாழ்வாதாரத்தை நாடி ஓடும் ஒவ்வொருவருக்கும் உதவி செய்வதே எங்கள் அறக்கட்டளையின் முக்கியப் பணி. மேலும், தன்னால் வாழ இயலாது என எண்ணும் அனைவருக்கும் கவுன்சலிங் கொடுத்து, அவர்களுக்குள் இருக்கும் திறமையை வெளிப்படுத்தி, அவர்களாலும் வாழ முடியும் என்பதை அவர்களுக்கே சுட்டிக்காட்டிவருகிறது சோல்ஃப்ரீ அறக்கட்டளை'' என்றார்.

எம்.எல்.வி உருவம் பதித்த 5 ரூபாய் மதிப்புடைய தபால்தலையை வெளியிட்டனர் முதன்மை மற்றும் சிறப்பு விருந்தினர்கள். எம்.எல்.வி-யின் இசைப் பயணத்தில் தான் சிலாகித்து மகிழ்ந்த சில நிகழ்வுகளை சிறிய உரையில் நினைவுகூர்ந்தார் இந்திய மாநிலத் தகவல்தொடர்பு மற்றும் ரயில்வே துறை அமைச்சர் மனோஜ் சின்ஹா. `எம்.எல்.வி - 90'  இதழை முதன்மை விருந்தினர் வெளியிட, சுதா ரகுநாதன் பெற்றுக்கொண்டார்.

மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசுகையில், ``இசையால் வசமாகும் இதயத்தை எனக்குத் தந்து, இசையின்பால் என்னை ஈர்த்து, அது தரும் உத்வேகத்தால் இந்த நிகழ்ச்சியில் பங்குபெறுவதை மிகுந்த மரியாதையாகவும் பெருமையாகவும் கருதுகிறேன்.

எனக்கு, இசையை அனுபவிக்கத்தான் தெரியும். எப்போது நேரம் கிடைத்தாலும், அந்த இசை அனுபவத்தை அவ்வப்போது எண்ணிப்பார்த்து என்னை நான் உற்சாகப்படுத்திக்கொள்வேன்.

இன்று நாம் மீண்டும் மீண்டும் பேசக்கூடிய எம்.எஸ்.சுப்புலட்சுமி, டி.கே.பட்டம்மாள், எம்.எல்.வசந்தகுமாரி எனும் மூன்று இசை தேவதைகளின் வழியில்தான் இன்றும் இசை உயிர்ப்புடன் விளங்குகிறது. அவர்களின் வழியில் இன்றைய இளைய சமுதாயம் சென்றுகொண்டிருப்பதில் பேரானந்தம்கொள்கிறேன். 

தமிழ்நாட்டில் சங்கீதத்துக்குத் தனியே ஓர் இடம் உண்டு. அந்த இடத்தை ரசிகர்கள்தாம் ரசனைக்குரியதாக மாற்றுகிறார்கள். சங்கீதத்தைக் கற்றுக்கொண்டு பாடுவது எவ்வளவு முக்கியமோ, அதேபோன்று இசையை அனுபவிக்கும் ரசிகர்கள் இருந்தால்தான் அதற்குரிய மரியாதையும் மதிப்பும் பன்மடங்கு பெருகும். அந்தக் கலாசாரத்தை நம் தமிழ்நாடு விடாமல் காப்பதால்தான் கர்னாடக இசை இங்கு செழித்தோங்கியுள்ளது.

இசைப் பயிற்சியைப் பொறுத்தவரையில் நல்லதொரு குரு அமைவது அரிதிலும் அரிது. சிறந்த ஒரு குருவின் கண்காணிப்பில் பயிலும் எந்த ஒரு மாணவ/மாணவியும் சோடைபோவதில்லை. அதேபோன்று அந்த குரு சொல்லிக்கொடுத்த பாடங்களை சிரத்தையுடன் பயின்று, குருவின் பெயரை நிலைகொள்ளச் செய்யும் சிஷ்யர்கள் அமைவதும் அரிதுதான். அந்த குருவுக்கு அதிர்ஷ்டம் இருந்தால்தான் நல்ல சிஷ்யைகள் கிடைப்பர். அப்படி ஒரு சிஷ்யைதான் சுதா ரகுநாதன். தன் குரு மூலம் தான் கற்றுக்கொண்ட கலையை, கலாசாரத்தை மற்றவர்களுக்கும் சொல்லிக்கொடுத்து தன்னால் ஆன சிறப்பை இங்கு செய்திருக்கிறார்.

எம்.எல்.வி-யைப் பற்றிப் பேசுவதற்கான தகுதி எனக்குச் சுத்தமாக இல்லை. சாதாரணமாக, இந்தியப் பிரஜை  என்ற முறையில் இசையரசிகள் மூவரையும் மூன்று விதமாகத்தான் பார்க்கிறேன். பல்வேறு சபாக்களுக்குப் போய் பற்பல இசைக்கலைஞர்களின் இசை நிகழ்ச்சிகளைப் பார்த்துக் கேட்டிருக்கிறேன்; திருச்சி ரசிக ரஞ்சனி சபாவில் பல கச்சேரிகளை ரசித்திருக்கிறேன். இந்த மூன்று இசையரசிகளும் தியாகராஜரின் கீர்த்தனைகள், வாசுதேவாச்சார்யரின் க்ருதிகள், புரந்தரதாசர் தேவர்நாமா என அனைத்தையும் பாடினர். என் மானசீகமான கர்னாடக இசைப் பாடகி என்றால், அது எம்.எஸ். அம்மாதான். தியாகராஜர் கீர்த்தனையை அவர் உணர்ந்து பாடும்போது, நாம் அறியாமலேயே அவர்பால் நம்மை ஒப்புவித்துவிடுவோம். அதேபோல தீக்‌ஷிதர். அந்தக் கம்பீரம், ஞானம், அவருடைய பாடலில் இருக்கும் சக்தி எல்லாமே அவர் பாடும்போது அந்தப் பாடலுக்கான அர்த்த விளக்க உருவங்கள் நம் கண் முன் தோன்றும். ஒரு குழந்தை  கிருஷ்ணனை தேவர்நாமா மூலம், புரந்தரதாசர் மூலம், கன்னட மொழியாக இருந்தாலும் அந்த உணர்ச்சிகளை உள்ளார்ந்த பொருளை தேன்மதுரக் குரலால் அழகாக விளக்கிப் பாடுவார் எம்.எல்.வி.

`பாரோ கிருஷ்ணைய்யா...' என்று அவர் பாடும்போது, அந்தச் சின்னக் குழந்தை நிஜமாகவே நம் வீட்டுக்கு வந்துவிடக்கூடிய அளவுக்கு உருகிப் பாடும் உன்னத ஆத்மா எம்.எல்.வி. திருபாவையைப் பாடவேண்டுமென்றால், அது எம்.எல்.வி-தான். சுதா ரகுநாதன் சிஷ்யையாக அமைந்ததுபோல ஜி.என்.பி-யின் சிஷ்யையாக அமைந்தார் எம்.எல்.வி. ``நீ வா... நான் உனக்குப் பாட்டுச் சொல்லித்தர்றேன்'' என ஜி.என்.பி-யே விருப்பப்பட்டு பாட்டுச் சொல்லிக்கொடுத்தார். இந்த மாதிரி ஒரு பிராப்தம் எத்தனை பேருக்குக் கிடைக்கும்?

`புரோசேவாரெவருரா...' பாடலை ஜி.என்.பி பாடி நான் கேட்டிருக்கிறேன். எனக்கெல்லாம் அந்தப் பாடலை மெதுவாகப் பாடினால்தான் புரியும். ஒவ்வோர் இசைக்கலைஞரும் அவரவர் பாணியில் நளின பாவத்தோடு பாடி இசை ரசிகர்களுக்கு விருந்து படைப்பார். அந்த இசை அனுபவம்தான் நம்மை நல்வழிப்படுத்தும்; முழுமைப்படுத்தும். இந்த மாநிலத்திலும் இந்த நகரத்திலும் நாம் வாழ்ந்திட மிகுந்த அதிர்ஷ்டம் செய்திருக்க வேண்டும்'' என்று முடித்தார் நிர்மலா சீதாராமன்.

எம்.எல்.வி-யின் உருவம் காலத்தால் அழிந்தாலும், அவரின் கணீர் குரல் காற்றின் வழியே இன்றும் கானம் பாடிக்கொண்டுதான் இருக்கிறது என்பதற்கான அடையாளமாக இந்த நிகழ்ச்சி அமைந்தது.

அடுத்த கட்டுரைக்கு