Published:Updated:

ஜெ.ஜெயலலிதா என்னும் நான்... - அம்மாவின் கதை! - 9

ஜெ.ஜெயலலிதா என்னும் நான்... - அம்மாவின் கதை! - 9
பிரீமியம் ஸ்டோரி
ஜெ.ஜெயலலிதா என்னும் நான்... - அம்மாவின் கதை! - 9

வாசிப்பும் நேசிப்பும்எஸ்.கிருபாகரன் - படம்: ஈ.வெ.ரா.மோகன்

ஜெ.ஜெயலலிதா என்னும் நான்... - அம்மாவின் கதை! - 9

வாசிப்பும் நேசிப்பும்எஸ்.கிருபாகரன் - படம்: ஈ.வெ.ரா.மோகன்

Published:Updated:
ஜெ.ஜெயலலிதா என்னும் நான்... - அம்மாவின் கதை! - 9
பிரீமியம் ஸ்டோரி
ஜெ.ஜெயலலிதா என்னும் நான்... - அம்மாவின் கதை! - 9

ரு புத்தகம் நூறு ஆசிரியர்களுக்குச் சமம். வாசிப்புப் பழக்கமே பல அறிவுச் சாளரங்களைத் திறந்துவிட்டு, ஒருவரை  மற்றவர்களிடமிருந்து தனித்து அடையாளம் காட்டுகிறது.

ஜெ.ஜெயலலிதா என்னும் நான்... - அம்மாவின் கதை! - 9

முன்னாள் முதல்வர் அண்ணாத்துரை ஒருமுறை வேறோர் ஊருக்குப் பேச அழைக்கப்பட்டார். விழா ஏற்பாட்டாளர்கள், அண்ணாவுக்கு விமான டிக்கெட் போடுவதாகத் தெரிவித்தனர். அதை மறுத்த அண்ணா, `ரயில் டிக்கெட் போதும்' என்றார்.  அருகிலிருந்த நண்பர் அண்ணாவிடம், `விமானப்பயணத்தை ஏன் மறுக்கிறீர்கள்...ரயிலைவிட வசதியானதாயிற்றே... அசதி தெரியாமல் விரைந்து போய்வந்து விடலாமே...' என்றார். அதற்கு அண்ணா, `நீங்கள் சொல்வது சரிதான். ஆனால், விமானப்பயணத்தில் என்னால் குறைவான புத்தகங்களையே வாசிக்க முடியும். ரயில் என்றால் இன்னும் கூடுதலான புத்தகங்களை வாசிக்க முடியும்' என்றார். உடல் அசதியையும் பொருட்படுத்தா மல் படிப்பதற்காகவே ரயில் பயணத்துக்கு முன்னுரிமை கொடுத்த அண்ணாவை எண்ணி வியந்துபோனார் நண்பர்.

அண்ணாவின் தம்பியான எம்.ஜி.ஆரும் அப்படியேதான். நாடக உலகிலிருந்து வந்த அவர், தமிழ் இலக்கியங்களில் பெரும் ஈடுபாடு கொண்டவர் என்பது பலரும் அறியாதது. தன் ராமாவரம் தோட்ட இல்லத்தின் கீழ்ப் பகுதியில் பெரும் அறிவுச்சோலைபோல பல்துறை அறிஞர்களின் புத்தகங்களைச் சேகரித்து வைத்திருந்தார் அவர். பின்னாளில் அண்ணாவை வழிகாட்டியாகவும், எம்.ஜி.ஆரை அரசியல் ஆசானாகவும் ஏற்ற ஜெயலலிதாவும் தீவிரமான வாசிப்புப் பழக்கம் கொண்டிருந்தது யதேச்சையானதல்ல...   அவர் வகித்த உயரிய இடத்துக்கான தகுதியை வளர்த்ததில் வாசிப்புக்கு முக்கிய பங்குண்டு. சிறுவயதிலேயே ஜெயலலிதாவிடம் உருவான இந்தப் பழக்கத்துக்குக் காரணம் அவரது அம்மா சந்தியாவே.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

“அரசியலில் தீவிரமாக இறங்கி, பெரிய அரசியல்வாதியாக வேண்டும் என்கிற ஆசையும் இருந்தது. ஒருவேளை நான் சினிமாவுக்கு வராமலிருந்தால், இன்று தேர்தலுக்காக அல்லது உப தேர்தலுக்காக எங்காவது மேடையில் பேசி வெளுத்து வாங்கிக்கொண்டிருப்பேன்!”

`சினிமாவுக்கு வராமலிருந்தால் என்னவாக ஆகியிருப்பீர்கள்?' என்ற கேள்விக்கு, அரசியல் அரிச்சுவடிகூட அறிந்திராத 1960-களின் மத்தியில் ஆனந்த விகடனுக்கு அளித்த பேட்டியில் இப்படித் தெரிவித்திருந்தார் ஜெயலலிதா.  குறும்பாக அன்று அவர் அளித்த பதில் அடுத்த 20 ஆண்டுகளில் நிஜமானது ஆச்சர்யம்தான். பெங்களூரூ, சென்னை என தான் படித்த இரண்டு நகரங்களிலும் ஆங்கில வழியிலேயே படித்ததால், காமிக்ஸ் மற்றும் உலகத் தலைவர்களின் வரலாற்று நூல்களைப் படிப்பதில் ஜெயலலிதாவுக்கு ஆர்வம் அதிகம் இருந்தது. பின்னாளில் அரசியலில் கோலோச்சவும் இந்த வாசிப்புப் பழக்கமே அவருக்கு பெரிதும் உதவியது. 

ஜெ.ஜெயலலிதா என்னும் நான்... - அம்மாவின் கதை! - 9சென்னையில் இருந்தபோது தோழிகளின் வீடுகளுக்குச் செல்வார் அம்மு (ஜெயலலிதா). அங்கெல்லாம் வண்ண வண்ணப் படங்கள் அடங்கிய வெளிநாட்டுப் புத்தகங்கள் கண்ணைப் பறிக்கும்.அவற்றை ஆர்வமுடன் புரட்டிப் பார்ப்பார். வீட்டுக்கு வந்தபின் அதுபற்றித் தாயிடம் சொல்லுவார். ஆனால், `ஒழுங்கா ஸ்கூல் புத்தகங்களைப் படி அம்மு. மற்றதை அப்புறம் படிக்கலாம்' என அந்த ஆசையை முளையிலேயே கிள்ளி எறிந்து விடுவார் சந்தியா.

ஆனால், ஜெயலலிதாவின் மனதில் பூத்திருந்த இந்த புத்தக ஆசைதான் சந்தியாவுக்கு இன்னொரு வகையில் பின்னாளில் உதவியது. விடுமுறையில் சென்னை வந்து பெங்களூருவுக்குப் பிள்ளைகள் திரும்பும் நேரம், ரயில் நிலையத்தில் சந்தியாவுக்கும் அவர்களுக்கும் இடையே பெரும் பாசப்போராட்டமே நிகழும். பிள்ளைகளைச் சமாளிக்க சந்தியா ஒரு வழி கண்டறிந்தார்.

ஒருநாள், பெங்களுரூ செல்லும் நாளில் ஜெயலலிதாவும் ஜெயக்குமாரும் ரயிலில் ஏறாமல் அழுது அடம்பிடிக்க, அப்போது உதவியாளர் மாதவன் ஒரு பெரிய பையை ரயில் பெட்டியில் ஏற்றி அம்முவின் இடத்தில் வைத்தார். அத்தனையும் பளபள கலரில் பிரமாண்ட காமிக்ஸ் புத்தகங்கள். மவுன்ட் ரோட்டில் உள்ள ‘ஹிக்கின் பாதம்ஸ்’ கடையில் வாங்கியவை. அதைப் பார்த்த இரு குழந்தைகளுக்கும் இன்ப அதிர்ச்சி.

சந்தியாவின் சாணக்கியத் தனத்துக்கு நல்ல பலன் கிடைத்தது. அடுத்தமுறை வண்டி புறப்படும்போது, ஜெயலலிதாவும் சகோதர ரும் எதிர்பார்த்து நின்றது தங்கள் அம்மாவை அல்ல... காமிக்ஸ் புத்தகங்களைத்தான். பல நேரங்களில் ரயில் புறப்படுவது வரையிலும்கூட அம்முவுக்குப் பொறுமை இருக்காது. சந்தியாவும் மாதவனும் பிளாட்ஃபாரத்தில் அமர்ந்திருக்க, ரயில் பெட்டியின் உள்ளே தாத்தா-பாட்டியின் மடியில் இருக்கும் அம்மு, புத்தகங்களில் மூழ்கிவிடுவார். கடைசிப் புத்தகத்தைப் படித்து முடித்துக் கீழே வைக்கும்போதுதான் அம்மாவின் நினைவே வரும். அம்மாவைப் பிரிந்து வந்த கவலை பிறக்கும். சில நேரங்களில் அரைமனதோடு புத்தகத்தைப் படித்தபடியே அம்மாவுக்குக் கையசைப்பார். இப்படி ஒவ்வொரு பயணத்திலும் ஜெயலலிதாவுக்கும் சகோதரருக்கும் தலா இருபது காமிக்ஸ், ஐந்து பஞ்சதந்திரக் கதைப் புத்தகங்கள் கிடைக்கும்.

ஜெயக்குமார் நேரம் கிடைக்கும் போதெல் லாம் படிக்கும் ரகம் என்றால், ஜெயலலிதா படிப்பதற்காகவே நேரம் ஒதுக்கும் ரகம்.

“எங்கள் பிறந்தநாளின்போது பரிசளிக்கும் நண்பர்களும் உறவினர்களும் விலையுயர்ந்த எந்தப் பொருளைக் கொடுத்தாலும்கூட எங்களுக்கு அவ்வளவு மகிழ்ச்சி இருக்காது. மேல்நாட்டிலிருந்து ஒரு நல்ல புத்தகத்தை  வர வழைச்சுக் கொடுத்தாங்கன்னா, நாங்க ரொம்ப சந்தோஷப்படுவோம். ஏன்னா, அன்னைக்கு எங்களின் முக்கிய பொழுதுபோக்கே படிக்கிறதுதானே!” என ஒருமுறை ஜெயலலிதா, தன் வாசிப்புப் பழக்கத்தைப் பெருமிதமாகக் குறிப்பிட்டார். மற்றவர்கள் எப்படியோ, மகளின் பிறந்த நாளுக்கு சந்தியாவின்  பரிசு எப்போதும் புத்தகங்கள்தாம்!

தமிழில் பேசும் அளவுக்கு எழுத வராது என்பதால், தமிழ் நன்னெறிக் கதைகளையும், தலைவர்களின் வரலாறுகளையும் தாத்தா-பாட்டி உதவியுடன் பெங்களூருவில் கற்றிருக்கிறார். இப்படி பத்து வயதுக்குள் ராமாயணம், மகாபாரதம் போன்றவற்றையும் படித்திருக்கிறார் அவர்.

வளர்ந்தபின், ஜெயலலிதாவின் புத்தக அலமாரியில் அதிகமாக இடம்பெற்ற புத்தகங்கள் மேலைநாட்டு எழுத்தாளர் ‘பேர்ல் பெக்' எழுதிய நாவல்கள்தாம். அவரின் எழுத்துக்குத் தீவிரமான வாசகி ஜெயலலிதா.

ஜெயலலிதாவுக்குப் பிடித்த இன்னொரு எழுத்தாளர் பெர்னார்ட்ஷா. கிண்டலும் நையாண்டியும் நிறைந்த அவரது நாடக நூல்களை பலமுறை படித்திருக்கிறார். ஒருநாளைக்கு மூன்று புத்தகங்கள்கூட ஜெயலலிதா படித்ததுண்டு.

மகாபாரதத்தைப் பற்றி ஒருமுறை கருத்து தெரிவித்த அவர், ‘‘அது வெறும் இலக்கியப் படைப்பு அல்ல... வாழ்க்கை முறையை எவ்வாறு அமைத்துக்கொள்ள வேண்டும் என்பதை உணர்த்தும் அருள்வாக்கு. பண்பாடு, கலாசாரம், சமூகவியல், அரசியல், யுத்த சாஸ்திரம் உள்பட அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கிய, முழுமையான வாழ்க்கைக்குத் தேவையான பொக்கிஷம் அது’’ என்றார். அத்தனை புலமை பெற்றிருந்தார் அதில்.

த்ரில்லர், சமூகம், குடும்ப உறவுகளைச் சொல்லும் நாவல்களை அதிகம் விரும்பிப் படித்தார். நடிகையான காலத்தில் ஜெயலலிதாவின் மனம் கவர்ந்த எழுத்தாளர்கள் சார்லஸ் டிக்கன்ஸ், ஜேன் ஆஸ்டென், ஷிட்னி ஷெல்டன். சாமர்ஸெட்டின் கவிதைகளிலும் அவருக்குப் பெரும் விருப்பம் உண்டு.

நடிகையானபின், தமிழ் இலக்கியத்தின் மீது ஆர்வம்கொண்டு இலக்கிய ஆசிரியர் ஒருவரை நியமித்து முறையாக தமிழ் இலக்கியம் பயின்றிருக்கிறார் என்பதும் ஆச்சர்யமான செய்தி. அந்த முடிவுக்கு அவர் வரக் காரணம், எழுத்தாளர் ஜெயகாந்தன். படப்பிடிப்பில் சக கலைஞர்கள் ஜெயகாந்தனைப் பற்றியும் அவரது நடையைப் பற்றியும் சிலாகித்துச் சொன்னதால்,  அவரது நாவல்களைப் படிக்க விரும்பியே தமிழில் ஆர்வம்கொண்டார். பின்னாளில் ஆங்கிலத்துக்கு இணையாக தமிழிலும் புலமை  பெற்று, அவரே நாவல்களும் எழுதினார். படப்பிடிப்புக்காக ஊட்டி சென்ற வேளைகளில், அங்குள்ள ’ஹிக்கின்பாதம்ஸ்’ கடைக்கு நேரில் சென்று புத்தகங்கள் வாங்குவதும் அவர் வழக்கம்.

திரைப்பட நடிகையானபின், ஜெயலலி தாவுக்கு இந்த வாசிப்புப் பழக்கம் வேறு விதத்தில் உதவி புரிந்தது. தனக்கு அறிமுக மானவராகவே இருந்தாலும், தேவையின்றி அவர்களிடம் பேசுவதை அவர் விரும்பு வதில்லை.  ஆரம்ப நாள்களில் அப்படிச் சில வம்புமனிதர்களிடம் சிக்கித் தவித்ததுண்டு. சில கதாநாயகர்கள் வலுக்கட்டாயமாக வந்து அரட்டையடிப்பார்கள். திரையுலகில் இது சகஜம் என்றாலும், ஜெயலலிதா இதற்கு ஒரு வழிகண்டறிந்தார். `ஷாட் ஓகே' என இயக்குநர் குரல்கொடுத்த அடுத்த நொடியே கையில் ஒரு புத்தகத்துடன் ஒதுங்கிச் சென்று அமர்ந்துவிடுவார். அருகில் யார் வந்தாலும் அவர்களைக் கண்டும்காணாதது போல புத்தகத்தில் மூழ்கிவிடுவார். இதனால் அநாவசிய பேச்சுகள் மற்றும் அரட்டை ஆசாமிகளிடமிருந்து தப்பித்துக்கொள்ள முடிந்தது.

பின்னாளில், போயஸ் கார்டன் இல்லத் தில் ஒரு பெரிய நூலகம் அமைத்தார். தேடித்தேடி அதில் உலக அறிஞர்களின் புத்தகங் கள் இடம்பெறச் செய்தார். எத்தனை அரசியல் பரபரப்பும் அவரை வாசிப்புப் பழக்கத்திலிருந்து நகர்த்திவிடவில்லை என்பது ஆச்சர்யம். உண்மையில், அரசியலில் அவர் சோர்வடைந்த நேரங்களில் மனிதர்களின் ஆறுதல் வார்த்தைகளைவிட, சில மணி நேர புத்தக வாசிப்பையே விரும்பியிருக்கிறார்.

80-களில் ஜெயலலிதாவுக்குப் பிடித்த எழுத்தாளர் குஷ்வந்த் சிங். 1984-ல் ஜெயலலிதா, ராஜ்ய சபை எம்.பி ஆனபோது அவருடைய பக்கத்து இருக்கைக்காரரான குஷ்வந்த் சிங், `அழகாக இருக்கும் பெண்கள் புத்திசாலியாக இருக்கமாட்டார்கள் என்ற என் கருத்தை உங்களைப் பார்த்தவுடன்  மாற்றிக்கொண்டேன்’ என ஜெயலலிதாவிடம் சொல்லி, அவரை நெளிய வைத்தார்.

ஜெயலலிதாவின் முதல் அரசியல் கருத்துக்கு அடித்தளம் இட்டதும் வாசிப்புதான். அது என்ன?

(அம்முவின் கதை அறிவோம்!)

ஜெயலலிதா விரும்பிய நகை எது?

ஜெ.ஜெயலலிதா என்னும் நான்... - அம்மாவின் கதை! - 9

ழகுக்கு அழகு செய்வதில் முதலிடம் வகிப்பவர்கள் பெண்கள்தான் என்கிற நம்பிக்கை கொண்ட ஜெயலலிதா, `அலங் கரித்துக் கொள்வதே ஒரு தனிக்கலைதான்' என்பார். எந்த அளவுக்கு எளிமையாக உடை அணிகிறாரோ, அந்த அளவுக்குப் பொருத்தமான நகைகளைத் தேர்ந்தெடுத்து அணிவது அவரது வழக்கம். வெளியிடங்களுக்குச் செல்லும்போது விலை உயர்ந்த புடவையை அணிந்தால், எளிமையான நகைகளையே அணிவார். மாலை நேர நிகழ்ச்சியாக இருந்தால் வைரங்களும் முத்துகளும் கொண்ட கனமான நகைகளை அணிவார்.

அதே நேரத்தில், படப்பிடிப்போ, நிகழ்ச் சியோ இல்லாமல், வீட்டில் இருக்கும்போது, ஒரு குன்றிமணி பொன்கூட அணிந்து கொள்ளமாட்டார்.

நவரத்தினங்கள் எனப்படும் ஒன்பது விதமான கற்களால் செய்யப்பட்ட நகைகள்தான் அவருடைய ஃபேவரைட். நவரத்தினத்தாலான நெக்லஸ், கம்மல்கள், வளையல், மோதிரம் ஆகியவற்றை செட் ஆக வைத்திருப்பார். நவரத்தினங்களுக்கு அடுத்தபடியாக பச்சைக் கற்களே அவருக்கு விருப்பமானவை.

எம்.ஜி.ஆருடன் ஜெயலலிதா நடித்த `அடிமைப் பெண்' வெளிப்புறப் படப் பிடிப்புக்காக ராஜஸ்தான் சென்றபோது,  ஜெய்ப்பூரின் பிரசித்தி பெற்ற பச்சைக் கற்களில் (எமரால்ட்) செய்யப்பட்ட நெக்லெஸ், காதணி, வளையல், மோதிரம் அடங்கிய நகைகளை ஒரு செட் வாங்கினார். விலை உயர்ந்தவை என்றாலும் பார்வைக்கு எடுப்பாகத் தெரியாது என்பதுதான் ஜெய்ப்பூர் எமரால்ட் நகைகளின் விசேஷம்.

படப்பிடிப்புக்கு வெளியூர் செல்லும் போதும் நகை வாங்குவதற்கு என்றே நேரம் ஒதுக்குவார். 

மேடை நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளச் செல்லும்போது, தங்க ஒட்டியாணம், வங்கி, ஜடை பில்லை, வைர மாட்டல், காலில் வெள்ளி கொலுசு ஆகியவற்றை அணிந்து செல்வார். நடிகையான அவர், 1970-களில் இப்படி ஆடை அணிகலன் அணிவதைப் பற்றி, அவரது நலன்விரும்பிகள், `இப்படி கர்நாடகம் போல வரவேண்டுமா' எனக் கேட்டதற்கு, `இதுதான் இப்போது ஃபேஷன்' என்று கூறி வாயடைக்கச் செய்திருக்கிறார்.

விதவிதமாக மோதிரங்களை வாங்கிச் சேகரிப்பதையும் வழக்கமாகக் கொண்டிருந்தார். மோதிரத்தில் எவ்வளவு டிசைன்கள் உண்டோ, அவ்வளவையும் போட்டுப்பார்ப்பதில் அவருக்கு அப்படி ஒரு குஷி. நிகழ்ச்சிகளுக்குச் செல்லும்போது சக நடிகைகள் ஏதேனும் புது மாடல் மோதிரம் அணிந்திருப்பதைக் கண்டால் உடனே அதை ஆர்டர் செய்து அடுத்த தினங்களில் அணிந்து மகிழ்வார். இப்படிச் சேர்ந்த மோதிரங்கள் மூலம் ஒரு பெரிய மோதிர கலெக்‌ஷனை அவர் பராமரித்துவந்தார் என்பது குறிப்பிடத்தகுந்தது.