தன்னம்பிக்கை
லைஃப்ஸ்டைல்
Published:Updated:

ஜெ.ஜெயலலிதா என்னும் நான்... - அம்மாவின் கதை! - 10

ஜெ.ஜெயலலிதா என்னும் நான்... - அம்மாவின் கதை! - 10
பிரீமியம் ஸ்டோரி
News
ஜெ.ஜெயலலிதா என்னும் நான்... - அம்மாவின் கதை! - 10

ஆத்திரம் வேதனை துக்கம் எஸ்.கிருபாகரன், படம்: ஈ.வெ.ரா.மோகன்

ங்கில வழியில் பயின்ற ஜெயலலிதா, பின்னாளில் தமிழ் கற்க விரும்பியதன் பின்னணியிலும் ஒரு சுவாரஸ்யம் உண்டு. பெங்களூரிலிருந்து சென்னைக்கு நிரந்தரமாகப் படிக்க வந்த சமயம் அது. படப்பிடிப்பு இல்லாத ஓய்வுநேரங்களில் உறவினர்கள் மற்றும் தோழிகளை வீட்டுக்கு வரவழைத்து பேசிக்கொண்டிருப்பது சந்தியாவின் விருப்பமான விஷயங்களில் ஒன்று. அரசியலில் தொடங்கி ஆன்மிகம் வரை எல்லா விஷயங்களும் அப்போது தோழிகளால் அலசப்படும். அச்சமயங்களில் தானும் அந்தப் பேச்சில் பங்குகொள்ளும் விதமாக எதையாவது சொல்வார் அம்மு. ஆனால் பெரியவர்கள், ``உனக்கு என்ன தெரியும்னு பேச வந்துட்ட... போய் படி அம்மு!'' என அவரை விரட்டிவிடுவர். எதை வேண்டுமானாலும் தாங்கிக்கொள்வார் அம்மு. ஆனால், தன்னை யாராவது குறைத்து மதிப்பிட்டால் வெகுண்டெழுவார். சிறு வயதிலேயே அவரிடம் உருவான குணம் அது. வகுப்பில் முதல் மாணவியான தன்னைப் பெரியவர்கள் புறக்கணிப்பதில் எரிச்சலான அம்மு, தானும் அவர்களுக்குச் சளைத்தவள் அல்ல என நிரூபிக்க முடிவெடுத்தார்.

ஜெ.ஜெயலலிதா என்னும் நான்... - அம்மாவின் கதை! - 10


 

அன்று முதல் திருட்டுத்தனமாக ஒரு காரியத்தைச் செய்ய ஆரம்பித்தார். சந்தியா தரும் பாக்கெட் மணியில் ஒரு செய்தித்தாளை வாங்கி, பள்ளியில் மதிய உணவு இடைவேளையில் முழுவதுமாகப் படிக்க ஆரம்பித்தார். ஒருநாள் வீட்டில் அணுகுண்டு பரிசோதனை பற்றி பேச்சு வந்தது. “அமெரிக்காவைப் போல இந்தியா அணுகுண்டு பரிசோதனை நிகழ்த்த வாய்ப்பிருக்கா?” என தோழிகளிடம் சந்தியா வினவினார். அப்போது, “சான்ஸே இல்ல மம்மி... நேற்றுகூட ராஜாஜி அதற்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறாரே? அப்படி ஒரு முயற்சியை அவர் அனுமதிக்கமாட்டார்” என எங்கிருந்தோ ஜெயலலிதாவின் குரல் வந்தது. மகளிடமிருந்து வந்த இந்த அரசியல் கருத்தினால் ஆச்சர்யப்பட்டுப்போனார் சந்தியா. மகளைக் கட்டியணைத்தபடி, ``ஏய் அம்மு, யாரு உனக்கு இதையெல்லாம் சொல்லிக்கொடுத்தது?” - ஆச்சர்யம் விலகாமல் கேட்டவர், “கிளாஸ்ல அரசியல் வகுப்பு எடுக்கறாங்களா?” என்றார். “இல்லை. நான் டெய்லி பேப்பர் படிக்கிறேனே!” பெருமிதமான குரலில் சொன்னார் அம்மு.

பின்னாளில் முறையாக ஜெயலலிதா தமிழ் படித்தாலும், அவருக்கு ஆரம்பகால தமிழ் ஆசான் தினசரி பத்திரிகைதான். அம்மாவை அசத்துவதற்காக, தான் படிக்க ஆரம்பித்த அந்தப் பத்திரிகையிலே பின்னாளில் சுமார் அரை நூற்றாண்டுக் காலத்தில் பலமுறை தானே தலைப்புச் செய்தியாக இடம்பெறப்போகிறோம் என்று அன்றைய அம்முவுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. வாழ்வின் சுவாரஸ்யமே, அது சொல்லாமல் விட்டுவிடுகிற சிறு செய்தியில் அல்லவா ஒளிந்திருக்கிறது!

வெற்றிகரமான அரசியல் தலைவராக ஜெயலலிதா உருவானபோது அவர் மீது வைக்கப்பட்ட விமர்சனம், மேடைகளில் அவர் எழுதிவைத்ததைப் படிக்கிறார் என்பது. யாரோ எழுதிக்கொடுத்ததை மேடையில் படித்து, கைதட்டல் வாங்கும் விஷயஞானமற்றவராக அவரை எதிர்க்கட்சிகள் சித்திரித்தன. ஜெயலலிதா மிகப்பெரிய பேச்சாளர் இல்லை யென்றாலும், விஷயஞானமற்றவர் அல்ல. 

சர்ச் பார்க்கில் படித்தபோது, விஞ்ஞானம் குறித்த அவரது கட்டுரை ஒன்று, `இல்லஸ்ட்ரேடட் வீக்லி' ஆங்கிலப் பத்திரிகையின் சிறுவர் பகுதியில் பிரசுரமானது. ஆசிரியர் குழுவிடமிருந்து பாராட்டுக் கடிதம் ஒன்றும் வந்தது. அதில் தொடர்ந்து எழுதும்படி கூறியிருந்தார்கள். “அந்தக் கடிதம் வந்த தினம் முழுவதும் நான் என் மனதில் பெர்ல் பெக் மாதிரி என்னை ஒரு பெரிய கதாசிரியையாகவே நினைத்துக்கொண்டேன்” என அதை நினைவுகூர்ந்து பிற்காலத்தில் பூரித்தார் ஜெயலலிதா.

ஜெயலலிதா ஆங்கில வழியில் படித்தவர் என்றாலும்... தமிழில் பேசவும் எழுதவும் பெரிதும் விரும்பினார். பரபரப்பான நடிகை யாக இருந்தபோதும், தமிழ் இலக்கண அறிவை வளர்த்துக்கொள்ள ஆசிரியரை அமர்த்திக் கொண்டதிலிருந்தே அவரின் தமிழார்வத்தை உணரலாம். அத்தனை பரபரப்புக்கிடையிலும் வாசிப்பு பழக்கத்தை விட்டுவிடாதவர் அவர். பிரபல `உமன்ஸ் எரா' பத்திரிகைக்கு, தன் இறுதிக்காலம் வரை தொடர்ந்து சந்தா கட்டினார். பத்திரிகைகளில் தன் மீது விமர்சனங்கள் வந்தால், அவற்றைப் படிப்பதோடு நின்றுவிடாமல், எதிர்வினை ஆற்றவும் தவறமாட்டார். பிரபல தமிழ்ப் பத்திரிகை  ஒன்றில், அவரது பிறப்பு குறித்த கருத்து இடம்பெற்றது. இத்தனைக்கும் அது வாசகர் பகுதிதான். அன்றைக்கு ஓய்வு ஒழிச்சலின்றி படப்பிடிப்பில் கலந்துகொண்டிருந்தாலும், அவர் அதைப் படித்ததோடு உடனடியாக மறுப்புக் கடிதமும் எழுதினார்…

`ஆசிரியர் அவர்களுக்கு,

தங்கள் பத்திரிகையின் பிப்ரவரி இதழில் ‘……’ பகுதியில் ‘……’  என்ற வாசகர், நான் கன்னட நடிகை என்று குறிப்பிட்டிருக்கிறார். ஏற்கெனவே பலமுறை பத்திரிகைகளில் நான் தமிழ் நடிகைதான் என்று கூறியிருக்கிறேன். இப்போது மீண்டும் கூறுகிறேன். நான் கன்னட இனத்தவள் அல்ல. தமிழ்நாட்டிலுள்ள ஸ்ரீரங்கம் ஐயங்கார் குடும்பத்தைச் சேர்ந்தவள். என் தாய், தந்தை மைசூர் நகரில் வசித்துவந்ததால், அங்கு நான் பிறக்க நேர்ந்தது. சிறிது காலம் அங்கு வளர்ந்ததால், கன்னட மொழியை நன்கு கற்றுக்கொண்டேன். அவ்வளவுதானே தவிர, மற்றெந்த வகையிலும் எனக்கும் கன்னடத்துக்கும் சம்பந்தம் இல்லை என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

- இப்படிக்கு ஜெ.ஜெயலலிதா'

பரபரப்பான அரசியல் நாள்களில் அவர் தன் மேடைப் பேச்சுகளைத் தயாரிக்க ஆட்களை நியமித்திருந்தார் என்பது உண்மையே. ஆனால், அவர்கள் உதவியாளர்கள் மட்டுமே. தீவிர வாசிப்புப் பழக்கத்தினால் பல்துறை அறிவுபெற்றிருந்த ஜெயலலிதா, தனது உரைக்கான குறிப்புகளைத் தானே தனது நூலகத்தில் தேடி எடுத்துக் கொடுப்பதே வழக்கம். அவற்றைக் கோப்பது மட்டுமே உதவியாளர்கள் பணி. அதில் இடம்பெறும் ஒவ்வொரு விஷயத்தையும் அவரே தீர்மானிப்பார். பின்னாளில் அவர் எழுதி வைத்து படித்ததெல்லாம் வயதின் காரணமாக ஒரு வசதிக் காகத்தானே தவிர, விவரம் தெரியாதவராக அல்ல.

ஜெ.ஜெயலலிதா என்னும் நான்... - அம்மாவின் கதை! - 10

மீண்டும் பெங்களூருக்குப் பயணிப்போம்...

கிறிஸ்துவ அமைப்பால் நடத்தப்படும் பெங்களூரு பிஷப் காட்டன் பள்ளியில் படித்தபோது அம்முவுக்கு கிறிஸ்துவ மதத்தில் ஈடுபாடு ஏற்பட்டிருக்கிறது. பள்ளியில் `சேப்பல்' என்று சொல்லக்கூடிய சிறிய தேவாலயத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில், பைபிள் வகுப்புகள் நடப்பது வழக்கம். கிறிஸ்துவ மதத்தைச் சேர்ந்த மாணவியரோடு அம்முவும் அந்த வகுப்புகளுக்குச் செல்வதோடு பைபிள் கதைப் புத்தகங்களையும் வாங்கி வந்து வாசிப்பார்.

அரசியல் தலைவராகப் பின்னாளில் உருவெடுத்த பின்னர் பல மேடைகளில் அவர் சொன்ன கதைகள், பள்ளி நாள்களை பைபிளிலிருந்து படித்தவைதான். “பைபிள் கதைகளையெல்லாம் நான் நன்கு அறிவேன். இந்தக் கதைகள் வாழ்வியலுக்குத் தேவையான நன்னெறிகளைப் போதிக்கின்றன. இந்தப் போதனைகளைப் பின்பற்றி வளர்ந்தவள் நான் என்பதைச் சொல்லிக்கொள்வதில் பெருமிதம் அடைகிறேன்” என முதல்வரான பின், ஒருமுறை மேடையில் தெரிவித்திருந்தார்.

குழந்தைகளைப் பிரிந்து, இருந்தாலும், அவர்கள் எந்தக் குறையும் தெரியாமல் வளர்வதில் பெரிதும் அக்கறை காட்டினார் சந்தியா. மாதாமாதம் குழந்தைகளின் செலவுக்கான தொகையை தன் சகோதரருக்கு அனுப்பிவைத்துவிடுவார். பிள்ளைகள் தன்னிடம் வளர்வதுபோன்றே எந்தக் குறையும் இன்றி வளர வேண்டும் என்ற அதீத அக்கறையால், சென்னையிலிருந்து புத்தகங்கள், துணிமணிகள் உள்ளிட்ட சிறுசிறு பொருள்களைக்கூட அனுப்பிவைப்பார். `பாட்டி வீட்டில் பயன்படுத்தும் அரிசி பிடிக்க வில்லை' என்று குழந்தைகள் கருதியதால், நெல்லூரிலிருந்து அரிசி வரவழைத்து அனுப்பிக் கொண்டிருந்தார் சந்தியா.
ஆனால், இதெல்லாம் ஜெயலலிதாவுக்கும் ஜெயக்    கு மாருக்கும் தெரியாது. தங்கள் படிப்பு உள்ளிட்ட மற்ற செலவு களை மாமாதான் செய்வதாக அவர்கள் நினைத்துவந்தனர். போதிய வருமானம் இல்லாத சூழலில்தான் தங்களைப் பாட்டி வீட்டில் படிக்க வைக்கிறார் அம்மா என அவர்கள் நினைத்திருந்தனர். இதனால் மாமா விடம் அவசியமானதைத் தவிர, வேறு எதையும் கேட்டுப்பெற மாட்டார்கள் அம்முவும் ஜெயக்குமாரும். அவசிய மானதைக் கேட்டாலுமே கண்டிப்போடுதான் செய்து தருவார் அவர்.

அம்மு படித்த அதே பள்ளியில் மாமாவின் பிள்ளைகளும் படித்து வந்தனர். ஆனால், அவர்களுக்குக் கேட்டதெல்லாம் கிடைத் தன. மாமா, தங்களுக்கு ஒரு கவனிப்பும் தங்கள் பிள்ளைகள் மீது அதீத கவனிப்பும் காட்டியது, அந்த இளம்வயதில் அம்முவையும் அவரது சகோதரரையும் வேதனைப்படுத்தியது என்றாலும், அவர்கள் வெளிக்காட்டிக்கொண்டதில்லை.

ஒரு சமயம் பள்ளியில் பூகோளத் தேர்வு நடந்தது. அதற்காக வரைபடம் வாங்க வேண்டியிருந்தது. மாமாவிடம் வந்து பணம் கேட்டார் அம்மு. ``வாங்கிக்கலாம் போ!'' என்று சாதாரணமாகச் சொல்லிவிட்டுக் கிளம்பிவிட்டார். மறுநாள் கேட்டபோது ``சும்மா சும்மா ஏன் பணம் கேட்டு தொந்தரவு செய்றே அம்மு, நினைச்சதும் பணம் தருவதற்கு பணம் என்ன மரத்திலா காய்க்கிறது?'' என்று மாமா பொரிந்துதள்ள, அம்முவுக்கு அவமானமாகிவிட்டது. அழுகை பீறிட்டு வந்தது. முதன்முறையாக அம்மாவைப் பிரிந்திருக்கும் சோகம் நெஞ்சை அழுத்தியது.

`வெறும் இரண்டணா காசுக்காக மாமா ஏன் இப்படி பேசினார்? அம்மாவாக இருந்தால் இப்படி பேசியிருப்பாரா?' - ஆத்திரம், வேதனை, துக்கம் என மாறி மாறி உணர்ச்சிகள் நெஞ்சில் அலைமோத, அழுத கண்ணீரோடு உறங்கிப்போனார் அம்மு. ஆனால், அப்படி ஒரு சம்பவம் நடந்தது அம்முவுக்குச் சாதகமாகவே முடிந்தது.

எப்படி..?

(அம்முவின் கதை அறிவோம்!)

மனதில் உறுதி வேண்டும்!

``மன உறுதி உடையவர்களால்தான் நினைத்ததை, நினைத்தபடி அடைய முடிகிறது. மன உறுதியுடையவர்கள் துன்பத்தில் துவளுவதில்லை. மன உறுதி உடையவர்களால்தான் பிறருக்கு உதவ முடிகிறது. மன உறுதி இல்லாதவர்களை உலகம் ஒதுக்கிவிடுகிறது. இதை மனதில் பதிய வைத்துக்கொண்டால், நீங்கள் வாழ்வில் வெற்றி பெறலாம். மன உறுதி என்றவுடன், எனக்கு ஒரு சம்பவம் நினைவுக்கு வருகிறது...

அமெரிக்காவில், ஒரு தேவாலயத்தில் பாதிரியார் ஒருவர் `அனைவரும் சொர்க்கம் செல்வதற்காக தினமும் பிரார்த்தனை செய்ய வேண்டும்' என்று அறிவுரை வழங்கி, நீண்ட உரையாற்றினார். அந்த உரை முடிந்தவுடன், `யாரெல்லாம் சொர்க்கம் செல்ல விரும்புகிறீர்கள்?' என்று கேட்டார். அனைவரும் கையை உயர்த்தினர். ஆனால், ஒரு சிறுவன் மட்டும் உயர்த்தவில்லை.

உடனே அந்த பாதிரியார், `நீ சொர்க்கம் செல்ல விரும்பவில்லையா? உனக்கு நரகம் செல்லத்தான் விருப்பமா?' என்று சிறுவனிடம்  கேட்டார். அதற்கு அந்தச் சிறுவன், `நான் சொர்க்கத்தையும் விரும்பவில்லை.`நரகத்தையும் விரும்பவில்லை. அமெரிக்க ஜனாதிபதியாக விரும்புகிறேன்' என்றான்.

`இந்தச் சிறிய வயதில் உன் மனம் கடவுளைவிட பதவியைத்தான் விரும்புகிறதா?' என்று பாதிரியார் கேட்டார். அதற்கு அந்தச் சிறுவன், `இங்கே கறுப்பு இன மக்களை நாயைவிடக் கொடுமையாக நடத்துகின்றனர். அவர்களை விடுதலை செய்ய அமெரிக்க ஜனாதிபதியினால்தான் முடியும்' என்று அமைதியாகக் கூறினான். அந்தச் சிறுவன்தான், பிற்காலத்தில் அமெரிக்க ஜனாதிபதியாகப் பதவி வகித்த ஆப்ரகாம் லிங்கன்.

செருப்பு தைக்கும் தொழிலாளியின் மகனாகப் பிறந்து அமெரிக்க ஜனாதிபதியான ஆப்ரகாம் லிங்கனைப் போன்று, நீங்கள் மன உறுதியுடன், ஒரு குறிக்கோளுடன் செயல்பட்டால் உங்கள் வாழ்வில் வெற்றி நிச்சயம்!''

- 2013-ம் ஆண்டு சென்னையில் நடந்த தனது பிறந்தநாள் விழாவில் ஜெயலலிதா சொன்ன குட்டிக்கதை இது.