Published:Updated:

ஜெ.ஜெயலலிதா என்னும் நான்... - அம்மாவின் கதை! - 11

ஜெ.ஜெயலலிதா என்னும் நான்... - அம்மாவின் கதை! - 11
பிரீமியம் ஸ்டோரி
ஜெ.ஜெயலலிதா என்னும் நான்... - அம்மாவின் கதை! - 11

துயரம் துரோகம் நம்பிக்கைஎஸ்.கிருபாகரன், படம்: ஈ.வெ.ரா.மோகன்

ஜெ.ஜெயலலிதா என்னும் நான்... - அம்மாவின் கதை! - 11

துயரம் துரோகம் நம்பிக்கைஎஸ்.கிருபாகரன், படம்: ஈ.வெ.ரா.மோகன்

Published:Updated:
ஜெ.ஜெயலலிதா என்னும் நான்... - அம்மாவின் கதை! - 11
பிரீமியம் ஸ்டோரி
ஜெ.ஜெயலலிதா என்னும் நான்... - அம்மாவின் கதை! - 11

ஜெயலலிதா தன் இறுதி நாள்களில் அப்போலோ மருத்துவமனையில் தன் ஆயுளை நீட்டிப்பதற்காகப் போராடிக் கொண்டிருந்தபோது, அவருக்கு அருகில் ரத்த உறவுகள் யாரும் இல்லை. சொந்த அண்ணன் பிள்ளைகள்கூட அருகில் இருக்க முடியவில்லை. அவரது இறுதிச்சடங்கின்போது நடைபெற்ற சம்பிரதாயங் களைக்கூட அவரது ரத்த உறவுகள் ‘சம்பிரதாயமாகவே’ செய்து முடிக்க நேர்ந்தது. இறுதி நாள்களில் அத்தனை மனஅழுத்தத்தில் இருந்தபோதும்கூட தனது  சொந்த அண்ணன் பிள்ளைகளை அரவணைத்து ஆறுதல் அடையவில்லை அவர். உறவுகளை முற்றாக ஒதுக்கிவைத்து உதவியாக வந்த ஒரே ஒரு நட்போடு, தன் குடும்பத்தை அவர் சுருக்கிக்கொண்டதற்கு பெரிய உளவியல் காரணங்களைத் தேட வேண்டியதில்லை. கருத்து தெரியவந்த நாள்முதல் உறவினர்களால் கசப்பான அனுபவங்களுக்கு ஆளானவர்கள் ஜெயலலிதாவும் அவரது தாய் சந்தியாவும்.

1971-ம் ஆண்டு அக்டோபர் மாத இறுதியில் ஒருநாள் சந்தியா ரத்த வாந்தி எடுத்தார். பதறிய வேலையாட்கள், பூந்தமல்லியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் உடனடியாக அவரைச் சேர்த்தனர். படப்பிடிப்புக்கு இடையூறு ஏற்படும் என்பதால், ‘`ஜெயலலிதாவுக்கு உடனே தகவல் தெரிவிக்க வேண்டாம்’’ எனச் சொல்லிவிட்டார் சந்தியா. இரவு வீடு வந்தபின் தகவல் தெரிந்து பதறியடித்து மருத்துவமனைக்கு வந்தார் ஜெயலலிதா. தட்டுத்தடுமாறி அன்று தன் மகளுக்குச் சந்தியா சொன்ன சில அறிவுரைகளில் முக்கியமானது, “யாரையும் எதிலும் முழுமையாக நம்பிவிடாதே... நண்பர்களை விடவும் உறவினர்களிடம் ஜாக்கிரதையாக இரு” என்பதுதான்.

ஜெ.ஜெயலலிதா என்னும் நான்... - அம்மாவின் கதை! - 11

ஜெயலலிதாவின் வாழ்வில் ஒரு கொடிய நாளாக நவம்பர் 1 மாறிப் போனது. அன்றுதான், சிகிச்சை பலனின்றி சந்தியா மரணமடைந்தார். ‘உறவுகளை நம்பாதே’ என்ற தாயின் அறிவுரைக்கு ஆணிவேர் என்னவென்று ஜெயலலிதா தேடிச்செல்லவில்லை.

அப்போது போயஸ் கார்டன் வீடு கட்டி முடிக்கப்பட்டுவிட்ட சமயம். சந்தியாவின் இறப்புக்குப்பிறகு ஜெயலலிதாவுக்குத் துணையாக இருப்பதற்காக  இரண்டு சித்திகள், ஒரு சித்தப்பா இன்னும் சில உறவினர்கள் நிரந்தரமாக அவருடன் போயஸ் கார்டன் வீட்டில் வந்து தங்கியிருந்தனர்.

தாயின் பிரிவைத் தாங்க முடியாமல் படப்பிடிப்புகளில் கலந்து கொள்ளாமல், பொது நிகழ்ச்சிகள் எதிலும் பங்கேற்காமல், வீடே கதி என ஜெயலலிதா அடைந்து கிடந்த அந்நாள்களில் ஒருநாள், திரையுலக பிரமுகர் ஒருவர் துக்கம் விசாரிக்க வந்தார். அவரைப் பேசி அனுப்பிவிட்டு இரண்டாவது மாடியில் உள்ள தன் அறைக்குப் படியேறியவருக்குப் படிகள் இரண்டிரண்டாகத் தெரிந்தன. கால்கள் நடுங்கின. அப்படியே மயங்கிக் கீழே சரிந்து விழுந்தார். வேலையாட்கள் பதறினர். சித்திகள் இருவரும் என்ன செய்வதென்று புரியாமல் விழித்தனர்.

சித்தப்பா ஊரில் இல்லாததால் வேலையாட்கள் சமயோசிதமாக எம்.ஜி.ஆருக்கு போன் செய்து விஷயத்தை சொன்னார்கள். மருத்துவர் ஒருவரை உடனே ஜெயலலிதாவின் வீட்டுக்கு அனுப்ப ஏற்பாடு செய்துவிட்டு, விரைந்து வந்தார் எம்.ஜி.ஆர்.  ‘மருத்துவமனையில் வைத்து சிகிச்சை அளிப்பது நல்லது’ என டாக்டர் சொன்னதால், உடனடியாக ஜெயலலிதாவை மருத்துவ மனைக்கு அழைத்துச் செல்ல ஏற்பாடுகள்  நடந்தன. மயங்கிய நிலையில்  உள்ள  ஜெயலலிதாவு டன் செல்ல நிச்சயம் பெண் உறவினர்கள் வேண்டிய நிலை. ஆனால், மாடிக்குச் சென்ற சித்திகள் இறங்கி வரவே இல்லை. நேரம் கடந்தால் ஆபத்து என மருத்துவர் எச்சரிக்கை செய்தபின் வேலைக் காரர் ஒருவர் மேலே போய் ஏமாற்றத்துடன் திரும்பி வந்தார். “இரண்டு பேரும் ஏதோ சத்தமாக சண்டை போட்டுக்கிறாங்க… `சீக்கிரம் வாங்கம்மா’ன்னு கூப்பிட்டதுக்கு, ‘உன்வேலையைப் பாத்துக்கிட்டுப் போ’ன்னு விரட்டிட்டாங்க’’ என்றார்.

எம்.ஜி.ஆருக்குக் கடும் கோபம். ``பொண்ணு மயங்கிக் கிடக்கும்போது இவங்களுக்கு அப்படி என்ன முக்கியமாப் போச்சு மேலே...’’ என, தானே விறுவிறு வென மாடிக்குச் சென்றார். அங்கே ஜெயலலிதாவின் சித்திகள் பேசிக்கொண்டிருந்ததைக் கேட்டு, கோபத்தின் உச்சிக்கே போனார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஜெ.ஜெயலலிதா என்னும் நான்... - அம்மாவின் கதை! - 11

ஆம், ஜெயலலிதா ‘இல்லாதபோது’ போயஸ் கார்டன் வீட்டின் சாவியை யார் வைத்துக்கொள்வது என்ற பட்டிமன்றம் தான் அவர்களுக்கிடையே அவ்வளவு நேரமாக அங்கு நடந்துகொண்டிருந்தது. அக்கா மகளின் உயிர் ஊசலாடிக்கொண்டிருக்கிற சூழலில் வீட்டின் கொத்துச் சாவி பற்றிக் கவலைபட்டுக்கொண்டிருந்தனர் சித்திகள். அவர்களிடம் கோபமாகப் பேசிவிட்டு வீட்டின் சாவியை வாங்கிய எம்.ஜி.ஆர், தானே ஒவ்வோர் அறையாகப் பூட்டிவிட்டு ஜெயலலிதாவின் சித்திகளை கீழே வரச் சொல்லி உத்தரவிட்டார். மறுநாள், மருத்துவமனையில் ஜெயலலிதா கண்விழித்துப் பார்த்தபோது சிரித்தபடி நின்றிருந்தார் எம்.ஜி.ஆர்.

ஜெயலலிதாவின் கையில் போயஸ் கார்டன் வீட்டின் சாவியை ஒப்படைத்து, “அம்மு, இனி நீ ஜாக்கிரதையா இருக்கணும். உன்கூட இருக்கிறவங்களை நீ சொந்தக்காரங்களா பார்த்தாலும் அவங்கப் பார்வைக்கு எப்போதும் நீ ஒரு சொத்து போலத்தான். எப்போதும் யாரிடமும் கொஞ்சம் விழிப்பா இருக்கணும்…’’ என ஒரு தாயின் பரிவோடு சொல்லிவிட்டுக் கிளம்பினார் எம்.ஜி.ஆர். எண்ணிப்பார்த்தால், ஜெயலலிதா யார் யாரையெல்லாம் ஆத்மார்த்தமாக நேசித்து அன்பு செலுத்தினாரோ அந்த ரத்த உறவுகள், அனைவருமே ஏதோ ஒருநாளில் அவருக்கு கண்ணீரைப் பரிசாகத் தந்தவர்களே..!

ஜெயலலிதா உறவுகளை வெறுக்க இதுதான் காரணம். ஆனால், அம்மாவிடம் இந்த அறிவுரையைப் பெறுவதற்கு முன்பே நேரிடையாக இதை உணர்ந்தது பெங்களூரில் படித்துக் கொண்டிருந்த சமயத்தில்தான். அந்த அனு பவத்தைத் தந்ததும் அவரது மாமாவேதான்.

சந்தியா, புகழ்பெற்ற சினிமா நடிகை யாக இருந்ததால், பிள்ளைகளைத் தனது நேரடிக் கட்டுப்பாட்டில் வளர்க்க முடிய வில்லை. எனவே, பெங்களூருவில் தன் பெற்றோரின் கட்டுப்பாட்டில் அம்முவையும் ஜெயக்குமாரையும் வளர்த்து வந்தார். பராமரிப்பு மற்றும் படிப்புச் செலவுகளை நிர்வகிக்கும் பொறுப்பை அம்முவின் மாமாவிடம் ஒப்படைத்திருந்தார்.

அம்முவின் மாமாவுக்கு மூன்று பெண்கள் இருந்தனர். அவர்களும் அம்மு படித்து வந்த பிஷப் காட்டன்ஸ் பள்ளியில்தான் படித்து வந்தார்கள்.

பிள்ளைகளுக்குச் சிறு குறையும் இருக்கக் கூடாது என்று ஆலிவர் பேனா முதல் நெல்லூர் அரிசி வரை எதை வாங்கி அனுப்பினாலும் மற்ற மூன்று பிள்ளைகளுக்கும் சேர்த்தே அனுப்பிவைப்பார் சந்தியா.

ஜெ.ஜெயலலிதா என்னும் நான்... - அம்மாவின் கதை! - 11

ஆனால் நடந்ததோ வேறு…

சந்தியா அனுப்பும் பணத்தைத் தனது சொந்த செலவுகளுக்கே பயன்படுத்திக்கொண்டார் அம்முவின் மாமா. சின்னச் சின்ன சாதாரணமான செலவுக்குக்கூட அம்முவுக்கும் அவரது சகோதரருக்கும் பணம் தரமாட்டார். சாக்லேட் வாங்க, அரை அணா கேட்டாலும் கோபப்படுவார் அவர். இந்த நேரத்தில்தான் பூகோளப் பாடத்துக்காக, வரைபடம் வாங்க இரண்டு அணா பணம் தேவைப்பட மாமாவிடம் கேட்டார் அம்மு.  ஆனால்,  அவரோ கடுகடுவென பேசி அவமானப்படுத்திவிட்டார். கூடவே, அவரது மூத்த மகளும் அம்முவின் கையைப் பிடித்து இழுத்துச் சென்று, ``எங்களுக்குச் செலவு செய்யவே என் தந்தை பெரும்பாடு படுகிறார். நீங்க ரெண்டு பேரும் இன்னும் எத்தனை நாளைக்கு இப்படிக் கஷ்டத்தை தரப்போறீங்களோ...” எனப்பேசி அம்முவை இன்னும் அழவைத்தாள். ஒருமுறை பள்ளி ஆண்டுவிழாவில், அம்முவுக்கு நாட்டியத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால், ‘நாட்டிய உடை வாங்க செலவு செய்ய வேண்டுமே’ என நாடகத்திலேயே நடிக்கக்கூடாது என கறார் உத்தரவு போட்டார் மாமா. இந்த உத்தரவினால், அம்முவின் சிறிய இதயம் நொறுங்கிவிட்டது. ‘உண்மையிலேயே நாம் ஓர் ஏழை. எங்களைக் காப்பாற்ற வழி இல்லாமல்தான் அம்மா இங்கு அனுப்பிவிட்டார்!’ என்ற எண்ணத்தில் அப்போ தெல்லாம் கூட அமைதியாக இருந்த அம்முவால், மேப் விவகாரத்தில் ஏற்பட்ட அவமானத்தை மட்டும் மறக்கவே முடியவில்லை.

இந்த நேரத்தில், சந்தியா தன் குழந்தைகளைப் பார்ப்பதற்காக பெங்களூரு வந்தார். “மம்மி, இனி போகும்போது எங்களுக்குக் கொஞ்சம் பாக்கெட் மணி தர்றியா... படிப்புச் செலவுக்கு ஆகும்!” என பரிதாபமாகக் கேட்டுவைக்க, சந்தியாவுக்கு அதிர்ச்சியாகிவிட்டது. ``பாக்கெட் மணிக்காக தினமும் உனக்குப் பணம் தரச் சொல்லி இருந்தேனே, அதையெல்லாம் என்ன செய்தாய்?’’ என்று அதிர்ச்சி குறையாமல் அவர் கேட்க, நடந்த அனைத்தையும் மழலை மொழியில் சொல்லி முடித்தார் அம்மு.

தன் குழந்தைகளிடம் இப்படி நடந்து கொண்ட நன்றிகெட்ட அந்த மனிதரை திட்டித்தீர்த்த சந்தியா, ‘இனி என்ன ஆனாலும் சரி... இனி ஒரு நிமிடமும் என் குழந்தைகள் இங்கிருக்காது’ என குழந்தைகளின் பெட்டி படுக்கைகளைத் தயார்படுத்தி காரில் வைத்தார்.

உறவினர்கள் பற்றிய கசப்பான அனுபவங் களுக்குப் பிள்ளையார் சுழியாக அமைந்தது இந்த பெங்களூரு சம்பவம்தான்.

மாமாவிடமும் மற்றவர்களிடமும் அம்மா கோபப்பட்டதைப் பார்த்த அம்முவுக்கு, ‘இனி எந்தக் காரணத்தை முன்னிட்டும் அம்மா தங்களை பெங்களூருக்குத் திருப்பி அனுப்ப மாட்டார்’ என்ற உறுதியான எண்ணம் மனதில் விழுந்தது.

1958-ம் ஆண்டு நவம்பர் மாத இறுதியில் ஒரு காலைப்பொழுதில் பெங்களூருவில் இருந்து கிளம்பியது சந்தியாவின் கார். காரின் பின்சீட்டில் சந்தியாவை ஆளுக்கொரு புறம் கட்டிப்பிடித்தபடியே விவரிக்கமுடியாத மகிழ்ச்சியில் பயணம் செய்தனர் அம்முவும் ஜெயக்குமாரும்.

(அம்முவின் கதை அறிவோம்!)

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism