Published:Updated:

ஜெ.ஜெயலலிதா என்னும் நான்... - அம்மாவின் கதை! - 12

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
 ஜெ.ஜெயலலிதா என்னும் நான்... - அம்மாவின் கதை! - 12
ஜெ.ஜெயலலிதா என்னும் நான்... - அம்மாவின் கதை! - 12

சினிமா மீதான வெறுப்புஎஸ்.கிருபாகரன் - படம் உதவி:ஜெயபாபு

பிரீமியம் ஸ்டோரி

ஜெயலலிதாவின் வாழ்வில் மறக்க முடியாத இடங்களில் ஒன்று பெங்களூரு. அவர் மறக்க நினைத்த இடங்களில் ஒன்றும் பெங்களூருதான். ஆம்... 1958-ம் ஆண்டு நவம்பர் மாத இறுதியில் தன் 10-வது வயதில் எந்த நகரத்திலிருந்து மகிழ்ச்சியுடனும் மன நிம்மதியுடனும் சென்னைக்குத் திரும்பினாரோ, அதே நகரத்துக்குப் பல ஆண்டுகளுக்குப்பின் பயமும் பதற்றமுமாக ஒருவித பரிதவிப்பான மனநிலையில் சைரன் காரில் செல்ல வேண்டியதானது. இந்த நிலை உருவாகக் காரணம் நிச்சயம் விதியல்ல... அவரேதான்!   

 ஜெ.ஜெயலலிதா என்னும் நான்... - அம்மாவின் கதை! - 12

அம்மாவைக் கட்டிப்பிடித்தபடி வந்த அம்மு, மனதுக்குள் மாமாவுக்கு மானசீகமாக நன்றி தெரிவித்தார். கெடுபிடியான மனிதராக அவர் இல்லாது போனால் சென்னை திரும்பியிருக்க முடியாதல்லவா?!

தி.நகர், மாசிலாமணி தெருவை அடைந்த போது அம்முவுக்கும் அவரது சகோதரருக்கும் கொள்ளை சந்தோஷம். சென்னையின் பிரபல  பள்ளியான சர்ச் பார்க் கான்வென்ட்டில் அம்மு சேர்க்கப்பட்டார். ‘குழந்தைகள் பெங்களூருவில், தான் நினைத்தபடி வசதியாக இருக்கவில்லை. சென்னையில் அவர்களை மிக வசதியாக வைத்துக்கொள்ள வேண்டும்; கேட்டதையெல்லாம் செய்ய வேண்டும்’ என்கிற எண்ணம் சந்தியாவின் மனதில் உருவாகியிருந்தது. அதைச் செயல்படுத்தவும் ஆரம்பித்தார். அம்முவைத் திரும்பவும் நாட்டிய வகுப்புக்கு அனுப்பும் முடிவும் அதில் ஒன்று.

பாலசரஸ்வதி, கமலா, சரஸா உள்பட பல நாட்டிய மேதைகளும் சந்தியாவின் நினைவில் வந்துபோனார்கள். இவர்களில், ‘தன் வீட்டிலேயே மகள் நாட்டியம் கற்க வேண்டும்’ என்ற சந்தியாவின் விருப்பத்துக்கு இசைந்தவர் சரஸா மட்டுமே. இந்த முறை அம்மு முரண்டு பிடிக்கவில்லை.

 ஜெ.ஜெயலலிதா என்னும் நான்... - அம்மாவின் கதை! - 12பெங்களூருவிலேயே நாட்டிய ஆசிரியர் லலிதா துரையிடம் சில காலம் நாட்டியம் பயின்ற அம்மு, ஒரு பிறந்தநாளின்போது உறவினர் புடைசூழ ‘நல்ல பெண்மணி அவளே நல்ல பெண்மணி’ என்ற பாடலுக்கு அபிநயம் பிடித்து அத்தனை பேரின் பாராட்டுகளையும் பெற்றார். சந்தியாவின் முகத்தில் அத்தனை பெருமிதம். அப்போதே நடனத்தின் மீது ஒருவித காதல் பூத்துவிட்டது அம்முவின் மனதில். நடனத்தில் மட்டுமல்ல, அம்மு படிப்பிலும் சுட்டியாக இருந்ததால் எல்லா ஆசிரியர்களுக்கும் அவரைப் பிடிக்கும். ஆனால், அம்முவுக்குப் பிடித்த ஒரே ஆசிரியை சிஸ்டர் செலின். அயர்லாந்தைச் சேர்ந்த அவர் அம்முவின் ஆங்கில ஆசிரியை. கண்டிப்புக்குப் பதில் கனிவு, அதட்டலுக்குப் பதில் அன்பு, அடிக்குப் பதிலாக அரவணைப்பு... இப்படி ஆசிரியைக்கான அத்தனை தகுதிகளையும் கொண்டவர் அவர்.

எத்தனை வருத்தங்களுடன் பள்ளிக்குள் நுழைந்தாலும் செலினைப் பார்த்துவிட்டால் உற்சாகம் பிறக்கும் யாருக்கும். மாணவிகளை விரட்டிப்படிக்கச் சொல்லும் ரகமில்லை அவர். சர்ச் பார்க் பள்ளி, அம்முவின் ஆங்கிலப் புலமையை மேம்படுத்தியது. அறிவை விசாலமாக்கியது. என்றாலும், அவ்வப்போது மன சஞ்சலங்களையும் உண்டுபண்ணியது. காரணம் சில மாணவிகள். டாக்டர்,  இன்ஜினீயர், பெரும் தொழிலதிபர் வீட்டுப்பிள்ளைகள் படிக்கும் அந்தப் பள்ளியில் ஒரு நடிகையின் மகள் என்பதால், அம்முவிடம் வித்தியாசம் காட்டினார்கள் சில மாணவிகள். வைஜெயந்திமாலா, பானுமதி, அஞ்சலிதேவி எனக் கதாநாயகிகளைக் கொண்டாடும் அந்த மாணவிகளுக்கு இரண்டாவது கதாநாயகியான சந்தியா மீது காரணமின்றி ஒருவித வெறுப்பு இருந்தது. குறும்பு மாணவிகளான அவர்கள், அம்மு கடந்து செல்கிறபோது வேண்டுமென்றே சந்தியா நடித்த படத்தைக் குறிப்பிட்டு, `என்னடி, சரியான அழு மூஞ்சி கேரக்டர். அழறதுக்கே சம்பளம் கொடுத்திருப்பாங்க போல... சொதப்பலான நடிப்பு' எனக் கிண்டல் செய்வார்கள். அதைக்கேட்கும்போது அம்முவுக்குக் கண்ணீர் முட்டிக்கொண்டுவரும். ஆனால், அவர்கள் முன் அழக் கூடாது என்ற உறுதியில், சமாளித்தபடி நகர்ந்து விடுவார். தன்னை அவமதிக்கிறவர்கள் முன் அழுவது எப்போதும் அம்முவுக்குப் பிடிக்காத குணம். ‘அம்மா இரண்டாம் நாயகியாக இருப்பதால்தான் ஏளனமாகப் பார்க்கிறார்கள். ஒருவேளை கதாநாயகியாக இருந்தால், இவர்களே ஆட்டோகிராஃப் கேட்டு வரிசையில் நின்றிருப்பார்கள்’ என மனதுக்குள் முணுமுணுத்தபடி வீட்டுக்கு வந்ததும் அம்மாவிடம் சொல்லி, `மம்மி நீ சினிமாவில் ஆக்ட் பண்றதை நிறுத்திடு' என அழுது கெஞ்சுவார்.

மகளின் சிறுபிள்ளைத்தனத்தை நினைத்துச் சிரிப்பார் சந்தியா. ‘நான் அழுது நடிக்கிறேன்னுதானே உன் ஃபிரெண்ட்ஸ் கிண்டல் பண்றாங்க... அசிங்கமா நடிக்கிறேன்னு சொல்லலையே... போய்ப் படி அம்மு” என்று மகளை சமாதானப்படுத்துவார் சந்தியா.  

 ஜெ.ஜெயலலிதா என்னும் நான்... - அம்மாவின் கதை! - 12

அக்காலத்தில் அம்முவுக்கு அம்மாவை விட அதிகம் பிடித்த நடிகை பானுமதி. அவரது படங்கள் ரிலீஸானால் சொந்தச் செலவில் தோழிகளைக் காரில் அழைத்துச்செல்வார். அத்தனை தீவிர ரசிகை பானுமதிக்கு. படம் முடிந்து வீட்டுக்கு வந்தபின்னும் அம்மு, பானுமதியின் நடிப்பைச் சிலாகிப்பதைக் கண்டு பலமுறை பொய்க்கோபம் கொண்டிருக்கிறார் சந்தியா. அம்மாவைக் கோபமூட்டும் இந்த விளையாட்டு அம்முவுக்குப் பிடித்த ஒன்று.

தான் அம்மாவின் அழுகை நடிப்பை விரும்பாவிட்டாலும், அடுத்தவர் அதைக் கேலி செய்வதை  அம்மு என்றில்லை, எந்த மகளும் விரும்பமாட்டாரல்லவா? சந்தியா குறித்த மாணவிகளின் கிண்டல் ஒருநாள் எல்லை மீறிப்போனது. 

படப்பிடிப்பு இல்லாத ஒருநாள் அம்முவைத் தானே காரில் பள்ளிக்கு வந்து விட்டுச்சென்றார் சந்தியா. அப்போது மாணவிகள் சிலர் சந்தியாவைப் பார்த்துப் பார்த்து தங்களுக்குள் கிசுகிசுத்துக்கொண்டனர். மதிய இடைவேளை வரை அது தொடர்ந்தது. பொறுத்துப்பொறுத்துப் பார்த்துப் பொங்கி எழுந்துவிட்டார் அம்மு.

விஷயம் இதுதான்... அண்ணாசாலையில் இன்றைக்கு ஜெமினி மேம்பாலம் உள்ள இடத்தில் அன்றைக்கு ஒரு பெரிய சினிமா பேனர் வைக்கப்பட்டிருந்தது. அரைகுறை ஆடையில் கதாநாயகி  காட்சி தந்த அந்த போஸ்டர் போவோர் வருவோரின் கண்களை உறுத்தியபடி இருந்தது. போஸ்டரில் இருந்தவர் சந்தியா என்பதே மாணவிகளின் கிண்டலுக்குக் காரணம்.

`உன் அம்மா, யார் தோளிலேயோ ஒய்யாரமா சாஞ்சுக்கிட்டு இருக்காங்கடி. பார்க்கலையா நீ?' என்று அம்மாணவிகள் கேட்கவும், அழுகை பீறிட்டது அம்முவின் கண்களில். அதை அடக்கியபடி, ‘அது என் அம்மா இல்லை... அவங்க அப்படியெல்லாம் நடிக்க மாட்டாங்க’ என்று ஆவேசமாகக் கத்தினார் அம்மு. அம்மாவின் மீது அதீத நம்பிக்கை அம்முவுக்கு. எவ்வளவோ சொல்லியும் கேலி குறையவில்லை. அவமானமும் அழுகையுமாகப் பாதி வகுப்புடன் வீட்டுக்குப் புறப்பட, வகுப்பாசிரியையிடம் அனுமதி கேட்டார். 

 ஜெ.ஜெயலலிதா என்னும் நான்... - அம்மாவின் கதை! - 12

ஏதோ விபரீதம் நடந்ததைப் புரிந்துகொண்ட வகுப்பாசிரியையான சிஸ்டர் செலின், அம்முவை ஆசுவாசப்படுத்திக் காரணம் கேட்க, நடந்தவற்றைச் சொன்னார் அம்மு. நேரே வகுப்பறைக்கு வந்தவர், ‘படிக்கிற வயசுல சினிமா போஸ்டரைத்தான் பார்த்துட்டிருக்கீங்களா?’ என மாணவிகளைக் கண்டித்தார். பிரச்னை அப்போதைக்கு முடிந்தாலும் அம்மு சமாதானமாகவில்லை. மாலையில் வீடு திரும்பியதும் காரை எடுக்கச்சொல்லித் திரும்பத் திரும்ப அந்த போஸ்டரைப் பார்த்தார். அது சந்தியாவேதான். ஆனால், அம்முவின் அம்மா அல்ல... பிரபல இயக்குனர் சாந்தாராமின் ‘ஸ்திரீ’ பட நாயகியான வட இந்திய நடிகை சந்தியாதான் அவர்!

மறுநாள் பள்ளிக்கு வந்ததும் முதல் வேலையாக சிஸ்டர் செலினின் அறைக்குச் சென்று விவரத்தைச் சொன்னார். தாயின் களங்கத்தைப்போக்கிவிட்ட மகிழ்ச்சியில் இருந்த அம்முவை ஆசீர்வதித்த செலின், `ஐம் சோ சாரி மை டியர் ஸ்வீட் சைல்ட், உன் தாய் மீது உனக்கு நம்பி்க்கை இருந்தும் அவதூறு சொன்னவர்களிடம் நிரூபிப்பதற்காக இத்தனை சிரமப்பட்டிருக்கிற உன்னைப் பாராட்டுகிறேன். உன் பக்கம் நியாயம் இருப்பது உண்மையானால், நீ யாருக்கும் பயப்படத் தேவையில்லை. விளக்கம் சொல்வதற்காக நேரத்தையும் உழைப்பையும் வீணடிக்க வேண்டியதில்லை. உள்நோக்கத்துடனான ஒருவரின் செயலுக்கு எதிர்வினையாற்ற நினைத்தால், அதற்கு நம் காலம் முழுவதும் செலவிட வேண்டியிருக்கும். இனி அவற்றைப் புறந்தள்ளிவிட்டுப் படிப்பில் கவனம் செலுத்து' என அழகிய ஆங்கிலத்தில் சிஸ்டர் செலின் கூறிய வார்த்தைகள் ஜெயலலிதாவின் மனதில் அழுத்தமாகப் பதிந்தன. பிற்காலத்தில் திரையுலகம், அரசியல் என, தான் பயணித்த துறைகளில் எல்லாம் ஜெயலலிதா இந்தக் குணத்தை வெளிப்படுத்தியிருக்கிறார். 

அம்முவை அழவைத்த மாணவிகளிடம் செலின், ‘நடிப்பு என்பது சாதாரண விஷயமல்ல... சாதாரண ஸ்கூல் டிராமாவில் நடிக்க நீங்கள் எத்தனை நாள் ஒத்திகை பார்க்கிறீர்கள்? அப்படியிருந்தும் மேடையில் நடிக்கத் தெரியாமல், அசடு வழிகிறீர்கள். சில நேரம் நடித்து முடிப்பதற்குள் உதறல் எடுத்துவிடுகிறது. அப்படியானால், சினிமா நடிகர்கள் எவ்வளவு சிரமப்படறாங்க... இனி யாரையும் இப்படி பரிகாசம் செய்யாதீர்கள்' என மாணவிகளுக்கு அறிவுரை சொன்னார்.

நடந்த சம்பவத்துக்காக அம்முவிடமும் மன்னிப்பு கேட்டனர் அந்த மாணவிகள். அம்முவின் வாழ்வில் அழுத்தமாகப் பதிந்தது இந்த சம்பவமும் அதில் கற்ற பாடமும். ஆனாலும், இந்தச் சம்பவத்துக்குப்பிறகு அம்முவுக்கு சினிமா மீது இருந்த வெறுப்பு இன்னும் கூடியது. சினிமா ஆட்கள் தன் வீட்டுக்கு வருவதற்குக்கூட எதிர்ப்புத் தெரிவித்தார். தாய் சந்தியாவையும் ஒருநாள் சினிமாவில் இருந்து ஒதுங்கியிருக்கச் செய்யலாம் என நம்பினார்.

காலம் எழுதிய திரைக்கதைக்கு வசனம் பேசவேண்டிய கதாபாத்திரங்கள்தானே நாம்? ஜெயலலிதாவுக்கு சினிமா மீதான வெறுப்பு அதிகரித்துக்கொண்டிருந்த அதே நேரம், அடுத்த ஐந்து ஆண்டுகளில் தென்னிந்தியாவின் புகழ்பெற்ற நடிகையாகப்போகிற அம்மு என்கிற ஜெயலலிதாவுக்காக ஓர் இருக்கையை ஒதுக்கிக் காத்திருக்க ஆரம்பித்தது காலம்!

(அம்மு கதை அறிவோம்!)

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு