Published:Updated:

ஜெ.ஜெயலலிதா என்னும் நான்... - அம்மாவின் கதை! - 13

ஜெ.ஜெயலலிதா என்னும் நான்... - அம்மாவின் கதை! - 13
பிரீமியம் ஸ்டோரி
ஜெ.ஜெயலலிதா என்னும் நான்... - அம்மாவின் கதை! - 13

அம்மு Vs பாப்புஎஸ்.கிருபாகரன்

ஜெ.ஜெயலலிதா என்னும் நான்... - அம்மாவின் கதை! - 13

அம்மு Vs பாப்புஎஸ்.கிருபாகரன்

Published:Updated:
ஜெ.ஜெயலலிதா என்னும் நான்... - அம்மாவின் கதை! - 13
பிரீமியம் ஸ்டோரி
ஜெ.ஜெயலலிதா என்னும் நான்... - அம்மாவின் கதை! - 13

“சந்தியா அடுத்தடுத்துப் பல படங்களில் நடித்துக்கொண்டிருந்தார். இன்றுபோல சினிமா சங்கங்களின் கட்டுப்பாடுகள் அன்றைக்குக் கிடையாது. நடிகர் - நடிகைகள் தொழில்சிரத்தையுடன் எந்த நேரத்திலும் நடித்துக்கொடுக்க முன்வருவார்கள். அதனால் இரவும் பகலும்கூட தொடர்ந்து படப்பிடிப்புகள் நடைபெறும்.  சில நாள்கள் சந்தியா வீட்டுக்கு வராமலேயேகூட இருந்திருக்கிறார். அம்முவையும் அவர் சகோதரரையும் மாதவனும் மற்றவர்களும் சிரத்தையுடன் பார்த்துக்கொள்வார்கள். ‘அம்மாவைப் பார்க்க முடியவில்லை...’ என்கிற வருத்தமே எழாத அளவுக்கு அம்முவும் ‘பிஸி மாணவி’யாக இருந்தார்.    

ஜெ.ஜெயலலிதா என்னும் நான்... - அம்மாவின் கதை! - 13

சங்கீத வகுப்பு, தமிழ்ப்பாடத்தில் சிறப்புப் பயிற்சி, உடற்பயிற்சி, நடன வகுப்பு, ஹோம்வொர்க் என காலை எழுந்தது முதல் இரவு உறங்கும் வரை பரபரப்பாகவே இருப்பார் அம்மு. ஒருமுறை, பள்ளியில் நடைபெற்ற கட்டுரைப் போட்டியில் அம்முவுக்கு முதலிடம் கிடைத்தது.  அதற்குப் பரிசாக, ‘ஷேக்ஸ்பியரின் மொத்தப் படைப்புகள்' என்கிற தொகுப்பு நூல் தரப்பட்டது.

ஆசிரியர்களும் சக மாணவிகளும் பாராட்டித் தள்ளினாலும், அம்முவின் மகிழ்ச்சி என்பது அம்மாவின் பாராட்டுக்குப் பின்புதானே முழுமையடையும்? தான் பரிசுபெற்ற கட்டுரையை அம்மாவுக்குப் படித்துக்காட்ட ஆவலுடன் அன்று வீட்டுக்கு வந்தார் அம்மு. நள்ளிரவு தாண்டியும் அம்மா வருவதற்கான அறிகுறிகள் தென்படவில்லை. அதனால், அயர்ந்து தூங்கிவிட்டார். காலையில் ஆசை ஆசையாக அம்மாவின் அறைக்குச் சென்றவருக்கு, அப்போதும் ஏமாற்றம். விடியற்காலையில் வீட்டுக்கு வந்த சந்தியா, மீண்டும் படப்பிடிப்புக்காக உடனே புறப்பட்டுச் சென்றுவிட்டதாக மாதவன் சொன்னார். கட்டுரையின் நகலைக் கையில் வைத்தபடி மூன்று நாள்கள் வீட்டை வளைய வந்தார் அம்மு. அப்படியும் அம்மாவைக் காண முடியவில்லை. கட்டுரைத்தாள் மட்டும் அல்ல... அம்முவின் மனமும் கசங்கிப்போனது.

ஜெ.ஜெயலலிதா என்னும் நான்... - அம்மாவின் கதை! - 13நான்காவது நாள்... மாதவன் எடுத்துச் சொல்லியும் கேட்காமல், ஹாலின் நடுவே சோபாவைப் போட்டு, அதில் படுத்துக் கொண்டார். அனைவரும் உறங்கிய பின்னும் அம்மு உறங்கவில்லை. இன்று அம்மாவிடம் கட்டுரையைப் படித்துக்காட்டிவிட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார்.

நள்ளிரவு தாண்டிய பிறகே சந்தியா வீட்டுக்கு வந்தார். உள்ளே நுழைந்து ஹால்  விளக்கைப் போட்டதும், அம்மு சோபாவில் படுத்திருப்பது பளிச்செனத் தெரிந்தது. “ஏம்மா சாப்பிட்டியா? ஏன் இங்கே வந்து படுத்திருக்கே?’’  என்று ஆதூரத்துடன் கேட்டார். எந்தப் பதிலுமில்லை மகளிடம். மகளை எழுப்பி மடியில் கிடத்திய மறுநிமிடம் அம்மு விடமிருந்து பெரும் அழுகை வெடித்துப் புறப்பட்டது.    

ஜெ.ஜெயலலிதா என்னும் நான்... - அம்மாவின் கதை! - 13

“எங்களை ஏம்மா இப்படித் தவிக்க விடறே... மூணு நாளா உன்னைப் பார்க்கலை. நீயும் எங்களைப் பார்க்கலை. என்னதான் வேலை இருந்தாலும், எங்களைப் பார்க்காம இருக்க எப்படி உன்னால முடியுது?'' அழுகையும் ஆதங்கமுமாகப் பேசினார் அம்மு. சட்டென சந்தியாவின் கண்களில் நீர் தளும்பி விட்டது. சினிமாவில் கூட தன் அம்மா அழுவதைப் பார்க்க விரும்பாத அம்மு, முதன்முறையாக நேரில் கண்ணீர் சிந்திய தாயைக் கண்டு நெகிழ்வும் தவிப்புமான ஒரு நிலைக்குப் போனார்.

``என் வாழ்க்கையே நீங்க ரெண்டு பேரும்தான் அம்மு. எனக்கு மட்டும் உங்களைப் பார்க்காம இருக்க முடியுமா என்ன? ராத்திரி நான் லேட்டா வரும்போது நீ அசதியா தூங்கிக்கிட்டிருப்பே... மறுநாள், உனக்கு நிறைய வேலைகள் இருக்கு மேங்கறதால உன்னை எழுப்பித் தொந்தரவு பண்ண மனசு வராது. காலையில் நீ அசந்து தூங்கற அழகை பாத்துட்டு கிளம்பிருவேன். உனக்காக இனிமே தினமும் சீக்கிரமே வரேன்” என மகளை அணைத்து முத்த மிட்டார் சந்தியா.

கட்டுரைப் போட்டி யிலே தனக்கு முதல் பரிசு கிடைத்த தகவலைத் தாயிடம் சொல்லிப்  பூரித்த அம்முவுக்கு, தாயின் சோர்வான முகம் கருணையை ஏற்படுத்தியது. ``மம்மி, நீ போய் மேக் அப் கலைச்சுட்டு, முகம் கழு விட்டு வந்து சாப்பிடு. பிறகு நான் படிச்சுக்காட்டுறேன்’’ என்றார்.

சந்தியாவுக்கு இனி ஒரு நிமிடமும் மகளைக் காக்கவைப்பதில் விருப்பமில்லை. ``இல்லை அம்மு, மூன்று நாள்களாக எனக்காகக் காத்திருந்தது போதும். இப்பவே படி, அதைக் கேட்டுட்டுத்தான் குளிக்கப்போவேன்” என்றார்.

கட்டுரையை முழுவதுமாகப் படித்து முடித்ததும் அம்முவைக் கட்டியணைத்துக் கொண்டார் சந்தியா. கட்டுரைக்குப் பரிசாக அவர் மகளின் கன்னங்களில் கணக்கில்லாமல் முத்தங்களைப் பதித்தார். பின்னிரவு 3 மணிக்குத்தான் தாயும் மகளும் படுக்கைக்குச் சென்றார்கள். அம்முவுக்குக் கிடைத்த கணக்கில்லாத முத்தத்துக்குக் காரணம், அந்தக் கட்டுரையின் தலைப்பு. மகளின் பார்வையில் ஒரு தாயின் குணநலன்களைச் சொல்லும் அந்தக் கட்டுரைக்கு அம்மு வைத்திருந்த தலைப்பு,
’What mummy means to me?’

இயல்பான வாழ்வில், தினம்தினம் நாம் சந்திக்கும் மனிதர்களும், அவர்களால் உருவாகும் அனுபவங்களும்தான் நம்மை நெறிப்படுத்துகின்றன. அனுபவங்களினால் இப்படி பாடம் கற்றுக்கொள்கிறவர்கள் ஒரு ரகம் என்றால், மற்றவர்களுக்குப் பாடம் கற்றுத்தரச் களம் இறங்கிவிடுபவர்கள் இன்னொரு ரகம். ஜெயலலிதா இதில் எந்த ரகம் என்பதில் எல்லா காலங்களிலும் குழப்பங்களையே தந்திருக்கிறார்.

சென்னைக்கு முதன்முறையாக வந்தபோது அடையாறு காந்தி நகரில் சில காலம் வசித்தது சந்தியா குடும்பம். அண்ணன் பாப்பு (ஜெயலலிதாவை `அம்மு' என வீட்டில் அழைப்பதுபோல ஜெயக்குமாருக்கு `பாப்பு' எனச் செல்லப்பெயர்) ஜெயலலிதாவை விளையாட்டு விஷயங்களில் ஒதுக்கியே வைப்பார். எப்போதும் கிரிக்கெட் மட்டையும் கையுமாகத் திரியும் ஜெயக்குமாருடன் தானும் விளையாட வருவதாக  ஜெயலலிதா பல
முறை கெஞ்சியிருக்கிறார். ஆனால், ‘நீ வீட்டில் புத்தகம் படி, போதும். ஆம்பளை போல இதுக்கெல்லாம் ஆசைப்படாதே’ எனக் கூறி, அம்முவின் ஆசையை முளையிலேயே கிள்ளிவிடுவார். அரிதாக சந்தியாவின் பரிந்துரையின்பேரில் ஜெயலலிதாவை விளையாட்டில் சேர்த்துக்கொண்ட சந்தர்ப்பங்களும் உண்டு. தன்னைப் பெண் என ஒதுக்கும் அண்ணன் மீது அம்முவுக்குக் கோபம் உண்டு.  அவனை வெறுப்பேற்றவாவது தான் ஆட்டத்தில் பங்குகொள்ள வேண்டும் என நினைத்தோ என்னவோ... பிடிவாதமாகப் பலமுறை அண்ணனுடனும் அவரது நண்பர்களுடனும் கிரிக்கெட் ஆடுவார்.

தங்கை தன் பேச்சைக் கேட்காமல், விளையாட அடம்பிடிப்பது பாப்புவுக்குப் பிடிக்கவில்லை. ஒருநாள், அதற்குப் பழிதீர்த்துக் கொண்டார். பேட்டிங் செய்துகொண்டிருந்த ஜெயக்குமார் தனக்கு வந்த பாலில் சிக்சர் அடிக்க... அந்தப் பந்து, நேரே பாய்ந்து வந்து அம்முவின் மூக்கின்மேல் பலமாகப்பட்டது. அலறித் துடித்தார் அம்மு. இதனால் ஏற்பட்ட வீக்கம் ஒருவாரத்துக்கு மேல் இருந்தது. இன்னுமொரு முறை கில்லித்தாண்டு விளையாட்டின்போதும் ஜெயக்குமார்
அடித்த கூரான குச்சி, அம்முவின் கண்களில் வந்து பலமாக மோத... கண் வீங்கிப் பெருத்துவிட்டது. அதற்கு ஒருமாத காலம் ஓய்வு தேவைப்பட்டது. இன்னொரு முறை பள்ளியில் கண்ணாடி பாட்டில் உடைந்து அவரது வலது கன்னத்தில் விரல் நுழையும் அளவு பெரிய ஓட்டை விழுந்துவிட்டது. பதறியது சந்தியா குடும்பம்.  

ஜெ.ஜெயலலிதா என்னும் நான்... - அம்மாவின் கதை! - 13

அம்மு அழகில் கண்திருஷ்டி பட்டுவிடக் கூடாது என சந்தியா திருஷ்டி மை வைக்கும் இடத்தில்தான் இந்தப் பெரிய காயம். அது சரியாக சில மாதங்கள் பிடித்தன. மூக்கில் பட்ட அடியால், அதன் கூர்மை சற்று குறைந்தது. வலது கன்னத்தில் விழுந்த ஓட்டை பின்னாளில் குணமாகிவிட்டாலும், ஜெயலலிதாவின் இறுதிக்காலம் வரை அந்தத் தழும்பு லேசாகத் தெரியும். 11 வயதில் கண்ணில் ஏற்பட்ட காயம் ஜெயலலிதாவின் இறுதிக்காலம் வரையிலும் தொந்தரவு கொடுத்தது. ஆம்... பின்னாளில் வெளிச்சம் நேரடியாக கொஞ்சம் கண்ணில் பட்டாலோ, காற்று பலமாக வீசினாலோ அவரது கண் சட்டென கலங்கிவிடும். இந்தத் தொந்தரவைத் தவிர்க்கவே, பிற்காலத்தில் மீடியாக்களைச் சந்திப்பதை அவர் தவிர்த்தார். அதையும் மீறி, பத்திரிகையாளர் சந்திப்புகளில் அவரை நோக்கி ஃப்ளாஷ் வெளிச்சம் பாய்ந்தால், கோபம் அடைவார். அரசியல் மேடைகள், பிரசார வாகனங்கள் என ஒவ்வொன்றிலும் பிரத்யேகமான சில ஏற்பாடுகளைச் செய்து கொண்டதன் பின்னணியும் இதுவே. 

ஆச்சர்யம் என்னவென்றால், ஒரு நடிகைக் கான முக்கிய அம்சமாகக் கூறப்படும் முகத்தில் இத்தனை விபத்துகள் ஏற்பட்ட பின்னும், காலம் அவரை அழகிய நடிகையாக அங்கீகரித்தது.

தன்னை ஒரு பெண் என்று பலவீனமாகப் பேசிப் புறக்கணித்ததாலேயே, ‘வழக்கமான ஒரு பெண் மட்டுமல்ல... அதற்கும் மேலானவள்’ என்று தன்னை நிரூபிக்க வெகுண்டெழுந்திருக்கிறார் ஜெயலலிதா. அதில், அவர் தன்னை நிரூபித்தும் காட்டியிருக் கிறார். ஒருவகையில், அவரது வெற்றி என நாம் குறிப்பிடும் ஒவ்வொரு சந்தர்ப்பமும் அப்படிப் பூத்தவைதான். நடிகை ஜெயலலிதா, அரசியல்வாதி ஆனதும், அரசியல்வாதி ஜெயலலிதா ஒரு கட்சியின் தலைவர் ஆனதும், கட்சித்தலைவராகத் தமிழ கத்தையே கட்டி ஆண்டதோடு அதிகார மையத்தில் அசைக்க முடியாதவராக இயங்கியதும் அவர் திட்டமிட்டு உருவாக்கிக் கொண்ட விஷயங்கள் அல்ல. தான் அவமானப் படுத்தப்பட்ட சந்தர்ப்பங்களை வென்றெடுக்க வேண்டும் என அவர் மனதில் இயல்பாய் உருவான வெறியே. 

பிறந்தநாள் என்பது ஒருவருடைய வாழ்வில் மிக முக்கியமான நாள். பின்னாளில், அரசியல் அதிகாரங்களை அடைந்து அசைக்க முடியாத தலைவியாக ஜெயலலிதா பரிமளித்தபோது, அவரின் ஒவ்வொரு பிறந்த நாள் நிகழ்வும் சர்ச்சைக்குரியதானது. `மகமாயி'யாக, `கன்னிமேரி'யாக அவரைச் சித்திரித்து வரையப்பட்ட போஸ்டர்கள் அந்த வாரத்துப் புலனாய்வு இதழ்களுக்குத் தீனியாகும். தொண்டர்களின் இந்தப் பழக்கம் அவருக்குப் பின்னாளில் தொல்லையாக மாறியபோதும் அவர் கட்டுப்படுத்தத் தவறினார். இது பின்னாளில் அவரைச் சிறைக்குக்கொண்டு செல்லும்வரையில் நீண்டது. பிறந்தநாளின்போது அவரைக் குளிர்விக்க மேல்தட்டு மனிதர்கள் வழங்கிய அன்பளிப்பு, சொத்துக்குவிப்பு வழக்கின் பிரதான அம்சமாக மாறி நின்றது தனிக்கதை.

(அம்முவின் கதை அறிவோம்!)