Published:Updated:

ஜெ.ஜெயலலிதா என்னும் நான்... - அம்மாவின் கதை! - 14

ஜெ.ஜெயலலிதா என்னும் நான்... - அம்மாவின் கதை! - 14
பிரீமியம் ஸ்டோரி
ஜெ.ஜெயலலிதா என்னும் நான்... - அம்மாவின் கதை! - 14

கொண்டாட்டம்எஸ்.கிருபாகரன் - படம்: அய்க்கண்

ஜெ.ஜெயலலிதா என்னும் நான்... - அம்மாவின் கதை! - 14

கொண்டாட்டம்எஸ்.கிருபாகரன் - படம்: அய்க்கண்

Published:Updated:
ஜெ.ஜெயலலிதா என்னும் நான்... - அம்மாவின் கதை! - 14
பிரீமியம் ஸ்டோரி
ஜெ.ஜெயலலிதா என்னும் நான்... - அம்மாவின் கதை! - 14

பிறந்த நாளை இப்படிக் கோலாகலமாகக் கொண்டாடுவது அரசியல் அதிகாரத்துக்கு வந்தபின் ஜெயலலிதாவிடம் முளைத்த புதிய பழக்கமில்லை. பள்ளிக்காலத்திலிருந்தே அவரது பிறந்த நாள் இப்படித்தான் நடக்கும். ஜெயலலிதா பிறந்த தேதி பிப்ரவரி 24 என்றால் அவர் சகோதரர் ஜெயக்குமாரின் பிறந்த தேதி பிப்ரவரி 26. ஜெயக்குமாரின் பிறந்த நாள் பின்னால் வருவதால், அன்றைய தினம்தான் இருவருக்கும் சேர்த்து பிறந்த நாளைக் கொண்டாடுவார் சந்தியா. 

ஜெ.ஜெயலலிதா என்னும் நான்... - அம்மாவின் கதை! - 14

அன்றைக்கு உறவினர்கள், அக்கம் பக்கத்தினர், நண்பர்கள் என அவர் இல்லம் களைகட்டியிருக்கும். கேக் வெட்டி முடித்தபின் பரிசு தரும் வைபவங்கள் அரங்கேறும். கைகள் வலிக்கும் அளவுக்குப் பரிசுகளை வாங்கிக்கொள்வார்கள் அம்முவும் (ஜெயலலிதாவும்) அவரது சகோதரரும். மலைபோல் குவிந்த பரிசுப் பொருள்களில்   டெடிபியர் பொம்மை முதல் தங்கக்கொலுசு வரை இருந்தாலும், அம்மு ஆர்வமுடன் தேடுவது ஆங்கிலப் புத்தகங்களைத்தான். பிறந்த நாள் கொண்டாட்டத்தின் இறுதி நிகழ்வாக, அன்றைக்கு வெளியான ஆங்கிலப் படங்களை வீட்டின் பெரிய ஹாலில் 16 எம்.எம் புரொஜெக்டரில் அம்முவின்  நண்பர்களுக்குத் திரையிட்டுக்காட்டுவார் சந்தியா.

ஆனால், இப்படியான பிறந்த நாள் விழாக்களே பின்னாளில் தன் மகளைச் சிறைக்கு அனுப்பும் எனச் சந்தியா நினைத்திருக்க மாட்டார்.

ஜெ.ஜெயலலிதா என்னும் நான்... - அம்மாவின் கதை! - 141960-ம் ஆண்டின் மே மாத இறுதியில், ஒருநாள் சென்னை மயிலாப்பூர் ரசிக ரஞ்சனி சபாவில், அவரது நாட்டிய அரங்கேற்றம் நடைபெற்றது. அப்போது அவருக்கு 12 வயது.

திரையுலகினர், அரசியல் பிரமுகர்கள், சந்தியாவின் சொந்தபந்தங்கள், நண்பர்கள் என ஆயிரக்கணக்கானோர் அன்று திரண்டு வந்தனர். சிறப்பு விருந்தினர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். பி.நாகிரெட்டி, நாகய்யா, சாவித்திரி, பிரேம் நஸீர் என எம்.ஜி.ஆரைத் தவிர, அன்றைக்குப் புகழ்பெற்றிருந்த அத்தனை கலைஞர்களும் நிகழ்ச்சிக்கு வந்திருந்து ஜெயலலிதாவை ஆசீர்வதித்தனர்.

நிகழ்ச்சிக்குத் தலைமைவகித்த சிவாஜி, அம்முவைப் பார்த்து, ‘`இந்தப் பொண்ணு ரொம்ப லவ்லியாக இருக்கிறாள். தங்கச் சிலை மாதிரி தெரிகிறாள். முகத்தைப் பார்த்தா பிற்காலத்தில் திரை உலகத்துக்கு வந்து ஒரு கலக்கு கலக்குவா போலிருக்கு’’ எனச் சம்பிரதாயமாக இல்லாமல், அழுத்தமாகச் சொல்லிவிட்டுச் சென்றார்.

அடுத்த பத்து வருடங்களில், தன்னை வாழ்த்திப் பேசிய சிவாஜியுடனேயே தான் டூயட் பாடுவோம் என ஜெயலலிதா எண்ணிப் பார்த்திடவில்லை. தான் எந்தப் பெண்ணை வாழ்த்திப் பேசினோமோ. அந்தப் பெண்ணே தனக்கு ஜோடியாக நடிக்கவருவாள் என்று  சிவாஜியும் நினைத்துப் பார்த்திருக்கமாட்டார்.

ஆனால், இதற்கு முன்னதாகவே 1960-ம் வருட ஆரம்பத்தில் ‘பாக்தாத் திருடன்’ என்ற படத்தில் சந்தியா நடித்துக்கொண்டிருந்தார். ஒரு விடுமுறை நாளில் அம்மாவுடன் படப் பிடிப்புக்கு வந்த கொழுகொழு ஜெயலலிதாவை  செட்டில் இருந்த பலரும் தூக்கிக் கொஞ்சினர். துறுதுறுவென எல்லோரிடமும் பேசி அந்த இடத்தைக் கலகலப்பாக்கிக்கொண்டிருந்தவரை தூரத்தில் இருந்து கவனித்துக்கொண்டிருந்தார் படத்தின் கதாநாயகன்.  

ஜெ.ஜெயலலிதா என்னும் நான்... - அம்மாவின் கதை! - 14

ஷாட் இடைவேளையில், நேரே ஜெய லலிதாவிடம் வந்தவர், தான் கேட்ட கேள்விகளுக்கு நுனிநாக்கு ஆங்கிலத்தில் பதிலளித்த சுட்டிப்பெண் ஜெயலலிதாவின் திறமையைப் பார்த்து வியந்தார். சந்தியாவின் பெண்தான் அவர் எனத் தெரியவர, இன்னும் ஆச்சர்யம். அம்முவின் கன்னத்தைக் கிள்ளி முத்தமிட்ட கதாநாயகன், அவரைத் தொட்டு ஆசீர்வதித்துவிட்டு, ``நீ வருங்காலத்தில் பெரிய நடிகையாக வருவே’’ எனச் சொல்லிவிட்டு மீண்டும் ஷாட்டுக்குக் கிளம்பினார். தன் பன்னிரண்டாவது வயதில் எந்த இரு கதாநாயகர்களால், `சினிமாவில் புகழ்பெறுவாய்’ என ஜெயலலிதா வாழ்த்துப் பெற்றாரோ... அதே கதாநாயகர்களுடன் அடுத்த பத்து வருடங்களுக்குள் பல படங்களில் நடித்து முடித்திருந்தார். அம்முவை முதன்முதலாக வாழ்த்திய அந்தக் கதாநாயகன் வேறு யாருமல்ல; எம்.ஜி.ஆர்.

சர்ச் பார்க் பள்ளியில், விரல்விட்டுச் சொல்லும் எண்ணிக்கையில்தான் ஜெய லலிதாவுக்குத் தோழிகள் அமைந்தார்கள். படிப்பில் மட்டுமின்றி நடிப்பு, நடனம், மிருதங்கம் வாசிப்பது என அனைத்திலும் திறமைபெற்றிருந்த அம்முவை அவர் தோழிகள் பாராட்டி மகிழ்வார்கள். `அம்மா' என்று நாம் அறிந்த அம்முவுக்குத் தோழிகள் அன்று சூட்டிய பெயர் லல்லி. இவர்களில், அம்முவுக்கு நெருக்கமான ஒரு தோழி இசையமைப்பாளர் தட்சணாமூர்த்தி என்பவரின் மகளான நளினி. சென்னைக்கு வந்தது முதல் மெட்ரிக் படிப்பு முடியும்வரை சுமார் ஆறு ஆண்டுகள் அம்முவுடன் படித்தவர்.

விடுமுறையின்போது நளினி உள்ளிட்ட சில தோழிகளுடன் பூண்டி, சாத்தனூர், மகாபலிபுரம் போன்ற சுற்றுலாத்தலங்களுக்கு ‘பிக்னிக்’ செல்வது வழக்கம். ஆனால், பள்ளிப்படிப்பு முடிந்தபிறகு நளினி என்ன ஆனார் எனத் தெரியவில்லை. அவர் தங்கியிருந்த இடங்களில் எல்லாம் விசாரித்தும் அவரைப்பற்றி அறிய முடியவில்லை. பின்னாளில், ஜெயலலிதா பெரிய நடிகையான பிறகும்கூட நளினியின் நினைவு அவ்வப்போது வந்து அவருக்கு வேதனையைத் தந்திருக்கிறது. நளினி தங்கியிருந்த வீட்டைக் கடக்கிறபோதெல்லாம் ஜெயலலிதா சோகமாகிவிடுவார். ஆனால், நளினியைத் தேடும் தேடுதல் வேட்டையை மட்டும் அவர் நிறுத்தவில்லை. பல வருடங்களுக்குப் பின் ஒருநாள் ஜெயலலிதாவுக்கு ஓர் இன்ப அதிர்ச்சி காத்திருந்தது.

அப்போது ஜெயலலிதா தென்ன கத்தின் புகழ்பெற்ற நடிகையாக மாறியிருந்த சமயம். சந்தியாவின் தோழியான நடிகை எஸ்.வரலட்சுமி தன் மகனின் பிறந்த நாளுக்கு ஜெயலலிதாவை அழைத்திருந்தார். வரலட்சுமியின் வீட்டின் அருகில்தான் நளினியின் குடும்பம் ஒருகாலத்தில் வசித்து வந்திருக்கிறது. பிறந்த நாளுக்கு வந்த ஜெயலலிதாவுக்கு நளினி நினைவுவந்தது. கவலையோடு அதை வரலட்சுமியிடம் பகிர்ந்து கொண்டார். நளினியை ஏற்கெனவே அறிந்திருந்த வரலட்சுமி, அப்போது ஜெயலலிதாவுக்கு இன்ப அதிர்ச்சி ஒன்றைக் கொடுத்தார். அதே வீட்டுக்குத் திரும்பவும் நளினி வந்துவிட்ட தகவல்தான் அது.   

ஜெ.ஜெயலலிதா என்னும் நான்... - அம்மாவின் கதை! - 14

உடனே நளினியைப் பார்க்கக் கிளம்பியவரிடம், நளினியையும் விசேஷத்துக்கு அழைத்திருப்பதாக வரலட்சுமி சொன்னார். சில நிமிடங்களில் நளினி வந்தார். பல வருடங்களுக்குப் பின் சந்தித்துக் கொண்டதால் தோழிகள் இருவருக்குமே வார்த்தைகள் வெளிவர வில்லை. இருவரின் கண்களிலும் தாரைதாரையாகக் கண்ணீர். ஒருவரையொருவர் பார்த்தபடியே பல நிமிடங்கள் கழிந்தன. உணர்ச்சி கரமான அந்த நேரத்தில், அவர்கள் மனம்விட்டுப் பேசுவதற்காக வரலட்சுமி அங்கிருந்து நகர்ந்தார்.

மருத்துவப் படிப்பு படிப்பதையும் திருமணமாகி ஒரு கைக்குழந்தை இருப்பதையும் நளினி சொல்ல, மகிழ்ச்சிப் பெருக்குடன் தோழியைக் கட்டித்தழுவினார் ஜெயலலிதா. “நீ வீடு மாறிவிட்டதால், என்னால் உன்னைக் கண்டுபிடிக்க முடிய வில்லை. ஆனால், நான் சினிமா நடிகைதானே... எளிதாக என்னைத் தொடர்புகொள்ள முடிந்தும் ஏன் முயலவில்லை?’’ என உருக்கமாகக் கேட்டார் அம்மு.

அந்தக் கேள்விக்குப் பதிலாக, நளினி சொன்னதைக் கேட்டு விழுந்துவிழுந்து சிரித்தார் ஜெயலலிதா...

“நீ இப்போது சாதாரண ஆள் இல்லை, நடிகை. அதுவும் பெரிய நட்சத்திர நடிகை. இப்போது உனக்கு பெரிய பெரிய ஆட்கள் எல்லாம் நண்பர்களாகி விட்டிருப்பார்கள். இந்தச் சமயத்தில், என்னைப்போன்று சாதாரணத் தோழி உன்னைத்தேடி வந்தால், ஏதோ ஆதாயத்துக்காகத்தான் வந்திருக்கிறாள் என நீ நினைத்துக்கொள்வாய் அல்லது உன்னைச் சேர்ந்தவர்கள் உன்னிடம் பேசவிட மாட்டார்கள்” எனக்கூறி கண் கலங்கினார் நளினி.

“அடிப்போடி, நான் என்ன இன்னும் நூறு வருடங்களுக்கா நடிக்கப்போகிறேன்? நடிப்புத் துறையில் நான் இன்னும் புகழடைந்தாலும் என்றும் உன் உயிர்த்தோழிதான். இனி எப்போது வேண்டுமானாலும் நீ என் வீட்டுக்கு வரலாம். நானும் எனக்கு ஓய்வு கிடைத்தால், உன் வீட்டுக்கு ஓடி வருவேன்; சரியா?” என ஜெயலலிதா பேசப்பேச, தன் தோழி அம்முவைப் பிரமிப்புடன் பார்த்தபடி இருந்தார் நளினி. ஆனால், காலம்தான் எத்தனை கொடூரமான வேட்டைக்காரன். எப்போதும் தன் வீட்டின் கதவு திறந்தே இருக்கும் என வகுப்புத் தோழியிடம் உருகிய ஜெயலலிதா, குறைந்தபட்சம் தனது சொந்த ரத்த உறவுகளிடம்கூட அதைப் பேணமுடியாத அளவுக்கு இரும்பு மனுஷியாய் மாறிப்போனார் பின்னாளில்...

(அம்முவின் கதை அறிவோம்!)

கோப்பைக்குச் சொந்தக்காரி!

1962-ம் வருடம் சென்னை சட்டக்கல்லூரியில், விழா ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதற்குத் தலைமை தாங்கியவர் அன்றைக்குச் சினிமாவில் புகழின் உச்சியில் இருந்த எம்.ஜி.ஆர். பார்வையாளர்களை மகிழ்விக்க மேடையில் பல நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. நன்றாக நாட்டியம் ஆடும் திறமைபெற்றிருந்த, சர்ச் பார்க் பள்ளியின் மாணவி ஜெயலலிதாவின் நாட்டியத்தையும் ஏற்பாடு செய்திருந்தார்கள். நிகழ்ச்சியில் பங்கேற்கும் கலைஞர்களுக்குப் பரிசுகள் வழங்கப்படமாட்டா என ஆரம்பத்திலேயே விழா ஏற்பாட்டாளர்கள் தெரிவித்திருந்தனர். ஆனால், ஒரு மாணவனின் மிமிக்ரி நிகழ்ச்சியில் மனதைப் பறிகொடுத்த எம்.ஜி.ஆர்., ‘அவனைப் பாராட்டியே தீர வேண்டும்’ என விரும்பி தன் கைக்கடிகாரத்தை அவனுக்குப் பரிசளித்தார். அடுத்து நடனமாடியது ஜெயலலிதா. பார்வையாளர்கள் மத்தியில் பலத்த கைதட்டல். சிறுமி ஜெயலலிதாவின் நாட்டியத்தில், மெய்ம்மறந்த எம்.ஜி.ஆருக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. ஏதாவது பரிசு தந்தே ஆக வேண்டும். ஆனால், பணமாக இல்லாமல் பொருளாகக் கொடுப்பதுதான் கலைக்கான மரியாதை என்பதால், உடனடியாகத் தன் உதவியாளரை மேடைக்கு அழைத்து காதில் கிசுகிசுத்தார். நிகழ்ச்சி முடிவதற்குள் அழகிய வெள்ளிக்கோப்பை ஒன்றுடன் திரும்பினார் அவரது உதவியாளர். ஜெயலலிதாவுக்கு அதை மேடையிலேயே வழங்கிப் பாராட்டினார் எம்.ஜி.ஆர்.