Published:Updated:

ஜெ.ஜெயலலிதா என்னும் நான்... - அம்மாவின் கதை - 15

ஜெ.ஜெயலலிதா என்னும் நான்... - அம்மாவின் கதை - 15
பிரீமியம் ஸ்டோரி
News
ஜெ.ஜெயலலிதா என்னும் நான்... - அம்மாவின் கதை - 15

நேருவின் முன் அழுகைஎஸ்.கிருபாகரன் - படங்கள் உதவி: ஞானம் - ஜெயபாபு

ஜெயலலிதாவுக்கும் அவருடைய அரசியல் குரு எம்.ஜி.ஆருக்கும் அரிதான சில ஒற்றுமைகள் உண்டு. இருவரும் தங்களின் திரைப்பட வாழ்வின் ஆரம்ப காலத்தில் காங்கிரஸ் அனுதாபிகள். குறிப்பாக
எம்.ஜி.ஆர், அக்கட்சியில் `காலணா’ உறுப்பினராக இருந்தவர் என்பது பலரும் அறியாத தகவல். 

ஜெ.ஜெயலலிதா என்னும் நான்... - அம்மாவின் கதை - 15

1950-களில் அண்ணா தலைமையிலான திராவிட முன்னேற்றக்கழகத்தின் வீறுகொண்ட வளர்ச்சி பொதுமக்களிடையே மட்டுமின்றி திரைக்கலைஞர்களாலும் பெரிதும் கவனிக்கப்பட்டது. எம்.ஜி.ஆர், எஸ்.எஸ்.ஆர், கே.ஆர்.ராமசாமி   டி.வி. நாராயணசாமி, என்.எஸ்.கிருஷ்ணன் உள்ளிட்ட திரைக்கலைஞர்கள் பலர் அண்ணாவால் ஈர்க்கப்பட்டு, தி.மு.க-வுக்கு மக்கள் ஆதரவைத் திரட்டிவந்தனர். பின்னாளில், திராவிட இயக்கத்தின் நீட்சியாக அ.தி.மு.க உருவானது. எம்.ஜி.ஆர் மறைவுக்குப்பிறகு அக்கட்சியின் தலைமைப் பொறுப்பேற்றவர் ஜெயலலிதா. ஆனால், ஆரம்ப காலத்தில் ஜெயலலிதாவின் குடும்பம் காங்கிரஸ் பற்றுடன் இருந்தது. ‘சுதந்திரம் பெற்றுத்தந்த கட்சி’ என்பதால், காங்கிரஸ்மீது அவர்கள் ஈடுபாடு காட்டியிருக்கலாம். காங்கிரஸ் கட்சியில் பல நண்பர்களைக் கொண்டிருந்த ஜெயலலிதாவின் தாய் சந்தியாவுக்கு, இந்தியாவின் கவர்ச்சிகரமான தலைவராக விளங்கிய நேருமீது நல்ல மதிப்பும் மரியாதையும் இருந்தது.      

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
ஜெ.ஜெயலலிதா என்னும் நான்... - அம்மாவின் கதை - 15

இந்திய – சீனப்போரின்போது போர் வீரர்களை மகிழ்விக்கச்சென்ற கலைக்குழுவில், தன் மகளையும் இடம்பெறச் செய்தார். அன்றையப் பிரதமர் லால்பகதூர் சாஸ்திரி, யுத்த நிதி சேகரிப்புக்காகச் சென்னை கவர்னர் மாளிகை வந்திருந்தார். அப்போது சந்தியா, தானும் தன் மகளும் அணிந்திருந்த அத்தனை நகைகளையும் யுத்த நிதிக்காகக் கழற்றித்தந்து தனது தேசபக்தியை வெளிப்படுத்தினார். அந்நாளில், சந்தியா புகழ் வெளிச்சத்திலிருந்து விலகியிருந்த நடிகை என்பதால், அதைச் செய்திருக்க வேண்டிய எந்த அவசியமோ, கட்டாயமோ அவருக்கு இல்லை. ஆனாலும் அதைச் செய்தார் சந்தியா. அந்த நிகழ்ச்சிக்குச் செல்லும்முன் தன் மகளிடம் விஷயத்தைக் கூறாமல், “ஒரு நெருங்கிய தோழியின் திருமணத்துக்கு எப்படி ஆடம்பரமாக நகை அணிந்து செல்வாயோ, அதேபோல வா அம்மு” என்று சொல்லி மகளை அழைத்துச் சென்றார் சந்தியா. அத்தனை நகைகளையும் ஜெயலலிதாவை விட்டே யுத்த நிதிக்கு வழங்கவும் வைத்தார். அந்தளவுக்கு காங்கிரஸ் அபிமானியாக இருந்தவர் சந்தியா. காங்கிரஸின் பலம்பொருந்திய கவர்ச்சிகர மனிதராக இருந்த நேருவைப் பற்றி சந்தியா சொன்ன கதைகளால், அம்முவின் மனதில் நேரு விஸ்வரூபம் எடுத்திருந்தார். கூடவே குழந்தைகளின் உலகத்தில், நேருவுக்கு இருந்த ஈர்ப்பும் சேர்ந்துக் கொள்ள, அம்முவுக்கு நேருமீது மிகப்பெரிய மரியாதையும் ஈடுபாடும் ஏற்பட்டிருந்தது.    

ஜெ.ஜெயலலிதா என்னும் நான்... - அம்மாவின் கதை - 15

இந்நிலையில்,பிரதமர் நேரு சென்னை வரப்போவதாகத் தகவல் பரவியது. அவரை வரவேற்க அமைக்கப்பட்ட நடனக்குழுவில், அம்முவின் பெயரையும் சேர்த் திருப்பதாகத் தலைமை ஆசிரியை சொன்னார். “நேரு முன் ஆடும் அரிய வாய்ப்பு. திறமையாக ஆடி, பள்ளிக்கு நல்ல பெயரைப் பெற்றுத் தா அம்மு” என்றார் அவர். அம்முவின் மனதில் அப்போதே ஜதி சத்தம் கேட்க ஆரம்பித்துவிட்டது. அப்படி ஓர் உற்சாகம் பிறந்தது. நேருவை அருகில் பார்ப்பதே அரிதான விஷயம். அப்படியிருக்கையில், அவர்முன் நடனம் ஆடுவதென்பது எத்தகைய வாய்ப்பு. கண்ணும் கருத்துமாக ஒத்திகையில் ஈடுபட்டார் அம்மு. 

அந்த நாள் வந்தது. நடன உடையோடு நேருவுக்காகக் காத்திருந்தனர், அம்மு உள்ளிட்ட குழந்தைகள். முன்பே பல மேடைகளில் அசாத்தியமாக ஆடிப் பாராட்டுகள் பல பெற்றிருந்தாலும், அம்முவுக்கோ அரங்கேற்ற நாளைவிட அதிகப் பதற்றத்தைத் தந்தது அந்த நாள். அந்த நேரத்தில், ஒரு தகவல் வந்து சேர்ந்தது. ஆம், நேரு சென்னை வந்த விமானம் சற்று தாமதமானதால், நேரம் கருதி அவரது சில நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டிருப்பதாகச் சொன்னார்கள். ரத்தானவற்றில் அம்முவின் நடன நிகழ்ச்சியும் ஒன்று. ‘எப்பேர்ப்பட்ட வாய்ப்பு  இப்படித் தள்ளிப்போய்விட்டதே’ என்ற ஏமாற்றத்தைத் தாங்கிக்கொள்ள முடியாமல் அழ ஆரம்பித்துவிட்டார். மேடை நடன நிகழ்ச்சி ரத்தானாலும் குழந்தைகளை ஏமாற்ற விரும்பாத நேரு, அவர்களைச் சந்திக்க விரும்புவதாக இன்னொரு தகவல் வந்துசேர்ந்தது. அத்தனை குழந்தைகளும் நேருவை வரவேற்க வாசலில் நிறுத்திவைக்கப்பட்டனர்.

விவரிக்கமுடியாத மகிழ்ச்சி அம்முவுக்கு. மீண்டும் அவசர அவசரமாக மேக்கப் போட்டுக் கொண்டு, தன் மனம்கவர்ந்த மாபெரும் தலைவரை பூந்தட்டை ஏந்தியவாறு வரவேற்கத் தயாரானார்.

நேரு வந்தார். தன்னை வர வேற்றக் குழந்தைகளைக் கண்டு புன்னகை பூத்தார். முன் வரிசை யில் முதல் ஆளாக நின்றிருந்த அம்முவின் அருகில் வந்தார். கொழு கொழுவென்றிருந்த அம்முவின் கன்னங்களை லேசாகக் கிள்ளினார். அவ்வளவுதான். அதற்கு மேல் அம்முவால் அழுகையை அடக்க முடியவில்லை. பொல பொலவென  அவரது கன்னங்களில் கண்ணீர். ஒன்றும் புரியாமல், விழித்த நேரு அருகிலிருந்த ஆசிரியையிடம் என்னவென்று விசாரித்தார். “பல நாள் ஒத்திகை செய்து உங்கள்முன் ஆடக் காத்திருந்து ஏமாற்றமாகிவிட்டதால், அம்மு அழுகிறாள்’’ என ஆசிரியை கூற... லேசான புன்முறுவலுடன் அம்முவின் அருகில்வந்து அவரை முதுகில் தட்டிக்கொடுத்த நேரு, தன் உதவியாளரை அழைத்து “இன்று எவ்வளவு தாமதமானாலும் பரவாயில்லை. ஒரு குழந்தையின்  ஏமாற்றத்தை என்னுடன் தலைநகருக்கு எடுத்துச்செல்ல விரும்பவில்லை. உடனே இவர்களின் நடன நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யுங்கள்” என்றார். நேருவின் இந்த உள்ளம் அங்கிருந்தவர்களை ஆச்சர்யப்பட வைத்தது. குறிப்பாக அம்முவை. தன் விருப்பத்துக்குரிய நேரு முன் ஆடும் அவரது கனவு சற்றுநேரத்தில் நிறைவேறியது. நிகழ்ச்சிக்குப்பின் அம்முவின் நடனத்தைப் புகழ்ந்து சில வார்த்தைகள் பேசினார் நேரு. அன்று நேரு பயணத்திட்டத்துக்கு மாறாக ஒன்றரை மணிநேரம் தாமதமாகவே கிளம்பிச்சென்றார். அம்மா சொல்லக்கேட்ட நேருவின் அரிய குணத்தை, நேரில் கண்டு நெகிழ்ந்தார் அம்மு.

ஜெ.ஜெயலலிதா என்னும் நான்... - அம்மாவின் கதை - 15“நேருவின் இந்தச் செயல் என்னைப் புல்லரிக்க வைத்தது. நேருஜியையும், இந்த நிகழ்ச்சியையும் என்னால் என்றுமே மறக்க முடியாது. மீண்டும் ஒரு ஜென்மம் எடுத் தாலும் இதை நான் மறக்க மாட்டேன்’’ எனப் பின்னாளில், இந்தச் சம்பவம் குறித்து நெகிழ்ந்தார் ஜெயலலிதா. நேரு மீதான இந்த நேசத்தை அவரது மகள் இந்திரா, பேரன் ராஜீவ் வரை நீட்டித்தார். பிற்காலத்தில், அரசியல்களத்தில் அதிரடியான அரசியல் தலைவராக அவர் வடிவெடுத்தபோதும் கட்சி மாச்சர்யங்களைத் தாண்டி நேரு குடும்பத்தினர்மீது அன்பு செலுத்தினார் என்பதை அவரது அரசியல் நடவடிக்கைகள் காட்டும்.

நேருவால் தட்டிக்கொடுக்கப் பட்ட ஜெயலலிதா, 1984, ஏப்ரல் 23-ம் தேதி ராஜ்யசபா உறுப்பின ராக நாடாளுமன்றத்தில், தனது கன்னிப்பேச்சை நிகழ்த்திய போது அன்றையப் பிரதமர் இந்திராவினால் பாராட்டப்பட்டார்.           

ஜெ.ஜெயலலிதா என்னும் நான்... - அம்மாவின் கதை - 15

அரசியலில் எம்.ஜி.ஆரால் வளர்க்கப் பட்டாலும், ஜெயலலிதாவை அதிகம் கவர்ந்த தலைவர் எப்போதும் இந்திராதான். இதை ஜெயலலிதாவே பலமுறை பதிவு செய்திருக்கிறார். தனக்குப் ‘பிடித்த பெண் அரசியல் தலைவர்களாக உலகளவில் இங்கிலாந்து ராணி எலிசபெத்தும், இந்திய அளவில் இந்திரா காந்தியும் உள்ளனர்’ எனத் தெரிவித்திருக்கிறார். தனது அரசியல் வாழ்வில் ஜெயலலிதா மேற்கொண்ட நடவடிக்கைகள் பலவற்றில் இந்திராவின் தாக்கம் பிரதிபலித்ததைப் பார்க்கமுடியும். ராஜீவ் காந்தியுடனும் அரசியலைத்தாண்டிய ஒரு நட்பை அவர் அனுசரித்தார்.

தி.நகர், சிவஞானம் தெரு வீடு ஒருவகை யில் அம்முவுக்குப் ‘போதிமரம்’ என்றுதான் சொல்ல வேண்டும். வகைவகையான மனிதர்கள், விதவிதமான அனுபவங்கள் என அந்த இல்லத்துடன் அம்முவுக்குத் தொடர்பு அதிகம். இயல்பிலேயே இரக்க குணமும் யாரையும் எளிதில் நம்பிவிடும் சுபாவமும் பல சமயங்களில் அவருக்குத் துயரத்தையே பரிசாக அளித்திருக்கிறது. தீபாவளி, பொங்கல், குடும்பத்தினரின் பிறந்த நாள் போன்ற விசேஷ நாள்களில், தன் வீட்டில் கூடுதலாகப் பலகாரங்களைச் செய்யச்சொல்லி, அதை நடைபாதைகளில் வசிக்கும் பிள்ளைகளுக்குக் கொண்டுபோய்க் கொடுத்து மகிழ்வார் அம்மு. அந்த நடைபாதைக் குழந்தைகள் சிலரைத் தன் தாயிடம் சொல்லித் தத்தெடுத்துப் படிக்கவும் வைத்திருக்கிறார் அக்காலத்தில். நடிகையானபின் படப்பிடிப்புக்குச் செல்லும் இடங்களில், தான் சந்திக்க நேரும் ஏழைக் குழந்தைகளைத் தன் வழக்கறிஞர் பொறுப்பில் வைத்து, தன் சொந்தச் செலவிலேயே வளர்த்திருக்கிறார். வெளியுலகம் அறியாத தகவல்கள் இவை. அப்படி இயல்பிலேயே இரக்க குணம் கொண்ட வெகுளிப்பெண் ஜெயலலிதாவுக்கு, ‘வெளுத்ததெல்லாம் பாலில்லை; அது விஷமாகவும் இருக்கலாம்’ என விளங்கவைத்தார் தோழி ஒருவர். 

(அம்முவின் கதை அறிவோம்)