Published:Updated:

ஜெ.ஜெயலலிதா என்னும் நான்... - அம்மாவின் கதை - 17

ஜெ.ஜெயலலிதா என்னும் நான்... - அம்மாவின் கதை - 17
பிரீமியம் ஸ்டோரி
ஜெ.ஜெயலலிதா என்னும் நான்... - அம்மாவின் கதை - 17

நாடக மேடைஎஸ்.கிருபாகரன் - படங்கள் உதவி: ஞானம்

ஜெ.ஜெயலலிதா என்னும் நான்... - அம்மாவின் கதை - 17

நாடக மேடைஎஸ்.கிருபாகரன் - படங்கள் உதவி: ஞானம்

Published:Updated:
ஜெ.ஜெயலலிதா என்னும் நான்... - அம்மாவின் கதை - 17
பிரீமியம் ஸ்டோரி
ஜெ.ஜெயலலிதா என்னும் நான்... - அம்மாவின் கதை - 17

ர்ச் பார்க் பள்ளியில், ஆண்டுக்கு ஒருமுறை `ஃபேன்ஸி ஃபேர்’ நிகழ்ச்சி நடக்கும். அதில் கலந்து கொள்வதற்காகப் பல பள்ளி கல்லூரிகளைச் சேர்ந்த மாணவ மாணவிகளும் சர்ச் பார்க் பள்ளிக்கு வருவார்கள். மூன்று நாள்கள் நடக்கும் இந்த நிகழ்வின்போது, மாணவர்களுடன் பேசிப்பழகும் வாய்ப்பு மாணவிகளுக்குக் கிடைக்கும்.        

ஜெ.ஜெயலலிதா என்னும் நான்... - அம்மாவின் கதை - 17

அம்முவுக்கும் அவர் தோழிகளுக்கும் மாணவர்களுடன் பேச ஆசை எழும். ஆனால், தைரியம் வராது. வெட்கம்தான் எட்டிப்பார்க்கும். `ஹௌ ஸ்வீட் ஹி இஸ். அவனைப்பாரேன்... ஹேண்ட்சமா இருக்கான்' எனத் தங்களுக்குள்ளேயே பேசிக்கொள்வார்கள். தைரியமாகப் பேசுவதற்காகவே, ‘என்ன பேசுவது, எப்படிப் பேசுவது, எங்குத் தொடங்கி எங்கு முடிப்பது' என்பதுவரை பெரிய ரிகர்சல் பார்த்துக்கொண்டிருந்தார்கள் அம்மு அண்ட் கோ. ஆனால், யாருக்கும் போய்ப் பேசத்தான் கடைசிவரை தைரியம் வரவில்லை.  மாணவிகள் பேசத் தயங்குவதைப் பார்த்து, மாணவர் ஒருவர் அம்மு தரப்பிடம் நேரில் வந்து, `ஹலோ, ஹாய் கேர்ள்ஸ்' என்று தன்னை அறிமுகப்படுத்திக்கொள்ள, அம்முவுக்குப் பேச்சு நின்றுவிட்டது; நாக்கு வறண்டுவிட்டது. அங்கிருந்து ஓடிவந்துவிட்டார்.

அந்தக் குழுவில், ஒரு மாணவன் மிக ஹேண்ட்சமாக இருந்தான். அந்தச் குழலில் தனித்துத் தெரிந்த அவன்மீது, ஏனோ அம்முவுக்கு  ஈர்ப்பு ஏற்பட்டிருந்தது. தொடர்ந்து அவனைப் பார்க்கப் பார்க்க அவனிடம் பேச வேண்டும் என்ற தீராத ஆவல் உண்டானது. நடிகர்கள், கிரிக்கெட் வீரர்களைத் தவிர்த்து ஒரு நிஜமான காதல் அம்முவுக்குப் பூத்தது, அதுதான் முதன்முறை. அந்த மாணவனின் பெயரையும் தனது நெருங்கிய தோழி ஒருவரின் சகோதரனுக்கு அவன் நெருங்கிய நண்பன் என்பதையும் அடுத்த மூன்று நாள்களுக்குள் தெரிந்துகொண்டார் அம்மு. தோழியின் நட்புவட்டம் என்பதால், அந்த மாணவனுடன் அம்மு எல்லா விளையாட்டுகளிலும் பங்கேற்றார். அப்போதெல்லாம், `அவன் தன்னிடம் வந்து பேசமாட்டானா...' என்கிற ஏக்கம் அம்முவின் மனதில் எழும். கூடவே, `நாமே அவனிடம் பேசிவிட்டால் என்ன?' என்கிற ஆசையும் அம்முவுக்குள் எழும். ஆனாலும், தைரியம் வராது. இப்படியே இரண்டு நாள்கள் கழிந்தன.

மூன்றாவது நாளில், பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த பொம்மை ரயிலில் பயணம் செய்கிற சந்தர்ப்பம் வந்தது. அப்போது அம்முவும் அந்த மாணவரும் ஒரே பெட்டியில் உட்கார நேர்ந்தது. அது ஓர் இனம்புரியாத உணர்ச்சி. மூன்று நாள்களாக யாருடன் பேசவும் பழகவும் விரும்பினாரோ, அவருடனேயே மிக அருகில் அமர்ந்திருக்கிறார். அது சினிமாவை விஞ்சிய த்ரில்லான காட்சி.

பயமும் பதற்றமுமான இந்தப் பயணத்தில் எப்படியும் பேசிவிட வேண்டுமென அம்முவின் மனம் துடித்தது. ஆனால், பெண்ணுக்கே உரிய நாணம் அவரைப் பேச விடவில்லை. `பக்கத்தில், பெண் இருக்கிறாள் என்ற ஈர்ப்பில், அவன் தன்னிடம் பேசுவான்; அப்போது சகஜமாகிப் பேசலாம்' என்ற அம்முவின் எதிர்பார்ப்பும் நிறைவேறாமல் போனது. பொம்மை ரயிலில், அவனும் பொம்மை மனிதனாகவே பயணம் செய்தான். அம்முவிடம் கடைசிவரை, அவன் ஒரு வார்த்தையும் பேசவில்லை.

ஜெ.ஜெயலலிதா என்னும் நான்... - அம்மாவின் கதை - 17மூன்று நாள்கள் நிகழ்ச்சி முடிந்து கல்லூரி மாணவர்கள் கலைந்து சென்றனர். அம்முவுக்கு மனம் ஆறவில்லை. தன் தோழியிடம் அவன் தன்னைப் பொருட்படுத்தாததன் காரணத்தைக் கேட்டார். `அவனை நீ காதலித்தாயா.... அடிப்போடி, அவன் உன்னை ஒரு இளம்பெண்ணாகவே பார்க்க வில்லை. துருதுரு சுட்டிப் பெண்ணாகக் கருதியதாகத்தான் என்னிடம் கூறினான்' என்ற தோழியின் விளக் கத்துக்குப் பின்னர்தான் புரிந்தது. அம்முதான் அவனை வாலிபனாக நினைத்திருக்கிறார். அவன் கண்களுக்கோ, அம்மு ஒன்றும்தெரியாத குழந்தையாக, சிறிய பெண்ணாகத்தான் தெரிந்திருக்கிறார். `அத்தனை நெருக்கத்தில் அமர்ந்தும்கூட கடைசிவரை அவனுக்குத் தன்மீது காதல் எண்ணம் வராததற்கு இதுதான் காரணமா' என அதிர்ச்சியாகி நின்றார் அம்மு. அந்த முதல் காதல் அம்முவால் மறக்க முடியாதது.

தமிழ்த் திரைப்பட உலகுக்கு ஜெயலலிதாவை அறிமுகப்படுத்தியவர், `புதுமை இயக்குநர்' எனப் புகழப்பட்ட ஸ்ரீதர். உணர்ச்சிகரமான கதை, அதற்கு நிகரான காட்சியமைப்பு, மனதை நெகிழ்த்தும் வசனங்கள், இளமையான நடிகர்கள், கண்ணைக் கவரும் ஒளிப்பதிவு, கண்ணில் ஒற்றிக்கொள்ளும்விதமான ஃபிரேம்கள் என அந்நாளில், அவர் இயக்கிய திரைப்படங்கள் மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தன.

1964-ம் ஆண்டு வெளியான ஸ்ரீதரின் `வெண்ணிற ஆடை' திரைப்படத்தின் மூலமாகத்தான் தமிழ்த் திரையுலகுக்கு அறிமுகமானார் ஜெயலலிதா. `முதல் படத்திலேயே தன் இளமையான துருதுருப்பான நடிப்பால் ரசிகர்களை அசத்தியிருக்கிறார் சந்தியாவின் புதல்வி' எனப் பத்திரிகைகள் அந்நாளில் பாராட்டி எழுதியிருந்தன.

அம்மு, மெட்ரிகுலேஷன் இறுதியாண்டு படித்துவந்த போது, சந்தியாவுக்குச் சினிமாவில் வாய்ப்புகள் குறைய ஆரம்பித்திருந்தன. இதனால், வருமானத்துக்காகச் சில நாடகக் குழுக்களிலும் நடித்துவந்தார். அதில் ஒன்று `யுனைடெட் அமெச்சூர் ஆர்ட்டிஸ்ட் குழு'. நாடக உலகில், பிரபலமான இந்தக் குழுவின் நிறுவனர், ஒய்.ஜி.பி என்றழைக்கப்பட்ட ஒய்.ஜி.பார்த்தசாரதி. ஒய்.ஜி.பி-யின் மனைவி ராஷ்மி, சென்னை நாட்டிய சங்கத்தின் தலைவராக இருந்ததோடு, பத்மா சேஷாத்ரி என்ற சிறு பள்ளியையும் நடத்திவந்தார் (ஒய்.ஜி.பி - ராஷ்மி தம்பதி வேறு யாருமல்ல... நடிகர் ஒய்.ஜி.மகேந்திரனின் பெற்றோர்தான்).      

ஜெ.ஜெயலலிதா என்னும் நான்... - அம்மாவின் கதை - 17

நடிகை என்பதைத் தாண்டி, சந்தியா குடும்பத்துடன் ஒய்.ஜி.பி தம்பதி நல்ல நட்பு டன் இருந்தனர். ஒருமுறை ராஷ்மி பொறுப்பேற்றிருந்த சென்னை நாட்டிய சங்கம் `தி ஹோல் ட்ரூத்' என்ற ஆங்கில நாடகத்தை அரங்கேற்றத் திட்டமிட்டது. அந்த த்ரில்லர் நாடகத்தில், வில்லனால் கொல்லப்படும் மூன்று பெண்களில், ஓர் இளம்பெண் கதாபாத்திரமும் உண்டு.

எதையும் நவீனமாகச் செய்ய நினைக்கும் ராஷ்மிக்கு, இளம்பெண் வேடத்துக்கு வயதான அல்லது நடுத்தரமான வயதில் உள்ள ஒரு நடிகையை நடிக்க வைப்பதில் மனமில்லை. அதேநேரம் ஆங்கிலம் பேசத் தெரிந்தவர் நடித்தால் மட்டுமே நாடகம் எடுபடும். இந்தத் தகுதிகளுடன் பொருத்தமான ஓர் இளம்பெண்ணை அவர் தேடிவந்தார். அந்த வேளையில், ஒரு குடும்ப நிகழ்வுக்காகச் சந்தியா தன் மகளுடன் ராஷ்மியின் வீட்டுக்கு வந்திருந்தார். பொதுவாகவே நாட்டியம் கற்றவர்களின் பேச்சிலும் பாவனைகளிலும் ஒருவித நளினம் வெளிப்படும். நுனிநாக்கு ஆங்கிலம், ஸ்டைலிஷ் பேச்சு, நாட்டிய பாவனைகளால் முகத்தில் உருவான களை, பேச்சிலும் நடையிலும் ஒரு நளினம்... `கண்டேன் சீதை'யை என்று ராஷ்மி கத்தாத குறைதான். `அம்முவே அந்த இளம்பெண்' என முடிவானது. சந்தியாவும் ஒப்புக்கொண்டார். நாடகத்தில், வில்லனாக நடித்தவர் சோ. ஆம்... திரைப்படத்துறைக்கு வரும்முன் ஒய்.ஜி.பி-யின் நாடகக் குழுவில் அமெச்சூர் நடிகராக இருந்தார். வழக்கறிஞர் தொழிலோடு நாடகங்களின் மீதான காதலால், வீட்டுக்குத் தெரியாமல் நாடகங்களில் நடித்துக்கொண்டிருந்தார் அவர்.

`தி ஹோல் ட்ரூத்' நாடக ரிகர்சலின்போது சுவாரஸ்யமான சம்பவம் ஒன்று நடந்தது. கதைப்படி வில்லன் சோ, மூன்றாவது இளம்பெண்ணைக் கழுத்தை நெரித்துக் கொல்லவேண்டிய காட்சி. அதற்குமுன் அச்சம் தரும்படியான, நீளமான வசனத்தை சோ பேசுவார். இந்த வசனம் பார்வையாளர்களை மிரட்சிக்குள்ளாக்கும் வகையில் எழுதப்பட்டிருந்தது. ரிகர்சலில் நடந்ததோ வேறு. வில்லன் சோ, நீளமான வசனத்தைப் பேசும்வரை அஞ்சி நடுங்கிக்கொண்டிருந்த அம்மு, சோ கழுத்தை நெரிக்க முயலும்போது தன்னையும் அறியாமல், பெரும் சத்தத்துடன் சிரித்துவிடுவார். ஒருமுறை இருமுறை அல்ல; பத்து முறைக்கும் மேல் இப்படியே நீண்டது இந்தச்சம்பவம். டென்ஷனான ராஷ்மி, `அம்மு என்ன இது... கொலை செய்ய வருபவனைப் பார்த்துச் சிரிப்பாயா நீ... பயப்படுவதுபோல் நடி' என்றார். அதற்கு அம்மு, `ஆன்ட்டி முடிந்தால் இந்த கேரக்டருக்கு வேறு ஆளைப்போடுங்கள்.சோ இந்தப் பாத்திரத்தில் நடித்தால் நான் சிரிக்கத்தான் செய்வேன்' என்றார். `ஏன் சிரிக்கிறாய்...' எனக் கேட்டார் ராஷ்மி. `சோ என் கழுத்தை நெரிக்கும்போது அவர் முட்டைக்கண்கள் பிதுங்கி நிற்கின்றன. அது பயத்துக்குப் பதிலாக எனக்குச் சிரிப்பை வரவழைத்துவிடுகிறது' என்றார் வாய்கொள்ளாச் சிரிப்புடன். அங்கிருந்தவர்கள் அனைவரும் சிரித்தனர். ஆனால், அரங்கேற்றத்தின்போது இந்தச் சிக்கலில்லை. அம்மு தன்னைக் கட்டுப்படுத்திக்கொண்டு பயந்தவாறே சிறப்பாக நடித்தார். ஆம்... `திறமையான நடிகை' என ராஷ்மியிடம் பாராட்டுப் பெற்றுவிட்டார்.

அந்த நாடகத்தில் அம்மு வின் நடிப்பு புதுவிதமாக இருந்ததால், தொடர்ந்து தங்கள் நாடகங்களில் நடிக்கவைத்தனர் ஒய்.ஜி.பி தம்பதி. சோவுடன் `தி ஹவுஸ் ஆஃப் தி ஆகஸ்ட் மூன்’ உள்ளிட்ட சில ஆங்கில நாடகங்களில் இணைந்து நடித்தார் ஜெயலலிதா. சோவுக்கும் அவருக்குமிடையே நல்ல நட்பு உருவானது இந்தக் காலகட்டத்தில்தான். இளம்பெண்ணாக சோவுக்கு அறிமுகமான அம்மு, தன் வாழ்வின் இறுதிக்காலம் வரை அவருடன் ஆரோக்கியமான நட்பு பாராட்டினார். தனக்குப் பிடித்த நான்கு ஆண்கள் என 70-களின் மத்தியில் ஒரு சினிமா பத்திரிகையில் கட்டுரை எழுதிய ஜெயலலிதா, அதில் முதலில் சோவையே குறிப்பிட்டிருந்தார். இளமைக் காலத்தில், நாடகத்தில் தொடங்கிய இவர்களின் நட்பு... சினிமா, அரசியல் என இருவரின் அந்திமக்காலம் வரையிலும் தொடர்ந்தது. இருவரது இறப்பும் அடுத்தடுத்து நிகழ்ந்ததும் ஆச்சர்யமான ஒற்றுமைதான்.

(அம்முவின் கதை அறிவோம்!)