Published:Updated:

ஜெ.ஜெயலலிதா என்னும் நான்... - அம்மாவின் கதை - 18

ஜெ.ஜெயலலிதா என்னும் நான்... - அம்மாவின் கதை - 18
பிரீமியம் ஸ்டோரி
ஜெ.ஜெயலலிதா என்னும் நான்... - அம்மாவின் கதை - 18

ஹீரோயின்எஸ்.கிருபாகரன்

ஜெ.ஜெயலலிதா என்னும் நான்... - அம்மாவின் கதை - 18

ஹீரோயின்எஸ்.கிருபாகரன்

Published:Updated:
ஜெ.ஜெயலலிதா என்னும் நான்... - அம்மாவின் கதை - 18
பிரீமியம் ஸ்டோரி
ஜெ.ஜெயலலிதா என்னும் நான்... - அம்மாவின் கதை - 18

ம்முவுக்கு நாடக வாய்ப்பு தந்த அதே ராஷ்மிதான் ஓர் ஆங்கிலப் படத்தில் அம்மு நடிப்பதற்கான வாய்ப்பு கிடைக்கப்பெறவும் காரணமாக இருந்தார். முன்னாள் ஜனாதிபதி வி.வி.கிரியின் புதல்வரான சங்கர் கிரி, ‘பிரிட்டிஷ் கவுன்சில் ஆஃப் இந்தியா’வுடன் கூட்டுச் சேர்ந்து ஆங்கில டாகுமென்டரி படம் தயாரித்து வந்தார். ‘எபிசில்’ என்ற அந்தப் படத்தில், நடிப்பதற்கு ஆங்கிலம் பேசத்தெரிந்த, கல்லூரிப்பெண் தோற்றம் கொண்ட ஒரு பெண் தேவைப்பட்டார். குடும்ப நண்பரான ராஷ்மியிடம் அவர் அதைச் சொன்னார். ராஷ்மிக்குச் சட்டென  நினைவுக்கு வந்தது அம்முவின் முகம்தான். அம்முவின் படத்தைப் பார்த்த சங்கர் கிரிக்கு அளவற்ற மகிழ்ச்சி. அவர் எதிர்பார்த்த அதே பெண்ணாக அம்மு இருந்தார்.

சந்தியாவோ, ‘மகளின் படிப்பு கெடும்’ என்ற காரணத்தைக்கூறி, அம்முவை நடிக்கவைக்க மறுப்பு தெரிவித்தார். “அதிகபட்சம் பத்து நாள்கள்தான். படிப்பு கெடாதபடி சனி, ஞாயிறு மட்டும்தான் படப்பிடிப்பு’’ எனச் சமாதானங்கள் பேசி சந்தியாவைச் சம்மதிக்கவைத்தார் சங்கர் கிரி. ஆனால், நடந்ததோ வேறு...

பத்து நாள்களையும் தாண்டி, படப்பிடிப்பு நீண்டது. பள்ளியில் இருக்கும்போதும் படப்பிடிப்புக்கு அழைப்பு வரும். பெரும் தொந்தரவாகிப்போனது அம்முவுக்கு. ஒருமுறை, தேர்வை முடித்துவிட்டுப் படப்பிடிப்புக்குச் செல்லவேண்டி இருந்தது. அந்தத் திரைப்படத்தால் அம்முவுக்குப் பல அசௌகர்யங்கள்  ஏற்பட்டன. குறிப்பாக, எந்தவித அடிப்படைத் தேவைகளையும் தயாரிப்புக்குழு நிறைவேற்றித் தரவில்லை. மேக்கப் சாமான்கள் முதல் உடைகள் வரை சொந்தச் செலவிலேயே பார்த்துக்கொள்ள வேண்டியிருந்தது. போதாக்குறைக்குப் பட வசனங்களில், ஏகப்பட்ட இலக்கணப்பிழைகள். இதனால், வசனங்களைத் திருத்தும் பணியையும் ஜெயலலிதாவே செய்யவேண்டியதானது. இறுதியாக, ‘சங்கர் கிரி எடுப்பது டாகுமென்டரி அல்ல; வழக்கமான ஒரு வணிக சினிமா’ என்ற இன்னோர் அதிர்ச்சித் தகவலும் கிடைத்தது. இத்தனையையும் பொறுத்துக்கொண்டு ஒருவழியாக நடித்து முடித்தார் அம்மு.

ஜெ.ஜெயலலிதா என்னும் நான்... - அம்மாவின் கதை - 18

பல வருடங்களுக்குப் பின் அம்மு சினிமாத்துறைக்குள் நுழைந்து புகழ்பெற்ற நடிகையான பிறகுதான் ‘எபிசில்’ திரைப்படம் வெளிவந்தது. தன் மனதுக்குப் பிடிக்காமல் நடித்த அந்தப் படத்தை அம்மு இறுதிவரை பார்க்கவேயில்லை. அதுதான் அம்மு!

எபிசிலைத் தொடர்ந்து ‘லாரி டிரைவர்’ என்ற படத்தில், நடனமாதுவாக ஜெயலலிதா நடித்திருந்தார். நடன இயக்குநர் சோப்ராஜ் மாஸ்டரின் வற்புறுத்தலால் அந்தப் படத்தில் நடித்தார் அம்மு. அதுவும் பல வருடங்களுக்குப் பிறகுதான் வெளியானது. படம் வெளியானபோது தென்னகத்தின் புகழ்மிக்க நடிகையாகியிருந்தார் அம்மு. ரசிகர்கள், `நீங்கள்தானா அது?’ என்று ஆச்சர்யப்பட்டுப் போனார்கள்.

சர்ச் பார்க் பள்ளியில் அம்மு இறுதியாண்டு படித்துவந்த நேரத்தில், அவருக்குக் கதாநாயகி வாய்ப்பு வந்து கதவைத் தட்டியது. வழக்கம்போல இதுவும் எதிர்பாராத வாய்ப்பே. ‘நன்னகர்த்தவ்யா’ என்ற அந்தக் கன்னடப் படத்தின் இயக்குநர் வேதாந்தம் ராகவய்யா.

கதைப்படி, படத்தின் கதாநாயகி சிறுவயதுப் பெண். விவரம் தெரியாத வயதில் அவளுக்குத் திருமணம் நடக்கிறது. திருமணம் முடிந்து மணமக்கள் ஊருக்குப் புறப்பட்டுச் செல்கையில், அவர்கள் சென்ற வண்டி விபத்துக்குள்ளாகி, மணமகன் இறந்துவிடுகிறான். மற்றவர்களுக்கு ஆபத்தில்லை. வாழ்க்கையின் இன்ப துன்பங்களையே அறியாது, இளம் வயதிலேயே விதவையாகி நிற்கும் கதாநாயகியின் வேடத்தில் நடிக்க ஒரு புதுமுகத்தைத் தேடிக்கொண்டிருந்தார்கள் தயாரிப்பாளர்கள். படத்தில் கதாநாயகியின் மாமியார் வேடம் சந்தியாவுக்கு.

பல பெண்களுக்கு மேக்கப் டெஸ்ட் நடத்தினார்கள். ஒருவரும் தேறாததால், கதாநாயகி இடம்பெறும் காட்சிகளைத் தவிர்த்து மற்றவற்றை எடுத்து முடித்தனர். இனி கதாநாயகி அவசியம் தேவை. விரக்தியில் இருந்த தயாரிப்பாளர்கள் அதுகுறித்து விவாதிக்க ஒருநாள் சந்தியா வீட்டுக்கு வந்தனர்.

பள்ளியிலிருந்து அப்போதுதான் வீடு திரும்பிய அம்மு, யூனிஃபார்மை மாற்றி வழக்கமான உடை அணிந்து நடமாடிக் கொண்டிருந்ததைக் கண்ட தயாரிப்பாளர்களுக்கு, ‘சந்தியாவின் மகளையே நடிக்கவைத்தால் என்ன?’ என்று மனதில் தோன்றியது. நொடியும் தாமதிக்காமல், தங்கள் ஆசையை சந்தியாவிடம் தெரிவித்தனர்.

ஜெ.ஜெயலலிதா என்னும் நான்... - அம்மாவின் கதை - 18

``மன்னித்துவிடுங்கள். எனக்கு அவளை சினிமாவில் நடிக்கவைக்கத் துளியும் ஆசையில்லை. அவளுக்கும் அதில் விருப்பமில்லை. இன்னும் சில வாரங்களில் பொதுத்தேர்வு வருவதால்  படிக்க வேண்டும்”  என உறுதியாக மறுத்துவிட்டார். ஆனால், தயாரிப்பாளர்களோ தொடர்ந்து இரண்டு மாதங்கள், தி.நகர் சிவஞானம் இல்லத்துக்கு நடையாக நடந்தனர். கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும் என்பார்களே...

உறுதியாக நின்ற சந்தியாவைக் கரைத்தது தயாரிப்பாளர்கள் அல்ல... பாடகி எஸ்.ஜானகி. ஆம்... படத்தின் ஒரு பாடலை சந்தியா கேட்பதற்காக ஒலிப்பேழையை அனுப்பியிருந்தனர் தயாரிப்பாளர்கள்.

கதைப்படி பெண் பார்க்க வரும் மணமகன் வீட்டார் முன், கதாநாயகி சிதார் வாசித்தபடி உருகிப்பாடும் பாடல் அது. எஸ்.ஜானகி  மிகவும் உணர்ச்சிமயமாகப் பாடியிருந்தார். பாடலைக் கேட்ட சந்தியா மனம் உருகிக்கொண்டிருந்தார். அவர் அருகில் இருந்த மகள் அம்முவும் உணர்ச்சி மேலிட கேட்டுக் கொண்டிருந்தார். பல மாத முயற்சிக்கு ஜானகியின் பாடல் ஒரு தீர்வைத் தந்தது. “அம்மு, இவ்வளவு வற்புறுத்துகிறார்களே... இந்த ஒருமுறை நடித்துக்கொடு. இனி நான் உன்னை வற்புறுத்தமாட்டேன்” என்றார் சந்தியா. அம்மு அந்த முடிவை எடுத்துச் சில நிமிடங்கள் ஆகியிருந்தன. ஆம்... தனக்கு மிகவும் பிடித்த ஜானகியின் குரலில், தான் பாடி நடிக்கும் ஆசை அவர் மனதில் ஏற்கெனவே துளிர்விட்டிருந்தது. ஜானகியின் பாடலை ஹம் செய்தபடியே ‘ஓகே மம்மி’ என்று சொல்லிவைத்தார் அவர்.

(அம்முவின் கதை அறிவோம்!)