Published:Updated:

ஜெ.ஜெயலலிதா என்னும் நான்... - அம்மாவின் கதை - 20

ஜெ.ஜெயலலிதா என்னும் நான்... - அம்மாவின் கதை - 20
பிரீமியம் ஸ்டோரி
ஜெ.ஜெயலலிதா என்னும் நான்... - அம்மாவின் கதை - 20

படிப்பா? நடிப்பா? எஸ்.கிருபாகரன், படங்கள் உதவி: ஞானம்

ஜெ.ஜெயலலிதா என்னும் நான்... - அம்மாவின் கதை - 20

படிப்பா? நடிப்பா? எஸ்.கிருபாகரன், படங்கள் உதவி: ஞானம்

Published:Updated:
ஜெ.ஜெயலலிதா என்னும் நான்... - அம்மாவின் கதை - 20
பிரீமியம் ஸ்டோரி
ஜெ.ஜெயலலிதா என்னும் நான்... - அம்மாவின் கதை - 20

ருமுறை நடிகர் நம்பியாருக்குச் சொந்தமான நீச்சல் குளத்தில் ஜெயலலிதா நீச்சல் பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது நம்பியாரைத் தேடி அங்குவந்த இயக்குநர் ஸ்ரீதர் ஜெயலலிதாவைப் பார்த்தார். அது ஸ்ரீதர், ‘வெண்ணிற ஆடை’ என்ற  படத்தை இயக்கத் திட்டமிட்டிருந்த நேரம்.

நீச்சல் குளத்தில், ஜெயலலிதாவைக் கண்டபோது தன் மனதில் கற்பனை செய்துவைத்திருந்த இளம்பெண் வேடத்துக்கு ஜெயலலிதா பொருந்திவருவார் என்ற நம்பிக்கை அழுத்தமாக விழுந்தது அவர் மனதில். அதேசமயம் ஜெயலலிதாவின் திறமையையும் அறிந்துகொள்ள விரும்பினார். ‘சின்னத கொம்பே’ படத்துக்காக ஜெயலலிதா நடித்துப் படமாக்கப்பட்ட காட்சிகளை விஜயா ஸ்டூடியோவில் திரையிட்டுக் காட்டினார் பந்துலு. இப்படித்தான் வெண்ணிற ஆடையின் கதாநாயகியானார் ஜெயலலிதா. ஆனாலும்கூட ‘வெண்ணிற ஆடை’ படத்தில் நடிப்பதற்கு அத்தனை எளிதாக ஜெயலலிதா சம்மதிக்கவில்லை. அப்போது மெட்ரிகுலேஷன் தேர்வு முடிவுகள் வெளியாகி, அதில் மாநில அளவில் முதலிடமும் பெற்றிருந்தார் ஜெயலலிதா. இதற்காக மத்திய அரசு ஸ்காலர்ஷிப்  வழங்கியதற்கான கடிதம் வந்த நாளன்றுதான் சந்தியா, தன் மகளிடம் ‘வெண்ணிற ஆடை’ பட வாய்ப்பைப் பற்றிச் சொன்னார். ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில், பி.யு.சி படிக்க இடமும் கிடைத்திருந்ததால், இரண்டு மாதங்களில் பந்துலு படம் முடிந்து, கல்லூரியில் காலடி வைக்க கனவு கண்டுகொண்டிருந்த ஜெயலலிதாவுக்கு ‘பட வாய்ப்பு’ என்பது அதிர்ச்சியைத் தந்தது.

ஜெ.ஜெயலலிதா என்னும் நான்... - அம்மாவின் கதை - 20

அம்மாவிடம் நீண்டதொரு வாக்குவாதம் நடத்தினார். ``நீதானே அடிக்கடி சொல்வே... படிப்புதான் நிரந்தரம்... படிச்சி கல்லூரிப் பேராசிரியராகணும்னு... இப்ப நீயே இப்படி சொல்றியே மம்மி...” என்று கோபமாகப் பேசிய மகளை ஆசுவாசப்படுத்திய சந்தியா, தனக்குப் பட வாய்ப்பு குறைந்துவிட்டதை எடுத்துச் சொல்லியதோடு, குடும்பத்தின் பொருளாதாரச் சூழல் முன்புபோல் இல்லை என்பதையும் பக்குவமாகப் பேசி மகளின் மனதைக் கரைத்தார். தாயின் வார்த்தைகளால் படிப்பா, நடிப்பா எனக் குழம்பித்தவித்தார் ஜெயலலிதா.

ஒருநாள் முழுக்க யோசித்துவிட்டு இறுதியாக, ‘படம் வெற்றிபெற்றால் நடிப்பைத் தொடர்வது, இல்லையேல் படிப்பைத் தொடர்வது’ என்ற சிறிய நிபந்தனையுடன் ஸ்ரீதர் படத்தில் நடிக்கச் சம்மதித்தார். தேர்ந்த நடிகையான சந்தியாவுக்கு, மகளிடம் நடிக்கவா தெரியாது?

சரியென ஒப்புக்கொண்டார் ஜெயலலிதா. ஸ்ரீதரின் ‘சித்ராலயா’ அலுவலகத்தில் ஒப்பந்தம் கையெழுத்தானது. ஜெயலலிதாவின் தலையெழுத்து இனி சினிமாதான் என்பது முடிவானது.

இதனிடையே ‘சின்னத கொம்பே’ 1964-ம் ஆண்டு நவம்பரில் வெளியானது. ஜெயலலிதாவுக்கு நல்ல பெயர் கிடைத்தது. ‘வெண்ணிற ஆடை’ படத்திலும் ஜெயலலிதாவுக்குக் கைம்பெண் வேடம். வெகுளியான ஓர் இளம்பெண் வேடம். 1965-ம் ஆண்டு படம் வெளியானது.

அண்ணாசாலை, ‘ஆனந்த் தியேட்டரில்’ முதல்நாள் சிறப்புக் காட்சியை ஸ்ரீதருடன், சந்தியாவும் ஜெயலலிதாவும் பார்த்தனர். கல்லூரி மாணவர்கள் திரண்டு வந்திருந்தனர். முதல் இரண்டு காட்சிகள் கடக்கும் வரை எந்தப் பிரச்னையும் இல்லை. அதற்குப்பின் தியேட்டரில் சலசலப்பு எழுந்தது. பெரும் விசில் சத்தங்களுடன் சீட்டுகளைக் கிழித்துக் கத்தி, கலாட்டா செய்தனர் ரசிகர்கள். ஜெயலலிதா அதிர்ச்சியில் உறைந்து நின்றார். மகளின் முதல் தமிழ்ப்படம் என்பதால், அதைவிட அதிர்ச்சி சந்தியாவுக்கு.

கதை அம்சத்தினால் வெண்ணிற ஆடை படத்துக்கு, ‘ஏ’ சான்றிதழ் தரப்பட்டிருந்தது. புதுமுகம் நடித்த ஒரு படத்துக்கு ‘ஏ’ சான்றிதழ் என்பதால், கல்லூரி மாணவர்கள் படம் பார்க்க  திரண்டு வந்திருந்தனர். ஆனால், முதல் இரு காட்சிகளுக்குப்பிறகு ஏமாற்றத்தில் ரகளை செய்தனர். ``பொறுமையாகத்தான் ரசிகர்கள் இதைப் புரிந்துகொண்டு வரவேற்பார்கள்” - என்று தன் சினிமா அனுபவத்தினைக்கொண்டு ஜெயலலிதாவுக்கு ஆறுதல் சொன்னார் ஸ்ரீதர். ஸ்ரீதரின் வார்த்தை பலித்தது. அடுத்தடுத்து வந்த தகவல்கள் மகிழ்ச்சியைத் தந்தன. படம் சூப்பர் டூப்பர் ஹிட். ஜெயலலிதா நடிகையாகத்தான் தன் வாழ்க்கையைத் தொடர வேண்டும் என விதி தீர்மானித்துவிட்டதை சந்தியா உணர்ந்து உள்ளுக்குள் பெருமிதம் அடைந்தார். ஜெயலலிதாவின் ஸ்டெல்லா மேரிஸ் கனவு கலைந்தது.

“கல்லூரியில் சேருவதற்காக, பணத்தையும் கட்டி, புத்தகங்கள்கூட வாங்கியிருந்தேன் நான். இந்த நிலையில்தான் ஸ்ரீதர் வந்திருந்தார். அவரது படத்தில் கதாநாயகியாக நடிக்கும் சந்தர்ப்பம் எனக்குக் கிடைக்கும் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை. முதல்நாள் படப்பிடிப்பே திருப்திகரமாக அமைந்தது.  என் முதல் தமிழ்ப்படத்தின், முதல்நாள் படப்பிடிப்பே குறையில்லாது அமைந்தது என் மனதில் நிறைவை ஏற்படுத்தியது. படத்தின் முதல் பாதியிலே எனக்கு ஃபிராக், பேண்ட், சல்வார் மாதிரியான டிரஸ் எல்லாம் வரும். இடைவேளைக்குப் பிறகு முழுவதும் புடவைதான். அப்போ எனக்குப் புடவை கட்டத் தெரியாது. கட்டினாலும் அது புடவை கட்டின மாதிரி இருக்காது. ஏதோ புடவையைச் சுத்திக்கிட்ட மாதிரிதான் இருக்கும். புடவையணிந்த நிலையில் காட்சிகள் எடுக்கப்படும் நாள்கள்ல அம்மா அவசரம் அவசரமாக அவங்க மேக்-அப், ஹேர் டிரஸ்ஸிங் எல்லாம் முடிச்சுட்டு, எனக்கு புடவைக் கட்டிவிடுவாங்க.

படப்பிடிப்பில் காட்சிகளை அப்படியே நடித்துக்காண்பிப்பார் ஸ்ரீதர். பாடல் காட்சிகளின் சில மூவ்மெண்ட்களையும் ஆடியே காண்பிப்பார். நானும் அவர் சொல்லிக் கொடுத்தபடியே நடித்தேன். பாடல் காட்சிகளைப் படமாக்குவதில் அவருக்கு நிகர் அவரே.

ஜெ.ஜெயலலிதா என்னும் நான்... - அம்மாவின் கதை - 20

படத்தில் என் நடிப்பைப் பாராட்டினார்கள் பத்திரிகை ஆசிரியர்கள்; ரசிகர்கள் கடிதம் எழுதினார்கள். திரையுலக அனுபவஸ்தர்களும் ‘சபாஷ்’ தெரிவித்தார்கள். ‘வெண்ணிற ஆடை’யில் ஆபாசமான காட்சிகள் ஒன்றும் கிடையாது. பின்னே ஏன் ‘ஏ’ சர்டிபிகேட் கொடுத்தாங்கன்னு இன்றுவரை எனக்குத் தெரியாது. படம் வெளியானபோது எனக்கு வயது பதினாறுதான். அதனால், நியாயப்படி நானே அந்தப் படம் பார்க்க அனுமதிக்கப் பட்டிருக்கக் கூடாது. அதனால், சில பத்திரிகைகளிலே நான் நடிச்ச முதல் தமிழ்ப் படத்தை நானே பார்க்கலைன்னுகூட செய்தி வெளியாகியது. நானும் அம்மாவும் ஆனந்த் தியேட்டரில் மேலே பாக்ஸில் உட்கார்ந்து படம் பார்த்தோம்”  - பின்னாளில் தன் முதல்பட அனுபவம் குறித்து ஜெயலலிதா இப்படி எழுதியிருந்தார்.

‘` ‘வெண்ணிற ஆடை’ கதைத் தன்மைக் காகத்தான் ‘ஏ’ முத்திரை என்பது ரசிகர்களுக்குத் தெரியாது. எனவே, முதல் 2, 3 ரீல் முடிந்தவுடனேயே ரசிகர்கள் கூச்சல் அதிகமாகிவிட்டது. படம் முடியும்வரை ரசிகர்கள் ‘போர் போர்’ என்று கத்தினார்கள்.ஆனந்த் தியேட்டர் அதிபர் உமாபதி போலீஸை வரவழைத்து, ரசிகர்களின் கூச்சலை அடக்கினார். சென்னையில் திரையிடப்பட்ட எல்லா தியேட்டர்களிலும் கூச்சல் இருந்ததாகச் செய்தி வந்தது. மிகுந்த உற்சாகத்துடன், தரமான கதையமைத்து, சிறந்த புதுமுகங்களை நடிக்க வைத்து, ஒரு சாதனை நிகழ்த்திவிட்டது போன்ற பெருமையில் இருந்த எனக்கு, ரசிகர்களின் கூச்சல் உண்மையாகவே கவலையைக் கொடுத்தது. ஆனால், நாளடைவில் ரசிகர்கள் கதையின் ஆழத்தைப் புரிந்துகொண்டு ரசிக்கத் தொடங்கினார்கள். நூறு நாள் வெற்றிகரமாக ஓடி எனக்கும் மன நிறைவைத் தந்துவிட்டது.

இடைவேளைக்கு முன் குதூகலமான கவர்ச்சி நடிப்பிலும், பின்னர் சோக நடிப்பிலும் ஜெயலலிதாவின் திறமை பளிச்சிட்டது” - ஸ்ரீதரின் ‘வெண்ணிற ஆடை’ அனுபவம் இது.

‘வெண்ணிற ஆடை’ கொடுத்த புகழ் மயக்கத்தினால் இனி சினிமாவே தன் வாழ்க்கை என ஜெயலலிதா முடிவெடுத்திருந்தார்.

ஆனால், அடுத்தடுத்த நிகழ்வுகள் அந்த மகிழ்ச்சியைத் தக்கவைக்க விடவில்லை. `வெண்ணிற ஆடை ' தயாரிப்பில் இருந்தபோது, தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரத்துடன் நடிக்கும் அதிர்ஷ்டம் ஜெயலலிதாவைத் தேடிவந்தது. அதன் படப்பிடிப்பின்போது ஜெயலலிதாவே நினைத்துப்பார்த்திராத கோணத்தில் பிரச்னை ஒன்று முளைத்தது. சினிமா உலகைப்பற்றி ஜெயலலிதா முழுமையாகப்  புரிந்துகொள்ள உதவியது அந்தச் சம்பவம்தான்!

(அம்முவின் கதை அறிவோம்)