Published:Updated:

ஜெ.ஜெயலலிதா என்னும் நான்... - அம்மாவின் கதை - 22

ஜெ.ஜெயலலிதா என்னும் நான்... - அம்மாவின் கதை - 22
பிரீமியம் ஸ்டோரி
ஜெ.ஜெயலலிதா என்னும் நான்... - அம்மாவின் கதை - 22

எஸ்.கிருபாகரன், படங்கள் உதவி : ஞானம்

ஜெ.ஜெயலலிதா என்னும் நான்... - அம்மாவின் கதை - 22

எஸ்.கிருபாகரன், படங்கள் உதவி : ஞானம்

Published:Updated:
ஜெ.ஜெயலலிதா என்னும் நான்... - அம்மாவின் கதை - 22
பிரீமியம் ஸ்டோரி
ஜெ.ஜெயலலிதா என்னும் நான்... - அம்மாவின் கதை - 22

“ஒருவரின் வாழ்க்கையில் துயரம் வரும்போது, அதையொட்டிய ஏதோவொரு நினைவையும் நம் மனதில் ஆழப்பதிய வைத்துவிடும். சில நேரம் சில சம்பவங்கள் அந்தத் துயரத்தின் அளவையும் அதிகரித்துவிடும். தீபாவளி வரும்போதெல்லாம் என் அன்னையைப் பற்றிய நினைவுகள் தானாகவே வருகின்றன. அவரோடு நான் கொண்டாடிய கடைசி தீபாவளியும் என் நினைவில் நிழலாடி நெஞ்சைப் பிழிகிறது” - ஜெயலலிதா 1972-ல் ஒரு சினிமா இதழுக்கு அளித்த பேட்டி இது.

கடந்த 2016-ம் ஆண்டு தீபாவளி தினம்... தமிழக அரசியலில் கிட்டத்தட்ட தன் வாழ்வின் சரிபாதி வருடங்களைத் துணிச்சல்மிக்க அரசியல் தலைவராகவே கழித்த ஜெயலலிதா, உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த தருணம் அது. ஒருவேளை சுயநினைவோடு இருந்திருந்தால் அவர் மனதிலும் சோகம் நிரம்பிய ஒரு தீபாவளி பற்றிய நினைவு வந்து போயிருக்கலாம்... அது, 1971-ம் வருட தீபாவளி...

பொதுவாக, தீபாவளி உள்ளிட்ட எந்தப் பண்டிகையிலும் ஜெயலலிதா அவ்வளவாக ஆர்வம்கொண்டிருந்ததில்லை. பத்திரிகை பேட்டி ஒன்றில் “நீங்கள் தீபாவளிக்குப் புத்தாடை அணிவீர்களா?” என்ற கேள்விக்கு, “நண்பர்களின் வற்புறுத்தலுக்காக மட்டுமே அணிவேன். என்னைப் பொறுத்தவரை தீபாவளி என்றால் எல்லோரும் தமாஷாக, வேடிக்கையாகச் சேர்ந்து கொண்டாடும் ஒருநாள் அவ்வளவுதான்!'' எனக் கூறியவர் அவர். இதே ஜெயலலிதாதான், அதற்கு முரண்பட்ட விதத்தில், அந்தத் தினங்களைத் தன் இளமைப்பருவத்தில் ஆவலுடன் எதிர்நோக்கி இருந்திருக்கிறார். அதற்கும் காரணம் உண்டு. சந்தியா பிசியான நடிகையாக ஆனபின்,  குழந்தைகளுடன் நேரம் செலவழிப்பது அரிதாக இருந்தது. அதனால் விசேஷ தினங்களையொட்டி, சந்தியா கண்டிப்பாகப் படப்பிடிப்புக்கு ‘குட் பை’ சொல்லிவிடுவாராம். தாயுடன் நேரம் செலவழிக்கப்போகிற இந்தப் பண்டிகை நாள்களை ஆவலுடன் எதிர்நோக்கிக் காத்திருப்பாராம் ஜெயலலிதா.

ஜெ.ஜெயலலிதா என்னும் நான்... - அம்மாவின் கதை - 22

எந்தத் தீபாவளியைத் தன் தாயின் அரவணைப்புக்காக வரவேற்று மகிழ்ந்தாரோ, அதே ஒரு தீபாவளி நாளையே தன் வாழ்வில் மறக்க முடியாமல் நெஞ்சில் சுமந்து நின்றார் இறுதி நாள்களில்.

1971-ல், தென்னகத்தின் புகழ்மிக்க நடிகையாக ஜெயலலிதா வளர்ந்திருந்தார். பிள்ளைகளை விட்டுவிட்டு ஒருகாலத்தில் படப்பிடிப்புக்காக சுற்றிச்சுழன்ற சந்தியா இப்போது நடிப்பதைக் குறைத்துக்கொண்டு மகளின் கால்ஷீட்டைக் கவனித்துக்கொண்டிருந்தார். தாயுடன் நேரம் செலவிட மகளுக்கு நேரம் கிடைக்காதபடி, நிலைமை தலைகீழாகியிருந்தது.

தீபாவளிக்குச் சில நாள்களுக்கு முன், தன் மகளுக்காக தியாகராய நகரின் பிரபல துணிக்கடைக்கு சந்தியா நேரில் சென்று விதவிதமான டிசைன்களில் பத்துக்கும் மேற்பட்ட விலையுயர்ந்த பட்டுச் சேலைகளை வாங்கி வந்திருந்தார்.

படப்பிடிப்பு முடிந்து திரும்பிய ஜெயலலிதா, அம்மா வாங்கி வந்த சேலைகளைப் பார்த்துப் பூரித்துப்போய் நின்றார். தானே நேரில் சென்றிருந்தால்கூட அத்தனை அழகான சேலைகளைத் தேர்வு செய்திருக்க முடியாது எனத் தன் தாயைக் கட்டிப்பிடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினாராம் ஜெயலலிதா. “எல்லாமே உனக்குதான் அம்மு” என்றார் சந்தியா. “உனக்குச் சேலை வாங்கிக்கலையா?” என எதிர்க்கேள்வி கேட்டார் ஜெயலலிதா. “இந்த வயதில் எனக்கு எதற்கு விலையுயர்ந்த சேலை? உன் வயதில் இருந்தபோதே ஆண்டு அனுபவித்துவிட்டேன். இனி நீ, கட்டி மகிழ்வதைப் பார்க்கிற மகிழ்ச்சியே போதும்...” என நெகிழ்ந்துள்ளார் சந்தியா. தனக்கு இத்தனை புடவைகள் வாங்கி வந்த அம்மா, தனக்கென ஒன்றுகூட வாங்கிக்கொள்ளாததற்காக, அவரை செல்லமாகக் கோபித்துக்கொண்ட ஜெயலலிதா, “என் ஆசைப்படி தீபாவளிக்கு உனக்கும் புதுத்துணி எடுத்துக்கொள்ளவில்லையென்றால், நான் இதில் ஒன்றைக்கூட தொட மாட்டேன்” என உறுதிபடச் சொன்னார்.

மகளின் பிடிவாதம் பற்றித் தெரிந்திருந்த சந்தியா, வேறு வழியின்றி அதற்கு ஒப்புக் கொண்டார். தனக்காகத் தன் வாழ்க்கையையே அர்ப்பணித்து வாழும் தன் தாய்க்கு முதன் முறையாகத் துணி எடுக்கக் கிளம்பினார் ஜெயலலிதா. நடிக்க வருவதற்கு முன், தான் மாடலாக இருந்த தி.நகரின் பிரபல துணிக்கடைக்குச் சென்று சந்தியாவுக்காக விதவிதமான டிசைன்களில் விலையுயர்ந்த பத்துப் பட்டுப்புடவைகளை அள்ளிக்கொண்டு வீடு திரும்பினாராம்.

சந்தியாவிடம் அவற்றைக் காட்டியபோது, “ஒன்று வாங்கினால் போதாதா? ஏன் இத்தனை புடவைகள்?” எனக் கேட்ட சந்தியாவிடம், “தீபாவளிக்கு இன்னும் நாள்கள் இருக்கில்லையா... தினம் ஒரு புடவையை எடுத்துக் கட்டிக்கோ மம்மி” எனத் தாயைக் கட்டிப்பிடித்தபடி குறும்பாகச் சொல்லிச் சிரித்தார் ஜெயலலிதா. அவற்றில் ஒரு குறிப்பிட்ட சேலையை தனியே எடுத்து, “மம்மி நீ இதுவரை இப்படி ஒரு சேலையைக் கட்டியிருக்க மாட்டே... அதனால், இதை மட்டும் தீபாவளி அன்றைக்கு கட்டிக்க. ஸ்பெஷலா தெரிவே” என்று தாயின் கைகளில் அதை தந்துவிட்டுச் சென்றார் ஜெயலலிதா.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஜெ.ஜெயலலிதா என்னும் நான்... - அம்மாவின் கதை - 22

தீபாவளி தினம் வந்தது. புதுப் புடவைக் கட்டி உற்சாகமாகப் பட்டாசு வெடித்து மகிழ்ச்சியாக இருந்த மகளை, பெருமிதமாகப் பார்த்துக்கொண்டிருந்தார் சந்தியா. ஆனால், எவ்வளவு வற்புறுத்தியும் மகள் வாங்கித்தந்த சேலையை அன்று முழுவதும் அணிந்துகொள்ளவில்லை. தான் புதிய சேலையை அணியாததில் மகளுக்கு இருந்த மனவருத்தத்தைப் புரிந்துகொண்ட சந்தியா, “விரைவில் அதில் ஒன்றைக் கட்டுகிறேன்” என அன்றிரவு மகளின் தலையைத் தடவிக் கொடுத்தபடி ஆறுதல் சொன்னார். அப்படிச்சொல்லி காலம் தாழ்த்தினாரே தவிர, மகளின் ஆசையை நிறைவேற்ற வில்லை.

ஜெயலலிதாவின் ஆசையை சந்தியா நிறைவேற்றும் ஓர் நாள் வந்தது. ஆம்... தீபாவளி முடிந்த சில நாள்களில் சந்தியா  உடல்நலம் பாதிக்கப்பட்டார். மகள் படப்பிடிப்புக்குச் சென்று விட்ட ஒருநாளில் சந்தியா ரத்த வாந்தி எடுக்கவே, பதறிய உறவினர்கள் அவரை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள பிரபல மருத்துவமனையில் சேர்த்தனர். எப்படியும் பிழைத்துக்கொள்வோம் என்ற நம்பிக்கையில், “ஷூட்டிங்கில் இருந்த மகளுக்குத் தகவல் சொல்ல வேண்டாம்” என உறவினர்களுக்கு உத்தர விட்டிருந்தார் சந்தியா. ஆனால், அவரின் உடல்நிலை மிகவும் மோசமானது. படப்பிடிப்பிலிருந்து வந்து பார்த்த ஜெயலலிதா அதிர்ச்சியடைந்தார். சிகிச்சை பலனளிக்காத நிலையில் அதற்கு மறுதினம் மரணமடைந்தார் சந்தியா.

சந்தியாவின் உடல் வீட்டுக்குக் கொண்டுவரப்பட்டது. உறவினர்களும் திரையுலக நண்பர்களும் இறுதி மரியாதை செலுத்த வந்திருந்தனர். சந்தியாவின் உடலுக்கு இறுதிச்சடங்கு சம்பிரதாயங்களைச் செய்த புரோகிதர்கள், ஜெயலலிதாவின் குடும்ப வழக்கப்படி ‘இறந்தவரின் உடலில் புதுப்புடவை சாத்த வேண்டும்’ என்று சொல்ல, விறுவிறுவென சந்தியாவின் தங்கை வித்யாவதி உள்ளே சென்று சந்தியாவின் பீரோவிலிருந்து அவரது சேலை ஒன்றை எடுத்து வந்தார். சந்தியாவின் உடல்மீது அந்தச் சேலை போர்த்தப்பட்டது. வீட்டு ஹாலின் நடுநாயகமாகத் தாயின் உடல் அருகே அழுதபடி இருந்த ஜெயலலிதா, தலைநிமிர்ந்து பார்த்தார். சந்தியா உடல்மீது போர்த்தப்பட்டிருந்த சேலையைப் பார்த்த அந்தக்கணத்தில் பெருங்குரலெடுத்து கதறினார் ஜெயலலிதா. ஆம். சந்தியாவின் உடலில் போர்த்தப்பட்ட அந்தப்புடவை, ‘ஸ்பெஷல்’ எனத் தன் அம்மாவிடம்  ஜெயலலிதா கொடுத்த அதே சேலை...

“வாழ்க்கையில் இருளும் உண்டு; ஒளியும் உண்டு. ஆனால், இரண்டும் எப்போதும் நிரந்தரமாக இருக்காது. அந்த இருள் என் வாழ்க்கையைப் பொறுத்தவரை, இந்தத் தீபாவளியைக் சந்தோஷமாகக் கொண்டாடி மகிழ்ந்த சில நாள்களில் என் தாயாரின் மறைவினால் ஏற்பட்டது. என்னால் தாங்கமுடியாத பேரிடி... துயரம் இது...” - அந்த தீபாவளி குறித்துப் பின்னாளில் ஜெயலலிதா வெளியிட்ட வேதனையான வார்த்தைகள் இவை.

(அம்முவின் கதை அறிவோம்!)