Published:Updated:

ஜெ.ஜெயலலிதா என்னும் நான்... - அம்மாவின் கதை - 23

ஜெ.ஜெயலலிதா என்னும் நான்... - அம்மாவின் கதை - 23
பிரீமியம் ஸ்டோரி
ஜெ.ஜெயலலிதா என்னும் நான்... - அம்மாவின் கதை - 23

எஸ்.கிருபாகரன், படங்கள் உதவி: ஞானம்

ஜெ.ஜெயலலிதா என்னும் நான்... - அம்மாவின் கதை - 23

எஸ்.கிருபாகரன், படங்கள் உதவி: ஞானம்

Published:Updated:
ஜெ.ஜெயலலிதா என்னும் நான்... - அம்மாவின் கதை - 23
பிரீமியம் ஸ்டோரி
ஜெ.ஜெயலலிதா என்னும் நான்... - அம்மாவின் கதை - 23

ஜெயலலிதா நடித்த ‘வெண்ணிற ஆடை’ படமும் ‘ஆயிரத்தில் ஒருவன்’ படமும் ஏறக்குறைய ஒரே நேரத்தில் உருவாகிக்கொண்டிருந்தன. மகிழ்ச்சியாக இருக்க வேண்டிய ஜெயலலிதாவோ சோகமாக இருந்தார். காரணம், அவருடன் ‘சர்ச் பார்க்’ பள்ளியில் படித்த வகுப்புத் தோழிகளில் 20-க்கும் அதிகமானோர் ஸ்டெல்லா மாரிஸ் கல்லூரியில் சேர்ந்திருந்ததுதான். ‘ஒரு நாளாவது கல்லூரி மாணவியாக இருக்க வேண்டும்’ என்கிற ஆசை அவர் மனதில் எழுந்தது. கல்லூரியில் சேரவில்லையென்றாலும் அவர் அட்மிஷன் கிடைக்கப் பெற்றவர்தானே.

படப்பிடிப்பு இல்லாத ஓர் ஓய்வு நாளில், துணிச்சலாக ஸ்டெல்லா மாரிஸ் கல்லூரிக்குச் சென்று வகுப்பறையில், தன் தோழிகளுடன் பெருமிதமாக அமர்ந்துகொண்டார். ஆர்வக்கோளாறு காரணமாக நோட்டு-புத்தகம் எதுவும் கொண்டு செல்லவில்லை ஜெயலலிதா. பாடம் நடத்தி முடிந்ததும் ‘மாணவிகள் எழுதுகிறார்களா’ எனப் பார்வையிட்டபடி ஜெயலலிதாவின் அருகில் வந்த பேராசிரியர் அதிர்ச்சியடைந்தார். ஜெயலலிதா திருதிருவென முழித்தபடி இருந்ததே காரணம். `சினிமா விஷயத்தைச் சொல்லிவிடலாமா' என்கிற குழப்பத்துடன் நின்ற ஜெயலலிதாவைக் கடுமையாகத் திட்டிவிட்டுச் சென்றார் அந்தப் பேராசிரியர்.  அடுத்த வகுப்பு தொடங்கும்முன் நடிகை ஜெயலலிதாவைச் சூழ்ந்துகொண்டு தோழிகள் அரட்டையடித்துக் கொண்டிருந்தனர். வகுப்புக்குள் நுழைந்த பேராசிரியர், ஜெயலலிதாவைச் சூழ்ந்து நின்று மாணவிகள் பேசுவதைக் கவனித்து, காரணம் கேட்டார். அவர்கள் ஜெயலலிதா சினிமாவில் நடிப்பதைச் சொல்லிவிட்டனர். அடுத்த நொடியே எரிச்சலானார் அவர். `விருந்தினராக வந்து அரட்டை அடித்துவிட்டுப் போக இது ஒன்றும் படப்பிடிப்புத்தளம் அல்ல...' என ஜெயலலிதாவை நிற்க வைத்து வார்த்தைகளால் விளாசித் தள்ளிவிட்டார் பேராசிரியர். கல்விக் கனவை அன்றோடு மூட்டைக் கட்டி விட்டார் ஜெயலலிதா.

ஜெ.ஜெயலலிதா என்னும் நான்... - அம்மாவின் கதை - 23

‘வெண்ணிற ஆடை’ வெளியான வேளையில், தான் படித்த சர்ச் பார்க் பள்ளி வழியே ஜெயலலிதா செல்ல நேர்ந்தது. பள்ளியைக் கடந்தபோது மனம் பழைய ஆசிரியர்களைக் காண விரும்பியது. தான் இப்போது திரைப்பட நடிகை என்பதால், அதுகுறித்து ஆசிரியர்கள் பெருமைப் படக்கூடும் என்கிற எண்ணமும் அவர் மனதில் ஓடியது. அதை நேரில் காணும் ஆவலும் உள்ளுக்குள் எழ, ஆசையுடன் உள்ளே சென்றார். அவரைக் கண்டதும் சில ஆசிரியைகள் ஆர்வமுடன் வந்து பேசினார்கள். ஆனால், அவர்கள் பேச்சில், தங்கள் மாணவி ஜெயலலிதா ஒரு சினிமா நடிகை ஆகிவிட்டார் என்பதற்கான  பெருமிதம் எங்கேயும் தென்படவில்லை. `நன்கு படிக்கும் மாணவியான நீ ஏன் சினிமாவில் சேர்ந்தாய்... உன் திறமையால் நீ பெரிய பெரிய உயரங்களைத் தொடுவாய் என நினைத்தோம்... நீ இப்படி செய்துவிட்டாயே...' என வருந்தவே செய்தார்கள். இது, ஜெயலலிதாவுக்கு அவமானமாக இருந்தது. 

‘ஆயிரத்தில் ஒருவன்’ விறுவிறுவென தயாராகிக்கொண்டிருந்தது. கன்னடம், தமிழ் இரண்டிலும் அதுவரை ஜெயலலிதா நடித்த படங்களில் ரொமான்ஸ் கதாநாயகி வேடம் இருந்ததில்லை. காதல் ரசம் சொட்டும்படி வசனம் எழுதப்பட்டிருந்தாலும், கதாநாயகனுக்கும் கதாநாயகிக்குமான நெருக்கமான காட்சிகள் இருந்ததில்லை. ஆனால், `ஆயிரத்தில் ஒருவ'னில் சில காட்சிகள் அப்படி அமைக்கப்பட்டிருந்தன. ‘நாணமோ இன்னும் நாணமோ...’ என்ற  டூயட் பாடலுக்காக முதல் இரவுக் காட்சி போன்று செட் அமைத்ததோடு, பூக்களாலேயே நெய்யப்பட்டது போன்ற புதுமையான உடையை ஜெயலலிதாவுக்கு அணிவித்துப் படம்பிடித்தனர். அந்தப் பாடல் காட்சியில், கட்டிலில் இருவரும் மிக நெருக்கமாக இருப்பது போன்றும் ஒரு ஷாட் எடுக்கப்பட்டது. காட்சிப்படி, எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவின் அருகில் வந்து கட்டியணைக்க ஜெயலலிதாவின் உடல் நடுங்க ஆரம்பித்துவிட்டது. வியர்த்துப்போனது முகம். எவ்வளவு முயன்றும் அந்த சங்கடத்தை அவரால் மறைக்க முடியவில்லை. என்னவென்று கேட்டார் எம்.ஜி.ஆர். ``ஒன்றும் இல்லை சார்...’’ என உதடுகள் சொன்னாலும், உடல் உதறலிலேயே இருந்தது. சினிமாவுக்கு இன்னும் பழகாத சிறு பெண்ணுக்கு ஏற்படும் இயல்பான கூச்சம்தான் அது என்பதை எம்.ஜி.ஆர் புரிந்துகொண்டு பந்துலுவிடம் காட்சியமைப்பை சற்று மாற்றும்படி சொல்லிவிட்டு ஓய்வறைக்குச் சென்றுவிட்டார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஜெ.ஜெயலலிதா என்னும் நான்... - அம்மாவின் கதை - 23

படப்பிடிப்பில் இந்தச் சம்பவத்தைப் பார்த்துக்கொண்டிருந்த நம்பியார் சிரித்து விட்டார். அவருடன் இருந்த சாண்டோ சின்னப்பா தேவர் பதறிப்போனார். காரணம், அப்போது அவர் எடுக்கவிருந்த ‘கன்னித்தாய்’ படத்துக்கு எம்.ஜி.ஆருக்கு ஜோடியாக ஜெயலலிதாவைத்தான் ஒப்பந்தம் செய்திருந்தார். ‘‘என்னம்மா நீ... லட்சம் லட்சமாகப் பணம் போட்டுப் படம் எடுக்கிறோம். நீ என்னடான்னா பயப்படறியே... எல்லாம் நடிப்புதானே, தைரியமாக நடிக்க வேணாமா... டைம் கிடைச்சா சின்னவரோட சரோஜாதேவி நடிச்ச படங்களைப் பாரு. அந்தப் பொண்ணு எப்படி ஃப்ரியா ஆக்ட் பண்ணியிருக்குன்னு பார்த்தா உனக்கு பயம் போயிடும்” எனத் தயாரிப்பாளருக்கே உரிய பதற்றத்தோடு அறிவுரை சொன்னார் சின்னப்பா தேவர். ஆனால், அதற்கு அவசியமே இல்லாமல் போனது. ‘சினிமா ஒரு தொழில். இங்கு உள் உணர்ச்சிகளுக்கு இடமில்லை’ என்பதை மனதுக்குள் திரும்பத்திரும்பச் சொல்லிக்கொண்டார் ஜெயலலிதா. திட்டமிட்டபடி அதே காட்சி அன்றே எடுக்கப்பட்டது. அம்மா சொல்லிப் புரியாத சினிமா என்ற கனவுத் தொழிற்சாலையின் நெளிவுசுளிவுகள் கொஞ்சம் கொஞ்சமாகப் புரிய ஆரம்பித்தது ஜெயலலிதாவுக்கு.

கறுப்பு வெள்ளைப் படங்களுக்கு மத்தியில், வண்ணப்படமாக வெளியான ‘ஆயிரத்தில் ஒருவன்’ சூப்பர் ஹிட் ஆனது. 100 நாள்களைத் தாண்டி ஓடி ஜெயலலிதாவுக்கும் நல்ல பெயரைத் தேடிக்கொடுத்தது. நடுத்தர வயது தோற்றம்கொண்ட நடிகைகளையே அதுவரை தன் தலைவரின் கதாநாயகிகளாகப் பார்த்துவந்த எம்.ஜி.ஆர் ரசிகர்கள், மிக இளமையான, அசல் கல்லூரிப்பெண் போன்ற துறுதுறுப்பான நாயகியைக் கண்டதும் கொண்டாடித் தீர்த்தனர். எம்.ஜி.ஆருடன் நடித்த முதல் படத்திலேயே நட்சத்திர அந்தஸ்து கிடைத்தது ஜெயலலிதாவுக்கு. தன்னை இளமையாக வெளிப்படுத்திக்கொள்வதில், கதாநாயகிக்குரிய பங்கைப் புரிந்துகொண்ட எம்.ஜி.ஆர், அடுத்தடுத்து தன் படங்களில் ஜெயலலிதா இடம்பெற வேண்டும் என மனதுக்குள் முடிவெடுத்துக்கொண்டார்.

எம்.ஜி.ஆரின் திரையுலக வாழ்வில், அவருடன் அதிகப் படங்களில் இணைந்து நடித்த நடிகை என்ற பெயர் ஜெயலலிதாவுக்குக் கிடைத்தது. எட்டு ஆண்டுகளில் அவருடன் 28 படங்கள் ஜோடியாக நடித்து முடித்திருந்தார். 1965-ம் ஆண்டில் மட்டும் ஜெயலலிதா நடிப்பில், கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் ஏழு திரைப்படங்கள் வெளியாகின. அத்தனையும் வெற்றிப்படங்கள்தான். தெலுங்கில் அவரது முதல் படமான ‘மனுசுலு மமதலு’வும் இந்தப் பட்டியலில் அடக்கம்.

ஜெ.ஜெயலலிதா என்னும் நான்... - அம்மாவின் கதை - 23

தமிழ் சினிமாவின் மற்றொரு ஜாம்பவானான சிவாஜியுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு 1966-ல்தான் ஜெயலலிதாவைத் தேடிவந்தது. அது கதாநாயகி வேடமல்ல. ‘மோட்டார் சுந்தரம் பிள்ளை’ படத்தில் மகள் வேடம். 1968-ல் ‘கலாட்டா கல்யாணம்’ படத்தில் சிவாஜியுடன் முதன்முறையாகக் கதாநாயகியாக அவர் நடித்தார்.

1966 -ம் ஆண்டில், எம்.ஜி.ஆருடன் ‘முகராசி’, ‘சந்திரோதயம்’, ‘தனிப்பிறவி’ படங்களில் நடித்தார். ‘முகராசி’ படம் தயாரிப்பில் இருந்தபோது, படத்தின் இயக்குநரும் சின்னப்பா தேவரின் தம்பியுமான திருமுகம் படப்பிடிப்புக்கு வர இயலவில்லை. அதனால் அன்றைய தினம் எடுக்கத் திட்டமிட்டிருந்த காட்சிகளை எம்.ஜி.ஆரே இயக்கும்படி ஆனது.

அன்று எடுக்கப்படவிருந்த ஒரு காட்சியில், கதாநாயகன் எம்.ஜி.ஆர் கோபத்துடன் நடந்து செல்ல... கதாநாயகி ஜெயலலிதா, `அத்தான்! நில்லுங்கள்! அத்தான்! போகாதீர்கள்!’ என்று அழுது குரல் கொடுத்தபடியே, பின்னால் ஓடித் தடுக்க வேண்டும். அந்தக் காட்சியைப் படம்பிடிக்க கேமராவைத் தயார்படுத்திய எம்.ஜி.ஆர், ஒத்திகைக்காகப் படத்தின் உதவி இயக்குநரான மாரிமுத்துவைத் தன்னைப்போல் நடந்துசெல்ல வைத்து ஜெயலலிதாவை வசனம் பேசியபடி ஓடச் சொன்னார். மாரிமுத்து, ஏற்கெனவே ஜெயலலிதாவுக்கு நன்கு அறிமுகமான நபரும்கூட. பார்த்தாலே சிரிப்பு வரும் தோற்றம் அவருடையது. 

எம்.ஜி.ஆர், ‘ஷாட் ரெடி’ என்றதும் ஒத்திகை தொடங்கியது. சொன்னபடி மாரிமுத்து கோபமாக நடக்க ஆரம்பித்தார். வசனம் எழுதப்பட்ட கோப்புகளைக் கையில் பிடித்தபடியே... மூக்குக் கண்ணாடி, தோளில் துண்டு, சற்று கூன் விழுந்த தோற்றத்துடன் அவர் நடந்துசென்ற விதத்தைப்பார்த்த ஜெயலலிதாவுக்குச் சூழ்நிலை மறந்து குபுக்கென சிரிப்பு வந்துவிட்டது. இதனால் அழுவதற்குப் பதிலாகச் சிரித்தபடியே  ‘அத்தான்’ என்பதற்குப் பதிலாக ‘மாரிமுத்து அண்ணே! மாரிமுத்து அண்ணே! நில்லுங்க! போகாதீங்க!’ என்று குரல் கொடுத்தபடி அவரைப் பின்தொடர்ந்தார் ஜெயலலிதா. இந்த உற்சாகத்தில் விளையாட்டுத் தனமாகத் தாவிக் குதித்தபடி ஓடினார்.

அப்போது சட்டென படப்பிடிப்புத் தளத்தில் ஒருவித மவுனம் நிலவியது. ஒன்றும் புரியாமல் விழித்து நின்றார் ஜெயலலிதா. எல்லோருடைய பார்வையும் அவர்மீது பரிதாபமாகப் படிந்திருந்தது. குழப்பத்துடன் எம்.ஜி.ஆரைப் பார்த்தார். டிராலி மீது நின்றிருந்த எம்.ஜி.ஆர் தன் மூக்கை, இடது கைவிரல்களால் அழுந்தத் தேய்த்துக்கொண்டிருந்தார். கடுங்கோபம் கொண்டால், எம்.ஜி.ஆரிடம் அந்த மேனரிஸம் வெளிப்படும் என்பது சினிமா உலகில் இருப்பவர்களுக்குத் தெரியும்.

(அம்முவின் கதை அறிவோம்!)