Published:Updated:

ஜெ.ஜெயலலிதா என்னும் நான்... - அம்மாவின் கதை - 24

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
ஜெ.ஜெயலலிதா என்னும் நான்... - அம்மாவின் கதை - 24
ஜெ.ஜெயலலிதா என்னும் நான்... - அம்மாவின் கதை - 24

அம்மாவின் கதை எஸ்.கிருபாகரன், படங்கள் உதவி: ஞானம்

பிரீமியம் ஸ்டோரி

டப்பிடிப்புத்தளத்தில் விளையாட்டுத் தனமாகத் தாவிக் குதித்தபடி ஓடினார் ஜெயலலிதா. அதைப்பார்த்துக்கொண்டிருந்த எம்.ஜி.ஆர், “சிரித்து முடித்துவிட்டாயா? விளையாட்டெல்லாம் முடிந்துவிட்டதா? இங்கே வேலை செய்ய வந்திருக்கிறோமா, விளையாட வந்திருக்கிறோமா... இனியாவது ஒத்திகை பார்க்கலாமா?’’ என்று கடுகடுத்தார்.

அன்றைய தினம் காட்சிகள் படமாக்கப்பட்டு முடிந்ததும் செட்டில் ஒரு மூலையில் போய் உட்கார்ந்தார் ஜெயலலிதா. அப்போது, ``நான் கோபமா பேசிட்டேன்னு வருத்தப்படறியா அம்மு? ஜாலியா காலேஜ் போகவேண்டிய வயசுல, சினிமாவுக்கு வந்திட்டே. அது உன் தவறில்லை. ஆனால், இது பல பேரோட எதிர்காலம் சம்பந்தப்பட்ட தொழில். லட்சம் லட்சமா முதலீடு போட்டு, படம் எடுக்கற முதலாளிக்கு நம்மால நஷ்டம் வரலாமா? இந்தப் படம் தோத்துட்டா நமக்கு வேற படம் கிடைச்சிடும். ஆனா, தயாரிப்பாளருக்கு..?'' - எம்.ஜி.ஆரின் பேச்சிலிருந்த நியாயத்தையும் தொழில்மீதான அவரது அக்கறையையும் கண்டு வியந்த ஜெயலலிதா, தன் செயலுக்கு மன்னிப்பு கேட்டதோடு அன்று முதல் தானும் அப்படி இருக்க வேண்டும் என முடிவெடுத்தார்.

ஜெ.ஜெயலலிதா என்னும் நான்... - அம்மாவின் கதை - 24

திரை நட்சத்திரமாக மின்னியபோதும் தன் தாய் விரும்பியபடி, ‘நாட்டியத்தில் புகழ் பெறவில்லையே...’ என்கிற மனக்குறை அவருக்கு இருந்தது. இதற்காக 1966-ம் ஆண்டு ஒரு நாட்டிய - நாடகக் குழுவைத் தொடங்கியவர், நாட்டியத்துக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதைகளைத் தேர்வு செய்து நடிக்க ஆரம்பித்தார். இந்தக் குழுவினால் அரங்கேற்றப்பட்ட ‘காவிரி தந்த கலைச்செல்வி’ நாடகம் அன்று வெகு பிரபலம். நாட்டிய நிகழ்ச்சியின்போது, சினிமா பாடலுக்கு ஆடச்சொன்னால், ‘சினிமா நடனம் பார்க்க வேண்டுமானால், தியேட்டருக்குப் போங்களேன்’ என்று கறாராகக் கூறிவிடுவார். நாட்டியத்தின் மீது அத்தனை மரியாதை.
1967-ம் ஆண்டு உலகத்தமிழ் மாநாட்டின் போது தன் நாட்டிய நாடகங்கள் மூலம் வசூலான ஐந்து லட்சம் ரூபாயை அன்றைய முதல்வர் அண்ணாவிடம் அன்பளிப்பாக வழங்கினார் ஜெயலலிதா.

1960-களில், எம்.ஜி.ஆர், சிவாஜி என இருபெரும் கதாநாயகர்களுடன் நடித்து வந்தபோதும், அவர்களையும் மீறி ஜெயலலிதாவும் தனித்துத் தெரிந்தார். தனக்கு முக்கியத்துவமில்லை என்றால், அந்தக் கதையில் நடிக்க மறுத்துவிடுவார். இந்தி சூப்பர் ஸ்டார் திலீப்குமாரே நேரில் கேட்டும், தனது பாத்திரம் கறிவேப்பிலை போல் உள்ளதாகக்கூறி அவரது படத்தில் நடிக்க மறுத்தவர் ஜெயலலிதா.

1967-ம் ஆண்டு எம்.ஜி.ஆருடன் மூன்று படங்கள், மற்ற கதாநாயகர்களுடன் ஏழு படங்கள் என ஒரே ஆண்டில் பத்து படங்கள் நடித்து முடித்தார்.

அதற்கடுத்த ஆண்டிலோ, இருபது படங்கள். இந்த எண்ணிக்கை ஒரு நடிகையின் சினிமா வாழ்வில் பெரும் சாதனை.

எவ்வளவு புகழ் அடைந்தாலும் ஜெயலலிதாவின் இயல்பான சுபாவம் மட்டும் மாறவே இல்லை. எம்.ஜி.ஆரின் ஒரு படத்தில், சீனியர் நடிகையுடன் ஜெயலலிதாவும் இணைந்து நடித்தார். அந்தப் படத்தின் டைட்டில் கார்டில், யார் பெயர் முதலில் வர வேண்டும் என்பதில் சிக்கல் எழுந்தது. சீனியர் நடிகைக்குப் பின் தன் பெயர் இடம்பெற்றதை எதிர்த்த அவர், ‘`சீனியராக இருக்கலாம். ஒரு காலத்தில் பெரிய நடிகையாக இருந்திருக்கலாம். இப்போது ரசிகர்கள், ‘ஜெயலலிதா படம்’ என்றே தியேட்டருக்கு வருவார்கள். எனவே, கதாநாயகியான என் பெயரே முதலில் வர வேண்டும்’’ என வாதிட்டார். ஜெயலலிதாவின் நியாயத்தைப் புரிந்து டைட்டில் கார்டு வரிசை அவரது விருப்பப்படியே மாற்றப்பட்டது.

“எனக்கு உண்மையென்றுபட்டதை, எனக்கு நியாயம் என்று தோன்றியதை மறைத்தோ, திரித்தோ கூற என்னால் முடிவதில்லை. சிறு வயதிலிருந்தே இந்தத் துணிச்சல் குணம் என்னோடு வளர்ந்து வந்திருக்கிறது. இது என் சினிமா வாழ்வைப் பாதிக்கும் எனத்தெரிந்தும், என்னால் அதை மாற்றிக்கொள்ள முடிய வில்லை. பலமுறை எனக்கு வேண்டியவர் களின் மனக்கசப்பைக்கூட இதனால் சம்பாதித் திருக்கிறேன். நண்பர்களை, ரசிகர்களைச் சந்திக்கும்போதுகூட, ‘அவர் மனம் புண்படக் கூடாதே, இவர் வருத்தப்படக் கூடாதே’ என்று உண்மைகளைப் பூசி மெழுகி மாற்றிக்கூற என்னால் முடிவதில்லை. அதனால் பாதிக்கப்படு பவர்கள் என்னை, ‘நன்றி மறந்தவள்’, ‘கர்வம் கொண்டவள்’, ‘பிடிவாதக்காரி’ என்று பல பட்டங்களைச் சூட்டுகிறார்கள். ஆனாலும் ‘ஜெயலலிதா பேசுகிறாள் என்றால், அதில் உண்மையில்லாமல் இருக்காது’ என்று ஒரே ஓர் உள்ளமாவது கருதினால், எனக்கு அது போதும். கருத்துகள் சில வேளைகளில் கசக்கும்; அதுவே, கற்கண்டாக இனிப்பதும் உண்டு. அதன் சுவை மாறுபாடு, உள்ளத்தின் குறை மாறுபாட்டைப் பொறுத்ததே தவிர, கூறுபவரின் கொள்கை மாறுபாடு அல்ல” என்று பின்னாளில் தன் குணத்துக்கான நியாயத்தை அவர் தெளிவுபடுத்தியிருக்கிறார்.

இந்தக் காலகட்டத்தில், தன் மகளின் எதிர்காலத்துக்காக தேனாம்பேட்டையில் பத்து ஏக்கரில் இடம் வாங்கினார் சந்தியா. மகளுக்காகப் பார்த்துப் பார்த்துக் கட்டிய இந்த வீட்டில் மகளோடு மகிழ்ச்சியாக வாழ விதி இடம்கொடுக்கவில்லை. கிரகப்பிரவேசத்துக்கு சில தினங்கள் முன் ரத்தவாந்தி எடுத்து மருத்துவ மனையில் சேர்க்கப்பட்ட சந்தியா, மறுதினமே மரணமடைந்தார். ஜெயலலிதாவின் வாழ்வில் முதல் பேரிடி அது. வளர்ந்து இளம்பெண்ணான பிறகும்கூட, உண்ணவும் உறங்கவும் மட்டுமன்றி உடை உடுத்துவதுவரை தாய் சந்தியா இன்றி அவர் இயங்கியதே இல்லை.

தாயால் கண்போல பாதுகாக்கப்பட்ட மகளை உறவினர்கள் அதிசயமாகப் பார்ப்பார்கள். ஆனால், தன் இறப்பின் மூலமே மகளுக்கு சந்தியா திருஷ்டி கழிக்க நேர்ந்தது விதியின் செயல்தான். பூமி பூஜை நடந்தபோது உயிருடன் இருந்த சந்தியா கிரகப்பிரவேசத்தின்போது அந்த வீட்டில் புகைப்படமாகியிருந்தார். முதன்முறையாக வாழ்வில் தனிமையை உணர்ந்தார் ஜெயலலிதா.

எம்.ஜி.ஆர் வந்தார். “மரணம் யாருக்கும் விதிவிலக்கல்ல. இப்படி முடங்கிக்கிடப்பதை உன் அம்மா விரும்பமாட்டார். அதனால் படப்பிடிப்புகளில் கலந்துகொள்” என்றார். தாயை இழந்த ஜெயலலிதாவுக்கு ஆறுதலாகவும் அனுசரணையாகவும் இருந்தது அந்த வார்த்தைகள்.

சந்தியா இறந்த சில நாள்களிலேயே கொத்துச் சாவிக்குக் கொடிபிடித்துக் கொண்டாடின அந்த வீட்டிலிருந்த சில உறவுகள். வீட்டின் நடு ஹாலில், தான் மயக்கமுற்றுக் கிடந்த நேரத்தில், நடைபெற்ற இந்தச் சம்பவத்தால், மனமுடைந்துபோனார் ஜெயலலிதா. பிற்காலத்தில், தொலைக்காட்சி பேட்டி ஒன்றில், இதுகுறித்துப் பேசியவர், “நிபந்தனையற்ற அன்பு என்று ஒன்று எப்போதும்  இருந்ததில்லை” என உதட்டில் புன்னகையும் உள்ளத்தில் துயரமுமாகத் தன் வாழ்க்கை நினைவலைகளைப்  பகிர்ந்துகொண்டார். அந்த வேதனை வார்த்தைகளுக்குப் பின்னணியான முதற்சம்பவம் இதுதான்.

(அம்முவின் கதை அறிவோம்!)

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு