Published:Updated:

ஜெ.ஜெயலலிதா என்னும் நான்... - அம்மாவின் கதை - 25

ஜெ.ஜெயலலிதா என்னும் நான்... - அம்மாவின் கதை - 25
பிரீமியம் ஸ்டோரி
ஜெ.ஜெயலலிதா என்னும் நான்... - அம்மாவின் கதை - 25

வாழ்க்கை எனும் போர்க்களம்எஸ்.கிருபாகரன்

ஜெ.ஜெயலலிதா என்னும் நான்... - அம்மாவின் கதை - 25

வாழ்க்கை எனும் போர்க்களம்எஸ்.கிருபாகரன்

Published:Updated:
ஜெ.ஜெயலலிதா என்னும் நான்... - அம்மாவின் கதை - 25
பிரீமியம் ஸ்டோரி
ஜெ.ஜெயலலிதா என்னும் நான்... - அம்மாவின் கதை - 25

கொஞ்சம் கொஞ்சமாகத் தாயின் நினைவிலிருந்து மீண்டு, சினிமாவில் திரும்பவும் பிஸியானார் ஜெயலலிதா.

1972-ம் ஆண்டு ‘கங்கா கெளரி’ படத்துக்காக மைசூர் சென்றிருந்த நேரத்தில், ‘நான் மைசூரில் பிறந்திருந்தாலும் தமிழ்க் குடும்பத்தைச் சேர்ந்தவள். என் தாய்மொழி தமிழ். நான் ஒரு தமிழச்சி’ என்று ஒரு பத்திரிகைக்குப் பேட்டி யளித்திருந்தார். இது அங்குள்ள கன்னட மொழி உணர்வாளர்களை உசுப்பியது. படப்பிடிப்பு நடந்துவந்த பிரீமியர் ஸ்டுடியோவை நூற்றுக்கும் மேற்பட்டோர் ஆயுதங்களுடன் முற்றுகையிட்டுத் தகராறில் ஈடுபட்டனர்.

ஜெ.ஜெயலலிதா என்னும் நான்... - அம்மாவின் கதை - 25

‘கன்னடியர் என ஜெயலலிதா ஒப்புக் கொள்ளவில்லையெனில், இங்கிருந்து யாரும் வெளியேற முடியாது’ என அவர்கள் மிரட்டினர். பயந்துபோன தயாரிப்பாளர் பந்துலு பிரச்னையைச் சமாளிப்பதற்காக ஜெயலலிதாவை மன்னிப்பு கேட்க வலியுறுத்தினார். `மிரட்டுகிறார்கள் என்பதற்காக இல்லாத ஒன்றைச் சொல்ல மாட்டேன்’ என ஜெயலலிதா தன் கருத்தில் உறுதியாக நின்றார். ஜெயலலிதாவைச் சிலர் தாக்க முயன்றனர். `என்ன நடந்தாலும் சரி... நான் மன்னிப்பு கேட்க மாட்டேன்’ என அப்போதும் தன் நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ள மறுத்து விட்டார். உயிருக்கே ஆபத்து உருவான இக்கட்டான நேரத்திலும் தன் துணிச்சலை வெளிப்படுத்திய ஜெயலலிதாவின் குணம் திரையுலகில் பரபரப்பாகப் பேசப்பட்டது.

1964-ல் ‘ஆயிரத்தில் ஒருவன்’ தொடங்கி ‘பட்டிக்காட்டு பொன்னையா’ வரை எம்.ஜி.ஆருடன் 28 படங்களில் இணைந்து நடித்தார் ஜெயலலிதா. இதனால் எம்.ஜி.ஆருடன் அவருக்கு ஒரு புரிதல் உண்டானது. மேலும், ஜெயலலிதாவின் தனிப்பட்ட வாழ்க்கையிலும் அக்கறை காட்டினார் எம்.ஜி.ஆர்.

ஜெ.ஜெயலலிதா என்னும் நான்... - அம்மாவின் கதை - 25


‘என் தாயின் மரணத்துக்குப் பிறகு அந்த ஸ்தானத்திலிருந்து என்னைப் பாதுகாத்தது எம்.ஜி.ஆர்தான்’ எனப் பின்னாளில் அரசியல் தலைவராக உருவெடுத்தபோது ஒரு பேட்டியில் மனம்விட்டுப் பேசினார்.

ஆனால், 1972-ல் எம்.ஜி.ஆரின் சொந்தப் படமான ‘உலகம் சுற்றும் வாலிபன்’ படத்தில் வாய்ப்பு அளிக்காததால், எம்.ஜி.ஆர் - ஜெயலலிதா இடையே மனஸ்தாபம் உருவானதாகப் பேசப்பட்டது. அந்த நேரத்தில் ‘ஜெயலலிதாவுக்கும் உங்களுக்கும் தகராறாமே...’ என நிருபர் ஒருவர் கேட்ட கேள்விக்கு, `தொழில்முறையில் இருவரும் கலைஞர்கள். ஒரு சாதாரண நடிகையுடன் எனக்கு என்ன மோதல் இருக்க முடியும்?’ என்றே பதிலளித்தார் எம்.ஜி.ஆர்.  `சிவாஜிக்கு நிகராக இன்னொரு நடிகர் தமிழகத்தில் இல்லை’ எனப் பதிலடி கொடுத்தார் ஜெயலலிதா. இந்தப் பேட்டிகள் இருவருக்குமான இடைவெளியை அதிகப்படுத்தியது. சில வருடங்களில், ஜெய லலிதாவுக்குப் பட வாய்ப்புகள் குறைந்தன. பெரும்பாலும் ஹைதராபாத்தில் தங்கியிருக்க ஆரம்பித்தார். கவலை அவர் உடல்நிலையை பாதித்தது. நடுத்தர வயதை எட்டியிருந்ததால், சினிமாவில் வாய்ப்புகள் அரிதாகின. பொருளாதாரச் சிக்கலைச் சமாளிக்க, தன் நாடகக்குழுவில் கவனம் செலுத்தினார்.

1982-ம் ஆண்டின் தொடக்கத்தில் சென்னையில், ஜெயலலிதாவின் நாட்டிய நாடகம் ஒன்றில் அமைச்சர் ஆர்.எம்.வீ கலந்துகொண்டார். சத்துணவுத் திட்டம் எம்.ஜி.ஆரின் மனதில் கனன்றுகொண்டிருந்த நேரம் அது. அதை வெற்றிகரமாக்க பல யோசனைகளைக் கேட்டுக்கொண்டிருந்தார். அப்போது ஜெயலலிதாவின் பொருளாதார நிலையை எடுத்துச்சொல்லி, ‘சத்துணவு விளக்கக் கூட்டங்களில், ஜெயலலிதாவின் நாடகங்களை நடத்தினால், திட்டம் பற்றிய விவரங்கள் மக்களை எளிதில் சென்றடையும்’ என்றார் ஆர்.எம்.வீ. இதனால், நீண்ட பிரிவுக்குப்பின் ஜெயலலிதாவைச் சந்தித்தார் எம்.ஜி.ஆர். சில சந்திப்புகளுக்குப்பின், கட்சியில் சேரும் தன் விருப்பத்தைத் தெரிவித்தார் ஜெயலலிதா.  1982 ஜூன் 4 அன்று அ.தி.மு.க உறுப்பினர் படிவத்தில் கையெழுத்திட்டு, தன் அரசியல் வாழ்க்கையைத்  தொடங்கினார் ஜெயலலிதா.

ஜெயலலிதாவின் சுறுசுறுப்பைப் பார்த்து, சத்துணவுத் திட்ட உயர்மட்டக் குழுப் பொறுப்பை அளித்தார் எம்.ஜி.ஆர். இந்தப் பணியோடு தன்னை முடக்கிக்கொள்ளாமல், செல்கிற இடங்களி லெல்லாம் கட்சிப் பணிகளிலும் அக்கறை செலுத்தினார். 1983 ஜனவரியில், கட்சியின் ‘கொள்கை பரப்புச் செயலாளர்’ பதவியை அளித்தார். இதையடுத்து, திருச்செந்தூர் இடைத்தேர்தலில் முதன்முறையாகப் பிரசாரம் செய்தார் ஜெயலலிதா. தேர்தலில் கிடைத்த வெற்றியைத் தொடர்ந்து, கட்சியில் ஜெயலலிதாவுக்கு முக்கியத்துவம் அளிக்க ஆரம்பித்தார் எம்.ஜி.ஆர். 1984-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஜெயலலிதாவுக்கு ‘ராஜ்ய சபை உறுப்பினர்’ பதவியளித்தார். ஜெயலலிதாவின் வாழ்வில் திருப்புமுனை அந்தப் பதவி.

1984 அக்டோபர் 5-ம் நாள் எம்.ஜி.ஆர் உடல்நிலை பாதிக்கப்பட்டது. ஜெயலலிதாவுக்கு சங்கடங்கள் அதிகரித்தன. மேற்சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்ட எம்.ஜி.ஆர், அங்கிருந்த படியே தேர்த லில் போட்டி யிட்டார். பிரச்னைகளை மறந்து ஆண்டிப்பட்டியில் பிரசாரத்தில் ஈடுபட்டார் ஜெயலலிதா. சிகிச்சை முடிந்து சென்னை திரும்பிய எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவுக்கு மீண்டும் ‘கொள்கை பரப்புச் செயலாளர்’ பதவியை வழங்கி, தன் நிலைப்பாட்டை மற்றவர்களுக்குப் புரியவைத்தார்.                            

எம்.ஜி.ஆர் மறைவுக்குப்பின், அவரது உடலைச் சுமந்துசென்ற ராணுவ வண்டியில் ஜெயலலிதா ஏறி அமர முற்பட்டபோது, அவமானப்படுத்தப்பட்டார். உண்மையில் அவரது அரசியல் எதிர்காலத்தை உறுதிப் படுத்திய நாள் அதுதான். அதைத் தொடர்ந்தே எல்லாப் பிரச்னைகளையும் சமாளித்து, எதிர் நீச்சல் போடுவதென தன் அம்மா படத்தின் முன் நின்று முடிவெடுத்தார் ஜெயலலிதா.

இந்தக் காலகட்டத்தில், ஜெயலலிதாவை எதிர்ப்பதற்காகக் கட்சியையே காவு கொடுக்கத் துணிந்தனர் சிலர். எம்.ஜி.ஆரின் மனைவி ஜானகியை அரசியலுக்கு அழைத்து வந்தனர். 1988 ஜனவரி முதல் நாள் நெடுஞ்செழியன் உள்ளிட்ட சீனியர்கள் ஒன்றுசேர்ந்து அ.தி.மு.க-வின் ஓர் அணிக்குப் பொதுச்செயலாளராக ஜெயலலிதாவை அறிவித்தார்கள்.

ஜெ.ஜெயலலிதா என்னும் நான்... - அம்மாவின் கதை - 25

ஜானகி அம்மையார் முதலமைச்சரான சூழ்நிலையில், ஜெயலலிதா அணியினர் விரட்டியடிக்கப்பட்டு, அதிகார பலத்துடன் தலைமைக் கழகம் பூட்டப்பட்டது. ஆர்ப்பாட்டம் நடத்தியதாகக் கைதானார் ஜெயலலிதா. ஜானகி ஆட்சிக் கவிழ்ப்புக்குப் பின், அ.தி.மு.க இரு அணிகளாக அதகளம் செய்தபோது, ஒற்றை ஆளாக ஒரு பெரும் கூட்டத்தையே சமாளித்தார் ஜெயலலிதா.

1989-ம் ஆண்டு தேர்தலில், அ.தி.மு.க ஜா-ஜெ என இரு அணிகளாகப் போட்டி யிட்டது. போடிநாயக்கனூரில் வெற்றிபெற்று, தமிழகத்தின் முதல் பெண் எதிர்க்கட்சித் தலைவரானார் ஜெயலலிதா.

ஜானகி அணி ஒரே ஓர் இடத்தில் மட்டுமே வெற்றிபெற்றிருந்தது. கட்சியினர் ஆதரவு ஜெயலலிதாவுக்கு இருப்பதை உணர்ந்த ஜானகி, இரு அணிகளையும் இணைக்க ஒப்புக் கொண்டார். இரட்டை இலைச் சின்னம் மீண்டும் கிடைத்தது. 1989-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில், காங்கிரஸ் கட்சி கூட்டணியுடன் 39 தொகுதிகளை வென்றது அ.தி.மு.க. இதனிடையே கட்சிக்குள்ளேயே ஜெயலலிதாவுக்குப் பிரச்னைகள் உருவாகின. தன் சாதுர்யத்தால் அனைத்தையும் சமாளித்தார்.

1991 சட்டமன்றத் தேர்தலில், அ.தி.மு.க முதன்முறையாக ஜெயலலிதா தலைமையில் வென்று ஆட்சி அமைத்தது. முதல்வராகப் பொறுப்பேற்றதும், முதல் கையொப்பத்தை ‘போலி மதுவை ஒழிக்கும் ஆணை’யில் இட்டார். தொடர்ந்து 2001, 2011, 2016 என நான்கு முறை
அ.தி.மு.க-வை அரியணையில் அமர்த்திய சாதனைப் பெண்மணி ஜெயலலிதா.

திராவிட இயக்க அரசியலில், மற்ற தலைவர்களுக்கும் ஜெயலலிதாவுக்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு. அண்ணா, எம்.ஜி.ஆர், கருணாநிதி போன்றவர்கள் சமூகத்தின் அடித்தட்டிலிருந்து அரசியலுக்கு வந்தவர்கள். ஜெயலலிதாவோ பிறப்பிலிருந்தே வறுமையைக் காணாதவர். அதனால் அவரது ஆட்சியில் இயல்பான சில குறைகள் இருந்தன. அவர் தான் திராவிட இயக்கத்தின் முன்னோடிகளில் முதன்முறையாக ஊழல் குற்றச்சாட்டில் தண்டனை பெற்றவர் என்பதும் ஓர் அதிர்ச்சி.

ஜெயலலிதாவின் திட்டங்கள் பெரும்பாலும் பெண்களுக்குப் பயனுள்ள வகையில் இருந்தன. தொட்டில் குழந்தை திட்டம், மகளிர் காவல் நிலையம், தாலிக்குத் தங்கம், கர்ப்பிணிகளுக்கு நிதியுதவி, பொது இடங்களில் பாலூட்டும் தாய்மார்களுக்கான சிறப்பு அறை, பெண் சிறப்பு கமாண்டோ... இப்படி ஜெயலலிதாவின் ஆட்சிக்காலத்தில் சமூகநலத்துறைமூலம் பெண்கள் முன்னேற்றம் மற்றும் பெண்கள் நலன் குறித்த திட்டங்கள் தீவிரமாக அமல்படுத்தப்பட்டன.

எதிர்க்கட்சிகள் அவரின் அரசியல் நடவடிக்கைகளைக் கடுமையாக எதிர்த்தன. பல நேரங்களில் தரக்குறைவான வார்த்தைகளாலும் தனிப்பட்ட தாக்குதலைத் தொடுத்தன. அவற்றையெல்லாம் பொருட்படுத்தாமல், கட்சியையும் ஆட்சியையும் திறம்பட நடத்திச்சென்றார். அவர் காலத்தில்தான் அ.தி.மு.க ‘சர்வாதிகாரத் தலைமை’ என விமர்சனத்துக்குள்ளானது.

2013-ம் ஆண்டு பொதுக்குழுவில், ஜெயலலிதா தன் வாழ்நாளில் அதுவரை பேசியிருக்காத பலவீனமான வார்த்தைகளைக் கட்சியினர் முன் உதிர்த்தார். அது, கிட்டத்தட்ட ஜெயலலிதா தன் வாழ்க்கை குறித்துச் சொன்ன இறுதி வாக்குமூலம் எனலாம்.

`பொதுவாக ஒரு பெண் குழந்தைப் பருவத்தில் தந்தையை, வளர்ந்தபின் சகோதரனை, திருமணத்துக்குப்பின் கணவனைச் சார்ந்து பாதுகாப்பான வாழ்வை வாழ்வாள். என் விதி... என் வாழ்நாளில், இதில் எதை அனுபவிக்கவும் கொடுப்பினை இல்லை. துயரம் நேரும்போது தோளில் சாய்ந்து ஆறுதலை அடைய எனக்கென்று ஒருவர் இருந்ததில்லை. தனிமைதான் எனக்கு ஆறுதல் கொடுத்திருக்கிறது. எனக்கும் என் தாய் 18 வயதில் திருமணம் செய்துவைத்திருந்தால், இன்று  மூன்று, நான்கு குழந்தைகளுக்குத் தாயாக நிம்மதியான வாழ்க்கை வாழ்ந்திருப்பேன். விதி எனக்கு அந்த வாய்ப்பை வழங்கவேயில்லை. வாழ்க்கை முழுவதும் போராட்டக்களமாகவே மாறிவிட்டது” என அந்தக் கூட்டத்தில் உருக்கமாகப் பேசினார்.

2016 செப்டம்பர் 22 அன்று உடல்நலக் குறைவால் சென்னையில் உள்ள அப்போலோ மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டு, டிசம்பர் 5 அன்று சிகிச்சை பலனின்றி உயிர்நீத்தார் ஜெயலலிதா. திராவிட இயக்கத்தின் மக்கள் செல்வாக்குமிக்க தலைவர்களின் பட்டியலில் இவருக்கு எப்போதும் இடமுண்டு.

அரசியல் சாம்ராஜ்யத்தைத் தன் கைக்குள் வைத்திருந்த ஜெயலலிதா நிச்சயம் ஓர் இரும்புப் பெண்மணிதான்!

(நிறைந்தது)