வாசகிகள் பக்கம்
தன்னம்பிக்கை
தொடர்கள்
Published:Updated:

அப்போது திக்குவாய்... இப்போது... ஸ்டாண்ட் அப் காமெடியன்! - நம்பிக்கைப் பெண் பூஜா

அப்போது திக்குவாய்... இப்போது... ஸ்டாண்ட் அப் காமெடியன்! - நம்பிக்கைப் பெண் பூஜா
பிரீமியம் ஸ்டோரி
News
அப்போது திக்குவாய்... இப்போது... ஸ்டாண்ட் அப் காமெடியன்! - நம்பிக்கைப் பெண் பூஜா

குறையொன்றுமில்லை ஸ்ரீஅகத்திய ஸ்ரீதர்

‘`பள்ளியில் படிக்கும்போது என் திக்குவாய் பிரச்னை காரணமாக நிறைய பேர் என்னைக் கேலி செய்து சிரித்திருக்கிறார்கள். இன்றோ, என் ஸ்டாண்ட் அப் காமெடியால் பலரை நான் சிரிக்க வைத்துக் கொண்டிருக்கிறேன்’’ - மத்தாப்பாகப் பேசுகிறார், பெங்களூரில் வசிக்கும் தமிழ்ப்பெண் பூஜா விஜய். நகைச்சுவைத் திறனால் தன் திக்குவாய் குறைபாட்டையே தன் விசேஷ குணமாக மாற்றிக்கொண்டவர். `பேச்சுக்குறையுடைய இந்தியாவின் முதல் பெண் காமெடியன்' என்கிற சாதனைக்குச் சொந்தக்காரர். மிகக் குறுகிய காலத்தில் இந்தியா முழுக்கப் பிரபலமாகி கலக்கிக்கொண்டிருக்கும் 27 வயதுப் பெண்ணிடம், பூத்துக் கிடக்கிறது தன்னம்பிக்கை!

‘`என் அப்பா சார்ட்டட் அக்கவுன்டன்ட். அம்மா, சிறப்புக் குழந்தைகளுக்கான ஆசிரியர். சொந்த ஊர் வேலூர் அருகில் உள்ள ஒரு கிராமம். நான் மும்பையில் பிறந்தேன். வெளிநாடு, டெல்லி என வளர்ந்தேன். பள்ளியில் படிக்கும்போது திக்குவாய் குறைபாட்டினால் சரிவரப் பேச முடியாமல் சிரமப்பட்டேன். பிறகு நான் எடுத்துக்கொண்ட ‘ஸ்பீச் தெரபி’ என்னைத் தடையின்றிப் பேசவைத்தது. இப்போதுகூட என்னால் அதில்  இருந்து முழுவதுமாக வெளிவர முடியவில்லைதான். ஆனாலும், இதை நான் ஒரு குறையாக உணராத வகையில் என் பெற்றோர் சிறப்புக் கவனம் செலுத்தி என்னை வளர்த்தெடுத்தனர்’’ என்கிறவர், தான் நகைச்சுவை மேடைக்கு வந்த கதையைப் பகிர்கிறார்.

‘`எனர்ஜி பாலிஸி அனலிஸ்ட் படிப்பை முடித்துவிட்டு, பெங்களூரில் பணிபுரிந்தேன். 2015-ல் என் அலுவலக நண்பர் ஒருவர், ஒரு மேடையில் நகைச்சுவையாகப் பேசினார். அந்தத் தருணம், திடீரென எனக்கும் அப்படி நகைச்சுவையாகப் பேச விருப்பம் ஏற்பட்டது. எதைப்பற்றியும் யோசிக்காமல், நண்பரிடமிருந்து மைக்கை வாங்கி, நானும் பார்வையாளர்களைச் சிரிக்கவைக்கும் வகையில் பேசினேன். அப்போது கிடைத்த கைத்தட்டல்கள், நிகழ்ச்சி முடிந்த பின்னரும் என்னைத் தேடிவந்து பாராட்டிச் சென்ற உள்ளங்கள் என என் நகைச்சுவைத் திறனை நான் உணர்ந்த இடம் அதுதான். மேடையில் ஏறி மைக்கைப் பிடித்த பின், என் பேச்சுக்குறை என்னையும் அறியாமல் விலகியதையும், பார்வையாளர்கள் வயிறு குலுங்கச் சிரித்ததையும் மனதில் ரீவைண்ட் செய்து பார்த்துப் பார்த்து மகிழ, அதுவே எனக்குத் தூண்டுகோலாக அமைந்தது’’ என்கிறவர், வேலை விஷயமாக டெல்லிக்குக் குடிபெயர்ந்திருக்கிறார்.

அப்போது திக்குவாய்... இப்போது... ஸ்டாண்ட் அப் காமெடியன்! - நம்பிக்கைப் பெண் பூஜா

‘`டெல்லியில் நானே ஆர்வமுடன் சென்று பல ஸ்டாண்ட் அப் காமெடி நிகழ்ச்சிகளில் பங்குகொள்ள ஆரம்பித்தேன். சூழ்நிலைக்கேற்ப நகைச்சுவையாகப் பேசும் திறன் நான் அறியாமலேயே என்வசப்பட்டது. பார்வையாளர்களை மனம்விட்டுச் சிரிக்கவைக்கும் வித்தை கைவரப்பெற்றேன். 2016-ம் ஆண்டு டெல்லியில் நடந்த ஒரு காமெடிப் போட்டியில் கலந்துகொண்டு சிறந்த காமெடியனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டேன். புகழ்பெற்ற ஓர் ஆடிட்டோரியத்தில் 700-க்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் மத்தியில், தொடர்ச்சியாகச் சிரிப்பலைகளைப் பாய்ச்சிய அந்தத் தருணம், என் தன்னம்பிக்கையையும் உற்சாகத்தையும் அதிகரித்தது. தொடர்ந்து, சீனியர் காமெடியன்களுடன் இணைந்து பெங்களூரு, ஹைதராபாத், சென்னை மற்றும் டெல்லியில் நிகழ்ச்சிகளை நடத்த ஆரம்பித்தேன். தமிழ்ப்பெண் டெல்லி கலாசாரத்தில்படும் அவஸ்தைகள், பேச்சுக்குறை உடையவர்களின் சிரமங்கள் என என் உலகில் நான் கடப்பவற்றுக்கு வண்ணங்கள் சேர்த்து சரவெடி காமெடியாகக் கோத்துப் பேசி வருகிறேன்’’ என்கிறவரின் காமெடி நிகழ்ச்சியை, அமெரிக்காவில் செயல்படும் ‘ஸ்டட்டரிங் ஃபவுண்டேஷன்’ உலகளவில் ஒளிபரப்பிய பிறகு, பூஜாவின் பாய்ச்சல் அதிகமாகியிருக்கிறது.

‘`அந்த நிகழ்ச்சியைப் பார்த்துவிட்டு, உலகின் பல மூலைகளிலிருந்தும் எனக்கு ரசிகர்கள் கிடைத்தனர். அதைவிட, எந்தெந்த நாடுகளில் இருந்தெல்லாமோ, என்னைப்போல பேச்சுத்திறன் குறைபாடுடையவர்கள் என் தன்னம்பிக்கையைப் பாராட்டி வாழ்த்துகள் அனுப்பியதும், ‘எங்களில் ஒருத்தி இப்படி எழுந்து வந்திருப்பது மகிழ்ச்சியாக இருக் கிறது’ என்று என்னை உச்சி முகர்ந்ததும், ‘உங்களைப் பார்த்து எங்களின் தன்னம்பிக்கை அதிகரித்திருக்கிறது’ என்று நன்றி சொன்னதும், இந்த ஜென்மத்துக்கான பயனை அடைந்துவிட்ட மகிழ்ச்சியையும் நெகிழ்ச்சியையும் எனக்குத் தந்தது’’ என்கிறார்.

‘`என் அப்பா இப்போது உயிருடன் இல்லை. நானும் அம்மாவும் பெங்களூரில் வசிக்கிறோம். அப்பாவுமாக இருந்து எனக்குப் பலம் கொடுத்துவருகிறார் அம்மா. புகழ்பெற்ற காமெடியன்களுடன் இணைந்து இந்தியாவின் பல நகரங்களிலும் நான் காமெடி நிகழ்ச்சிகளை நடத்தும்போது, அரங்கம் அதிரும் அந்தச் சிரிப்புகளுக்கு நடுவே, ஆனந்தக் கண்ணீருடன் அமர்ந்திருக்கும் ஒரு ஜோடிக் கண்கள் என் அம்மாவுடையவை’’ - எனும்போது பூஜாவின் வார்த்தைகள் கனமாகின்றன.

காமெடியன்களின் சென்டிமென்ட் பக்கம் எப்போதும் கனமானதுதான்!