Published:Updated:

``உதவி கேட்டதுபோய் இப்போ அவங்களே உதவுறாங்க!” - நெகிழும் ராஜலெட்சுமி

"'இப்போ எதுக்குப் புள்ள இது. இதை வெச்சு நாம என்ன பண்ணப்போறோம். நாமளே இப்போதான் வளந்துட்டு வாரோம். இந்த நேரத்துல இதெல்லாம் தேவையா. கொஞ்ச நாள் கழிச்சு பாத்துக்கலாமே'ன்னு அவர் ஒரு வார்த்தைகூட சொல்லல. நான் என்ன கேட்டாலும் செஞ்சுக் கொடுத்திடுவாரு."

``உதவி கேட்டதுபோய் இப்போ அவங்களே உதவுறாங்க!” - நெகிழும் ராஜலெட்சுமி
``உதவி கேட்டதுபோய் இப்போ அவங்களே உதவுறாங்க!” - நெகிழும் ராஜலெட்சுமி

"சின்ன வயசுல வீட்ல வறுமை தாண்டவமாடும். அக்கம் பக்கத்துல உள்ளவங்ககிட்ட உதவி கேட்டு, வேலைக்குப் போய் சம்பாதிச்சுதான் அம்மா எங்களைப் படிக்க வெச்சாங்க. எந்தப் பொண்ணுக்காக அவ்வளவு கஷ்டப்பட்டாங்களோ இன்னைக்கு அவளாலதான் தலை நிமிர்ந்து நிக்கிறாங்க. அதைப் பத்தி நினைச்சாலே பெருமையா இருக்கு. ஆமா, நான் என்னையும் என் அம்மாவைப் பத்தியும்தான் சொல்றேன்” தன் டிரேட் மார்க் புன்னகையோடு பேசுகிறார் நாட்டுப்புறக்கலைஞர் ராஜலெட்சுமி. 

சமீபத்தில் நலிவடைந்த நாட்டுப்புறக்கலைஞர்களின் வாழ்வை மேம்படுத்தும் விதமாக `அரிதாரம்' எனும் அமைப்பைத் தொடங்கியிருக்கிறார்கள் ராஜலெட்சுமி - செந்தில்கணேஷ் தம்பதியர். கடந்த வாரம் `அரிதாரம்' அமைப்பின் அலுவலகத் திறப்பு விழாவை கைத்தறிக் கலைஞர்கள், நெசவாளர்கள், நாட்டுப்புறக்கலைஞர்கள், பாடகர்கள் மற்றும் குடும்பத்தினரோடு சேர்ந்து பிரமாண்டமாக தொடங்கியிருக்கிறார்கள். 

``நான் படிச்சது தமிழ் இலக்கியம். படிக்கிறப்பவே நம் மண் சார்ந்த கலைஞர்களுக்காக ஏதாவது செய்யணும்ங்கிற எண்ணம் இருந்துச்சு. இந்தச் சமூகத்துல நமக்குன்னு ஒரு அங்கீகாரம் கிடைக்கிறப்போ நாம மத்தவங்களுக்கு உதவலாம்னு முடிவு பண்ணியிருந்தேன். அந்த அங்கீகாரம் சூப்பர் சிங்கர் மூலமா எனக்குக் கிடைச்சிருக்கு. சூப்பர் சிங்கர் ஃபைனல்லகூட நான் நெசவுத்தொழில் செய்றவங்க பிள்ளைகளோட படிப்புச் செலவுக்கு உதவுவேன்னு சொல்லியிருந்தேன். அதனால, அப்போ இருந்தே என் கணவரோடு சேர்ந்து அந்த வேலைகளைப் பார்க்க ஆரம்பிச்சிட்டேன். ஆனா, அதுக்கான அதிகாரபூர்வமான புராசஸ் என்னங்கிறது தெரியாமலேயே இருந்தது. ஆறேழு மாசமா எங்களுக்குத் தெரிஞ்சவங்ககிட்ட விசாரிச்சோம். நாட்டுப்புறக்கலைஞர்களோட வாழ்வாதாரத்துக்காகப் பல சங்கங்கள் இருந்துச்சு. அதுல பாதிக்கும் மேல செயல்படாமலேயே போயிருந்தது. சூப்பர் சிங்கருக்குப் பிறகு அந்தச் சங்கங்கள் எல்லாம் திரும்பவும் ஒரு புது உத்வேகத்தோட இயங்க ஆரம்பிச்சிருக்கு.

குறிப்பாச் சொல்லணும்னா நாட்டுப்புறக்கலையை சூப்பர் சிங்கருக்கு முன் சூப்பர் சிங்கருக்குப் பின் என்றே பிரிச்சிடலாம். அந்தளவுக்கு நலிவடைந்துக்கிட்டு இருந்த கலைஞர்கள் மேல இப்போ நல்லவிதமான பார்வை விழுந்திருக்கு. நாங்க அந்தச் சங்கங்கள் மூலமாகூட நலிவடைந்த கலைஞர்களுக்கு உதவி பண்ண முடியும். ஆனா, அந்தச் சங்கத்திற்கு உட்பட்டு இருந்தா அவங்க என்ன எதிர்பார்க்கிறாங்களோ அதைத்தான் நாம செய்ய முடியும். நாம நினைக்கிறதை பண்ண முடியாது. அந்த எண்ணத்துலதான் செய்யுறதை சிறப்பாச் செஞ்சிடலாம்னு முடிவு பண்ணி `அரிதாரம்' அமைப்பைத் தொடங்கியிருக்கோம். இந்த அமைப்புக்கு முதல்ல `கலைத்தாய்' னுதான் பெயர் வெச்சோம். எனக்கு அந்தப் பேரு ரொம்பப் புடிச்சிருந்தது. ஆனா, அதே பேருல வேற ஒருத்தங்க பதிவு பண்ணியிருந்தாங்க. அடுத்துதான் `அரிதாரம்'னு பெயர் வெச்சோம். அரிதாரம்னா வேஷம் போடுறது. கலைஞர்களோடு சம்பந்தப்பட்ட பெயராவும் நல்ல தமிழ்ப்பெயராவும் இருந்துச்சு. அதனால, இந்தப் பெயருலயே அலுவலகத்தைத் தொடங்கிட்டோம். வர்ற ஜனவரி முதல் வாரத்துக்குள்ள பதிவு பண்ணிடுவோம். இப்போ நடந்தது அலுவலகத் திறப்பு விழா மட்டும்தான். நெசவாளர்களோட குழந்தைகளுக்குக் கல்வி உதவித்தொகை வழங்குற நிகழ்வையும் அரிதாரம் பேனர்லயே பண்ணிடலாம்னு ஆசைப்பட்டு நடத்தி முடிச்சிட்டோம்” என்றவர் அரிதாரம் மூலமாக தாங்கள் என்னவெல்லாம் செய்ய இருக்கிறோம் என்பதை விவரிக்கிறார். 

``எங்களோட அடிப்படை நோக்கம் மூத்த கலைஞர்களுக்கு உதவி பண்றதுதான். ஏன்னா, நிறைய கலைஞர்கள் எந்த வருமானமும் இல்லாம அவங்க வாழ்வாதாரத்தையே தொலைச்சிட்டு கஷ்டப்படுறாங்க. அவங்களுக்கெல்லாம் மாதா மாதம் ஒரு தொகையைக் கொடுத்து உதவணும். 

அரிதாரம்ங்கிற பேருல யூடியூப் சேனல் ஒண்ணு ஆரம்பிக்கணும். அதுமூலமா தமிழ்நாடு முழுக்க இருக்கிற கலைஞர்களை ஒன்று திரட்டணும். அவங்களோடு கலந்து பேசி என்ன மாதிரியான பிரச்னைகள் இருக்கு. அதை எப்படிச் சமாளிக்கலாம்னு சக கலைஞர்களோடு பேச வைத்து முடிந்தவரை அந்தப் பிரச்னையைத் தீர்த்து வைக்கணும். 

அடுத்ததா இளைஞர்கள்கிட்ட நாட்டுப்புறக்கலையை எடுத்துட்டுப் போகணும். அவங்க விரும்புற கலையைக் கத்துக்கிற மாதிரியான பயிற்சிப் பள்ளிகளை ஏற்படுத்தணும். 

நாட்டுப்புறக்கலைக்குன்னு எந்த ஒரு நிதியும் இப்போ வரை கிடைக்கிறது இல்ல. ஆனா, தமிழ்நாட்டுலயும் சரி வெளிநாடுகள்லயும் சரி நிறைய நிறுவனங்கள் உதவி செய்யத் தயாரா இருக்கு. நாங்க எங்களோட வாழ்வாதாரத்தை எடுத்துச் சொல்லி உதவி செய்யத் தயாரா இருக்கிறவங்களை எல்லாம் ஒருங்கிணைப்போம். அதுமூலமா வர்ற நிதியை எங்க கலையை வளர்க்குறதுக்கு உபயோகப்படுத்த முடியும். 

இப்போ நாட்டுப்புறக்கலைகள் ரொம்பவே ட்ரெண்டாகிட்டு இருக்கு. ஆனா, இன்னும் ஒரு வருஷத்துல இந்த நிலைமை மாறலாம். ஒரே மாதிரியான நிகழ்ச்சியைப் பார்த்து எல்லோருக்குமே சலிப்பு வந்துடும். அதனால, மறைந்துபோயிருக்கிற கலைகளை மீட்டுக் கொண்டு வரணும். 

தோல்பாவைக்கூத்து, வில்லுப்பாட்டு, கணியான்கூத்து மாதிரியான கலைகள்லாம் ராத்திரிதான் பண்ணுவாங்க. அவங்ககிட்ட பத்து நிமிஷம் கான்செப்ட் கொடுத்து பண்ணச் சொல்றது சாத்தியமில்லை. அதை எப்படிச் சீர்படுத்தி மக்கள்கிட்ட ஈஸியா கொண்டுபோய்ச் சேர்க்க முடியும்னு பார்க்கணும். 

களரி ஆட்டம், புலியாட்டம், சிலம்பாட்டம், வில்லுப்பாட்டு இதெல்லாம் கொஞ்சம் கொஞ்சமா நம்மகிட்ட இருந்து மறைஞ்சிக்கிட்டு வர்ற கலைகள். இந்தக் கலைஞர்களை எல்லாம் நேர்ல போய் பார்த்து அவங்க கலையையும் சூழலையும் பதிவு பண்ணணும். 

`அரிதாரம்' அமைப்போட தொடக்க விழாவை பிரமாண்டமா பண்ணணும். இதுவரை மக்களுக்கு அறிமுகமில்லாத ஒரு கலையையும் தொடர்ந்து மக்கள் பார்த்துக்கொண்டிருக்கும் ஒரு கலையைப் புதுவிதமாகவும் அங்கே நடத்த ஏற்பாடு செய்யணும்” என்றவர் இறுதியாக, 

``பாத்தீங்கள்ல, இவ்வளவு ஆசை எனக்குள்ள இருக்கு. இதையெல்லாம் எப்படிச் செய்யப்போறோம்னு நினைச்சு மலைப்பா இருக்கு. ஆனாலும், எனக்கு நம்பிக்கை இருக்குங்க. அலுவலகத் திறப்பு விழாவுக்கு வந்தவங்க அத்தனை பேர் முகத்துலயும் சந்தோஷம் நிறைஞ்சு இருந்துச்சு. ஒவ்வொருத்தரும் எங்களை மனசார வாழ்த்திட்டுப் போனாங்க. அந்த வாழ்த்து எங்களுக்கு பக்க பலமா நிக்கும்னு நான் நம்புறேன். அதுக்கு மேல என் கணவர் செந்தில்கணேஷ் மேல எனக்கு முழு நம்பிக்கை இருக்கு. நான் எதைச் சொன்னாலும் அவரு தட்டாம அதை ஏத்துப்பாரு. அரிதாரம் ஆரம்பிக்கிறதுக்கே மூணு லட்சம் செலவாகிடுச்சு. ஆனாலும், `இப்போ எதுக்குப் புள்ள இது. இதை வெச்சு நாம என்ன பண்ணப்போறோம். நாமளே இப்போதான் வளந்துட்டு வாரோம். இந்த நேரத்துல இதெல்லாம் தேவையா. கொஞ்ச நாள் கழிச்சு பாத்துக்கலாமே'ன்னு அவர் ஒரு வார்த்தைகூட சொல்லல. நான் என்ன கேட்டாலும் செஞ்சுக் கொடுத்திடுவாரு. அன்னிக்கு விழாவுல கூட என் அம்மாவை விட்டு வந்தவங்களுக்கு உதவித்தொகை கொடுக்க வெச்சேன். அப்போ என்னை விட அவருதான் ரொம்ப சந்தோஷப்பட்டாரு. அவரோட துணை இருக்கும்போது நான் எதுக்கு கவலைப்படணும். இப்போகூட நமக்கு அடுத்து ஒரு பெரிய பிளாட்பார்ம் கிடைச்சா இதையெல்லாம் நாமளே பண்ணலாம்னு சொல்லி என்னை ஊக்கப்படுத்துறாருங்க” என்கிறார் புன்னகை மாறாமல். 

தாங்கள் முன்னோக்கிச் செல்லும்போது சக கலைஞர்களையும் கை கோத்து அழைத்துச்செல்லும் ராஜலெட்சுமி செந்தில்கணேஷின் உயர்ந்த எண்ணம் ஈடேறட்டும். அனைவரின் ஆசியோடும் `அரிதாரம்' வண்ணமயமாகட்டும்.