Published:Updated:

மகாத்மாவின் நிழல் - கஸ்தூர்பா

மகாத்மாவின் நிழல் - கஸ்தூர்பா
பிரீமியம் ஸ்டோரி
மகாத்மாவின் நிழல் - கஸ்தூர்பா

எதிர்க்குரல்

மகாத்மாவின் நிழல் - கஸ்தூர்பா

எதிர்க்குரல்

Published:Updated:
மகாத்மாவின் நிழல் - கஸ்தூர்பா
பிரீமியம் ஸ்டோரி
மகாத்மாவின் நிழல் - கஸ்தூர்பா

ஸ்தூர்பாவுக்கு முன்பே ஒரு பெண்ணை அடையாளம் கண்டு, காந்தியோடு நிச்சயதார்த்தமும் செய்து முடித்துவிட்டார்கள். ஆனால், மணநாளுக்கு முன்பே அந்தப் பெண் இறந்துவிட்டார். இரண்டாவதாக நிச்சயதார்த்தம் செய்யப்பட்ட பெண்ணும் இறந்துவிட்டார். மூன்றாவதுதான் கஸ்தூர்பா. அப்போது கஸ்தூர்பாவின் வயது 14. காந்திக்கு அவரைவிட ஒரு வயது குறைவு. திருமணம் நடந்த ஆண்டு 1881 அல்லது 1882 அல்லது 1883 ஆக இருக்கலாம் என்கிறார்கள். திருமண ஆண்டு மட்டுமல்ல, திருமணம் நடந்ததேகூட காந்திக்கு முழுமையாக நினைவில் இல்லை. கனவுபோல பதிந்திருந்த சில காட்சிகளை மட்டும் `சத்தியசோதனை'யில் அவர் நினைகூர்ந்தார்... `நல்ல ஆடைகள் அணிந்துகொண்டேன். மேள ஓசை கேட்டுக்கொண்டே இருந்தது நினைவில் இருக்கிறது. பிறகு, விளையாடுவதற்கு வித்தியாசமான ஒரு பெண் கிடைத்தாள்!’

மகாத்மாவின் நிழல் - கஸ்தூர்பா

திருமணம் முடிந்ததும் கஸ்தூர்பாவை அழைத்துச் சென்று ராஜ்கோட்டில் காந்தியின் வீட்டில் அவரை விட்டுவிட்டு பெற்றோர் திரும்பிவிட்டனர். காந்தி, தன் மனைவியை வீட்டில் விட்டுவிட்டு பள்ளிக்கூடத்துக்குப் புறப்பட்டுச் சென்றுவிடுவார். பழக்கமில்லாத புதிய வீட்டில் கஸ்தூர்பா பொழுதை எப்படிக் கழித்தார்? காந்தியை அவருக்குப் பிடித்திருந்ததா? விளையாடுவதற்கு ஒரு பையன் கிடைத்துவிட்டான் என அவர் நினைத்திருப்பாரா? வீட்டில் உள்ள அந்நியர்களைக் கண்டு அவர் அஞ்சினாரா? அவர்கள் கட்டளைகளுக்குக் கீழ்படிந்து நடந்துகொண்டாரா? தன் வீட்டில் ஓடியாடி விளையாடியதைப்போல இங்கே செய்ய முடியாததைக் கண்டு கலங்கினாரா? தன் ஆதங்கத்தை யாரிடம் பகிர்ந்துகொண்டார்? எதற்குமே விடையில்லை. ஆனால், தன் மனைவியைக் குறித்து காந்தி என்ன நினைத்தார் என்பது நமக்குத் தெரியும். ``வகுப்பறையில்கூட நான் அவளையே நினைத்துக்கொண்டிருந்தேன். எப்போது வீடு திரும்புவேன், எப்போது அவளைச் சந்திப்பேன் என்றே தவித்துக்கொண்டிருப்பேன்...''

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மகாத்மாவின் நிழல் - கஸ்தூர்பாகாதலும் அன்பும் பெருகப் பெருக, கஸ்தூர் பாவைத் தன்னுடைய உடைமையாகவே கருத ஆரம்பித்துவிட்டார் காந்தி. ஒருமுறை கஸ்தூர்பா அக்கம்பக்கத்து தோழிகளுடன் இணைந்து அருகில் உள்ள கோயிலுக்குச் சென்றுவிட்டார். காந்தியால் அதை ஏற்க முடியவில்லை. ``வெளியில் போகவேண்டுமென்றால், என்னிடம் சொல்லவேண்டியதுதானே... நான் வர மாட்டேனா?''

காந்தி பிறப்பதற்கு 40 ஆண்டுகளுக்கு முன்பு பிறந்தவர் ஜோதிராவ் புலே. காந்தியைப்போலவே 13-வது வயதில் திருமணம் செய்துகொண்டவர். தன் மனைவி சாவித்திரி எழுதப் படிக்கத் தெரியாதவர் என்பதை உணர்ந்த புலே, உடனடியாக அவருடைய ஆசிரியராக மாறினார். கஸ்தூர்பா எழுத்தறிவு அற்றவர் என்பது காந்திக்குத் தெரியும். ``அவளுக்குக் கல்வி போதிக்க வேண்டும் என்று நான் நினைத்தது உண்மை. ஆனால், கண்மூடித்தனமான பித்து காரணமாக என்னால் அதைச் செய்ய இயலவில்லை'' என்று ஒப்புக்கொள்கிறார்.

ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு, காந்தி தன் மனைவியையும் குழந்தையையும் வீட்டில் விட்டுவிட்டு மேற்படிப்புக்கு லண்டன் சென்றார். படிப்பு முடிந்து லண்டனிலிருந்து காந்தி திரும்பி வரும்வரை கஸ்தூர்பா குறித்து நமக்கு எந்தத் தகவலும் இல்லை. அடையாளம் தெரியாத அளவுக்கு என்னுடைய பா (கஸ்தூர்பாவை அப்படித்தான் அழைத்தார் காந்தி) வளர்ந்துவிட்டாள் என்று அதிசயித்தார் காந்தி.

மகாத்மாவின் நிழல் - கஸ்தூர்பா

சில ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு வழக்கறிஞராக காந்தி தென்னாப்பிரிக்கா வுக்குச் சென்றபோது, தன் குடும்பத்தையும் உடன் அழைத்துச் சென்றார். நான்கு குழந்தைகளின் தாயாக இருந்த கஸ்தூர்பாவுக்கு, இது முதல் பெரும் திறப்பு. கூட்டை உடைத்துக்கொண்டு தன் வாழ்நாளின் மிகப்பெரும் பயணத்தை அவர் இந்த முறை மேற்கொண்டார். முதல் பெரும் அதிர்ச்சியையும் அங்கே அவர் சந்திக்க நேர்ந்தது. தென்னாப்பிரிக்காவில் குடியேறிருந்த இந்தியர்களை விரட்டியடிக்கும் வகையில் அநீதியான ஒரு சட்டத்தைக் கொண்டுவருவதற்கான முயற்சிகளை அந்நாட்டு அரசாங்கம் மேற்கொண்டுவருவதை அவர் அறிந்தார். அநீதியான அந்த மசோதாவை எதிர்த்து காந்தி தனது முதல் சத்தியாகிரகப் போராட்டத்தை ஆரம்பித்தார். அதற்கான அவசியத்தை காந்தி தென்னாப்பிரிக்க இந்தியர்களிடம் விளக்கியபோது கஸ்தூர்பாவும் உடன் இருந்தார். ``இப்போது நாம் போராடாவிட்டால் உங்கள் திருமணங்கள் செல்லாததாகிவிடும். உங்கள் மனைவிகளும் வாரிசுகளும் சட்டவிரோதிகளாகக் கருதப்படுவார்கள். இதை நாம் எதிர்க்கவேண்டாமா?''

``அப்படியானால் நானும் மற்ற பெண்களைப்போல நீங்கள் முன்னெடுக்கும் போராட்டத்தில் கலந்துகொள்ளட்டுமா?''

காந்தி இதை எதிர்பார்க்கவில்லை. வியப்புடன் தன் மனைவியைப் பார்த்தார். ``ஆனால் பா, இது எளிதான முடிவல்ல. உனக்கு உடல்நிலை வேறு சரியில்லை. போராட்டத்தில் கலந்துகொண்டால் சிறையில்கூட அடைக்கப்படலாம். யோசித்து முடிவெடு. என்ன நடந்தாலும் சரி என்னும் துணிவு இருந்தாலொழிய அரசியல் உனக்குச் சரி வராது.''

``அதெல்லாம் சரி வரும்'' என்றார் கஸ்தூர்பா. அரசை எதிர்த்துப் போராடுவதற்காக ஃபீனிக்ஸில் இருந்து டிரான்ஸ்வாலுக்குக் கிளம்பி சென்ற முதல் குழுவில் (12 ஆண்கள், 4 பெண்கள்) கஸ்தூர்பா இடம்பெற்றிருந்தார். இரண்டாவது குழுவில் தில்லையாடி வள்ளியம்மை இருந்தார். 1913-ம் ஆண்டு கஸ்தூர்பாவும் அவருடன் இணைந்திருந்த மற்ற இந்தியப் பெண்களும் கைது செய்யப்பட்டனர். மூன்று மாதக் கடுங்காவல் தண்டனை கிடைத்தது.

மகாத்மாவின் நிழல் - கஸ்தூர்பா

சிறை, கஸ்தூர்பாவைப் பிழிந் தெடுத்திருக்கிறது. கடுமையான விரதச்சடங்குகளைப் பின்பற்றிவந்த கஸ்தூர்பாவை, சிறை உணவு வதைத்தது. பெரும்பாலும் பட்டினி கிடந்திருக்கிறார். பாவம், அந்தப் பெண் சிறையிலிருந்து விடுதலை அடைந்தபோது கிட்டத்தட்ட எலும்புக்கூடாக மாறியிருந்தார்.

இந்தியாவுக்குத் திரும்பியபோது தனியோர் அரசியல் ஆளுமையாக கஸ்தூர்பா மாறியிருந்தார். அநீதி, நீதி, விடுதலை, அடிமைத்தனம், சுதந்திரம், சகோதரத்துவம், காலனியம் ஆகியவற்றின் மெய்பொருளை அவர் கற்க ஆரம்பித்திருந்தார். நூல்கள் அல்ல, அனுபவங்கள் வாயிலாக அவர் தன்னைச் சுற்றி நடப்பதைத் தெரிந்துகொள்ள ஆரம்பித்தார். தன் கணவரின் போராட்ட வேட்கை தன்னையும் பற்றிக்கொள்வதை அவர் உணர்ந்தார். காந்தியின் மனைவி என்பதைத் தாண்டி தனக்கென ஓர் அடையாளம் உருவாகிவருவதை அவர் அறிந்திருந்தாரா எனத் தெரியவில்லை. அல்லது இந்த அடையாளமேகூட காந்தியின் நிழலில் அண்டியிருந்ததால்தான் உருவானது என்று அவர் கருதினாரா?

காந்தி ஒரு பெருந்தலைவராக இங்கே அடையாளம் காணப்பட்டபோது கஸ்தூர்பா இன்னொரு பயணத்துக்குத் தயாராகிக்கொண்டிருந்தார். இந்த முறை அவர் உள்ளுக்குள் ஒடுங்க ஆரம்பித்திருந்தார். இந்தியாவின் கண்களும் உலகின் கண்களும் முழுக்க முழுக்க காந்தியின் மீதே குவிமையம்கொண்டிருந்த நிலையில் கஸ்தூர்பா ஓர் உதிரி கதாபாத்திரமாக மட்டுமே வலம்வருகிறார்.

ஒருவகையில் தொடக்கத்திலிருந்தே அவர் அப்படித்தான் இருந்திருக்கிறார் எனத் தோன்றுகிறது. ஆயிரக்கணக்கான பக்கங்களை எழுதிக்குவித்த தன் கணவரைப்போலன்றி, கஸ்தூர்பா தனது குரலை இதுவரை நேரடியாகப் பதிவு செய்ததில்லை. காந்தியின் அரசியல் வாழ்க்கை ஒருநாள் பாக்கியில்லாமல் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அவர் என்ன உண்டார், எப்படி வழிபட்டார், எப்படிச் சிந்தித்தார், எப்படி உண்ணாவிரதமிருந்தார், எப்படி ஒரு போராட்டத்தைத் திட்டமிட்டார், எப்படி அழுதார், எப்படிச் சிரித்தார் அனைத்தும் நமக்குத் தெரியும். கஸ்தூர்பா குறித்து மிகவும் அடிப்படையான கேள்விகளுக்குக்கூட உறுதியான விடை கிடைப்பதில்லை. சத்தியத்தின் மீது அசைக்க முடியாத நம்பிக்கைகொண்டவர்தான் என்றாலும் காந்திமூலம் மட்டுமே கிடைக்கும் கஸ்தூர்பாவின் மிகவும் மெலிந்த சித்திரம் நிச்சயம் போதுமானதாக இல்லை.

``நான் அன்புமிக்கக் கணவனாக இருந்தேன். அதேநேரம் ஒரு மிருகமாகவும் இருந்திருக்கிறேன்'' என்கிறார் காந்தி. ``  `சீற்றமிக்கப் புலியையும் சாதுவான பசுவையும் ஒன்று கலந்ததுபோல நீ இருக்கிறாய்' என்று என் நண்பர் ஒருமுறை குறிப்பிட்டார். அது சரிதான்'' என்று ஒரு கடிதத்தில் குறிப்பிடுகிறார் காந்தி. அப்படியென்றால் என்ன? கஸ்தூர்பா தெளிவாகச் சிந்திக்கக்கூடியவராக இருந்தார். தீர்க்கமான, திடமான முடிவுகளை சுயமாக எடுப்பவராக இருந்தார்.

``திருமணத்துக்குப் பிறகு கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் என் மனைவியை என்னுடைய முழுமையான கட்டுப் பாட்டின்கீழ் கொண்டுவர முயன்று தோற்றிருக்கிறேன்'' என்கிறார் காந்தி. கஸ்தூர்பா எதிர்க்குரல் எழுப்புபவராக இருந்தார் என்றும் குறிப்பிடுகிறார் காந்தி. இரண்டு உதாரணங்கள். ``என் ஆசிரமத்தில் உள்ள மற்றவர்களைப்போலதான் நீயும். அவர்களைப்போல நீயும் மற்றவர்களுடைய கழிவறையைச் சுத்தம்செய்துதான் தீர வேண்டும்'' என்று காந்தி கண்டிப்போடு சொன்னபோது, மறுத்து வாதிட்டிருக்கிறார் கஸ்தூர்பா. மற்றொரு நேரம், விடுதலைப் போராட்டத்துக்கு நிதி திரட்டியபோது தனக்கென்று ஓர் ஆபரணத்தை கஸ்தூர்பா எடுத்து வைத்தபோது காந்தி கோபமடைந்திருக்கிறார். ``என் பேச்சைக் கேட்டு எனக்காகக் கொடுத்த பரிசுப்பொருள் அது'' என்று அவர் சொன்னபோது கஸ்தூர்பா வெடித்திருக்கிறார். ``நானும்தான் பேசினேன். நானும்தான் போராடினேன். எனக்காகவும்தான் மக்கள் நிதி அளித்தார்கள். அதை ஏன் உங்களால் புரிந்துகொள்ள முடியவில்லை?''

காந்தியால் மட்டுமல்ல... அரசியல் ஆய்வாளர்களாலும் வரலாற்று ஆசிரியர்களாலும்கூட கஸ்தூர்பாவின் வாழ்வை இன்று வரை கட்டமைக்க முடியவில்லை. காந்தியை கஸ்தூர்பாவின் கண்களின் வழியே காணும்போது, நாம் ஒரு மகாத்மாவைத் தரிசிப்போமோ? தெரியாது. `இனி நான் பிரம்மச்சரியத்தைக் கடைப்பிடிக்கப்போகிறேன்' என்று திடீரென்று ஒருநாள் காந்தி முடிவெடுத்த போது, கஸ்தூர்பா விவாதித்தாரா? அந்த முடிவுக்கு உடன்படுவது மட்டுமே அவர் முன்பிருந்த ஒரே வாய்ப்பா? தெரியாது. காந்தியின் சத்தியசோதனைகளை அவர் எப்படிப் பார்த்தார்? குறிப்பாக பிரம்மச்சரியப் பரிசோதனைகளை? உதாரணத்துக்கு, `மெடலைன் ஸ்லைட்' என்னும் மீராபென் தன்னுடைய இடத்தைப் பிடித்துக்
கொண்டபோது அவர் எப்படி உணர்ந்தார்? லண்டனில் நடைபெற்ற வட்டமேஜை மாநாட்டில் தன் கணவர் தன்னை விட்டுவிட்டு மீராபென்னை அழைத்துச் சென்றபோது கஸ்தூர்பா பற்றற்ற நிலையில் இருந்தாரா? தெரியாது.

``எனக்குத் தெரிந்து கஸ்தூர்பா தொடக்கத்தில் மிகவும் பிடிவாதக்காரியாக இருந்தாள்'' என்கிறார் காந்தி. ``அவளை வழிக்குக் கொண்டுவர நான் நிறைய போராடவேண்டியிருந்தது. எவ்வளவு வற்புறுத்தினாலும் என் கருத்தை ஏற்க மாட்டாள். ஒரு முடிவெடுத்துவிட்டால், அதை அவ்வளவு சுலபமாக மாற்றிக் கொள்ள மாட்டாள். எனக்கும் பாவுக்கும் அவ்வப்போது கருத்து மோதல்கள் ஏற்படுவதுண்டு. அடிக்கடி என்னோடு முரண்படுவாள். சிலநேரம் நீண்ட காலத்துக்கு நாங்கள் எதுவுமே பேசிக்கொள்ளாமல் ஒதுங்கியிருப்போம். பிறகு எல்லாம் மாறிப்போனது. என்னை அவள் முழுக்கப் புரிந்துகொண்டாள். தன்னை முழுமையாக என்னிடம் ஒப்படைத்துவிட்டாள்'' என்று முடிக்கிறார் காந்தி. ``அவளாகவே விருப்பப்பட்டு வந்தடைந்த முடிவு இது. என் பணிகளைப் பார்த்து, என் லட்சியங்களைப் பார்த்து அவள் தன் இயல்புகளை மாற்றிக்கொண்டாள் என நினைக்கிறேன்!''

`வெள்ளையனே வெளியேறு' இயக்கத்தின்போது காந்தியோடு சேர்த்து கஸ்தூர்பாவும் கைது செய்யப்பட்டு ஆகா கான் மாளிகையில் சிறைவைக்கப்பட்டார். உடல்நிலை சீர்கெடத் தொடங்கி 1944 பிப்ரவரி 22 அன்று கஸ்தூர்பா இறந்துபோனார். காந்தியுடனான 62 ஆண்டுக்கால வாழ்க்கை முடிவுக்கு வந்தது. அப்போது வெளிவந்த புகைப்படத்தில் முற்றிலும் உடைந்துபோனவராகத் தன் முதுகைக் காட்டியடி காந்தி அமர்ந்திருப்பதைக் காண முடிகிறது.

காந்தியின் வாழ்க்கை அசாதாரண மானது. ஒருவேளை கஸ்தூர்பாவின் குரலை நம்மால் கேட்க முடியுமானால், அவரும்கூட அசாதாரணமானவராகவே நமக்குக் காட்சியளிப்பார்!

மருதன்

மகாத்மாவின் நிழல் - கஸ்தூர்பா

சமையல் டிப்ஸ்...

வெ
ண் பொங்கல் மீந்துவிட்டால் அதிலுள்ள மிளகை நீக்கவும். இத்துடன் கோதுமை மாவைச் சேர்த்து பிசறவும். விரும்பினால் சிறிது கரம் மசாலாத்தூள் சேர்த்துக்கொள்ளலாம். இனி வாழையிலையில் எண்ணெய் தடவி, மாவை வைத்து கைகளால் தட்டி, தோசைக்கல்லில் போட்டு சுற்றிலும் எண்ணெய்விட்டு சுட்டெடுக்கவும். புது வகையான தோசை ரெடி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism