Published:Updated:

‘காந்தியின் 100 சித்திரங்கள்’ - வரலாற்று அசைவுகள்

‘காந்தியின் 100 சித்திரங்கள்’ - வரலாற்று அசைவுகள்
பிரீமியம் ஸ்டோரி
News
‘காந்தியின் 100 சித்திரங்கள்’ - வரலாற்று அசைவுகள்

அபராஜிதன்

ன் அப்பா ஆதிமூலத்தின் ஓவிய வாழ்க்கையில், ‘காந்தியின் 100 ஓவியங்கள்’ மிக முக்கியமானவை. அவரது போக்கை ஓரடி முன்நகர்த்தியவை என்றும் சொல்லலாம். ஓவியக் கல்லூரிப் படிப்பை முடித்து மூன்று ஆண்டுகள் முடிந்த நிலையில், நடந்த கண்காட்சி அது. காந்தியின் நூற்றாண்டை ஒட்டி நடத்தப்பட்டது. இந்திய அளவில் அப்பாவுக்கு முக்கியத்துவத்தை உருவாக்கின அந்த ஓவியங்கள்.

‘காந்தியின் 100 சித்திரங்கள்’ - வரலாற்று அசைவுகள்

அப்பா, இயல்பில் காந்தியைப் பின்பற்றுபவர் கிடையாது. கொள்கை ரீதியாக அவர் வேறொரு தளத்தில் இயங்குபவர். திராவிட இயக்கங்கள் சார்ந்தது அவரது அரசியல். ஆனால், கூட்டாட்சித் தத்துவத்தில் அவர் உடன்படுவார். மாநிலங்களின் தனித்தன்மை பாதிக்காத ஒருங்கிணைந்த இந்தியாவை அவர் ஏற்றுக்கொள்வார். காந்தியின்மீது மிகுந்த மரியாதை உண்டு அப்பாவுக்கு. எளிய மக்களின் பிரதிநிதியாகக் கொள்ளத்தக்க அவருடைய செயல்பாடுகளில் எப்போதும் அப்பாவுக்கு மதிப்பு இருந்தது. அதனால்தான் காந்தியின் 100 சித்திரங்களை அவர் வரைந்தார். இந்தியாவில், காந்தி குறித்த முதன்மையான எளிய கோட்டோவியத் தொகுப்பாக அது மாறியது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
‘காந்தியின் 100 சித்திரங்கள்’ - வரலாற்று அசைவுகள்

அப்பா, 1960-ல் ஓவியக் கல்லூரியில் இணைந்தார். அவருக்குக் கல்லூரியை அறிமுகப்படுத்தியது தனபால் வாத்தியார். சினிமாவில் வரைய வேண்டும் என்ற ஆர்வத்தில்தான் அப்பா சென்னைக்கு வந்தார். ‘சினிமா உலகம்’ பத்திரிகை நடத்திய பி.எஸ்.செட்டியார்தான் அவரை தனபால் வாத்தியாருக்கு அறிமுகம் செய்துவைத்தார். அப்பாவின் ஆர்வத்தைக் கண்ட தனபால் வாத்தியார், ஓவியக் கல்லூரியைப் பற்றிச் சொல்லிச் சேரவைத்தார். தனபால் வாத்தியார் பற்றி நிறைய சொல்லலாம். பெரியார், அண்ணா உள்ளிட்டவர்களை நேரடியாக அமரச்செய்து சிலை வடித்தவர்; பாரதிதாசனோடு நெருக்கமாக இருந்தவர். தலைமறைவு வாழ்க்கையின்போது, தோழர் ஜீவாவுக்குத் தன் வீட்டில் அடைக்கலம் கொடுத்தவர். இந்திய சித்திர மரபில் தனபால் வாத்தியார் ஏற்படுத்திய தாக்கம் முக்கியமானது. பல படைப்பாளிகளை அடையாளம்கண்டு உற்சாகப்படுத்தி வெளிச்சத்துக்குக் கொண்டுவந்திருக்கிறார். தவிர, தமிழகத்தின் ஆகப்பெரிய ஆளுமைகள் பலருடனும் பணியாற்றியிருக்கிறார். வரலாற்று ரீதியாகவும் அவரது பங்களிப்பு இருந்திருக்கிறது. அப்பாவுக்கு தனபால் வாத்தியார்தான் ஆசான்; முன்னோடி.

1966-ல் அப்பா ஓவியப் படிப்பை நிறைவுசெய்தார். தீவிரமாகவும் துடிப்பாகவும் ஓவியத்தைக் கையாண்ட காலக்கட்டம் அது.  இந்திய கலைத் தத்துவ மரபென்பது, கைவினைக் கலையும் நுண்கலையும் இணைந்தே இயங்குவது. சென்னை ஓவியக் கல்லூரி அப்படித்தான் அக்காலத்தில் பயிற்றுவித்தது. அதன் பெயரே அப்போது ‘ஆர்ட்ஸ் அண்டு கிராஃப்ட்ஸ் காலேஜ்’தான். மேற்கு வங்கத்தில் உள்ள ‘சாந்தி நிகேத’னும் அப்படியான தத்துவ மரபைத்தான் வளர்த்தெடுத்தது. இன்று கைவினைக் கலையையும் நுண்கலையையும் தனித்தனியாகப் பிரித்துப் பார்க்கும் நிலை அதிகமாகிவிட்டது. இரண்டும் இருவேறு தளங்களில் இன்று இயங்குகின்றன. அன்று அப்படியில்லை.

பணிக்கர், சென்னை ஓவியக் கல்லூரியில் முதல்வராக இருந்து ஓய்வுபெற்ற பிறகு, அவரும் தனபால் வாத்தியாரும் கைவினை, நுண்கலை இரண்டையும் உள்ளடக்கி ஒரு அமைப்பை உருவாக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டார்கள். அந்தக் காலக்கட்டத்தில் அப்படியான ஓர் அமைப்பு அவசியமாக இருந்தது. அப்பா, பாஸ்கரன், தெட்சிணாமூர்த்தி, கிருஷ்ணமூர்த்தி, கன்னியப்பன் போன்றவர்கள் அவர்களுக்குப் பின்னணியில் இருந்தார்கள். அப்படி உருவாக்கப்பட்டதுதான் சோழமண்டலம் கலைகிராமம்.

‘காந்தியின் 100 சித்திரங்கள்’ - வரலாற்று அசைவுகள்

தொடக்கத்தில் சோழமண்டலத்தின் செயல்பாடுகள் சிறப்பாகவே நடந்தன. ஆனால், ஓராண்டுக்குள்ளாகவே மொழி அரசியலில் சிக்கிக்கொண்டது அந்த அமைப்பு. தமிழகப் படைப்பாளிகளால் தாக்குப்பிடிக்க முடியவில்லை. 68-களில் தனபால் வாத்தியார், அப்பா உள்பட எல்லோரும் சோழமண்டலத்திலிருந்து வெளியே வந்துவிட்டார்கள்.

ஆயினும், தாங்கள் ஒருங்கிணைந்து தடையில்லாமல் இயங்க, வலுவான ஓர் அமைப்பைக் கட்டவேண்டும் என்பதில் எல்லோருமே தீவிரமாக இருந்தார்கள். தனபால் வாத்தியார் தலைமையில் ‘சௌத் இண்டியன் சொசைட்டி ஆஃப் பெயின்டர்ஸ்’ என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது. அந்த அமைப்பின் தொடக்கமாக ஒரு பெருநிகழ்வை நடத்தத் திட்டமிட்டார்கள். அந்தத் தருணத்தில் காந்தியின் நூற்றாண்டு கொண்டாடப்பட்டு வந்தது. அதையொட்டி ஏதேனும் செய்யலாமே என்று யோசித்துதான் இப்படியொருத் திட்டம் உருவாக்கப்பட்டது.

அமைப்பில் இருக்கிற பலரும் காந்தியின் அரசியலோடு முரண்படுகிறவர்கள். ஆனால், இந்தியா என்ற ஒருமித்த தேசத்தைக் கட்டமைத்தவர் என்ற நோக்கில் எல்லோரும் ஒரு புள்ளியில் நின்றார்கள். எல்லோரும் காந்தியை வரைவது. அனைத்துச் சித்திரங்களையும் ஒருங்கிணைத்து அதுவரை இல்லாத அளவுக்கு ஒரு பிரமாண்டமான கண்காட்சியை நடத்துவது. இதுதான் அப்போது உருவாக்கப்பட்ட திட்டம். ஆனால், யாரும் அதை முன்னெடுத்துச் செல்லவில்லை. அப்பா மட்டும் அதைத் தீவிரமாக எடுத்துக்கொண்டார்.

இடைவிடாது வரைய ஆரம்பித்தார். வேறு யாரும் வரையாததால் அப்பாவே நூறு ஓவியங்கள் வரைந்தார். ‘ஹண்ட்ரட் இயர்ஸ் காந்தி: ஹண்ட்ரட் டிராயிங்ஸ்’ என்ற பெயரில் எல்லோரும் சேர்ந்து அப்பாவின் ஓவியக் கண்காட்சியை நடத்தினார்கள். ‘சௌத் இண்டியன் சொசைட்டி ஆஃப் பெயின்டர்ஸ்’ அமைப்புதான் கண்காட்சியை ஒருங்கிணைத்தது. அழைப்பிதழ் டிசைன் செய்தது, ஆர்.பி.பாஸ்கரன். தனபால் வாத்தியாரும் கிருஷ்ணா ராவும் அழைப்பிதழில் எழுதினார்கள். கூட்டுமுயற்சியாக அந்தக் கண்காட்சி இருந்தது. அப்பாவுக்கு அது நல்லதொரு அடையாளமாக அமைந்தது.

‘காந்தியின் 100 சித்திரங்கள்’ - வரலாற்று அசைவுகள்

காந்தியின் புகைப்படங்கள் நிறைய உண்டு. சிற்பங்களைப் பொறுத்தவரை, பெரிய அளவிலான நினைவுச் சின்னங்களாகத்தான் உருவாக்கப் பட்டிருக்கின்றன. ராய் சௌத்ரி அப்படி நிறைய செய்திருக்கிறார். நம் மெரினா கடற்கரையில் இருக்கும் காந்தியின் சிலை, அப்படியானதுதான். ‘தேசத்தைக் கட்டமைத்தவர், தேசியத் தலைவர்’ என்பதால், 40-50-களில் பிரமாண்டமாக அவரைக் காட்டும் போக்குதான் படைப்புகளில் இருந்தன. ஷங்கு சௌத்ரியும் அப்படித்தான் செய்திருக்கிறார். எல்லாவற்றிலும் ஒரு மேற்கத்தியத்தன்மை இருக்கும்.

1930-ல் சாந்தி நிகேதனைச் சேர்ந்த நந்தலால் போஸ், முதன்முறையாக காந்தியை நவீன ஓவிய உத்தியில் வரைந்தார். தண்டி யாத்திரையின் ஒரு காட்சி. முதன்முதலில், மேலைத்தன்மை இல்லாமல் இந்திய மரபு சார்ந்த அழகியலோடு வரையப்பட்ட காந்தியின் நவீன ஓவியம் அதுதான். அதன்பிறகு, அப்பாவின் இந்த 100 சித்திரங்கள்தான்.

அப்பா, காந்தியைப் பார்த்த பார்வையைச் சித்திரங்கள் வழி நம்மாலும் பார்க்கமுடியும். ராய் சௌத்ரியைப்போல தேசத்தின் தந்தையாக, தேசத்தை நிர்மாணித்த ஓர் ஆளுமையாக அவர் காந்தியைப் பார்க்கவில்லை. ஒரு இந்தியக் குடும்பத்துத் தாத்தாவாகவே பார்த்தார். காந்தியையே ஓர் ஓவியமாகப் பார்த்தார். அந்தப் பார்வைதான் அவரை இடைவிடாது வரையத் தூண்டியது. காந்தியின் உடம்பிலும் இயக்கத்திலும் அழகான ஓர் ஓவியம் உண்டு. அதுதான் அப்பாவின் கண்பார்வை.

எளிமைதான் காந்தியின் அடையாளம் என்பதால், வரையும் நுட்பத்தையும் எளிமையாகவே கையாண்டார். எந்த எச்சரிக்கையுணர்வும் இல்லாமல் மிக இயல்பாக, கோட்டின் போக்கிலேயே வரைந்தார். அதுதான் அந்தச் சித்திரங்களுக்குத் தனித்த அடையாளமாக அமைந்தது. எல்லா ஓவியங்களுமே ஓர் அசைவுத்தன்மையோடு இருக்கும். ஆழ்ந்த தனிமையும் உறுத்தாத சின்னதொரு புன்னகையும் எல்லா காந்தியிலும் ஒட்டியிருக்கும். 

அந்த 100 சித்திரங்களுக்குப் பிறகு, பின்னெப்போதும் காந்தியின் ஓவியங்களை அவர் தொகுப்பாக வரையவில்லை.

ஆர்.வி.ரமணி எடுத்த ‘லைன்ஸ் ஆஃப் மகாத்மா’ ஆவணப்படத்துக்காக, கேமரா முன்னால் காந்தியின் படமொன்றை வரைந்தார். இதழ்களுக்காக அவ்வப்போது சில படங்களை வரைந்ததாக ஞாபகம். அந்தக் காலக்கட்டத்துக்குப் பிறகு, அப்பாவின் தீவிரத்தன்மை வேறு தளத்துக்குப் போய்விட்டது. தமிழ் பண்பாட்டுக்கூறுகள்மீதும் வாழ்க்கைமுறை மீதுமிருந்து அவர் தன் சித்திரங்களுக்கான கோடுகளை எடுத்துக்கொண்டார்.

காந்தியின் 100 ஓவியங்களையும் வரைய அவர் எடுத்துக்கொண்டது, அதிகப்பட்சம் 6 மாதங்கள்தான். அந்த அளவுக்குத் தீவிரமாக வரையக்கூடியவர் அப்பா. கல்லூரிக் காலத்திலேயே அவர் அப்படித்தான். ‘ஆதி, கல்லூரிக்கு வந்தால் ஐந்து ஓவியங்களாவது வரையாமல் போகமாட்டான்’ என்று பாஸ்கரன் சொல்வார். இடைவிடாது இயங்கும் திறன் அப்பாவுக்கு இயல்பாகவே இருந்தது.

‘காந்தியின் 100 சித்திரங்கள்’ - வரலாற்று அசைவுகள்

அப்பா, ஓவியக் கல்லூரியில் கற்றதெல்லாம் மேற்கத்திய ஓவிய தத்துவ மரபுகள். பாடத்திட்டங்கள் அப்படியானதாகவே இருந்தன. அங்கிருந்துதான் அவர் உதிக்கிறார். தத்ரூப ஓவியங்களில் தொடங்கி, பிறகு அதிலிருந்து விடுபட்டு, தனித்துவமான மரபார்ந்த ஒரு புதிய நுட்பத்துக்குள் நுழைந்தார். நவீன ஓவியத்திலேயே உணர்வுப்பூர்வமான சித்திரங்கள் அவருக்குக் கைவந்தன. அதன் தொடர்ச்சிதான் காந்தியின் ஓவியங்கள்.

‘இந்திய ஓவிய மரபே கோடுகளில்தான் இருக்கிறது’ என்பார் பணிக்கர். அதனால்தான், அவர் பணியாற்றிய சென்னை ஓவியக் கல்லூரியை ‘லீனியர் ஸ்கூல்’ என்பார்கள். சென்னையில் பயின்றவர்களின் ஓவியங்கள், கோடுகளை அடிப்படையாகக் கொண்டவையாக இருக்கும்.

இங்குள்ளவர்கள் வண்ணத்தை முதன்மைப்படுத்தவே மாட்டார்கள். கோடு மட்டுமே உயிர்ப்பானது. அப்பா, அதை மிகச் சரியாகக் கையாண்டார். காந்தி ஓவியங்கள் அவரது கோடுகளுக்காகவே கொண்டாடப்பட்டன. காந்தி ஓவியங்களுக்குப் பிறகு, அப்பாவின் பாணியே மாறிவிடுகிறது. 1973-74-களில் அவர் ஓவியங்களில் அரூபத்தன்மை மேலோங்குகிறது. 40 வயதுக்குப் பிறகுதான் வண்ணங்களைக் கையாளத் தொடங்கினார். அதுவரை அவரது ஓவியமொழி என்பது, கோடுகளாகவே இருந்துவந்தது. காந்தி குறித்த அப்பாவின் 100 சித்திரங்கள், காந்தியின் பல ஆயிரம் பக்க வாழ்க்கை வரலாற்றை அசைவுகளாக நகர்த்திக் காண்பிக்கிறது என்றே எனக்கு அவ்வப்போது தோன்றும்!

எழுத்தாக்கம்: வெ.நீலகண்டன்