Published:Updated:

ந.முத்துசாமி - தொடர்ச்சியான உயிரியக்கத்தின் குறியீடு

ந.முத்துசாமி - தொடர்ச்சியான உயிரியக்கத்தின் குறியீடு
பிரீமியம் ஸ்டோரி
News
ந.முத்துசாமி - தொடர்ச்சியான உயிரியக்கத்தின் குறியீடு

அஞ்சலிவெளி ரங்கராஜன், படங்கள் : கே.ராஜசேகரன்

1973-ல் வேலை நிமித்தமாக நான் சென்னை வந்தபோது, முதலில் சந்தித்தது முத்துசாமியைத்தான். அப்போது, அவர் வாலாஜா சாலையில் ஒரு வீட்டின் மாடியில் குடியிருந்துகொண்டு, ஒரு கம்பெனியில் வேலைபார்த்துக்கொண்டிருந்தார். நான் திருவல்லிக்கேணியில் ஒரு அறையில் தங்கியிருந்தேன். ‘பிரக்ஞை’ பத்திரிகையில் சென்னை பல்கலைக்கழக அரங்கத்தில் அவர் பார்த்த, பொம்மலாட்ட நிகழ்ச்சி பற்றி ஒரு கட்டுரை எழுதியிருந்தார். முத்துசாமியின் விவரிப்பில், அந்த நிகழ்வு ஓர் அரங்கத்துக்கான எல்லாப்  பரிமாணங்களும்கொண்டு ஒரு முடிவற்ற வெளியில் பல்வேறு மன அதிர்வுகளை சுண்டியிழுப்பதுபோல் உருவங்கள் நடனமாடிக்கொண்டிருந்தன. நடன அசைவுகளை ஓர் அரங்கமாக பாவித்து, விரிவாக்கிக்கொண்டுபோகிற ஒரு மனம் அதில் வெளிப்பட்டது. நேரில் சந்தித்தபோது, அந்த நிகழ்ச்சி பற்றி விரிவாகப் பேசினார். மற்றொரு சந்தர்ப்பத்தில் கலைவாணர் அரங்கத்தில் நடந்த நடேசத் தம்பிரான் கூத்து பற்றி பேசினார். அவர் ஏற்கெனவே கூத்தின் அழகியல் பற்றியும் கூத்துதான் தமிழர்களின் அரங்கு என்பது பற்றியும் நிறைய கட்டுரைகள் எழுதியிருந்தார். அவை பற்றி எனக்கு எந்த உறுதியான கருத்தும் இல்லை. நான் நவீன இலக்கியம் சார்ந்த கருத்துகளை நாடகத்தில் புகுத்திப் பார்க்க வேண்டும் என்கிற மனநிலை கொண்டவனாக இருந்தேன். அப்போது சென்னையில் உள்ள பிரெஞ்சுக் கலாசார மையம், ஜெர்மன் கலாசார மையம், பிரிட்டிஷ் கவுன்சில் ஆகியவற்றில் புதிய நாடக நிகழ்வுகள், கலை சினிமா திரையிடல்கள்போதெல்லாம் நாங்கள் அடிக்கடி சந்திக்கும் வாய்ப்புகள் ஏற்பட்டன. அப்போது பிரெஞ்சுக் கலாசார மையத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நடேசத் தம்பிரான் தெருக்கூத்து நிகழ்வு, மிகப்பெரிய மன அதிர்வுகளை உருவாக்கியது. அதன் தொடர்ச்சியாகத்தான் முத்துசாமி மற்றும் ‘பிரக்ஞை’ நண்பர்கள் வீராச்சாமி, ரவிஷங்கர், பாரவி எல்லோரும் இணைந்து கூத்துப்பட்டறை அமைப்பை உருவாக்கினார்கள்.

பலவிதமான அரங்க பாணிகளை விவாதிக்கும் ஓர் அமைப்பாகத்தான் கூத்துப்பட்டறை முதலில் உருவாக்கப்பட்டது. நான் அனைத்து செயல்பாடுகளிலும் ஓர் ஆர்வமுள்ள பார்வையாளனாகப் பங்கேற்றேன். அந்தக் காலகட்ட கூத்துப்பட்டறையின் நிகழ்வுகளெல்லாம் நாடகம் குறித்த ஒரு புத்துணர்வை உருவாக்குவதாக இருந்தன.

ந.முத்துசாமி - தொடர்ச்சியான உயிரியக்கத்தின் குறியீடு

அந்த மனஎழுச்சியின் தொடர்ச்சியாகவே, நான் 1990-ல் முற்றிலும் நாடகத்துக்காகவென்றே ‘வெளி’ இதழ் தொடங்கியபோது, முத்துசாமி அதற்குச் சிறப்பான பங்களிப்புகள் செய்தார். ‘வெளி’யின் முதல் இதழ், ந.முத்துசாமியின் விரிவான பேட்டியுடனேயே தொடங்கியது. அவர் ஒருமுறை, ராமாயணத்தின் போர்க்காட்சியை மையமாகவைத்து ‘தலை’ என்ற நாடகத்தை உருவாக்க நினைத்தபோது, அது எப்படி ஓர் எழுச்சியூட்டும் மனநிலையாக இருந்தது என்பதை விவரித்து ஒரு கட்டுரை அனுப்பினார்.அவருடைய நாடக எழுத்து சார்ந்தும் நாடக படைப்புகள் சார்ந்தும் தொடர்த்து என்னுடன் உரையாடல்களை மேற்கொண்டார்.அன்பாலும் நன்மதிப்பாலும் சூழப்பட்ட ஒரு உறவாக அது இருந்தது. அவர் நோய்வாய்ப்பட்டு முடங்கியபோது, அவருடைய `காலம் காலமாக’ நாடகத்தின் 50-வது ஆண்டைக் கொண்டாடும்விதமாக, நானும் நாடகக் கலைஞர் பகுர்தீனும் இணைந்து கூத்துப்பட்டறையில் அதைக் கடந்த செப்டம்பர் 3-ல் நிகழ்த்தியபோது, முத்துசாமி மிகுந்த மனமகிழ்வை வெளிப்படுத்தினார்.   
 
ந.முத்துசாமி, தஞ்சை மாவட்டத்திலுள்ள புஞ்சை கிராமத்தில் ஒரு பிராமணக் குடும்பத்தில் பிறந்தவர். பிராமணக் குடும்பத்தில் பிறந்தவர் என்றாலும், அவருடைய எழுத்தும் வாழ்க்கையும் ஒரு பிராமணியக் கட்டுமானத்திலிருந்து முற்றிலும் வேறுபட்டது. அது புதுமையையும் கலகத்தையும் உயிரோட்டத்தையும் தொடர்ந்து நாடிக்கொண்டிருக்கும் ஒரு மனப்போக்கு. அப்போதைய கிராமங்கள், பல தரப்பினரும் சாதிப்பிரிவுகளை இயல்பாக எடுத்துக்கொண்டு, தங்கள் வாழ்க்கைப்பாட்டுக்காகக் கலந்து உறவாடக்கூடிய தன்மைகொண்டதாகவே இருந்தன. விவசாய நிலங்களும் ஆறுகளும் குளங்களும் தெருக்களும் சந்துகளும் எல்லோரும் தங்கள் தேவைக்கேற்றபடி புழங்கும் விதமாகவே இருந்திருக்கின்றன. முக்கியமாகச் சிறுவர்களுக்கு விளையாட்டுகளும் வேடிக்கைகளும் அடிஉதைகளும் கதை கேட்டல்களும் பாலியல் வசீகரங்களும் நிறைந்த உலகம் அது. பிறந்ததிலிருந்து, வேலைக்காக சென்னை வரும்வரை, இத்தகைய சூழலில் தம் இளம்பிராயத்தைக் கழித்த முத்துசாமிக்கு, இந்த மனிதர்களும் சூழலும் விநோதமான உறவுநிலைகளும் காதலித்த பெண்ணும் (பின் மனைவியானவர்) பின்னாள்களில் அவர் படைப்பாளியாக உருமாறியபோது, அவருடைய புனைவுகளுக்கான பெரும் களமாகின்றனர்.

1972-ல் வெளிவந்த ‘நீர்மை’ சிறுகதையும், 2006-ல் வெளிவந்த ‘தொறச்சி’ சிறுகதையும் இச்சூழலின் உறவுநிலைகள் குறித்த உயிரோட்டமான சித்திரங்கள். ஒலிகளும் அசைவுகளும் உருவாக்கும் எண்ணற்ற மனச்சலனங்கள் அவருடைய படைப்புவெளியை நிறைத்தபடி உள்ளன. அதற்கான ஒரு புனைவுமொழி, அவருடைய இலக்கியத் தொடர்புகளால் சாத்தியப்படுகிறது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
ந.முத்துசாமி - தொடர்ச்சியான உயிரியக்கத்தின் குறியீடு

‘எழுத்து’ பத்திரிகையும் அதில் களம்கொண்ட புதுக்கவிதைச் சொல்லாடல்களும் முத்துசாமியின் படைப்புப் பயணத்தில் பெரும் உத்வேகமாக அமைகின்றன. அவருடைய கவிதை ஈடுபாடு, இலக்கிய விமர்சனம், நுண்கலைகள் எனப் பல்வேறு தளங்களில் விரிவுகொண்ட நிலையில், சி.மணியுடன் இணைந்து ‘நடை’ பத்திரிகை துவக்குகிறார். நடை பத்திரிகை கவிதை, சிறுகதை, இலக்கிய விமர்சனம், ஓவியம் எனப் பல்வேறு புத்தாக்கங்களின் களமாக அமைகிறது. 1968-ல் அவருடைய முதல் நாடகப் படைப்பான `காலம் காலமாக’ வெளியாகிறது. அது பிராண்டெலோ, அயனெஸ்கோ போன்றோருடைய அபத்தபாணி நாடகத்தின் சாயல்கொண்டிருந்தது.ஆனால், முத்துசாமி அதுவரை அவர்களைப் படித்திருக்கவில்லை. அதேபோல், பின்நவீனத்துவம் அறிமுகமாகும் முன்பே அவருடைய படைப்புமொழி ஒரு nonlinear தன்மைகொண்டிருந்தது. இலக்கியக் கட்டுமானம் குறித்து அவர் அனுமானித்த கட்டற்ற சுதந்திரமும் நவீனத்தன்மையும்தான் அவருடைய படைப்புமொழிக்கு ஆதாரமாக அமைந்தன.

இந்த மனநிலையில் வெளிப்பட்டவைதான் அவருடைய ‘காலம் காலமாக’. ‘அப்பாவும் பிள்ளையும்’, ‘நாற்காலிக்காரர்’ ஆகிய நாடகங்கள். புரிசை தம்பிரான் சகோதரர்களின் தெருக்கூத்து நிகழ்வுகளைப் பார்த்தபிறகு, அவருடைய நாடகப் பார்வையில் பெரிய மாற்றம் ஏற்படுகிறது. இசை, நடனப் பின்புலத்துடன் ஒரு வீரியமான நிகழ்வெளிகொண்ட தெருக்கூத்துதான் தமிழர்களின் பண்டைய அரங்கம் என்கிற உறுதிப்பாட்டுடன், கூத்து - நவீன நாடக ஊடாட்டத்தை சாத்தியப்படுத்தும்விதமாக 1977-ல் ‘கூத்துப்பட்டறை’ என்கிற அமைப்பை நண்பர்களுடன் சேர்ந்து உருவாக்குகிறார்.

கூத்திலிருந்து ‘சூத்ரதாரி’ என்கிற அம்சத்தை எடுத்துக்கொண்டு, கூத்தின் பாதிப்பினால் அவர் உருவாக்கிய நாடகங்கள்தான்  ‘சுவரொட்டிகள்’, ‘உந்திச்சுழி’, ‘கட்டியங்காரன்’ ஆகியவை. அரங்க அடிப்படைகளிலும் உடலசைவிலும் குரல்வளத்திலும் தேர்ந்த நடிகர்களை உருவாக்கும் அமைப்பாகக் கூத்துப்பட்டறை காலப்போக்கில் வளர்ச்சிபெறுகிறது. அவருடைய பிற்கால நாடகங்களான  ‘இங்கிலாந்து’, ‘படுகளம்’, ‘நற்றுணையப்பன்’, ‘அர்ச்சுனன் தபசு’ போன்றவை தீவிரமான அரசியல் குறியீடுகள் கொண்டவை. இன்றைய பிம்ப அரசியல், கற்பு குறித்தச் சண்டைகள், பெண்ணுடல், கிராமிய மதிப்பீடுகளின் இழப்பு, கோவில் கலாசாரத்தின் சாதிய முரண்கள், வல்லரசுகளின் ஆயுத முனைப்புகள் என சமகால நுண்ணரசியல் பேசுபவை.

வழக்கமான கதைசொல்லும் பாணி, சம்பிரதாயமான மேடையமைப்பு ஆகியவை தவிர்த்து, இன்றைய சிதறுண்ட மனிதர்கள் அவருடைய நாடகங்களில் இடம்பெறுகிறார்கள். கடந்த 40 ஆண்டுகளில் 100-க்கும் மேற்பட்ட தமிழ் மற்றும் பிறமொழி நாடகங்கள் கூத்துப்பட்டறையால் நிகழ்த்தப்பட்டு சிறப்பான நடிகர்களும் இயக்குனர்களும் உருவாகியிருக்கிறார்கள். புதியது, பழையது என்கிற பேதமில்லாதபடி ஒரு சமூகத்தில் கலைகள் இயங்கவேண்டும் என்பதை வலியுறுத்தும் முத்துசாமி, மொழியின் உரத்த வாசிப்பும் உச்சரிப்பும் நம்முடைய கல்வியின் பகுதியாக வேண்டும் என்கிறார்.  சமூகம் மேலும் மேலும் தொழில்நுட்பத்தைச் சார்ந்து நிற்கும் இன்றைய வர்த்தகமயமாக்கல் சூழலில், மனிதன் தன்னுடைய உடலின் உள்ளார்ந்த ஆற்றல்களை வலுப்படுத்திக்கொள்ள வேண்டிய தேவைகளை முன்னிறுத்தி அதற்கான உரையாடல் தளங்களை உருவாக்கிச் சென்ற முத்துசாமி, ஒரு தொடர்ச்சியான உயிரியக்கத்தின் குறியீடு.

அன்று பூட்டிய வண்டி

லைமாட்டில்
உன் காதலி தூவும்
வாஞ்சையை
சீசா பேழைக்குள்
கொரித்து கொரித்து
நீந்துகிறது
காலத்தின் மீனாய்
உன் புன்னகை

கண்ணீராய்
வருகிறவர்கள்
பாதங்களில் பூ சாத்திவிட்டு
உன் புன்னகையை
ஏந்திச் செல்கிறார்கள்

வீடு வாசல்
எங்கும் உன் பாத்திரங்கள்
எல்லோரது சொற்களிலும்
உன் தொனி

ந.முத்துசாமி - தொடர்ச்சியான உயிரியக்கத்தின் குறியீடு

கல்லகற்றி நீரூற்றி
பிசைந்து பிசைந்து
நீ செய்த அகல்களாய்
உனைச் சூழ நிற்கிறோம்

பெருகி வழியும்
கண்ணீர்ச் சுடர்களால்
ஒளிக்கதிர்களாய் மின்னுகிறது
உன் மீசை

பறையும் துடும்புமாய்
உன் நாடகங்களின்
பிரதான பாத்திரங்களாய்
அரை வட்டத்தில் நின்று
நீ காட்டித் தந்த
வாழ்வின் அரங்கத்தை
கொண்டாட்டத்தை
இசைக்கிறோம்

மய்யத்தில்
அமர்ந்தபடி
கால்கள் தாளத்தில் அசைய
மீசையை வருடிக்கொண்டு
‘சபாஷ்’ என்கிறது
உன் அரங்கத் தமிழ்.

- தம்பிச் சோழன்