Published:Updated:

சரிகமபதநி டைரி - 2018

சரிகமபதநி டைரி - 2018
பிரீமியம் ஸ்டோரி
சரிகமபதநி டைரி - 2018

சரிகமபதநி டைரி - 2018

சரிகமபதநி டைரி - 2018

சரிகமபதநி டைரி - 2018

Published:Updated:
சரிகமபதநி டைரி - 2018
பிரீமியம் ஸ்டோரி
சரிகமபதநி டைரி - 2018

தியாக பிரம்ம கான சபாவின் மெயின் ஹால் மேடையில் மையமாக வயலின் ஏ.கன்யாகுமரி. பக்கத்தில் சீடர் எல்.ராமகிருஷ்ணன். பக்கவாத்தியத்துக்கு, தவிலுடன் திருவல்லிக்கேணி சேகர். தபலாவுடன் ராஜேந்திர நகோட். மோர்சிங் உண்டு, ராஜசேகர்.

சரிகமபதநி டைரி - 2018

வயலினுடன் இணைக்கப்பட்ட மைக்கைத்தான் கன்யாகுமரி பயன்படுத்துகிறார். எனவே, வித்தியாசமான நாதம் கிடைக்கிறது. சாகித்தியம் தெளிவாகப் புரிகிறது. `ஓ... இப்போ ஸ்வர வாசிப்பா?’ என்று புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால், உடன் வாசிக்கும் சீடர் வழக்கமான மைக்குடன் உட்காருவதால், ஒரு வாரம் பட்டினிகிடந்ததுபோல் வாசிப்பது பலவீனமாக ஒலிக்கிறது. சில சமயங்களில் வெறும் வில்லை மட்டும் மேலும் கீழுமாக இழுத்து பாவ்லா காட்டுவதுபோலவும் தோன்றுகிறது. தனியாக இவர் வாசிக்கும்போது மட்டும்தான் ஒரிஜினல் வயலின் சவுண்டு!

ஸ்ரீராக வர்ணத்துடன் ஆரம்பித்தது டூயட் கச்சேரி. கௌள ராகத்தில் அழகான ஆலாபனை காதுகளை வருடிச் சென்றது. ஒருநடை திருவையாறு அழைத்துச் சென்றார் கன்யாகுமரி. தியாக பிரம்மத்தின் ரத்தினங்களில் ஒன்றான `துடுகுகல...’ கீர்த்தனை. இதில் உள்ள பத்து சரணங்களையும் சாகித்திய ஸ்வரங்களுடன் நிறுத்தி நிதானமாக வாசித்தார். `கனத்த சிற்றின்பத்தால் இழுக்கப்பட்டு நாழிகைதோறும் மிகுந்த துஷ்டத்தனங்கள் புரிந்துவரும் என்னை எந்த அரசகுமாரன் காப்பாற்றப்போகிறான்..?’ என மற்றவர்களின் இழிசெயல்களை தான் செய்ததுபோல் ராமனிடம்  ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்து உயர்ந்து நிற்கிறார் தியாகராஜர். ஜனவரி 25, அவருக்கு ஆராதனை தினம். திருவையாறு கோஷ்டிகானத்தில் இந்தப் பாடலை மறுபடியும் கேட்க வேண்டும்... நேரில் இல்லாவிட்டாலும் நேரலையில்!

சரிகமபதநி டைரி - 2018

தே சபாவின் சிற்றரங்கில், ஒரு காலை நேரத்தில் மகாராஜபுரம் கணேஷ் விஸ்வநாதன்.  கொள்ளுத்தாத்தா மகாராஜபுரம் விஸ்வநாத ஐயர் மற்றும் தாத்தா மகாராஜபுரம் சந்தானம் சேமித்து வைத்துவிட்டுச் சென்றிருக்கும் சங்கீதச் சொத்துகள் ஏழேழு தலைமுறைக்கும் காணும்.  ஏஷியன் ஜர்னலிசம் கல்லூரியில் ஆசிரியராகப்  பணியாற்றும் கணேஷ், இந்த வீட்டுப்பாடங்களை ஒழுங்காகப் படித்தாலே போதும், விறுவிறுவென முன்னேறிவிடலாம்.

மெயினாக சங்கராபரணம். ஆலாபனையில் ஆரம்ப அஸ்திவாரம் பலமாக இருந்தது. கொஞ்சம் கொஞ்சமாக விரிவுபடுத்தி மேல்ஸ்தாயிக்குப் போனார். திடீரென லேசாக கல் தடுக்கிவிட்டதுபோல் ஏதோ இடறிவிட, சட்டெனக் கீழிறங்கிவிட்டார். இன்னும் சிறிது நேரம் சங்கராபரணத்தை அலசியிருக்க வேண்டும். `எதுட நிலிசிதே...’ கீர்த்தனை.

சரிகமபதநி டைரி - 2018

கணேஷின் குரலில் இப்போது நல்ல முன்னேற்றம் தெரிகிறது. ஷ்யாமளா விநோத் என்கிற குரல் நிபுணரிடம் போய் வருகிறார். வீட்டில் தினமும் ஒரு மணி நேரத்துக்கு, குரல் பயிற்சி செய்கிறாராம். அப்படியே, மேடையில் Body Language தொடர்பாக இவருக்கு யாராவது டியூஷன் எடுத்தால் நலம். எப்பவும் `உம்’மென இருக்கிறார். பக்கவாத்தியக் கலைஞர்களைப் பார்த்து, சிறு புன்முறுவல்கூடக் கிடையாது. வாசிக்கவேண்டியது அவர்களின் கடமை என்பதுபோல் முகத்தை வைத்திருந்தால் எப்படி சகோதரா?

``திருச்சூர் பிரதர்ஸ் கேட்டீங்களா?” என்று போகுமிடமெல்லாம் கேட்டார்கள். கேட்காவிட்டால் நாடுகடத்திவிடுவார்களோ என பயமாக இருந்தது!

எத்திராஜ் திருமண மண்டபத்தில் இந்தியன் ஃபைன் ஆர்ட்ஸ் சொசைட்டி நடத்திய இசை விழாவில் திருச்சூர் ஸ்ரீகிருஷ்ண மோகனும் இளவல் ராம்குமார் மோகனும் பாடக் கேட்பதற்கு முன்னால், பன்னிரண்டு நிமிடத்துக்கு அவர்கள் மைக் பரிசோதனை செய்ததைப் பார்க்க முடிந்தது. ஐந்து மைக்குகளும் (பாட்டு / வயலின் / மிருதங்கம் / கஞ்சிரா) சீரான பிறகே பேகடா வர்ணம் ஆரம்பித்தார்கள். காத்திரமான குரல் இருவருக்கும். அதுவும் சின்னவர் மந்த்ரஸ்தாயிக்குள் போகும்போதெல்லாம் ஆழ்கிணறு மாதிரி சங்கதிகள் பெருகிவருகின்றன. கேரள நன்னாட்டினராக இருப்பினும் தெலுங்கு, தமிழ் உச்சரிப்பு அவ்வளவு சுத்தம்! இருவருக் குள்ளும் புரிதல் அதிகம். ஒருவரையொருவர் மிதிப்பதில்லை; மதிக்கிறார்கள்! காங்கேயக் காளைகள் மாதிரி நாலு கால் பாய்ச்சலில் இருவரும் ஃபீல்டில் முன்னேறிக்கொண்டிருக் கிறார்கள்.

சரிகமபதநி டைரி - 2018

அன்று இவர்கள் பாடிய ஆபோகி, அட்டகாச ரகம். மூத்தவர் ஆரம்பிக்க, இளையவர் தொடர... ஆபோகி சங்கதிகள் மண்டபத்துக்குள் சுற்றிச் சுழன்றன. மேல்காலப் பிரயோகங்களில் பாப்புலர் ஆபோகி கீர்த்தனைகளெல்லாம் மனதுள் அலையடித்தன.

தானமும் முடிந்தது. ``நாங்கள் ராகம், தானம், பல்லவி, அனுபல்லவி, சரணம் எல்லாம் பாடப்போகிறோம்...” என்று ராம்குமார் ஹாஸ்ய ரசம் ததும்பச் சொன்னதும், கோபாலகிருஷ்ண பாரதியின் `சபாபதிக்கு...’ என்று ஆரம்பித்தார்கள் ஸ்ரீகிருஷ்ணனும் ராமனும். நெருங்கிய நண்பரைப் பார்ப்பதுபோல் அரங்கம் முகம் மலர்ந்தது.

நிரவலுக்கு `ஒருதரம் சிவசிதம்பரம் என்று சொன்னால் போதுமே...’ வரிகள். ஒன்பது தரம் `சிவசிதம்பரம்’ சொல்லி, புண்ணியம் பல சேர்த்துக்கொண்டார்கள் திருச்சூர் பிரதர்ஸ்!

வித்யாபாரதி திருமண மண்டபத்தின் மேடையில் (பார்த்தசாரதி சாமி சபா) நிரந்தரமாக நான்கு தூண்கள் உண்டு. அவற்றுடன் இரண்டு தம்புராக்களும் `நால்வருடன் அறுவரானோம்!’ என்று சேர்ந்துகொண்டன. நடுவில் சமாராதனை பந்திபோல் மணை (குஷன்)போட்டு அமர்ந்தார் ரித்விக் ராஜா; டி.எம்.கிருஷ்ணாவின் மாணவர். ஹெச்.என்.பாஸ்கர், ஜெ.வைத்தியநாதன், அனிருத் ஆத்ரேயா - வயலின், மிருதங்கம், கஞ்சிராவுடன்.

சரிகமபதநி டைரி - 2018

கட்டையாக இல்லாமல் குரல் மென்மையாக அமைந்திருக்கிறது ரித்விக் ராஜாவுக்கு. லலிதா ராக ஆலாபனையும், தீட்சிதரின் `ஹிரண்மயீம் லக்ஷ்மீம்...’ பாடலையும் வாத்தியார் சொல்லிக்கொடுத்த வழியில் அதே காலப் பிரமாணத்தில் பாடினார். தொடர்ந்து வந்த `காலைத் தூக்கி நின்றாடும்...’, தியாகராஜரின் `தெலியலேது ராமா...’ இரண்டுமே ஊர்ந்து செல்லும் கன்டெய்னர் லாரி வேகம். இரண்டு பாடல்கள் விறுவிறுவெனப் பாடுவார் என எதிர்பார்த்துக் காத்திருந்து, ஏமாற்றமடைய வேண்டியதாயிற்று! கச்சேரிப் பட்டியல் போடும்போதுகூட ஆசானின் வழியைப் பின்பற்றணுமா?

மெயினாக ஸ்ரீராகம். ராகமாலிகையில் பல தானம். பஞ்சரத்தினப் பாடல்கள் அமைந்த ஐந்து ராகங்கள். பல்லவியாக `எந்தரோ மகானுபாவுலு...’ முழுப்பாடல். கடிகார முள், நண்பகலைத் தொட்டுவிட்டது. பலருக்கும் பசி வந்து, பத்தும் (சரணங்களும்) பறந்துபோனது!

அது ஒரு பக்கமிருக்க, பாடும்போது முக்கால்வாசி நேரம் வயலின் கலைஞரைப் பார்த்துக்கொண்டே இவர் பாடுவதேன்? உங்கள் முன் உட்கார்ந்திருக்கும் ரசிகர்கள்மீது பாராமுகம் ஏன் ராஜா?

மெயின், மினி என இரண்டு ஹால்கள் கொண்ட சபாக்கள், வளரும் கலைஞர்களுக்கு மெயின் ஹால் ஒதுக்குவதற்கு அடிப்படை என்ன? அல்லது அப்படியான கலைஞர்கள் அடம்பிடித்து மெயின் ஹாலில் உட்கார்ந்து விடுகிறார்களா?

சரிகமபதநி டைரி - 2018

நாரத கான சபா மெயின் ஹாலுக்குள் காலை 10 மணிக்கு நுழைந்தபோது பதினைந்துக்கும் குறைவான தலைகளே தெரிந்தன. நேரம் நகர நகர எண்ணிக்கை துளித்துளியாக அதிகமானது. மினி ஹாலில் பாடிப் பாடி, ரசிகர்களைப் படிப்படியாக வசப்படுத்தி, பிறகு அம்மாம்பெரிய ஹாலுக்குள் நுழைந்திருக்க வேண்டும் டி.என்.எஸ்.கிருஷ்ணா. சங்கீத கலாநிதி டி.என்.சேஷகோபாலனின் மகனும் சீடனுமாவார் இவர்.

விருத்தம் பாடிவிட்டு அன்றைய திருப்பாவையை பைரவியில் பாடினார் கிருஷ்ணா. குரல் கீச்சுக் கீச்சு என்று போகாமல், கட்டுக்கோப்பாக இருந்தது. சஹானா ஆலாபனையில் சங்கதிகள் அழுத்தமாக வந்து விழுந்தன. `ஈவஸுத நீவண்டி தைவமு...’ கீர்த்தனையைப் பொருள் உணர்ந்து, தேவையான எமோஷன் கொடுத்துப் பாடினார்.

கிருஷ்ணா அன்று பாடிய சுபபந்துவராளி, சேஷகோபாலன் இளமையில் பாடியதை நினைவூட்டியது. இதில் சோக ரசம் அதிகமான போதெல்லாம், முன்தினம் மறைந்த எழுத்தாளர் பிரபஞ்சனுக்கு அஞ்சலி செலுத்துவதுபோலிருந்தது. பிரபஞ்சனுக்கு இலக்கியம் தவிர, சங்கீதமும் ரொம்பப் பிடிக்கும். தீட்சிதரின் `ஸ்ரீ ஸத்யநாராயண முபாஸ்மஹே’ கீர்த்தனையும், மத்ஸ்ய கூர்ம வராஹாதி தசாவதார ப்ரபாவத்தில் நிரவலும் முடித்துக் கொண்டு ஸ்வரங்களுக்குள் நுழைந்தார் கிருஷ்ணா. அவற்றில் நிறைய கணக்குவழக்குகள் மிரளவைத்தன. ஒருநாள், அப்பாவின் இடத்தை மகன் பிடித்துவிடுவார் என்ற நம்பிக்கை ஏற்பட்டது!

தியாகபிரம்ம கான சபாவில் காயத்ரி வெங்கட்ராகவன். எம்.ஆர்.கோபிநாத் (வ), நெய்வேலி நாராயணன் (மி), அனிருத் ஆத்ரேயா (க). அன்று ஸ்பெஷல் விருந்தாளிகளாக பொதிகை தொலைக்காட்சியின் மூன்று கேமராக்கள். ஒன்றரை மணி நேரத்துக்கு லைவ் ரிலே!

சீஸனுக்கு நடுவில் உடல்நிலை பாதிக்கப்பட்டு இரண்டு, மூன்று கச்சேரிகளை ரத்துசெய்யவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது காயத்ரிக்கு. முகநூலில் நிறையபேர் இவருக்கு `Get well soon’ வாழ்த்து அனுப்ப, வாணிமகால் கச்சேரிக்குமுன் குணமாகிவிட்டார். `Trinity’ ஆங்கில நாடகத்தில் சியாமா சாஸ்திரியின் மனைவி லலிதாவாக நடித்து, பாராட்டுதல்களை வரவில் வைத்துக்கொண்டவர் காயத்ரி என்பது இன்னொரு தகவல்!

சரிகமபதநி டைரி - 2018

தன் தரமான கச்சேரியை, `தத்வமரிதரமா...’வுடன் தொடங்கினார்.  காயத்ரிக்கு இனிமையான குரல். மேடையில் எப்போதும் சிரித்த முகம். பக்கவாத்தியக் கலைஞர்களை உடனுக்குடன் பாராட்டத் தயங்காதவர். வராத கூட்டம் பற்றிக் கவலைப்படாமல், வந்த ரசிகர்களைத் தன் இசையால் உபசரிப்பவர்.

ஹம்சநாதத்தில் `பண்டுரீதி...’ பாடலில், ராமராமமென்னும் சிறந்த போர்வாள் தம்மிடம் இருப்பதாகப் பெருமைகொள்வார் தியாகராஜர். மற்ற பல கலைஞர்களைப்போல் இந்த வரியை நிரவலுக்கு எடுத்துக்கொண்டு பட்டாசு வெடித்தார் காயத்ரி வெங்கட்ராகவன். கல்யாணி ராக ஆலாபனையில் அந்த நாள்களை நினைவுபடுத்திவிட்டு சாருகேசியில், `குகா வா... முருகா வா... சண்முகா நீ வா... குமரகுருகுக வா...’ என்று பல்லவியில் அழைத்தார்.

எம்பெருமான் முருகன் வந்து காயத்ரி வெங்கட்ராகவனை அடுத்தகட்டத்துக்கு அழைத்துச் செல்ல வேண்டும்!

டிசம்பர் டைரியின் பக்கங்களை யாழ்ப்பாணம் பாலமுருகனின் நாகஸ்வரத்துடன் எழுதத் தொடங்கி, இப்போது இன்னொரு நாகஸ்வர வித்வானுடன் நிறைவுசெய்வதுதான் எவ்வளவு பொருத்தம்!

ஜனவரி முதல் நாள் மியூசிக் அகாடமியின் டி.டி.கே விருது பெற்ற இருவரில் ஒருவர், நாகஸ்வர வித்வான் செம்பனார்கோவில் எஸ்.ஆர்.ஜி.ராஜண்ணா. வயது 86. வாக்கிங் ஸ்டிக் சகிதம் ஒரு பெரியவர் உட்காரும்போதுதான் அகாடமியில் சதஸ் மேடையின் தேஜஸ் கூடுகிறது!

ராஜண்ணாவின் மூத்த சகோதரர், மறைந்த நாகஸ்வர வித்வான் சம்பந்தம். இவர்கள் இருவருமாக நாகஸ்வர உலகில் பல வருடம் கோலோச்சியிருக்கிறார்கள். சிங்கப்பூர் மாரியம்மன் கோயிலிலும் ஸ்ரீனிவாச கோயிலும் பத்து வருடம் ஆஸ்தான வித்வான்களாக இருந்திருக்கிறார்கள். ரக்திமேளம் மற்றும் மல்லாரி வாசிப்பில் இவர்கள் பெயரும் புகழும் பெற்றவர்கள்.

``என்னைவிட பத்து வயது மூத்தவர் என் சகோதரர். எனக்கு குருவாக இருந்து, வாசிப்பின் நெளிவுசுளிவுகளைக் கற்றுத்தந்தவர். இந்த விருதை அவருக்கு அர்ப்பணிப்பதுதான் பொருத்தமாக இருக்கும்” என்னும் ராஜண்ணா, இந்த வயதிலும் பல கச்சேரிகளுக்குச் சென்று, கேட்டு மகிழ்கிறார்; இளைஞர்களுக்கு வழிகாட்டியாக இருந்துவருகிறார். Old is Gold என்பது அகாடமிக்குச் சொல்லியா தெரியவேண்டும்!

நிறைவு

வீயெஸ்வி - படங்கள்: சு.குமரேசன், தி.குமரகுருபரன், க.பாலாஜி, ப.பிரியங்கா