கேமராக் கண்களால் சமூகத்தை விமர்சிக்கும் கலைஞன் இவர்... விளிம்புச் சமூகத்தின் குழந்தைகள், அலைகுடிகளின் வாழ்வியல், மலக்குழிக்குள் மூச்சையடக்கி உயிர்ப்பணயம் வைத்து நம் சுகாதாரம் காப்பவர்கள் எனச் சமகாலத்தின் அவலக் காட்சிகளை சாட்சியங்களென பதிவுசெய்து பத்திரப்படுத்திக்கொண்டிருக்கிறார். வாழ்வின் கடுமையான சூழல்களுக்கிடையிலும் தோளில் கேமராவோடே பயணிக்கும் சமகாலத்தின் அரசியல் புகைப்படக் கலைஞர் பழனிக்குமார்.

“பள்ளிப்படிப்பு, பொறியியல் எனப் படிக்கும் காலத்திலேயே நான் கதைசொல்லியாக வேண்டும் என விரும்பினேன். திரைப்படங்களின் வழியே கதைசொல்ல வேண்டும் என்ற எண்ணம் எனக்குள் இருந்தது. அதற்கென சிறு சிறு முயற்சிகளையும் செய்துபார்த்திருக்கிறேன். என் அம்மா திருமாயி, அப்பா மயில்ராஜ். இருவரும் மதுரையில் சாலையோரம் மீன் விற்றுவருகிறார்கள். அந்த வீதிதான் அவர்களது வணிக உலகம். ஒருகட்டத்தில் நான் என் பெற்றோரின் கண்கள்கொண்டு சமூகத்தை உற்று நோக்கினேன். மதுரையின் வீதிகள், கதைசொல்லியாக வேண்டுமென நினைத்த எனக்குப் பல கதைகளைச் சொன்னது. அவை யாரும் கேட்டிராத, பதிவுசெய்யத் துணியாத கதைகள்... கடைநிலை மாந்தர்களின் கதைகள். அவற்றைப் பதிவுசெய்வதுதான் என் பணி என்பதை உணர்ந்தேன். சென்னை வந்த பிறகு ‘களிமண் விரல்கள்’ அமைப்புடன் சேர்ந்து பயணிக்கத் தொடங்கினேன். என் கண்களை, என் கேமராவை அந்த நீண்ட பயணங்கள் இன்னும் விசாலமாக்கின. ‘கக்கூஸ்’ ஆவணப்படத்துக்கு ஒளிப்பதிவு செய்தபோது, மலம் அள்ளும் தொழிலாளர்களின் வாதைகளைப் பதிவுசெய்தோம். மலக்குழிக்குள் மரித்துப்போன தன் தந்தையின் புகைப்படத்துக்கு முன்னால், பிஞ்சு விரல்கள் ஏந்தி நின்ற மெழுகுவத்தியின் ஜுவாலை எனக்குள்ளும் பற்றிக்கொண்டது. அங்கு விளையாடிக்கொண்டிருந்த சிறுவர்களின் எதிர்காலத்தை நினைக்க, மனம் பதைபதைத்தது. அந்தக் குழந்தைகளின் புகைப்படங்களை ‘நானும் ஒரு குழந்தை’ என்ற தலைப்பில் காட்சிப்படுத்தினேன். அந்தக் குழந்தைகளாவது வேறு வேலைக்குச் செல்லவேண்டும் என்ற என் ஆதங்கம், பார்வையாளர்களில் சொற்பமானவர்களையாவது தொற்றிக்கொள்ள வேண்டும் என்பதற்கான சிறு முயற்சி அது. தமிழகத்தில் எங்கு மலக்குழிச் சாவுகள் நிகழ்ந்தாலும் கேமராவோடு அங்கு சென்றுவிடுவேன். இதுவரை கிட்டத்தட்ட 35 மலக்குழி மரணங்களைப் பதிவுசெய்திருக்கிறேன். கஜா புயலின் கோரத் தாக்குதலில் உடைமைகளை இழந்தவர்களின் பாடுகளை புகைப்படங்களாக்கினேன். புகைப்படக்காரர்களில் பலரும் இலக்கற்ற பயணங்களை விரும்புகிறார்கள். ஆனால், என் பயணத்துக்கு ஒரு இலக்கு உள்ளது என்று நம்புகிறேன். அதை நோக்கி நடக்கிறேன்.’’
தொகுப்பு: சக்தி தமிழ்ச்செல்வன் - படம் : கே.ராஜசேகரன்
