Published:Updated:

ரேடியோஹெட் - மிகைப்பதற்றத்தின் கலை

ரேடியோஹெட் - மிகைப்பதற்றத்தின் கலை
பிரீமியம் ஸ்டோரி
ரேடியோஹெட் - மிகைப்பதற்றத்தின் கலை

ரேடியோஹெட் - மிகைப்பதற்றத்தின் கலை

ரேடியோஹெட் - மிகைப்பதற்றத்தின் கலை

ரேடியோஹெட் - மிகைப்பதற்றத்தின் கலை

Published:Updated:
ரேடியோஹெட் - மிகைப்பதற்றத்தின் கலை
பிரீமியம் ஸ்டோரி
ரேடியோஹெட் - மிகைப்பதற்றத்தின் கலை

ராக் இசை, ஒரு கிழட்டு யானையைப்போல ஒரே இடத்தில் சுற்றிச் சுற்றி வந்து அந்திமக் காலத்தின் கலங்கலான நிறங்களில் கண் மயங்கியிருந்த நாள்களில், ஓர் உயர்ரக மதுபான விடுதியில் கரோகே பாடவரும் பையன்களைப்போலிருக்கும் ஆக்ஸ்ஃபோர்டு பள்ளியின் முன்னாள் மாணவர்களான ஐவர், ‘ரேடியோஹெட்’ எனும் பெயரில் ‘பாப்லோ ஹனி’ எனும் ஆல்பத்தின் வழியாக ஏற்கெனவே பலரும் நடந்த ஒரு திசையில் தங்களது பயணத்தைத் தொடங்குகிறார்கள். ‘கிரீப்’ எனும் பாடலைத் தவிர அந்த ஆல்பத்தில் குறிப்பிட்டுச் சொல்ல ஏதுமில்லை. அது மற்றொரு ராக்ஆல்பம் என்பதற்கும் மேலாக நாம் அதற்கு ஏதாவது மதிப்பளிக்க முனைந்தால், ‘ரேடியே ஹெட்டிற்கு ஓர் ஆரம்பத்தைக் கொடுத்த ஒன்று’ என்ற அங்கீகாரத்தை மட்டுமே வழங்கலாம். குழுவின் தொடக்கமே அன்றி, அவர்களது இசையின் தொடக்கமல்ல. மிகச்சரியாக மதிப்பிட வேண்டுமானால், ரேடியோஹெட்டின் இசை அவர்களது மூன்றாவது ஆல்பத்திலிருந்தே தொடங்குகிறது. இரண்டாவது தொகுப்பான ‘தி பெண்ட்ஸி’ல் மொத்தம் பன்னிரண்டு பாடல்கள். அவற்றில் ‘போலி பிளாஸ்டிக் மரங்கள்’, ‘வளைவுகள்’, ‘எனது இரும்பு நுரையீரல்’ ஆகிய பாடல்கள் பின்னாள்களில் ரேடியொஹெட்டின் இசையில் ஏற்படப் போகும் மாற்றங்களின் முதல் அசைவுகளைத் தாங்கியிருந்தன. இருப்பினும் ரேடியோஹெட் இன்னும் கர்ப்ப காலத்திலேயே தங்கியிருந்து, மின்கிதார் தந்திகளின் வழமையான இசை ஒலிகளை எழுப்பிக்கொண்டிருந்தது. போலி பிளாஸ்டிக் மரங்கள்’ பாடல், தனித்துப் பேசப்பட வேண்டிய ஒன்று என்றாலும், அடுத்து எழுந்த வெள்ளத்தில் இழுக்கப்பட்டு கொஞ்சம் பின்வாங்கிவிட்டது.

ரேடியோஹெட் - மிகைப்பதற்றத்தின் கலை

ரேடியோஹெட் பின்வரும் ஐவரை உள்ளடக்கியது: 1.தாம் யார்க், 2.கோலின் கிரீன்வுட், 3.ஜானி கிரீன்வுட், 4.எட் ஓ`பிரெய்ன், 5.பில் செல்வே.நாம் அதிகமாக தாம் யார்க்கை குறிப்பிடப் போவதற்கான காரணம், அவரே இக்குழுவின் முகம், குரல், மூளை. 

பாரனாய்ட் ஆண்ட்ராய்ட்

இதுவரையில் வெளிவந்துள்ள ரேடியோஹெட்டின் ஒன்பது ஆல்பங்களுக்கும்  சேர்த்து ஒரு பெயரை அளிக்கச் சொன்னால், சற்றும் தயங்காமல் நான் அந்த இசைத்தொகுப்பிற்கு ‘பாரனாய்ட் ஆண்ட்ராய்ட்’ என்றே பெயரிடுவேன். ரேடியோஹெட்டின் மூன்றாவது ஆல்பமான ‘ஓகே கம்ப்யூட்டர்’ ஒரு மாபெரும் உருமாற்றம். ‘மாபெரும்’ என்று சொல்வதற்குப் பதிலாக முழுமையான உருமாற்றம் என்பதே பொருத்தமானது. அத்தொகுப்பிற்குப் பின்பு, ரேடியோஹெட்டின் இருபது ஆண்டுக்கால உச்சத்திற்குப் பிறகு, ராக் இசையின் அநாதரவான காலத்தில் அதன் கிளையில் வந்தமர்ந்த ஒரு பறவையாக இல்லை. மாறாக அதன் கிளையில் தனது அலகைத் தீட்டி, கையசைப்பைப்போல இறகசைத்து விடைபெற்றுக்கொண்ட ஒரு பறவையாக, ராக்கின் உச்ச டெசிபல் அரங்குகளிலிருந்து வெளியேறி, மின்னணு இசையின் எதிர்கால ஒலிகளின் பள்ளத்தாக்கில் மிதவையிடக் கிளம்பிவிட்டது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ரேடியோஹெட் - மிகைப்பதற்றத்தின் கலை

படபடக்கும் அங்கியோடு சரியும் ஒரு நூற்றாண்டின் விளிம்பிலே நின்று,  மேலெழுந்துவரும் தகவல் தொழில்நுட்பப் பேரலையின் ராட்சதத் துடிப்பை, தானே ஒரு பண்டமாக நுகரப்படப்போவதின் பயத்தை, எளிதில் புரிபடாத கணினி நெட்வொர்க்குகளில் ஒரு தரவாக மட்டுமே மனிதன் எஞ்சப்போவதை, தன்னோடு சேர்ந்து தனது உயிர்க்கோளமும் அல்லலுறுவதை, மின்னணு இசை ஒலிகளின் சங்கேத மொழியில் மனிதகுலத்தின் எளிதில் திறந்துகொள்ளாத காதுகளில் உரக்கச் சொல்லும் ஒரு ஸ்டாயிக் தத்துவவாதியாக ரேடியோஹெட் உருமாற்றமடைந்திருந்தது. முதலில் ரேடியோஹெட்டிற்கு,  ‘குகையிலிருந்து வெளியே வரும் ஜாரதுஷ்ட்ராவின் உருவத்தையே அளிக்க நினைத்தேன். அதிமனிதக் கற்பனையில் மூழ்கிக்கிடக்கும் அந்தக் கிழவரோடு ரேடியோஹெட்டை ஒப்பிடுவது பொருத்தமற்றதும் தவறாக வழிநடத்துவதுமாகும்.

தொழிற்சாலை, போக்குவரத்து ஒலி(மாசு)யைக் கட்டுப்படுத்துவதற்கான சட்டமியற்றச் சொல்லி, 1928-ம் ஆண்டில் `டூரிங் கிளப் ஆஃப் ஃபிரான்ஸ்` எனும் அமைப்பினர் அரசிடம் கேட்டுக்கொண்டதே ஒலிக்கு எதிரான முதல் குறிப்பிடத் தகுந்த இயக்கம். அந்த அமைப்பின் குறிக்கோள்: `ஒவ்வொருவரின் அமைதி எல்லோருக்குமான ஓய்வு’. அந்த அமைப்பின் ஆக இளவயது உறுப்பினர் யாராவது உயிருடனும் கேட்கும் திறனுடனும் இருந்து ரேடியோஹெட்டின் பாரனாய்ட் ஆண்ட்ராய்ட் பாடலைக் கேட்டிருந்தால், தங்களது தொடர்ச்சியாக ஒரு குரல் ஒலிக்கிறது என்று மகிழ்ந்திருப்பார். ஆனால் தாம் யார்க், வெளிப்புறத்திலிருந்து ஒலிக்கும் ஒலிகளை அல்ல மாறாக அகப்பரப்பின் ஒலிகளை நிறுத்தச் சொல்லிப் பாடுகிறார். ஒரு நூற்றாண்டின் முடிவில் எல்லா ஒலிகளும் நமது அகப்பரப்பை மாசுபடுத்தியிருக்கின்றன.

ரேடியோஹெட் - மிகைப்பதற்றத்தின் கலை

`எனது தலைக்குள் ஒலிக்கும் பிறந்திராத அனைத்துக் கோழிக்குஞ்சுகளின் குரல்களிடமிருந்து கொஞ்சம் ஓய்வெடுக்க விரும்புகிறேன். தயவுசெய்து உங்களால் அந்த ஒலியை நிறுத்த முடியுமா?’

இதுதான் பாரனாய்ட் ஆண்ட்ராய்ட் பாடலின் துவக்க வரிகள். இந்தப் பாடலில் இயங்கும், ஆழ்ந்த உறக்கமற்ற ஒரு தன்னிலை தனது அகத்திலே ஒலிக்கும் தன்னால் கட்டுப்படுத்த முடியாத குரல்களை நிறுத்தச் சொல்லி உலகிடம் கேட்கிறது. கடந்த நூற்றாண்டின் கடைசிப் பத்தாண்டுகளில் தொடர்ந்து அலை அலையெனப் பொங்கி, கரையின் சிறுமணற் துகள்களை மூச்சுமுட்டச் செய்யும் தகவல்களால் தனது அமைதியை இழந்து தடுமாறும் ஒரு மனம், இந்தப் பாடலின் வழியாக நமது காலத்தின் அழிக்க முடியாத ஒரு பதிவைப் பதிந்துவைத்திருக்கிறது.

ரேடியோஹெட் அல்லது பாப் இசையின் தத்துவம் எனும் கட்டுரையில், மார்க் கிரீஃப் மனித வரலாற்றின் இந்தத் கட்டத்தைக் கச்சிதமாகத் தருகிறார்:

ரேடியோஹெட் - மிகைப்பதற்றத்தின் கலை

`மில்லினியத்தின் முடிவில், ஒவ்வொரு தனிமனிதனும் தொலைக்காட்சி, வானொலி, தொலைபேசி, அலைபேசி, விளம்பரப் பலகை, விமான நிலைய தகவல் திரை, உள்பெட்டி மற்றும் ஜங்க் மின்னஞ்சல்களின் உரத்த கட்டளைகளின், கோரிக்கைகளின் சந்திப்புப் புள்ளியில் அமர்ந்திருக்கிறான். பதிவுசெய்யப்பட்ட குரல்கள், எழுதப்பட்ட தகவல்கள், ஒலிபரப்புக் கருவிகள், பொழுதுபோக்கு அலைவரிசைகள் மற்றும் தேர்வு செய்வதற்கான மார்க்கங்களின் எண்ணி
லடங்காத தகவல்களுடன்  ஒவ்வொருவரும் அவர்களுடைய ஒப்புதலின்றியே பிணைக்கப்பட்டு, நெட்வொர்க்கின் ஒரு முடிச்சில் வாழ்வதைக் கண்டறிந்தார்கள்.’

சுருங்கச் சொன்னால், இந்த `ஒலிபரப்புக் கலாசாரம்’ அமைதிக்காலப் பறவைகள் ஓய்வெடுக்கும் நமது அகப்பரப்பின் சதுப்பு நிலங்களில் பல்லாயிரம் டன் தகவல் குப்பைகளைக் கொட்டுகிறது. பாடலின் பிரார்த்தனைக்கு ஒப்பான ஒரு பகுதியில் தாம் யார்க் இவ்வாறு பாடுகிறார்:
 
`மழையே பொழி, பேருயரங்களிலிருந்து
என் மீது பொழி’


திரும்பத் திரும்பக் கேட்டால்தான் அது பிரார்த்தனையே. மேலும் பிரார்த்தனை என்பது நம்மைத் தொந்தரவூட்டும், அத்தியாவசியமான ஒன்றைக் கண்டுபிடிக்கும் முயற்சியும்கூட. பாடலின் மேற்சொன்ன வரிகள் நீண்டு ஒலித்து இந்த உலகின் குப்பைகளோடு சேர்த்து தன்னுள்ளே சேர்ந்திருக்கும் குப்பைகளையும் கழுவச் சொல்கிறது. இந்தப் பகுதியைக் கடந்ததும் பாடலின் இசை சற்றும் தளர்ந்திராத இறுக்கத்திலிருந்து விடுபட்டு, வெளியேறும் முனைப்பில் உச்சத்தில் ஒலிக்கிறது. 

`பயம், வாந்தி
பயம், வாந்தி
கடவுள் அவருடைய குழந்தைகளை அன்பு செய்கிறார்
கடவுள் அவருடைய குழந்தைகளை அன்பு செய்கிறார்’


-எனும் ஏளனத்துடன் முடியும் இப்பாடல், ரேடியோஹெட்டை பாப் இசை உலகக் குட்டிக் கடவுள்களின் தர்பாரில் தனியொரு சிம்மாசனத்தில் அமர்த்துகிறது. சிறிதும் ஆர்ப்பாட்டமில்லாத ரேடியொஹெட் குழுவினர், தங்களது காலத்தின் அதிமுக்கிய சிக்கல்களுக்கான எதிர்வினையாக, அமைதியாக்கப்பட்ட சமூகப் பிரஜைகளின் முனகலுக்கும் மேலே எழாத எதிர்ப்பை, மிகைப்பதற்ற மனநிலையாக அடையாளங்கண்டு தங்களது பாடல்களைப் படைக்கிறார்கள். 

ரேடியோஹெட் - மிகைப்பதற்றத்தின் கலை

இசையைத் தீவிரமாகக் கருதுபவர்கள்,  ‘பாப்’ ஒரு செக்கின் நிலையை அடைந்திருப்பதை உணர்வார்கள். அதற்கென்று சில முறைப்படுத்தப்பட்ட உள்ளடக்கங்கள் மட்டுமே உண்டு. ஒரு தேய்வழக்கின் பரிச்சயம் உண்டாக்கும் பழகிய உணர்வை எழுப்புவதைத் தவிர, பாப் வேறொன்றையும் அளிப்பதில்லை. நான்கு நிமிடத் தற்காலிகத் துள்ளல் என்பதற்கும் மேலாக பாப் இசைக்கு என இன்றைக்குத் தனித்த ஒரு குணாம்சமும் இல்லை. பாப் ஒரு சூப்பர்மார்கெட் இசை. அது ஒரு பொதுச்சதுக்கம். ஆயிரக்கணக்கானோர் உள்ளே நுழைந்து தடயங்களாக வெறும் குப்பைகளை மட்டுமே கொட்டிவிட்டுச் செல்லும் ஒரு பொதுச்சதுக்கம். வெப்பமும் குப்பையும் மட்டுமே கூடியிருக்க, அந்தச் சதுக்கத்தின் ஓரத்தில் நின்று, தொலைந்த அமைதியைத் தேட முடியாது. அரசியல் பாடல்கள் உண்டு என்றாலும் உட்ஸ்டாக் பண்டிகைக் காலத்தின் பாப் இசையோடு ஒப்பிட முடியாது. தவிர இன்றைக்கு பாப், இந்த நூற்றாண்டின் ஆன்மிகத்தைப்போல மகிழ்ச்சியை விற்கும் ஒரு நிறுவனம். மகிழ்ச்சியைத் தவிர வேறொன்றை வழங்கும் எதற்குத்தான் இன்றைக்கு மதிப்பிருக்கிறது?. ஆனால் ஒரு ஸ்டாயிக், ‘வாழ்வின் குறிக்கோள் மகிழ்ச்சியல்ல’ என்றே சொல்வார். ரேடியோஹெட் மகிழ்ச்சியை விற்கும் பாப் இசைக்குழுவல்ல. மாறாகத் தொலைந்த மகிழ்ச்சியை, ஓய்வுநிலைக்கான ஏக்கத்தை துக்கத்தின் வழியாக உருவாக்குபவர்கள். அவர்களது பாடல்கள் உருவாக்கும் துக்கம், நிச்சயமாக பாப் இசையின் உள்ளடக்கத்திற்கும் ஏன் அதன் நோக்கத்திற்குமே எதிரான நிலையில் நிற்கிறது.

ரேடியோஹெட் - மிகைப்பதற்றத்தின் கலை

‘ஏன் ரேடியோ ஹெட்டின் பாடல்களில் பெரும்பாலானவை டிப்ரசிவாக இருக்கின்றன’ எனும் கேள்விக்கு, தாங்கள் குரலற்றவற்றின் குரலாக இருப்பதாகவும், குரலற்றவற்றில் பெரும்பாலானவை எதிர்மறையானவை என்றும் பதிலளிக்கிறார் தாம் யார்க். உண்மையில், பேரிலக்கியங்களில் பெரும்பாலானவை டிப்ரசிவானவை. உண்மையில், எதார்த்தமேகூட டிப்ரசிவானதே. உண்மையில், உண்மையே கொஞ்சம் டிப்ரசிவானது. விழிப்புணர்வு பெற்ற காலத்தில் வாழ்வதாக நம்பும் நாம் உண்மையில் மகிழ்ச்சியற்று இருக்கிறோம். நமது வாழ்வின் உள்ளடக்கமோ பாப் பாடல்களின் கருக்களைப்போல முறைப்படுத்தப்பட்டது. நமது வாழ்வின் தசைகளை நீக்கி, உடலை ஒரு பையாகச் சுருக்கி பிளாஸ்டிக், வேதிக் கழிவுகளை, தகவல் குப்பைகளைச் சுமக்கச் செய்தது யார்? அரசு,

ஊடகம், முதலாளித்துவம்… ரேடியோஹெட் இந்த மூன்று அமைப்புகளையும் நமது இன்றைய நிலைக்குப் பொறுப்பாக்குகிறது. சூழல் அழிவு, கண்காணிப்பு, பதற்ற உருவாக்கக் கருவியான ஊடகம், அதிஉற்சாகமான அதேசமயம் பொறுப்பேற்கத் தயங்கும் அரசு, தேர்தல் முறைகேடு, கட்டுப்பாடற்று வளங்களைச் சுரண்டும் முதலாளித்துவம் என ரேடியோஹெட் குழுவின் பாடல்களில் பெரும்பாலானவை எதிர்மறைகளைப் பாடுபவை.  பாப் இசையின் கொண்டாட்டத் துள்ளலுக்கு எதிராக ஒடுக்கத்தை, விலகலை முன்வைப்பவை. ரேடியோஹெட்டின் பாடல்களைக் கேட்கும் யாராவது ஒருவர் மகிழ்ச்சியாக உணர்வதாகச் சொன்னால் நாம் அவரை நம்ப வேண்டியதில்லை.   அவர்களது பாடல்கள் எவ்வித உணர்வுகளை உருவாக்கக்கூடியவை என்பதைப் பின்னர்விளக்குகிறேன்.

ரேடியோஹெட் - மிகைப்பதற்றத்தின் கலை

சமகால பாப் இசையிலிருந்து ரேடியோஹெட் விலகி நிற்கும் இன்னொரு அம்சம், காதல். ரேடியோஹெட்டின் ஒரு பாடலிலாவது ஆண் பெண் உறவின் சிக்கல்களோ  காமமோ வெளிப்படுவதில்லை. சமீபத்திய ஆல்பமான `நிலவின் வடிவிலான குளத்தின்’ ஒரு பாடலான `உண்மைக் காதல் காத்திருக்கும்’ மெலிதான தளத்தில் காதலைப் பாடினாலும், அப்பாடல் காதலைத்தான் பேசுகிறதா என்கிற சந்தேகமும் எழுகிறது. ரேடியோஹெட் காமத்தைப் பாடுவதேயில்லை. நானும் ஆல்பங்கள் தோறும் தேடிப் பார்க்கிறேன், தீர்த்தக்கரையில் தெற்கு மூலையில் காத்திருக்கும் ஓர் ஆணையும் பார்க்க முடியவில்லை. ரேடியோஹெட்டின் பாடல்களில் `பெண்’ இல்லையா என்றால், இல்லை என்றுதான் பதிலுரைக்க முடியும். தனது சூழலின் எதிர்மறைக் கூறுகளை முழுதுமாக உள்வாங்கிய, அவை உருவாக்கும் அகஉணர்வுகளைப் பின்னிரவு நேரத்தில் அக்கொவ்ஸ்டிக் கிதாரில் இசைக்கும் ஒரு பெருநகர இளைஞன் மட்டுமே அவற்றில் தெரிகிறான். ஆச்சர்யகரமாக அவனுக்கு உடலே இல்லை. ஆனாலும் அவனும் இப்போது நடுத்தர வயதை எட்டியிருக்கிறான்.

ரேடியோஹெட் - மிகைப்பதற்றத்தின் கலை

ரேடியோஹெட்டை, பிங்க் ஃபிளாய்ட் குழுவினரோடு, யூ2வோடு ஒப்பிடுகின்றவர்களும் இருக்கிறார்கள். முற்போக்கு ராக்கின் தலைமைக்குழுவான பிங்க் பிளாய்ட், இயந்திர யுகத்தின் இறுதிக்கால ஒலிகளின் இசைக்கலைஞர்கள் என்றால் ரேடியோஹெட், மின்னணு வீட்டு உபயோகச் சாதனங்கள் எழுப்பும் ரீங்கார ஒலியின் பாணர்கள். ராக் இசை, கேட்பவர்களிடம் எல்லையற்ற அதிகாரத்தை எடுத்துக்கொள்வது. நமது உணர்வுகளை, அமைதியை உடைத்துப் பிளக்கும் அதிகாரத்தை நாம் ராக் இசைக்கு வழங்கினாலன்றி அதனோடு நம்மால் பிணைத்துக்கொள்ள முடியாது. நமது முதுகெலும்பையே ராக் இசை மின்கிதாராக இசைக்கிறது. ரேடியோஹெட் நமது ரத்த நாளங்களில் குதிக்கும் சிவப்பு மற்றும் வெள்ளை ரத்த அணுக்களின் உரையாடலை நமக்குக் கேட்கத் தருகிறது. ராக், எலும்புகளின் ஓசை என்றால், ஒரு ராக் குழுவாகத் தொடங்கி பின் பாப் குழுவாக மாறிவிட்ட ரேடியோஹெட்டின் இசை, உடலின் பல உறுப்புகளும் எழுப்பும் சமிக்ஞைகளின் கலவை. மேலே விவாதித்த குழுக்களோடு ரேடியோஹெட் முரண்படும் இடம், நம்மைச் செயலில் இறங்கச் சொல்லும் முன்னவர்களைப் போலன்றி, அதற்கான காலம் முடிந்துவிட்டதென்று சொல்வதே. `ஹெய்ல் டு தி தீஃப்’ ஆல்பத்திலிருக்கும் பாடலான 2+2=5, `நிலவின் வடிவிலான குளத்தின்’ பாடலான `பகல்கனவு காண்பவர்கள்’ பாடல் இவ்விரண்டையும் ஒப்பிட்டால், இரண்டுமே ஒரு கருத்தை முன்வைப்பை என்பது தெரியவரும். முதல் பாடல்,

`எங்கே இரண்டும் இரண்டும்
ஐந்தாகவே முடியுமோ
(அந்த) உலகைச் சரியான
இடத்தில் வைக்கும்
கனவைக் காண்பவனா நீ?

`நான் தடங்களை அமைத்துத் தருகிறேன்
மணற்மூட்டை, ஒளிந்துகொள்
ஜனவரியில் ஏப்ரல் மழை
இரண்டும் இரண்டும் எப்போதுமே ஐந்துதான்’


`தீமையின் வழியே இப்போது
வெளியேற வழியே இல்லை
நீ ஓலமிடவும் சத்தமிடவுமே முடியும்
காலம் கடந்துவிட்டது இப்போது’

ஏனெனில் நீ

கவனம் செலுத்தவில்லை
கவனம் செலுத்தவில்லை
(பதினாறு முறை இவ்வரிகள் ஒலிக்கும்)


என்னைப் பொறுத்தவரையில், ரேடியோஹெட் உற்சாகமாக இசையமைத்திருக்கும் ஆல்பம் என்றால் அது `ஹெய்ல் டூ தீஃப்’ மட்டுமே. அதன் ரிதமும், இசை அமைப்பும் தீவிரமான கருத்துகளைப் பாடல்களில் வைத்திருந்தாலும், இசையில் அளவுக்கு உட்பட்ட துள்ளலை உருவாக்குகிறது. இப்போது `பகல்கனவு காண்பவர்கள்’ பாடலை நோக்குவோம்.

`கனவு காண்பவர்கள்
அவர்கள் ஒருபோதும்
கற்றுக்கொள்ள மாட்டார்கள்
அவர்கள் ஒருபோதும்
கற்றுக்கொள்ள மாட்டார்கள்
அப்பால்,
திரும்பவே முடியாத
திரும்பவே முடியாத இடத்திற்கு அப்பால்’

`ரொம்பவே தாமதமாகிவிட்டது
பாதிப்புகள் ஏற்படுத்தப்பட்டுவிட்டன
பாதிப்புகள் ஏற்படுத்தப்பட்டுவிட்டன’
`இது உன்னையும், என்னையும்
தாண்டிச் செல்கிறது...’


பதிமூன்று ஆண்டுகள் இடைவெளியுள்ள இந்த இரண்டு பாடல்களும் உலகைச் சரிசெய்வதற்கான காலம் கடந்துவிட்டது என்றே பாடுகின்றன. ரேடியோஹெட்டால் 2003, 2016 ஆண்டுகளுக்கு இடையே ஒரு வேறுபாட்டையும் காணமுடியவில்லை. 2026-ம் ஆண்டிலும்கூட ஒன்றையும் காண முடியாது. அப்போது பகல்கனவு காணும் ஒருவரிடம், தாம் யார்க் இன்னும் மெலிந்து ஒலிக்கும் குரலில் ‘காலம் கடந்துவிட்டது’ என்று பாடுவார். அவர் உடனே ரேடியோஹெட் கல்ட்டின் ஒரு நிரந்தர உறுப்பினராகிவிடுவார். உலகை மறந்து, பாடலின் உலகில் தனது கற்பனைகளை நிறுத்துவார்.

ரேடியோஹெட் - மிகைப்பதற்றத்தின் கலை

ஜான் லெனான் சுடப்படாமல் இருந்திருந்தால், அவரும் இந்தப் பாடலில் தன்னை இணைத்திருப்பார்.  `கற்பனை செய்’ எனும் அவரது பாடல், திரும்பவே முடியாத ஓரிடத்தைக் கனவு காண்பவர்களுக்கானது. இருபதாம் நூற்றாண்டின் முழு மலர்ச்சி நிகழ்ந்த ஆண்டுகளின் பாடல்களில் அவையும் ஒன்று. அதை அரசியல் யுகம் என்று அழைக்கலாம். இயேசு கிறிஸ்துவைப் போல அந்தப் பாடலும் இப்போது சிலுவையில் தொங்குகிறது.

முற்றிலுமாக மறைவது எப்படி?

Anxiety: A feeling of worry, nervousness, or unease about something with an uncertain     outcome. இது ‘மிகைப்பதற்றம்’ எனும் சொல்லிற்கு (நிலைக்கு) ஆக்ஸ்போர்ட் அகராதி வழங்கும் பொருள் விளக்கம். அகராதி சுட்டும் கவலை, பதற்றம், விளைவைப் பற்றி படபடப்பாக உணர்தல் ஆகியவை கட்டுப்படுத்த முடியாதவையாக ஆனால் மிகைப்பதற்றம் மனநோயாக மாறுகிறது. தூக்க மாத்திரைகளின் நிரந்தரக் குத்தகை தாரர்களான மனநோய் மருத்துவர்களின் நிரந்தரக் குத்தகை செலுத்துபவர்களாகும் நிலை. நோயாக முற்றாத மிகைப்பதற்ற நிலையை அடைவதற்கான சாலைப்பொறியாளர்களாக (Sappers) அரசும், ஊடகமும், முதலாளித்துவமும் இருக்கின்றன.
நமது காலத்தை, ‘பெயரிட முடியாத காலம்’ என்கிறார் ராபர்ட்டோ கலசோ. ஆனால் டபுள்யு.ஹெச்.ஆடனின் `மிகைப்பதற்றக் காலம்’ இன்னுமே முற்றிலுமாக நீங்கிவிடவில்லை. நமது காலத்தின் மிகைப்பதற்ற நிலையை அவ்வளவு எளிதாக வரையறுக்க முடியாது என்பதே அது பெயரிடப்பட முடியாததாக இருப்பதற்கான காரணம். கடந்த நூற்றாண்டு `புரட்சி’ எனும் சொல்லில் தொடங்கி `வளர்ச்சி’ எனும் சொல்லில் முடிந்தது. ரேடியோஹெட், அது வெளியேறும் சமயத்து இசையைப் பாடியது.

ரேடியோஹெட்டின் தன்னிலை, மிகைப்பதற்றக் காலத்தின் உலகிலிருந்து முற்றிலுமாக மறைய விரும்புகிறது. இறப்பதற்கு அல்ல, மறைந்துபோவதற்கு. நான்காவது ஆல்பமான `கிட் ஏ’ அதன் முன்பு வந்த ஆல்பத்தின் தொடர்ச்சியே. அந்த ஆல்பத்தின் முக்கியமான பாடலாகிய `முற்றிலுமாக மறைந்து போவது எப்படி?` இவ்வாறு தொடங்குகிறது:

`அங்கே அங்கே
அது நானேயில்லை   
நான் போகிறேன்
நான் எங்கே விரும்புகிறேனோ...’


இசையோடு தாம் யார்க்கின் அ-மனிதக் குரலும் சேர்ந்து, பின்

`கொஞ்ச நேரத்தில்
நான் தொலைந்திருப்பேன்
அத்தருணம் ஏற்கெனவே கடந்துவிட்டது’

என்கிறது.

ராக் இசையைப்போல நம்பிக்கை மிக்கதல்ல ரேடியொஹெட்டின் இசை. அவர்களது இசை, அச்ச உணர்வை அடிப்படையாகக்கொண்டது. ஆகவேதான் `முற்றிலுமாக மறைவது எப்படி’ என்று பாட முடிகிறது. பாப் உலகில் பாடவே முடியாத வரிகள் இவை. ரேடியொஹெட் ஒரு கட்டத்தில் தங்களது இணைய இருப்பையே அழித்தார்கள். பாப் உலகில் புரட்சிகரமானதென்று கொண்டாடப்பட்ட எவ்வளவு விலை கொடுத்து வேண்டு மானாலும் பாடல்களை தரவிறக்கம் செய்து
கொள்ளலாம் எனும் அவர்களது முயற்சி, முற்றிலும் பாப் உலக விதிமுறைகளுக்கு எதிரானது. தங்களைத் தனித்துக் காட்டுவதற்கான அசட்டு முயற்சியாக என்னால் அதை மதிப்பிட முடியவில்லை. அதைத் தொடர்ந்து, ஒலிபரப்புக் கலாசாரக் காலத்தில் தங்களது இணைய இருப்பை அழித்ததுவும் முக்கியமானது என்றாலும் அவர்களது முயற்சிகள் நீடித்தவையல்ல. எந்த எதிர்ப்பும் இன்றைக்கு ஒரு குறிப்பிட்ட கால அளவிற்கும் மேலாகத் தொடர முடியுமா என்பது சந்தேகமே. ரேடியோஹெட்டின் டிப்ரசிவான பாடல்களில் ஒன்றான `முற்றிலுமாக மறைவது எப்படி’ விலகல் உணர்வின் உச்ச வெளிப்பாடு. இங்கே இனிமேலும் செய்வதற்கு ஒன்றுமே இல்லை. இங்கே இனிமேல் நன்மையின் பொருட்டு எதுவுமே நிகழ்ந்துவிடாது. தாம் யார்க், யாரும் மணிக்கட்டை அறுத்துக் கொள்வதற்காகப் பாடவில்லை, தாங்கள் மற்றொரு பாப் இசைக்குழு மட்டுமே என்று சொன்னாலும், இவ்வளவு தீவிரமான உணர்வினை எழுப்பும் ஒரு பாடலை பொறுப்பின்றி உருவாக்க வாய்ப்பில்லை.

ரேடியோஹெட் - மிகைப்பதற்றத்தின் கலை

ரேடியோ ஹெட்டிற்கு மிகைப் பதற்றத்தைக் கலையாக்கும் கலை கைவந்திருக்கிறது.   எதிர்மறை உணர்வுகளைப் பாடல்களாக்கி, ஒரு காலகட்டத்தின் விமர்சனக் குரலாக, விஷயங்களைத் தீவிரமாக அணுகுபவர்களுக்கான இசைக்குழுவாக அல்லது இதற்கு முற்றிலும் எதிராக, முரகாமி `கடற்கரையில் காஃப்கா’ நாவலில் ஓர் அடையாள உருவாக்கக் குறியீடாக `ஓகே கம்ப்யூட்டர்’ ஆல்பத்தைப் பயன்படுத்தி யிருப்பதைப்போல ரேடியோஹெட்டின் இசை, மேலாடையில் ஒட்டிக்கொள்ளும் ஓர் அடையாளமாகவும் எஞ்சலாம். பாப் உலகில் எதிர்ப்பே ஒரு சேகுவேரா டி-ஷர்ட் மட்டுமே. அது அவரது துப்பாக்கியல்ல. கலவையான காலகட்டத்தில் ஓர் தனித்த இடத்திற்கான ஏக்கமும், அப்படியொரு இடமேயில் லாமல் ஓசைகள் சூழ உறங்க முடியாமல் தவிக்கும் ஏற்கெனவே தன்னை ஒரு பாரனாய்ட் ஆண்ட்ராய்டாக உணர்ந்த ஒரு தன்னிலை, முற்றிலுமாக மறைந்து போவது எப்படியென்று தனக்குத் தானே சொல்லிக் கொள்கிறது. அது எல்லாவற்றையும் மறுக்கச் சொல்கிறது. தான் எதனின் அங்கமும் அல்ல என்று சொல்கிறது. எதன் அங்கமுமாக இல்லாதவர்களை ஏதாவது ஒன்றின் அங்கமாக்கும் முயற்சியை புறவுலகை இயக்கும் சக்திகள் ஓயாது நிகழ்த்த, திரட்டலுக்கு எதிராக தனது இருப்பைக் கரைத்து மறைந்துபோக விரும்பும் அல்லது பாடலின்படி ஏற்கெனவே அந்தத் தருணத்தைக் கடந்துபோய்விட்ட ஒரு தன்னிலையே நம்மில் உருவாகியிருக்கிறது.   இதன் மற்றொரு முனை விளைவே சலிப்பும். ரொலாண்ட் பார்த்தின் சொற்களில் சொன்னால், இது ஒரு ‘ஆக்டிவ் நியூட்ரல் நிலை’. விலகியிருத்தல் என்பதை எதிர்ப்பின் ஒரு வடிவமாக பாவித்தல்.

ரேடியொஹெட் பிரபஞ்சத்தில் இல்லாத மற்றொரு விஷயம் கடவுள். கிறிஸ்துவ சாயலை எங்கேயும் நம்மால் பார்க்க முடியாது. கிறிஸ்துவைக் குறைந்தபட்ச குறியீடாகக்கூட அவர்கள் பயன்படுத்து வதில்லை. டேவிட் போவியைப்போல (அண்டர் பிரஸ்ஸர் பாடல்) ‘அன்பிற்கு இன்னொரு வாய்ப்பு கொடுங்கள்’ என்று பாடவில்லை. அன்பு எனும் சொல்லையே மிகக் குறைவாக உபயோகிக்கும் ரேடியோஹெட், வெறுப்பு சூழ்ந்திருக்கும் இக்காலகட்டத்திற்கான ஓர் எதிர்நிலையாக அன்பை முன்னிறுத்தும் ஒரு பாடலையும் உருவாக்கியிருக்கவில்லை. என்றாலும் அவர்களது பாடல்களின் உள்ளார்ந்த ஏக்கமாக அன்பே விரவியிருப்பதாக தர்க்க அளவுகளைத் தாண்டி உணர முடிகிறது. இது ஒரு தவறான புரிதலாகவும் இருக்கலாம்.

திருமணத்தில் ஒரு கைகலப்பு

நமது நேரத்தைத் திருடும் ஊடகப் பிம்பங்களின் வசியக் கவர்ச்சியில் கட்டுண்டவர்களாக, 24 x 7 சூனியக்காரிகளின் கீழிறங்கவே முடியாத எட்டடுக்கு மாளிகையின் உச்சாணி அறையில் சிறைப் பட்டிருக்கிறோம். சீனப்பொருள்களை விற்கும் கடையில், கண்ணாடித் தடுப்பிற்கு வெளியே நின்று வேடிக்கை பார்க்கும் நம்மை, ரேடியோஹெட்டின் `திருமணத்தில் ஒரு கைகலப்பு’ பாடல் திரும்பச் செய்கிறது. 

ரேடியோஹெட் - மிகைப்பதற்றத்தின் கலை

`ஹிப்போகிரேட், சந்தர்ப்பவாதி
என்னை உனது விடத்தால் தொற்றாதே
சீனக் கடையில் வேடிக்கை பார்ப்பவன்
உன்னைத் திருப்பியபோது நீ
அவ்விடத்தில் உறைந்துபோயிருந்தாய்’

ஊடகம் உருவாக்கும் பதற்றத்தை நாம் எதைக்கொண்டு தணிப்பது?  முடிவே யில்லாமல் தனித்த நேர ஒதுக்கீடு ஏதுமின்றி, ஊடகங்கள் இன்று நம்மை ஆக்கிர மித்திருக்கின்றன. இடைவெளியில்லாத இடையீட்டை நிகழ்த்தும் ஊடகங்கள் நம்மை மேலும் மேலும் அமைதியாக்குகின்றன (Mute). நமது எதிர்வினையாகப் பதற்றமுறுவதைத் தவிர வேறொன்றையும் செய்ய முடிவதில்லை. பதற்றம் Muted சமூகத்தின் இயல்பான எதிர்வினை. ஊடகங்களைத் தொடர்ந்து விமர்சிக்கும் மற்றொரு பாடல், நம்மை மைக்ஸோமிடாஸிஸ் நோயால் தாக்குண்டவர்களாக உருவகிக்கிறது. நமது திவான்களின் கருந்துளையில் அசைவின்றி உறைந்தவர்களாக ஊடகங்களின் முன்னே அமர்ந்திருக்கிறோம். ரேடியோஹெட்டால் மைக்ஸிமிடாஸிஸ் போன்ற நோய்களைக் குறித்த சொற்களையும், பாலிஎத்திலீன் போன்ற வேதிச்சொற்களையும் பாடல்களாக்கிவிட முடியும்.   ஊடகங்களை விமர்சிக்கும் அல்லது ஊடகங்கள் நமது மனவெளியில் உற்பத்தி செய்யும் உணர்வுகளைச் சொல்லும் மேலும் சில பாடல்கள் ரேடியோஹெட்டிடம் உண்டு.

மைக்ஸிமிடாசிஸ் மிக உற்சாகமான இசையமைப்பு உள்ள பாடல். அதைப்போலவே `சூனியக்காரியை எரி’ பாடலில் ஊடகங்களின் பிடியிலிருந்து தப்பிக்க நமக்கு ஒரு வழி கிடைக்கிறது. மிக அரிதாகத்தான் தாம் யார்க் நமக்கு அறிவுரைகள் சொல்வார், வழி காண்பிப்பார். ‘சூனியக்காரியை எரி’ பாடல் அப்படிப்பட்ட ஒன்றே. 

`மரக்கதவுகளின் மேலே செஞ்சிலுவைகள்
நீ மிதந்தால் நீ எரிவாய்
மேஜைகளில் பேசும் வெட்டிப் பேச்சு
எல்லாப் பகுத்தறிவையும் கைவிடு
கண்களை நேருக்கு நேர் சந்திப்பதைத் தவிர்
எதிர்வினையாற்றாதே
தூதனைச் சுடு’

`சூனியக்காரியை எரி
சூனியக்காரியை எரி
எங்களுக்குத் தெரியும்
நீ எங்கே வசிக்கிறாய் என்று
எங்களுக்குத் தெரியும்
நீ எங்கே வசிக்கிறாய் என்று’


நம்மை ஊடகங்களிடமிருந்து அல்லது தகவல்களிடமிருந்து விலகியிருக்கச் சொல்லும், அவை எவற்றை விவாதிக்கின்றனவோ அவற்றை நமது உணவருந்தும் மேஜைகளில் விவாதிக்க வேண்டாமென்று அறிவுறுத்தும் இப்பாடலின் இசை, `நிலவின் வடிவிலான குளம்’ ஆல்பத்தின் மற்ற பாடல்களுக்கு முற்றிலும் எதிரான அமைப்பைக் கொண்டிருக்கிறது. ரேடியொஹெட்டின் வழக்கத்திற்கு எதிரானதாக உற்சாகமாக இருக்கிறது.

நாங்கள் இளம் ரத்தத்தை உறிஞ்சுவோம்

மிக  மெதுவான, அதே சமயத்தில் டிப்ரசிவான இன்னுமொரு பாடல் `நாங்கள் இளம் ரத்தத்தை உறிஞ்சுவோம்’ முற்றிலும் முதலாளித்துவத்தை விமர்சிக்கும் ஒன்று. இந்தப் பாடலின் சில வரிகள் திரும்பத் திரும்பப் பாடப்படுகின்றன. குறிப்பிட்ட வரிகள் கணக்கற்ற முறை பாடப்படுவதான அதாவது முடிவில்லாமல் ஒலிக்கும் தோற்றத்தை உருவாக்குவதற்காக, தாம் யார்க் இவ்வாறு பாடுவதுண்டு. உதாரணத்திற்கு மேற்சொன்ன பாடலின்,

`நாங்கள் இளம் ரத்தத்தை உறிஞ்சுவோம்’
(16 முறை)
`உவப்பான தசையே எங்களுக்கு வேண்டும்’
(8 முறை)   
`எங்களுக்கு இளம் ரத்தமே வேண்டும்’
(8முறை)

எனும் வரிகள் தொடர்ந்து பாடப் படுவதின்மூலம் சூழ்நிலையின் தீவிரம் நம்முள் மூள்கிறது.

மகிழ்ச்சி என்பது எளிதில் விளக்கிச் சொல்ல முடியாத ஒரு நிலை. அது மொத்த மனிதச் சமூகத்திற்கும் ஒரு காலத்தில் இருந்ததாகக் கற்பனை செய்வதே பொற்காலங்களுக்கான தனிமனித ஏக்கத்தையும், அரசியல்வாதிகளின் வாக்குகளுக்கான வாக்குறுதியையும் இணைக்கிறது. அதுகாறும் நிலவிய சமூக அமைப்புகளிலேயே புரட்சிகரமானது முதலாளித்துவம் என்கிறார் கார்ல் மார்க்ஸ். ஆனால், அதேசமயம் Consumer Fetishism குறித்தும் எச்சரிக்கிறார். ஒரு மனிதன் வெறும் நுகர்வோனாக எஞ்சுவது அவனது ஆத்மிக நிலையின் வீழ்ச்சி என்றே மார்க்ஸ் மதிப்பிடுகிறார். பத்தொன்பதாம் நூற்றாண்டின் ரொமான்டிஸிஸக் காற்றில், இந்தக் குரல் மாபெரும் அதிர்வலைகளை எழுப்பியிருக்கலாம். ஆனால் பிந்தை முதலாளித்துவம் என எர்னஸ்ட் மண்டல் வரையறுக்கும் முதலாளித்துவத்தின் மற்றொரு கட்டத்தில், மகிழ்ச்சி சிறுசிறு பண்டங்களாக்கப்பட்டு நம் முன்னே விற்பனைக்கு வைக்கப்பட்டிருக்கிறது. மகிழ்ச்சி, விடுதலை போன்ற அரூபமான கருத்துருக்கள் சீனத்தொழிற்சாலைகள் உற்பத்தி செய்யும் பொருள்களில் அவற்றின் உருவங்களைப் பெறுகின்றன. பொருள்களின்றி நமது வாழ்விற்கென்று தனித்த மதிப்பிருக்கிறதா? மதத்திற்கு விக்கிரகங்கள் என்றால் முதலாளித் துவத்திற்குச் சந்தைப் பொருள்கள். 

`ஆப்டிமிஸ்டிக்’ எனும் மற்றொரு பாடல் நமது சூழலும் சமூகமும் எவ்வளவு சுரண்டலுக்கு உள்ளானாலும் நம்மை நேர்மறையாகச் சிந்திக்கச் சொல்லும் நிறுவனங்களைக் கேலிசெய்கிறது. 

`பெரிய மீன் சின்ன மீனை உண்ணும்
பெரிய மீன் சின்ன மீனை உண்ணும்’


எனும் பாடலின் வரிகள், முதலாளித்துவ பண்பாட்டு மதிப்பீட்டை முன்வைக்கின்றன. சமூக டார்வினியச் சித்தாந்தத்திற்கு மிக நெருங்கியதாக இருக்கும் இவ்வரிகள், சிறிய மீன்களான நம்மைப் பெரிய மீன்கள் உண்ண விழைந்தாலும், நமக்கு ஒன்றுமே ஆகாதென்று கண்களை மூடிக்கொள்ளச் சொல்கின்றன. நாமும் கண்களை மூடியவாறு மிக நேர்மறை உணர்வுள்ள வர்களாக இருக்க விரும்புகிறோம். 

ரேடியோஹெட் - மிகைப்பதற்றத்தின் கலைஇன்றோ, நாம் மட்டுமே நுகர்வதில்லை, நாமும் நுகரப்படுகிறோம். நமக்கான பங்கர்களைத் தோண்டச் சொல்லும் ரேடியோஹெட்டின் `இடியோடிக்’ பாடல் இவ்வாறு தொடர்கிறது:

`பனி உறைக்காலம் வருகிறது
பனி உறைக்காலம் வருகிறது
என்னைத் தீயில் தூக்கி வீசு
என்னைத் தீயில் தூக்கி வீசு’

`நாங்கள் பயமுறுத்துபவர்கள் அல்ல
இது உண்மையாகவே நிகழ்கிறது’

`செல்பேசிகள் வேலை செய்கின்றன
செல்பேசிகள் கீச்சிடுகின்றன
பணத்தை எடுத்துக்கொண்டு ஓடு (*2)


அச்சவுணர்வும் அதனால் எழும் பதற்றமும் ரேடியோஹெட்டின் கலைக்கான கச்சாப்பொருள்கள். பாடல்கள் தோறும் அச்சவுணர்வைக் கட்டமைத்து அதனின்று நம்மை விடுவித்துக்கொள்ளும் வழிகளை யோசிக்கச் சொல்கிறார்கள். 

திர்மறையான ஒன்று விடுதலை உணர்வை அளிக்க முடியுமா? ரேடியோஹெட்டின் எந்தப் பாடலைக் கேட்டாலும் என்னால் இந்த எண்ணத்தைக் கடக்க முடிவதில்லை. ஏறக்குறைய ஆறு ஆண்டுகள் ரேடியோஹெட் பாடல்களோடு எனது நேரத்தைச் செலவிட்டிருக்கிறேன். இந்த அளவிற்கு வேறெந்த இசைக்குழுவின் இசையையும் நுகர்ந்ததில்லை. எனினும் பல்லடுக்கு இசை அமைப்பைக்கொண்ட பாடல்கள் ஒவ்வொன்றையும் நினைவில் இருத்திவைக்க சிரமப்பட்டிருக்கிறேன். எளிதில் வசப்படுத்திவிட முடியாத வகையில் அமைக்கப்பட்டிருக்கும் பாடலுக்கான இசை நம்மை வேறொரு தளத்தில்வைக்கிறது. பாடல்வரிகள் உருவாக்கும் அச்ச உணர்விற்கும் பதற்றத்திற்குமான சூழலை உருவாக்கும் இசை, அதன் சிடுக்குகள் நிறைந்த அமைப்பால் வேறொரு அனுபவத்தை அளிக்கிறது. அதுவே கலை செயல்படும் இடமும்கூட.

இசைக்கு நம்மை விடுவிக்கும் ஆற்றல் உண்டு என்று நாம் நம்புவதால் மட்டுமே இலக்கியம், கலை, ஓவியத்திற்கும் மேலாக நாம் இசையின்பால் ஈர்ப்பு குறையாமல் இருக்கிறோம். இசை, நமது மனதில் உண்டாக்கும் நிகழ்விய (Phenomenol) அனுபவத்தை அவ்வளவு எளிதாக நம்மால் சொற்களில் பிரதிபலித்துவிட முடியாது. ரேடியோஹெட்டின் `மைக்ஸிமிடாஸிஸ்’ பாடலை சென்னையின் சந்தடிமிக்க ஒரு தெருவில் ஹெட்போனிலும், `எண்கள்’ எனும் பாடலை ஒரு விமானப் பயணத்திலும் கேட்டிருக்கிறேன். பின்னிரவிலும், அதிகாலையிலும், மாலையிலும் வெவ்வேறு ஊர்களில், வெவ்வேறு தருணங்களில் கேட்டிருக்கிறேன். காஃப்காவின் ‘விசாரணை’ நாவல் அளவிற்கு அவை என்னை சோர்வுறச் செய்திருக்கின்றன. ‘யுலிஸிஸை’ வாசித்த அளவிற்கு அவை என்னைச் சிதைவுறவும் செய்திருக்கின்றன. இவையெல்லாம் பெரும் படைப்புகள் உருவாக்கும் மனநிலைகள். கொஞ்சமாக நீட்டித்துச் சொன்னால் உண்மை உருவாக்கும் மனநிலைகள். 

பாடலின் முடிவில் சோர்வும், இசை ஒலிகளால் எழும் எழுச்சியும் ஒன்றாகக் கலந்த உணர்வே எப்போதும் மிஞ்சுகிறது. ஏறக்குறைய கனவில் கட்டுண்டுகிடக்கும் நிலை. ஒரே சமயத்தில் அச்சத்தையும் அமைதியையும் அளிக்கும் இசை. மனம் அதன் இயல்பில் கொஞ்சம் சோர்வுற்றது. மகிழ்ச்சி என்பது புறத்தூண்டுதலின்றி சாத்தியமற்றது. ரேடியோஹெட்டின் இசை நமது மனதின் இயல்பைத் தூண்டுவதோடு, புறவயத்திலிருந்து ஒலிக்கும் இசையால் ஒரு தற்காலிக விடுதலையுணர்வை அளிக்கிறது. தொழிநுட்ப மொழியில் சொன்னால், இறுக்கத்தை உருவாக்கி அதைத் தளர்த்தவும் செய்கிறது. பெரும்பாலான பாடல்கள் எளிதான இசையமைப்பில் தொடங்கி, பின் பல்லடுக்குகளாக விரிந்து முடிவில் அந்தரத்தில் துண்டாகின்றன அல்லது நீண்ட Outro-க்களோடு (மார்னிங் மிஸ்டர். மெக்பி பாடல்) நம்மைத் தளர்த்துகின்றன. ஏறக்குறைய கால்பந்தாடுவதற்கு ஒப்பானது. தொடக்கத்திலிருந்தே நம்மை இறுக்கத்தில் வைத்திருக்கும் ஒரு விளையாட்டு. ஆனால், கால்பந்தின் உள்ளார்ந்த பொருள், எளிதான ஒரு விடுதலை உணர்வே. அதுவே ரேடியோஹெட்டின் இசையிலும் தொழிற்படுகிறது.  

ரேடியோஹெட் - மிகைப்பதற்றத்தின் கலை

ஐம்பதுக்கும் மேற்பட்ட பாடல்களில் மிகப் பெரும்பாலானவை மிகச் சில பொருள் குறித்தே பேசுகின்றன என்றாலும், ஒவ்வொரு பாடலின் இசையமைப்பும் விரிவான இடத்தில்வைத்து விவாதிக்கப்பட வேண்டியவை. இசை ஞானமிக்கவர்களால் அல்லது விற்பன்னர்களால் மட்டுமே அது சாத்தியம். ஒருசில வினாடிகளே ஒலிக்கும் ஒரு riff-ல் நித்தியக் காலத்திற்கும் கட்டுண்ட உணர்வை நான் அனுபவித்ததை, ‘இசை அதன் மாயமொழியில் படைத்தளிக்கும் கவித்துவத் தருணம்’ என்றே அழைப்பேன். தனிப்பட்ட அனுபவங்களை விவாதிக்க விற்பன்னரின் தொழில்நுட்ப மொழி தேவையில்லை. இசையைப் பொறுத்தவரை யிலும் அப்படியொரு சாத்தியம் உண்டு. 

யாருக்கெல்லாம் இசை தங்களது இருப்பின் தீவிரத்தை அதிகரிக்கும் ஒரு மார்க்கமாக இருக்கிறதோ, ஆழமென்ற ஒன்றின் மீது பற்றிருக்கிறதோ அவர்களுக்கு இந்தக் குழுவைப் பரிந்துரைப்பேன். ரேடியோஹெட்டின் பாடல்களைக் கேட்பதும், அவற்றின் இசையின் பல்லடுக்குச் சிடுக்குகளின் சிலந்தி வலையில் சிக்குவதும் ரோலாண்ட் பார்த் இசையைப் பற்றிச் சொல்வதைப்போல அது ஒரு ‘Drug Consciousness’.

‘உண்மையினால் அழிந்துபோகமலிருக்கவே நமக்குக் கலை இருக்கிறது’ -நீட்ஷே.

ரேடியோஹெட் நமது சமகாலத்தின் உண்மைகளைப் பாடி நம்மைச் சோர்வுறச் செய்தாலும், நாம் அழியாமலிருக்க அவர்களது இசையே ஒரு கலைப்படைப்பின் அளவில் தீராது கிடைக்கிறது. ஸ்டாயிக் தத்துவத்தின்பாலும், பெளத்த துக்க தத்துவத்தின்பாலும் ஈர்ப்புள்ளவர்கள், ரேடியோஹெட்டை பாப் இசையின் பெளத்த பிட்சுகளாகப் பார்ப்பார்கள்.   மேலும்...

பாலசுப்ரமணியன் பொன்ராஜ் 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism