Published:Updated:

```ஐயோ... கால்ல பாதியைக் காணோமே'ன்னு பதறினார் பெருமாள் அண்ணன்!'' - காதல் தம்பதி விஜய் - ஷில்பா

`` `ஐயோ ப்ரோ, கால்ல பாதியைக் காணோமே'ன்னு பதறினாரு பெருமாள் அண்ணன்!''

வாழ்க்கையில் சவால் இருப்பவர்கள்கூட, தங்கள் பிரச்னைகள் தீரும் வரைக்கும் அதில் மூழ்கிக் கிடக்கலாம். ஆனால், உடலில் இருக்கிற சில இயலாமை காரணமாக சில சவால்களைக் கொண்டவர்கள், வாழ்க்கையில் தங்களுக்குக் கிடைக்கிற சின்னச் சின்ன மகிழ்ச்சிகளையும் அர்த்தபூர்வமாக்கிக்கொள்கிறார்கள்.

பெருமாள்
பெருமாள்

ரயில் விபத்தொன்றில் கால்களை இழந்த வேலூர் இளைஞர் விஜய்யையும் அவரை மருத்துவமனைக்கே தேடிவந்து திருமணம் செய்துகொண்ட ஷில்பாவையும் நமக்கெல்லாம் நன்கு தெரியும். அதேபோல, `ஆட்டோகிராப்' படத்தில் இடம்பெறுகிற `ஒவ்வொருப் பூக்களுமே சொல்கிறதே' என்ற பாடலில் தன் புல்லாங்குழல் இசையுடன் நமக்கு அறிமுகமான பெருமாளையும் நமக்கெல்லாம் நன்றாகத் தெரியும். பெருமாள் பார்வைச் சவால் கொண்டவர்.

விஜய், ஷில்பா, பெருமாள் மூவரும் சமீபத்தில் ஒரு ரயில் பயணத்தில் சந்திருக்கிறார்கள். ஒரு ரசிகராக பெருமாளிடம் தன்னை விஜய் அறிமுகப்படுத்திக்கொள்ள, விஜய் - ஷில்பா காதல் கதையை தெரிந்துகொண்ட பெருமாள், அந்தப் பயணத்திலேயே இந்தத் தம்பதிக்காக `ஒவ்வொருப் பூக்களுமே'; `செண்பகமே செண்பகமே' உள்ளிட்ட சில பாடல்களை தன் புல்லாங்குழலில் வாசித்திருக்கிறார். அந்த ஆனந்தத் தருணத்தை நம்முடன் பகிர்ந்துகொண்டார் விஜய்.

"உங்க ரெண்டு பேரையும் பார்க்க முடியலையேப்பா''ன்னு ரொம்ப ஃபீல் பண்ணார்''
விஜய்

"மருத்துவமனை தினத்துல கலந்துக்கிறதுக்காக கே.எம்.சி. ஹாஸ்பிடல்ல என்னைக் கூப்பிட்டிருந்தாங்க. அதுக்காக நானும் ஷில்பாவும் சென்னை வந்திருந்தோம். விழா முடிஞ்சு திரும்ப டிரெயின்ல ஊருக்குப் போயிக்கிட்டிருந்தோம். அப்ப, நானும் ஷில்பாவும் இருந்தப் பெட்டியில பெருமாள் சார் ஏறினார். அவர் விஷூவலி சேலஞ்சுடு அப்படிங்கிறது எனக்கு தெரியும்கிறதால, நான் எழுந்துபோய் அவர் கையில இருந்த ரெண்டுப் பையையும் வாங்கி டிரெயின்ல இருக்கிற ஸ்டாண்டுல மாட்டினேன்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

`ரொம்ப தேங்க்ஸ் தம்பி'ன்னு என் கையைப் பிடிச்சவரை அப்படியே என் பக்கத்துல உட்கார வைச்சிக்கிட்டேன். நீங்க யாரு, என்னப் பண்றீங்க அப்படின்னு பேச்சு எங்களைப் பத்தி திரும்புச்சு. பெருமாள் சார், ஒரு மியூசிக் காலேஜ்ல புரொஃபசர் வேலைக்காக இன்டர்வியூ முடிச்சுட்டு வந்திருந்தார். என்னைப்பத்தி பேச்சு வந்ததும் 'கே.எம்.சி. ஹாஸ்பிட்டல்ல கூப்பிட்டாங்க'ன்னு சொன்னதும், `ஏன்'னு கேட்டாரு. அவரோட கையை எடுத்து, என் ஒரு கால் மேலே வைச்சேன். `ஐயோ ப்ரோ, பாதியைக் காணோமே'ன்னு பதறினாரு. இன்னொரு கால் மேலேயும் அவர் கையை எடுத்து வைச்சேன். 'அச்சச்சோ, இந்தக் காலிலேயும் பாதி இல்லையே'ன்னு கண் கலங்க ஆரம்பிச்சார்.

விஜய் - ஷில்பா
விஜய் - ஷில்பா

அவரைச் சமாதானப்படுத்தினேன். அப்புறம் எனக்கு டிரெயின் விபத்துல கால் போனது, ஷில்பா ஹாஸ்பிடலுக்கே வந்து என்னை கல்யாணம் பண்ணிக்கிட்டது, செயற்கைக் கால்கள் வைச்சதுன்னு எல்லா கதைகளையும் சொன்னேன். என் கையைப் பிடிச்சுக்கிட்டு ரொம்ப ஃபீல் பண்ணார். ஷில்பாவோட குணத்தை ரொம்ப பாராட்டினார். 'உங்க ரெண்டு பேரையும் பார்க்க முடியலையேப்பா'ன்னு ரொம்ப ஃபீல் பண்ணார்'' என்ற விஜய், பெருமாள் புல்லாங்குழல் வாசித்ததை நேரில் கேட்ட அந்த அனுபவத்தையும் சொன்னார்.

"அவரோட பையை எடுத்துத் தரச் சொல்லிக் கேட்டார். நானும் எடுத்துக்கொடுத்தேன். அந்தப் பையில கிட்டத்தட்ட பத்துக்கும் மேலே புல்லாங்குழல்கள் இருந்தன. அதுல ஒண்ணை எடுத்து, `இது மிகச் சிறந்த புல்லாங்குழல். இதுல, முக்கியமான கச்சேரிகள்ல மட்டும்தான் வாசிப்பேன். உனக்காகவும் ஷில்பாவுக்காகவும் இப்போ இந்த புல்லாங்குழலில் வாசிக்கப் போறேன்'னு சொல்லிட்டு `ஒவ்வொரு பூக்களுமே'; `செண்பகமே செண்பகமே'ன்னு மூணு, நாலு பாடல்களை வரிசையா வாசிக்க ஆரம்பிச்சாரு.

"`எனக்கு அந்த புரொஃபசர் வேலை கிடைக்கணும்'னு வேண்டிக்கிறாயா?''
பெருமாள்

எங்களோட டிராவல் பண்ணிக்கிட்டிருந்த அத்தனை பேரும் அவர் வாசிப்பை ஆர்வமா கேட்க ஆரம்பிக்க, எனக்கும் ஷில்பாவுக்கும் ஒரு நிமிஷம் சந்தோஷத்துல என்ன பண்றதுன்னே தெரியலை. ஷில்பாதான் சுதாரிச்சுக்கிட்டு அவர் புல்லாங்குழல் வாசிச்ச அத்தனை பாடல்களையும் வீடியோவாக எடுத்தாங்க'' என்றவர், கடைசியாக சொன்னதுதான் இதயத்தின் அடிப்பகுதியை தொடும்வண்ணம் இருந்தது.

`என் மனைவி ஷில்பாகிட்டே, `பாப்பா உன்னை மாதிரி குணசாலி பொண்ணுங்க பிரேயர் பண்ணினா உடனே பலன் கிடைக்கும். எனக்கு அந்த புரொஃபசர் வேலை கிடைக்கணும்'னு வேண்டிக்கிறியா' என்றார். நாங்க உருகிப் போய் நின்னோம்'' என்கிறார் விஜய்.

''அந்தப் புல்லாங்குழல் இசையை பக்கத்துல கேட்டோம்'' - 'ஒவ்வொருப் பூக்களுமே' பெருமாள் பற்றி ஒரு தம்பதியின் பகிர்வு! #Chennai

Posted by Aval Vikatan on Thursday, August 1, 2019

பயணங்கள் என்பதே புதுப்புது சந்திப்புகளை நிகழ்த்துவதுதானே!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு