Published:Updated:

நேயமுகில் பயணம் - உங்கள் சுட்டிகளுக்கு சொல்ல ஒரு குட்டிக்கதை #DailyBedTimeStories #VikatanPodcast

உங்கள் செல்லக் குழந்தைகளுக்குத் தினமும் இரவில் ஒரு குட்டிக் கதை சொல்வதன் மூலம், அவர்களின் கற்பனைத் திறனை வளர்க்கலாமே...

குட்டிக் கதை
குட்டிக் கதை

இன்றைய கதை... நம்மோடு பேசும் ஒரு பொம்மை இருந்தால், எவ்வளவு நன்றாக இருக்கும்? அது, நம்மை வித்தியாசமான இடத்துக்கு அழைத்துச் சென்றால்?

``அம்மாவுக்கு என் மேலே பாசமே இல்லை. என்னை அவங்களுக்குப் பிடிக்கலை''

தன் மடியில் வைத்திருந்த `ஜூஜி'யிடம் சோகமாகச் சொன்னாள் நேயமுகில்.

நேயமுகிலுக்கு ஆறு வயசு. ஜூஜிக்கு அஞ்சு வயசு. ஆமாம்! நேயமுகிலின் முதல் பிறந்தநாளுக்குப் பரிசாக வந்த `புசு புசு' கரடி பொம்மைதான் ஜூஜி. அந்தப் பிறந்தநாளுக்கு வந்த பல பொம்மைகள் உடைஞ்சுப் போச்சு. பல பொம்மைகள் காணாமல் போச்சு. ஆனா, இந்த ஜூஜி பொம்மை மட்டும் நேயமுகிலுடன் இருக்கு. என்ன... கொஞ்சம் கலர் மாறிப்போச்சு. முன்னே இருந்த புசு புசுவும் குறைஞ்சு இளைச்சுப் போச்சு. ஆனாலும், நேயமுகிலின் பெஸ்ட் ஃப்ரெண்ட் இந்த ஜூஜி.

குட்டிக் கதை
குட்டிக் கதை

தினமும் நடக்கிற விஷயங்களை ஜூஜிவிடம்தான் சொல்வாள் நேயமுகில். டிராயிங் மிஸ் தன்னோட ஓவியத்துக்கு ஃபைவ் ஸ்டார் போட்டது... மேத்ஸ் மிஸ் திட்டினது... சாப்பிடும்போது செளபாஷினி இவள் மேலே தண்ணியைக் கொட்டிட்டு ஒரு ஸாரிகூடச் சொல்லாதது... தர்ஷன் ஒரு கிளி கிராஃப்ட் செஞ்சு கொடுத்தது என, எல்லாவத்தையும் சொல்வாள் நேயமுகில்.

அப்படித்தான் இன்றைக்கு அம்மா பற்றி சொன்னாள் நேயமுகில். பெட்ரூமில் கட்டில் மேலே உட்கார்ந்து, மடியில் ஜூஜியை வெச்சுட்டிருந்தாள். சமையலறையில் வேலையாக இருந்தார் அம்மா.

அடடா... உங்களுக்கு ஒரு விஷயம் சொல்ல மறந்துட்டேனே... இது யாருக்குமே தெரியாத விஷயம். இப்போ, உங்களுக்கு மட்டும் தெரியப்போகுது. ஆமாம்! ஜூஜி ஒரு பேசும் கரடி பொம்மை. நேயமுகிலுடன் தனியாக இருக்கும்போது மட்டும் பேசும். அம்மாவோ, அப்பாவோ, வேற யாராவது பக்கத்தில் இருந்தால் சாதாரண பொம்மையாக இருக்கும்.

குட்டிக் கதை
குட்டிக் கதை
pixabay

இப்போ தனியாகத்தானே இருக்காங்க. அதனால, நேயமுகிலின் சோகத்தைப் பார்த்து கேட்டுச்சு. ``அம்மாவுக்கு உன்னைப் பிடிக்கலைன்னு எதை வெச்சு சொல்றே?''

``ஆமா, முன்னாடி மாதிரி என்னோட விளையாடறதில்லே... பேசறதில்லே. நான் ஏதாவது சொன்னாலும் சிடுசிடுன்னு பேசறாங்க'' என்றாள் நேயமுகில்.

``முன்னாடி உன்னோடு எப்படியெல்லாம் பாசமா இருந்தாங்கன்னு தெரியுமா?'' எனக் கேட்டுச்சு ஜூஜி.

``ஓ... தெரியுமே!''ன்னு சொன்னாள் நேயமுகில்.

``நான் கேட்கறது போன மாசமோ, போன வருஷமோ இல்லை. உன்னோட ஒரு வயசுல, அதுக்கும் முன்னாடி உனக்காக அம்மா என்னவெல்லாம் செய்தாங்க, எவ்வளவு நேரம் செல்வழிச்சாங்கன்னு தெரியுமா?''ன்னு கேட்டுச்சு ஜூஜி.

உதட்டில் விரலைவெச்சு யோசிச்ச நேயமுகில், ``அதெல்லாம் எனக்கு ஞாபகம் இல்லியே''ன்னு சொன்னாள்.

mother
mother
pixabay

``வா... அதைப் போய் பார்க்கலாம்''ன்னு சொல்லிச்சு ஜூஜி.

``அதெப்படி பார்க்க முடியும்?'' என ஆச்சர்யத்தோடு கேட்டாள் நேயமுகில்.

``என் கையைப் பிடிச்சுக்கோ''ன்னு சொல்லிச்சு ஜூஜி.

நேயமுகில் கையைப் பிடிச்சுக்கிட்டதும், அந்தக் கட்டிலும் அந்த அறையும் 'சொய்ய்ய்ங்... சொய்ய்ய்ங்' எனச் சுழல ஆரம்பிச்சது. சில சுற்று முடிஞ்சு நின்னதும், அங்கே கட்டிலுக்குப் பக்கத்தில் ஒரு தொட்டில்... அதில் ஒரு குட்டி பாப்பா!

``அட, யாரிந்த பாப்பா?''ன்னு கேட்டாள் நேயமுகில்.

``அது நீயேதான். பிறந்து கொஞ்ச நாளில்... அந்தக் காலத்துக்கு நாம வந்திருக்கோம்''ன்னு சொல்லிச்சு ஜூஜி.

child
child
pixabay

அந்தப் பாப்பா நேயமுகில் திடீர்னு அழ ஆரம்பிச்சதும், தூங்கிட்டிருந்த அம்மா எழுந்து தூக்கிவெச்சு தட்டிக்கொடுக்க ஆரம்பிச்சாங்க.

``இப்படித்தான் நீ ராத்திரியில திடீர் திடீர்னு முழிச்சுட்டு அழ ஆரம்பிப்பே. அம்மா இரவெல்லாம் கண் முழிச்சு உன்னைப் பார்த்துப்பாங்க''ன்னு சொல்லிச்சு ஜூஜி.

அப்புறம், மறுபடியும் அறை சுழல... ஒரு வயதில் ஒரு காட்சி. இன்னொரு முறை அறை சுழல... இரண்டு வயதில் ஒரு காட்சி... மறுபடியும் அறை சுழல... மூன்று வயதில் ஒரு காட்சி.

இப்படி ஒவ்வொரு முறையும் அம்மாவும் அப்பாவும் எவ்வளவு பாசமா இருந்தாங்கன்னு பார்த்து நேயமுகில் கண் கலங்கிப்போச்சு.

teddy
teddy
pixabay

``இப்படியெல்லாம் உன் மேலே பாசமா இருந்தவங்கதான் அம்மா. இப்பவும் அதே பாசம் இருக்கு. ஆனா, இப்போ நீ கொஞ்சம் வளர்ந்துட்டே. உனக்கான சின்னச் சின்ன விஷயங்களை நீயாக செய்துக்கணும்னு நினைக்கறாங்க. அது உனக்குப் பாசம் குறைஞ்சுட்டதா தோணுது. தவிர, அம்மாவுக்கு ஆபீஸிலும் இப்போ பொறுப்பு கூடிப்போச்சு. வேலை அதிகமாகிடுச்சு. ஆனாலும், உனக்காக நேரம் ஒதுக்கிட்டுத்தான் இருக்காங்க. இதை நீ புரிஞ்சுக்கணும்''ன்னு சொல்லிச்சு ஜூஜி.

ஜூஜி சொல்றது உண்மைதான்னு நேயமுகிலுக்குப் புரிஞ்சது. ஆபீஸ் முடிஞ்சு வரும் அம்மா முகம் சோர்வாக இருக்கும். அப்போதும், `நேயா குட்டி... பால் குடிச்சியா? மதியம் சாப்பிட்டியா?'னு சிரிச்சுக்கிட்டே கேட்டு, கொஞ்ச நேரம் பேசிட்டுத்தான் அடுத்த வேலையைப் பார்ப்பாங்க.

``அதாவது நேயமுகில் நான் என்ன சொல்றேன்னா...'' என ஜூஜி ஏதோ சொல்ல நினைக்க...

``இரு... இரு... நாம அப்புறம் பேசலாம். ஒரு வேலை இருக்கு'' எனச் சொல்லிவிட்டு அறையைவிட்டு வெளியே வந்தாள் நேயமுகில்.

girl
girl
pixabay
மிட்டாய்ப் பெட்டி - உங்கள் சுட்டிகளுக்கு சொல்ல ஒரு குட்டிக்கதை #DailyBedTimeStories
#VikatanPodcast

நேராகச் சமையலைக்குள் நுழைந்தாள். இரவு உணவுக்காக வெண்டைக்காயை நறுக்கிட்டிருந்த அம்மாவை கட்டிப் பிடிச்சுக்கிட்டு, ``அம்மா... ஐ லவ் யூ''ன்னு சொன்னாள் நேயமுகில்.

``லவ் யூ செல்லம்''ன்னு சொன்ன அம்மா, தொப்பி மாதிரி இருந்த வெண்டைக்காயின் கடைசி முனையை எடுத்து, நேயமுகிலின் மூக்கில் ஒட்டினாங்க.

நேயமுகில் சிரித்தாள். அம்மாவும் சிரிச்சாங்க. படுக்கை அறையிலிருந்து பார்த்த ஜூஜியும் சிரிச்சது.

இந்தக் கதையை அழகான குரலில் ஆடியோவாகவும் கேட்க...

சுட்டிகளுக்கு இந்தக் கதையைச் சொல்பவர்: அபிநயா ஶ்ரீகாந்த்