Published:Updated:

கிருத்திக் ஆசையாக வரைஞ்ச `அழகு' ஓவியம் என்ன ஆச்சு? - சுட்டிகளுக்கான குட்டிக்கதை #DailyBedTimeStories

அழகு

உங்கள் செல்லக் குழந்தைகளுக்குத் தினமும் இரவில் ஒரு குட்டிக் கதை சொல்வதன் மூலம், அவர்களின் கற்பனைத் திறனை வளர்க்கலாமே... ஆசை ஆசையா `அழகு' என்கிற ஓவியப் போட்டியில் கலந்துக்க இருந்த கிருத்திக் ஒரு பிரச்னையைச் சந்திச்சான். அதை எப்படிச் சமாளிச்சான்?

கிருத்திக் ஆசையாக வரைஞ்ச `அழகு' ஓவியம் என்ன ஆச்சு? - சுட்டிகளுக்கான குட்டிக்கதை #DailyBedTimeStories

உங்கள் செல்லக் குழந்தைகளுக்குத் தினமும் இரவில் ஒரு குட்டிக் கதை சொல்வதன் மூலம், அவர்களின் கற்பனைத் திறனை வளர்க்கலாமே... ஆசை ஆசையா `அழகு' என்கிற ஓவியப் போட்டியில் கலந்துக்க இருந்த கிருத்திக் ஒரு பிரச்னையைச் சந்திச்சான். அதை எப்படிச் சமாளிச்சான்?

Published:Updated:
அழகு

கிருத்திக் ரொம்ப பிஸியா இருந்தான். அப்பாவின் ஆபீஸ் ரூம் கதவைச் சாத்திக்கிட்டு உள்ளே இருந்தான். அந்தக் கதவில் `தொந்தரவு செய்யாதீங்க' `Do not disturbed' எனத் தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதின காகித்தை ஒட்டி வெச்சிருந்தான்.

அதுமட்டுமா? பக்கத்திலேயே ஒரு பாப்பாவின் தலையையும், அது வாயில் கைவெச்சு `உஷ்' எனச் சொல்ற மாதிரியும் வரைஞ்சு, `இனியா' என்றும் எழுதி வெச்சிருந்தான்.

அழகு
அழகு
pixabay

கிருத்திக் யாரு?

அவனோட அப்பா, அம்மா யாரு?

அப்பாவின் ஆபீஸ் ரூம் எங்கே இருக்கு?

எதுக்காக அந்த அறையில் இருக்கான்?

இனியா யாரு? எதுக்கு அப்படி வரைஞ்சு இருக்கான்?

சுட்டீஸ்... இத்தனை கேள்விகளும் கேட்க தோணுதில்லியா? வாங்க வாங்க... ஒவ்வொண்ணா பார்க்கலாம்!

கிருத்திக் நான்காம் வகுப்புப் படிக்கிறான்.

அவன் அம்மா பெயர், வாணி. அப்பா பெயர், குமார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அவங்க வீட்டிலேயே சின்னதாக ஒரு அறை இருக்கு. அந்த அறையின் மேஜையில் ஒரு கணிப்பொறி இருக்கும். கணிப்பொறின்னா தெரியும்தானே சுட்டீஸ்... அதான், கம்ப்யூட்டர். அலமாரிகளில் புத்தகங்கள் இருக்கும். அதுதான் அப்பாவின் ஆபீஸ் ரூம். சில சமயம் அவசரமா முடிக்கவேண்டிய வேலைகளை அந்த அறையிலிருந்து செய்வார் அப்பா. அதனால், அதுக்கு ஆபீஸ் ரூம்னு பெயர்.

அந்த அறைக்குள்ளேதான் பிஸியா இருக்கான் கிருத்திக். அவனோட பள்ளியில் ஓவிய நிகழ்ச்சி நடக்குது. `அழகு' என்பதுதான் தலைப்பு. அந்தத் தலைப்பை வெச்சு, யார் யாருக்கு எது அழகு எனத் தோணுதோ அதை வரையணும்.

boy
boy
pixabay

அந்த ஓவியங்களை நாளைக்குப் பள்ளியின் கலையரங்கத்தில் வரிசையா காட்சிக்கு வைக்கப் போறாங்க. நிகழ்ச்சிக்கு நடுவராக பெரிய ஓவியர் வரப்போறார். அவர் பெயர் செல்லமுத்து. குழந்தைகளுக்கான கதைப் புத்தகங்களில் நிறைய ஓவியம் வரையறவர். அவர் கையால் பரிசு வாங்கிடணும்னு எல்லோருக்கும் ஆசை. அதே ஆசையோடுதான் இருக்கான் கிருத்திக்.

தான் வரையும்போது யாரும் தொந்தரவு செய்யக்கூடாதுன்னுதான் கதவை மூடி, எழுதியும் ஒட்டியிருக்கான் கிருத்திக்.

இல்லைன்னா கிருத்திக் அம்மா வாணி, `டிபன் சாப்பிட்டு வரையேன் கிருத்திக்' `கடலை உருண்டையாவது சாப்பிடுடா', `ரொம்ப நேரம் குனிஞ்சுட்டே இருக்கியே'னு ஏதாவது சொல்லிட்டே இருப்பாங்க.

அன்பினால்தான் அம்மா அப்படிச் சொல்றாங்க. ஆனா, அதையெல்லாம் பார்த்தா கவனம் சிதறுமே...

அவன் அப்பா குமார் வேற மாதிரி. `கிருத்திக்... அந்தக் கோடு இப்படி வரணும்டா... இந்த கலரை அடிடா'னு சொல்லிட்டே இருப்பார். அதையெல்லாம் செஞ்சா அது எப்படி கிருத்திக் ஓவியமாகும்?

எல்லாம் சரி, ஒரு பாப்பா ஓவியத்தையும் ஏன் வரைஞ்சிருக்கான்? கிருத்திக் தங்கச்சிதான் இனியா. அவளுக்கு ஒரு வயசு ஆகுது. அவளுக்குப் படிக்கத் தெரியாதில்லையா... அதுக்குத்தான் ஓவியமா வரைஞ்சு, அமைதியா இருன்னு சொல்றானாம்.

kids
kids
pixabay

தங்கச்சி இனியா பாப்பாவை அவனுக்கு ரொம்பப் பிடிக்கும். அவளைத் தூக்கிவெச்சுட்டு கொஞ்சுவான்... கதைகள் சொல்வான்... விளையாட்டு காண்பிச்சு சிரிக்க வைப்பான்.

இனியா ரொம்ப குறும்பு... இப்போ நல்லா நடக்க வேற ஆரம்பிச்சுட்டாளா... ஒரு இடத்துல நிற்கறதே இல்லை. கிருத்திக் படிக்கும்போதும், ஹோம் ஒர்க் எழுதும்போதுமே வந்து புத்தகத்தைப் பிடிச்சு இழுப்பாள்.

இது ரொம்ப முக்கியமான ஓவியப் போட்டி ஆச்சே... அதுதான், இனியாவின் தொந்தரவும் இருக்கக் கூடாதுன்னு கதவை மூடிக்கிட்டான்.

அந்த ஆபீஸ் ரூம்ல தரையில் உட்கார்ந்திருந்தான் கிருத்திக். அவனைச் சுற்றி கலர் பென்சில்கள், பேப்பர்கள், ரப்பர் என ஒரே களேபரமா இருந்துச்சு.

வரையறான்... அழிக்கிறான்... யோசிக்கிறான்... வரையறான்... அழிக்கிறான்... யோசிக்கிறான்...

இப்படியே மாற்றி மாற்றி பென்சிலால் வரைஞ்சு முடிச்சதும் முகத்துல ஒரு திருப்தி... அப்புறமா கலர் அடிக்க ஆரம்பிச்சான்.

ஒரு கலர் பென்சிலை எடுக்கிறான்... யோசிக்கிறான்... திரும்ப வெச்சுடறான்... வேற ஒரு கலர் பென்சில் எடுக்கிறான்... யோசிக்கிறான்... திரும்ப வெச்சுடறான்...

இப்படியே மாற்றி மாற்றி செஞ்சு ஓவியத்தை முடிச்சுட்டான். `ஹேய்ய்ய்ய்ய்' என உற்சாகத்தோடு கத்தினான்.

boy
boy
pixabay

வரைஞ்ச ஓவியத்தை எடுத்து, கணிப்பொறி மேஜை மேலே வெச்சுட்டு, கதவைத் திறந்துக்கிட்டு ஓடினான். ஹாலில் ரயில் பொம்மையை வெச்சு விளையாடிட்டிருந்த இனியாவைத் தூக்கினான்.

இவ்வளவு நேரமா அண்ணன் ரூமுக்குள்ளேயே இருந்தானே... நான் கதவைத் தட்டியும் திறக்கலியேன்னு இனியாவுக்குக் கோபம். `ப்போ... ப்போ... விடு'னு சொன்னாள் இனியா.

``ஸாரிடா செல்லம்... ஸாரிடா லட்டு... ஸாரிடா தேன்மிட்டாய்'னு சொல்லிக்கிட்டே, இனியாவின் வலது கன்னத்திலும் இடது கன்னத்திலும்... இடது கன்னத்திலும் வலது கன்னத்திலும்... மாறி மாறி முத்தம் கொடுத்தான் கிருத்திக்.

அவ்வளவுதான்... இனியாவின் கோபம் போயேபோச்சு. அவளும் சிரிச்சுக்கிட்டே, கிருத்திக்கின் வலது கன்னத்திலும் இடது கன்னத்திலும்... இடது கன்னத்திலும் வலது கன்னத்திலும்... மாறி மாறி முத்தம் கொடுத்தாள்.

``அடேய் கிருத்திக்... அவளை கீழே இறக்கிட்டு வந்து சாப்பிடு. அவள் எப்போவோ சாப்பிட்டுட்டா''னு சொன்னாங்க அம்மா.

கிருத்திக் அம்மாவையும் அப்பாவையும் கூட்டிட்டுப் போய் தான் வரைஞ்ச ஓவியத்தைக் காண்பிச்சு விளக்கம் சொன்னான். ரெண்டு பேரும் அவனைப் பாராட்டினாங்க.

boy
boy
pixabay

``சரி, சாப்பிட வா...''னு கூட்டிட்டுப் போனாங்க.

பேசிட்டே சாப்பிட்ட கிருத்திக், அப்புறம் இனியாவைத் தூக்கி வெச்சுக்கிட்டு சோபாவில் உட்கார்ந்தான். அம்மாவும் அப்பாவும் சாப்பிட ஆரம்பிச்சாங்க.

களைப்பாக இருந்த கிருத்திக், சோபாவில் சாய்ஞ்சு தூங்கிட்டான். சாப்பிட்டு வந்த அப்பா அவனைத் தூக்கிக்கிட்டு பெட்ரூம் போனார். விளையாடிட்டிருந்த இனியாவை அம்மா தூக்கிட்டுப் போனாங்க.

அடுத்த நாள் கண் முழிச்சதுமே அப்பாவின் ஆபீஸ் அறைக்குள் போன கிருத்திக்... `அம்மா ஆ ஆ ஆ... அப்பா ஆ ஆ ஆ'னு கத்திக்கிட்டே அழ ஆரம்பிச்சுட்டான்.

ஓடிப்போய் பார்த்தா... அங்கே அவன் ஆசை ஆசையா வரைஞ்ச ஓவியத்துல கலர் கலரா கோடுகள்...

என்ன நடந்துச்சுன்னு புரியுதா சுட்டீஸ்...

ராத்திரி சோபாவில் படுத்துக்கிட்டே கிருத்திக் தூங்கிட்டான் இல்லியா? அம்மாவும் அப்பாவும் சாப்பிட்டுக்கிட்டே பேசிட்டிருந்தாங்க இல்லியா? அப்போ, இனியாவுக்கு என்ன செய்யற்துன்னு தெரியலை. அந்த அறைக்குள்ளே போய், நாற்காலி மேலே ஏறி... கிருத்திக் வரைஞ்சிருந்த ஓவியத்தைப் பார்த்தாள்.

பக்கத்திலேயே கலர் பென்சில்களும் இருந்துச்சா... ஒவ்வொண்ணா எடுத்து... அதே ஓவியத்தில் வரைய ஆரம்பிச்சுட்டா. அப்புறம், மறுபடியும் ஹாலுக்கு வந்து விளையாட ஆரம்பிச்சுட்டா.

girl
girl
pixabay

``ஸாரிடா கிருத்திக்... நாங்களும் கவனிக்கவே இல்லை''னு அம்மா சொல்ல, கிருத்திக் ஒரே அழுகை. ஸ்கூலுக்கே போக மாட்டேன்னு கத்தினான்.

``சரி விடுடா செல்லம்... அடுத்த முறை பரிசு வாங்குவே. கலந்துக்க முடியலைன்னாலும் மத்தவங்க வரைஞ்சு இருக்கிறதையும் நிகழ்ச்சியையும் பார்த்து சந்தோஷப்படலாம்''

அப்படி இப்படி அவனைச் சமாதானம் செஞ்சாங்க. சாப்பிட்டுக் கிளம்பும்போது கிருத்திக் என்ன நினைச்சானோ தெரியலை; அந்த ஓவியத்தை எடுத்துக்கிட்டான். அம்மா, அப்பாவும் ஒண்ணும் சொல்லலை. இனியாவையும் தூக்கிட்டுக் கிளம்பினாங்க.

பள்ளிக்குப் போனதும் இந்த ஓவியப் போட்டிக்குப் பொறுப்பாளராக இருக்கும் கெளதமி மிஸ்கிட்ட போய் என்னமோ சொல்லி, தன் ஓவியத்தைக் காண்பிச்சான் கிருத்திக்.

டீச்சரும் புன்னகை செய்துகிட்டே வாங்கிட்டுப் போய், கண்காட்சி அரங்கில் ஓவியங்களின் வரிசையில் `பின்' பண்ணி வெச்சாங்க.

கொஞ்ச நேரத்தில் நிகழ்ச்சி ஆரம்பிச்சது. சிறப்பு விருந்தினராக வந்து பார்த்துட்டிருந்தார் ஓவியர் செல்லமுத்து. பெற்றோர்களும் பார்த்தாங்க. கிருத்திக் ஓவியத்துக்குப் பக்கத்தில் வரும்போது சிரிச்சுக்கிட்டாங்க.

ஓவியர் செல்லமுத்துவும் அந்த ஓவியத்தைப் பார்த்தார். அவர்கிட்டே கெளதமி மிஸ் என்னமோ சொன்னாங்க. அவரும் புன்னகை செய்தார்.

play
play
pixabay

கிருத்திக் அப்பா அம்மாவுக்கு என்ன நடக்குதுன்னே புரியலை. ஏன்னா, பள்ளிக்குள்ளே வந்ததுமே பெற்றோர்கள் தனியாகவும், குழந்தைகள் தனியாகவும் உட்கார்ந்துட்டாங்க.

எல்லாம் முடிஞ்சு பரிசு கொடுக்கும் நேரம். ஓவியர் செல்லமுத்து தேர்ந்தெடுத்த ஓவியங்களோடு மேடைக்கு வந்தார். அந்த ஓவியங்களை வரைஞ்சிருந்த குழந்தைகளைக் கூப்பிட்டு கை குலுக்கினார்.

முதலில், அந்த ஓவியங்களின் அர்த்தத்தை குழந்தைகள் வாயால் கேட்டுட்டு தன்னோட விளக்கத்தையும் சொன்னார்.

கடைசியில்... ``இப்போ ஒரு சிறப்பு பரிசு. அதை வாங்கப்போறது நான்காம் வகுப்பு கிருத்திக்'' எனச் சொல்லி அந்த ஓவியத்தைக் காண்பிச்சார்.

கிருத்திக் மேடைக்குப் போனான். ஓவியர் செல்லமுத்து அவன் கையைக் குலுக்கினதோடு கன்னத்தில் முத்தமும் கொடுத்தார்.

``இந்த ஓவியத்துக்கு என்ன விளக்கம்... என்ன நடந்துச்சுன்னு கிருத்திக் நீயே சொல்லு'' என்றார் அவர்.

``நான் வரைஞ்ச இந்த ஓவியத்துல என் தங்கச்சி இனியா பாப்பா கிறுக்கிட்டா. முதல்ல எனக்குக் கோபமும் அழுகையும் வந்துச்சு. அப்புறம் யோசிச்சப்போ இதுவும் அழகாத்தான் இருக்குன்னு தோணுச்சு. ஏன்னா, அது என் தங்கச்சி பாப்பாவின் திறமையாச்சே''

kids
kids
pixabay

இப்படி கிருத்திக் சொன்னதும், எல்லோரும் இதுவரைக்கும் இல்லாத அளவுக்கு ஜோரா கைகளைத் தட்டினாங்க.

கிருத்திக் அப்பா, அம்மாவுக்குச் சந்தோஷத்துல அழுகையே வந்துருச்சு. அவங்களையும் இனியாவோடு மேடைக்கு வரச்சொல்லி பரிசு கொடுத்தாங்க.

அந்த ஓவியத்தை கிருத்திக் ஒரு பக்கம் பிடிச்சுக்க, இனியா இன்னொரு பக்கம் பிடிச்சுக்க... மறுபடியும் ஜோரா கை தட்டல்கள்.

என்ன நடக்குதுன்னு புரியலைன்னாலும் இனியாவும் சிரிச்சுட்டே இருந்தாள்.

அவ்வளவுதான் கதை!

இந்தக் கதையை அழகான குரலில் ஆடியோவில் கேட்க...

கதையைச் சொல்பவர்: அபிநயா ஶ்ரீகாந்த்