அந்த வண்ணத்துப்பூச்சி கூட்டத்தில் பல நிறங்களில் வண்ணத்துப்பூச்சிகள் இருந்தன. தமது ஒரே சிறகில் வானவில் போன்று பல வண்ணங்கள்கொண்ட வண்ணத்துப்பூச்சிகள், ஒரே நிறமாக இருந்தாலும் கண்களைப் பறிக்கும் வண்ணத்துப்பூச்சிகள் என்று நிறைய நிறைய இருந்தன.
அதில் 'சிந்து' என்ற வண்ணத்துப்பூச்சி கறுப்பு வண்ணத்தில் இருக்கும். கறுப்பு என்றால், முழுக்க முழுக்க கறுப்பு. சிறகுகள் முழுவதும் கறுப்பு. உடலும் கறுப்பு; உணர்வுக்கொம்புகளும் கறுப்பு. அதனால், சிந்துவுக்கு மிகவும் வருத்தம். யாருடனும் பேசுவதில்லை; விளையாட்டுகளிலும் சேருவதில்லை.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
``நான் ஏன் இப்படிக் கறுப்பாக இருக்கிறேன். எனக்கு ஏன் எந்த வண்ணமும் இல்லை. வண்ணத்துப்பூச்சி என்ற பெயருக்கே பொருத்தமில்லாமல் பிறந்துவிட்டவள் நான்'' என்று வருத்தத்துடன் சொன்னது சிந்து.
``அது என்னமோ உண்மைதான்'' என்றது சிறகுகளில் கண்கள் போன்ற அழகழகான வட்டம் பெற்றிருந்த அந்த நீல வண்ணத்துப்பூச்சி.
அங்குள்ள கூட்டத்திலேயே சிந்து கொஞ்சம் மனம்விட்டுப் பேசுவது இந்த வண்ணத்துப்பூச்சியிடம்தான்.
``நீ ஏன் இதுபற்றி கடவுளிடம் போய் கேட்கக் கூடாது'' என்றும் சொன்னது அந்த நீல வண்ணத்துப்பூச்சி.

``கடவுளிடமா, அவர் எங்கே இருக்கிறார்?'' என்று கேட்டது சிந்து.
``எனக்கும் சரியாகத் தெரியாது. ஆனால், ரொம்ப தூரம் செல்ல வேண்டும். இந்தக் காட்டின் எல்லையில் உள்ள மலையின் மீது அவர் இருக்கலாம்'' என்றது நீல வண்ணத்துப்பூச்சி.
``அது எவ்வளவு தூரமாக இருந்தாலும் நான் செல்கிறேன். என் சிறகுகள் களைத்துத் தளர்ந்தாலும் செல்கிறேன். அந்த மலை எங்கே இருக்கிறது?'' என்று கேட்டது சிந்து.
``இங்கேயிருந்து வடக்குப் பக்கம் போ. போகிற வழியில் கேட்டுக்கோ'' என்றது நீல வண்ணத்துப்பூச்சி.
``இதோ... இப்போதே கிளம்புகிறேன்'' என்று சொல்லிவிட்டு, படபட வெனச் சிறகடித்துப் புறப்பட்டது சிந்து. அதற்கு எப்படியாவது தன் நிறம் மாறிவிட வேண்டும் என்று ஆசை. அதற்காக, எவ்வளவு தூரத்தையும் கடக்க முடிவெடுத்துவிட்டது.

பறந்துசென்ற சிந்து வழியில் ஒரு மயிலைச் சந்தித்தது. வண்ணத் தோகையை விரித்து, அழகாக ஆடிக்கொண்டிருந்த அந்த மயிலைப் பார்த்து சொக்கிப்போனது.
``மயில் மாமா... மயில் மாமா... நீதான் எவ்வளவு அழகு. எனக்கு ஒரு உதவி செய்வாயா?'' என்று கேட்டது சிந்து.
``குட்டிப் பெண்ணே நீயும்தான் அழகு. சொல், உனக்கு என்ன உதவி வேண்டும்?'' என்று கேட்டது மயில்.
``ம்க்கும்... அட்டைக் கறுப்பில் இருக்கும் நானா அழகு'' என்று அலுத்துக்கொண்டது சிந்து.
``என்ன இப்படிச் சொல்லிவிட்டாய். கறுப்பும் ஓர் அழகுதான். எங்களின் பல வண்ணங்களால் ஆபத்துதான் அதிகம். உலகின் ஆதி நிறமே கறுப்புதான். அவ்வளவு ஏன்... நிலத்தில் வாழும் பெரிய உயிரினமான யானையும் கறுப்புதான்'' என்றது மயில்.

இப்போது சிந்துவுக்குக் கடவுள் மறந்து, யானை மீது ஆர்வம் வந்துவிட்டது. ``யானையா... அது யாரு, எங்கே இருப்பாரு?'' என்று கேட்டது.
``அவர் ரொம்ப பெரிய உருவம். இந்தப் பக்கமாகப் போய்ப் பாரு. நிச்சயம் உன் கண்ணிலிருந்து தப்பமாட்டார்'' என்றது மயில்.
``சரி மாமா'' என்றவாறு பறக்க ஆரம்பித்தது சிந்து.
கொஞ்ச தூரம் போனதும் ஒரு பெரிய மரத்தின் கிளையை ஒரே சுழற்றில் முறித்துச் சாப்பிட்டுக்கொண்டிருந்தது அந்தக் கறுத்த உருவம்.
``ஐயா... ஐயா... வணக்கம். நீங்கதானே யானை?'' என்று கேட்டது சிந்து.
``ஆமாம் குட்டிப் பெண்ணே... என்ன விஷயம்?'' எனக் கேட்டது யானை.
``என் பெயர் சிந்து. நான் கடவுளைத் தேடிப் போய்ட்டிருக்கேன்'' என்றது.

``ஓஹோ... என்ன விஷயமா கடவுளைப் பார்க்கப் போய்ட்டிருக்கே?'' என்று கேட்டது யானை.
``என் கறுப்பு நிறத்தை மாற்றலாம்னு...'' என்று தயங்கியது சிந்து.
``அடடா... ஏன் இந்த நிறத்தை மாற்றிக்கொள்ள நினைக்கிறே, கறுப்பு எவ்வளவு அற்புதமான நிறம் தெரியுமா? என்னோட இந்தப் பெரிய உருவம் சரியா இயங்குதுன்னா அதுக்குக் காரணமே கறுப்பு நிறம்தான். வெப்பத்தைத் தாங்கும் அற்புத நிறம் கறுப்பு. ஒவ்வோர் உயிரும் தோன்றும் கருவறை கறுப்புதான். இந்தப் பிரபஞ்சத்தின் மையப் புள்ளியாக இருக்கும் கருந்துளையும் கறுப்புதான்.''
இப்படி யானை இன்னும் சொல்ல சொல்ல சிந்துவுக்கு ஆச்சர்யமாகிவிட்டது.

``ரொம்ப நன்றி ஐயா... எனக்கு இந்த வண்ணமே போதும். நான் மறுபடியும் என் இடத்துக்கே போறேன்'' எனச் சொல்லிவிட்டு உற்சாகமாகப் பறந்தது சிந்து.
தன்னுடைய இடத்துக்கு வந்த சிந்துவைப் பார்த்து, ``அட... அதுக்குள்ளே கடவுளைப் பார்த்துட்டியா?'' என்று கேட்டது நீல வண்ணத்துப்பூச்சி.
``ஓ... பார்த்துட்டேனே'' என்றது சிந்து.
``என்ன சொன்னாரு, அவர் எப்படி இருந்தாரு?'' என்று ஆவலுடன் கேட்டது.
``உலகின் அழகியாக என்னைச் சொன்ன அந்தக் கடவுளும் என்னை மாதிரியே கறுப்புதான்'' என்று புன்னகைத்தது சிந்து.
இந்தக் கதையை அழகான குரலில் ஆடியோவாக கேட்க...
இந்தக் கதையை உங்களுக்குச் சொல்பவர்: அபிநயா ஶ்ரீகாந்த்