Published:Updated:

மிட்டாய்ப் பெட்டி - உங்கள் சுட்டிகளுக்கு சொல்ல ஒரு குட்டிக்கதை #DailyBedTimeStories #VikatanPodcast

உங்கள் செல்லக் குழந்தைகளுக்குத் தினமும் இரவில் ஒரு குட்டிக் கதை சொல்வதன் மூலம், அவர்களின் கற்பனைத் திறனை வளர்க்கலாமே!

குட்டிக் கதை
குட்டிக் கதை

இன்றைய கதை... காட்டில் கிடைக்கிறது ஓர் அட்டைப் பெட்டி நிறைய மிட்டாய்கள். அதைப் பார்த்தது யார்? என்ன நடந்துச்சு?

அந்தக் காட்டில் மரத்துக்கு மரம் தாவிட்டிருந்த குரங்கு, சட்டென நின்னு ஒரு கிளையில் உட்கார்ந்து கீழே பார்த்துச்சு.

`அதென்ன பளபளன்னு ஒரு பெட்டி?' என நினைச்சுட்டே கிளைக்குக் கிளை தாவிக்கிட்டே தரையில் `தப்' என இறங்கிச்சு.

அந்த மரத்துக்குக் கீழே குழந்தைகள் படம் போட்ட வண்ணமயமான ஓர் அட்டைப் பெட்டி இருந்துச்சு. அதை எடுத்த குரங்கு திறந்து பார்த்துச்சு.

குட்டிக் கதை
குட்டிக் கதை

வாவ்... அதுல பச்சை, சிகப்பு, மஞ்சள், ஆரஞ்சு எனப் பல வண்ணங்களில், இதய வடிவில் நிறைய மிட்டாய்கள் இருந்துச்சு. வரிசைக்கு ஐந்து என, ஆறு வரிசைகளில் 30 மிட்டாய்கள் இருந்துச்சு.

`காட்டுக்குள்ளே சுற்றுலா வந்த யாரோ தவறவிட்டிருக்காங்க போல. நமக்கு இன்னிக்கு அதிர்ஷ்டம்தான். யார் முகத்துல முழிச்சோம்'ன்னு யோசிச்சது குரங்கு.

`அட... அந்த ஆராய்ச்சியா இப்போ முக்கியம்? இந்த மிட்டாய்ப் பெட்டியை யார் கண்ணிலும் காட்டாமல் பதுக்கணும்' என நினைச்சுக்கிட்டே நடக்க ஆரம்பிச்சது.

அப்போ, பின்னாடி ஒரு காலடிச் சத்தம்... திரும்பிப் பார்த்தா, அங்கிருந்த புதருக்குள்ளே யாரோ ஒளிஞ்ச மாதிரி தோணுச்சு. செடிகள் லேசாக அசைஞ்சது.

மிட்டாய்ப் பெட்டியை முதுகுக்குப் பின்னாடி மறைச்சுக்கிட்டு, ``ஏய்.. யார் அங்கே?'' என அதட்டலோடு கேட்டுச்சு குரங்கு.

புதர் மறைவிலிருந்து வெளியே வந்த ஒரு முயல் ``ஹி... ஹி... நான்தான் அண்ணாச்சி... எப்படி இருக்கீங்க?'' எனக் கேட்டுச்சு.

குட்டிக் கதை
குட்டிக் கதை
pixabay

``ஓ... நீயா? என்னப்பா திடீர்னு நலம் விசாரிக்கறே?'' எனக் கேட்டுச்சு குரங்கு.

``சும்மாதான்... முதுகுக்குப் பின்னாடி என்ன அண்ணே?'' என முயல் கேட்டதும் குரங்கு தடுமாற ஆரம்பிச்சது.

``அ... அ... அது வந்து... ஒண்ணுமில்லியே'' எனச் சொல்லிச்சு.

``நான்தான் தூரத்திலிருந்து பார்த்தேனே... என்னமோ பெட்டியைத் திறந்து பார்த்துட்டிருந்தீங்க''னு சொல்லிச்சு முயல்.

`பயல் பார்த்துட்டான். இவன்கிட்ட மறைச்சா, நாலு பேர்கிட்ட போய்ச் சொல்வான். அதனால, இவன் வாயை அடைக்க சில மிட்டாய்களைக் கொடுத்துடுவோம்'னு நினைச்சது குரங்கு.

மிட்டாய்ப் பெட்டியை முயலுக்கு முன்னாடி திறந்து காண்பிச்சு, ``சரி, சரி... உனக்கும் சில மிட்டாய்களைக் கொடுக்கிறேன். வேற யாருக்கும் சொல்லக் கூடாது'' எனச் சொல்லிச்சு குரங்கு.

முட்டைக் கண்களை அகலமாக விரிச்சுப் பார்த்த முயல், ``ஆகா சூப்பருண்ணே... உனக்குப் பாதி எனக்குப் பாதி''ன்னு விசில் அடிச்சது.

``எ... என்னது பாதி பாதியா? கண்டுபிடிச்சது நான். உனக்குக் கால் பங்குதான்'' எனச் சொல்லிச்சு குரங்கு.

``அதெப்படி... ரெண்டு நிமிஷம் முன்னாடி வந்திருந்தா இது மொத்தமே எனக்குச் சொந்தமாகி இருக்கும். பாதிக்குப் பாதி கொடுங்க. இல்லைன்னா வேணாம். நான் வேற மாதிரி டீல் பண்ணிக்கிறேன்''னு சொல்லிட்டு நகர்ந்துச்சு முயல்.

monkey
monkey
pixabay

`முயலுக்கு எல்லாம் கொடுக்கு முளைக்கும்னு எதிர்பார்க்கலையே'ன்னு மனசுக்குள்ளே புலம்பின குரங்கு, ``ஏய்... ஏய்... இரு! பாதி பாதியே எடுத்துப்போம்'' எனச் சொல்லிச்சு.

ரெண்டு பேரும் ஆளுக்கு ஒரு மிட்டாயை எடுத்து வாயில் போட்டுக்கிட்டாங்க.

அடடா என்ன சுவை... என்ன சுவை!

``இன்னொரு மிட்டாய்...'' என்ற முயல், இன்னொரு மிட்டாயை எடுத்து வாயில் போட்டுக்கிச்சு.

இப்படியே ஆளுக்கு மூன்று மிட்டாய்களைச் சாப்பிட்டுச்சுங்க குரங்கும் முயலும்.

``சரி, சரி... மிச்சத்தை எங்காவது மறைச்சு வைப்போம். தினமும் எடுத்துச் சாப்பிடுவோம்''னு சொல்லிச்சு குரங்கு.

``ஆமா... ஆமா... யாருக்கும் தெரியாத மாதிரி புதைச்சு வைப்போம்''னு சொல்லிச்சு முயல்.

rabbit
rabbit
pixabay

அந்த மரத்துக்குக் கீழே ஒரு பள்ளம் தோண்டி, மிட்டாய்ப் பெட்டியை அதில் வெச்சு பள்ளத்தை மூடினாங்க. அடையாளத்துக்காக அதன் மேலே ஒரு செடியை நட்டு வெச்சாங்க.

``சரி, நமக்குள்ளே ஒப்பந்தம் போட்டுக்குவோம். ரெண்டு பேரும் ஒரே நேரத்தில் வந்துதான் இதை எடுக்கணும் சரியா?''ன்னு சொல்லிச்சு குரங்கு.

``சரி, சத்தியம்''னு குரங்கின் கையில் அடிச்சது முயல்.

அப்புறம் ரெண்டு பேரும் அவங்க அவங்க வீட்டுக்குப் போய்ட்டாங்க. அன்றைக்கு ராத்திரி திடீர்னு மழை பெய்ய ஆரம்பிச்சது.

அஞ்சு நிமிஷம் இல்லே... பத்து நிமிஷம் இல்லே... ஒரு மணி நேரத்தையும் தாண்டி விடாமல் வந்துட்டிருந்துச்சு மழை.

`அடடா... இந்த மழைக்கு நாம் புதைச்சு வெச்ச மிட்டாய்ப் பெட்டி வெளியே வந்துட்டிருக்குமே... எல்லாமே கரைஞ்சுடுமே... கைக்கு கிடைச்சது வாய்க்குக் கிடைக்காமல் போச்சே'ன்னு வருத்தப்பட்டுச்சு குரங்கு.

முயலும் தன்னோட குழிக்குள் உட்கார்ந்துக்கிட்டு இதையே நினைச்சது. ரெண்டு பேரும் தூங்கவே இல்லை. விடிஞ்சதும் மிட்டாய்ப் பெட்டி இருந்த இடத்துக்கு ரெண்டு பேரும் ஓடி வந்தாங்க.

பார்த்தால், பள்ளம் திறந்து இருந்துச்சு. மிட்டாய்ப் பெட்டியைக் காணலை!

monkey
monkey
pixabay

குரங்கும் முயலும் ஷாக் ஆகிட்டாங்க. அப்புறம், ஒருத்தரை ஒருத்தர் முறைச்சுப் பார்த்துக்கிட்டாங்க.

``ஏய்... காது நீண்ட பையா! எனக்குத் தெரியாமல் எடுத்துக்கிட்டியா?''ன்னு கேட்டுச்சு குரங்கு.

``வால் நீண்ட அண்ணே, நீங்க எடுத்து வெச்சுக்கிட்டு என் மேலே பழி போடறீங்களா? கொட்டற மழையில நான் எப்படி வந்திருக்க முடியும்?''னு முறைச்சது முயல்.

திவ்யாவின் கனவு! - உங்கள் சுட்டிகளுக்கு சொல்ல ஒரு குட்டிக் கதை #DailyBedTimeStories 
#VikatanPodcast

அப்போ, அந்தப் பக்கமாகத் தவ்வி வந்த ஓர் அணில் கையில் இதய வடிவிலான மஞ்சள் மிட்டாய் இருந்துச்சு.

``அட... அணில் பையா, இந்த மிட்டாய் உனக்கு எப்படி கிடைச்சது?''ன்னு கேட்டுச்சு குரங்கு.

``மான் அக்காதான் கொடுத்தாங்க. அதோ, அங்கே இருக்கிற பாறை பக்கம் உட்கார்ந்துக்கிட்டு எல்லோருக்கும் கொடுத்துட்டிருக்காங்க. நீங்களும் போய் வாங்கிக்கங்க''ன்னு சொல்லிட்டு மரத்து மேலே ஏறிடுச்சு.

குரங்கும் முயலும் விழுந்தடிச்சு ஓடினாங்க. அங்கே பாறை மேலே உட்கார்ந்திருந்த மான் அக்கா கையில் அந்த மிட்டாய்ப் பெட்டி. கரடிக்குட்டி, புலிக்குட்டி, பறவைகள் என எல்லோருக்கும் கொடுத்துட்டிருந்துச்சு மான் அக்கா.

deer
deer
pixabay

``வாங்க வாங்க... வரிசையில நில்லுங்க. உங்களுக்கும் மிட்டாய் தரேன்'' எனச் சொல்லிச்சு.

``இ... இது உனக்கு எப்படி கிடைச்சது?''ன்னு கேட்டுச்சு குரங்கு.

``அதோ அங்கே இருக்கிற மரத்துக்குப் பக்கமா நேற்று வந்தப்போ, புதுசா பள்ளம் தோண்டி மூடின மாதிரி இருந்துச்சு. என்னவா இருக்கும்ன்னு தோண்டிப் பார்த்தேன். இந்த மிட்டாய்ப் பெட்டி இருந்துச்சு. சரி, காலையில் எல்லோருக்கும் கொடுப்போம்னு எடுத்துக்கிட்டு என் வீட்டுக்குப் போய்ட்டேன்'' எனச் சொல்லிச்சு மான் அக்கா.

அதைக் கேட்டதும் குரங்குக்கும் முயலுக்கும் வெட்கமா போச்சு. `அடடா... மான் அக்கா மட்டும் மிட்டாய்ப் பெட்டியை எடுத்துட்டுப் போகாமல் இருந்திருந்தா மழையில் கரைஞ்சு வீணாகி இருக்கும். நமக்கு மட்டும் இருந்தா போதும்னு நாம இருந்தோம். கிடைச்சதை எல்லோருக்கும் கொடுக்கணும்னு மான் அக்கா நினைச்சிருக்கு'ன்னு மனசுக்குள்ளே நினைச்சுக்கிட்டாங்க.

``எங்க பங்கை ஏற்கெனவே சாப்பிட்டுட்டோம். நீங்க மத்தவங்களுக்குக் கொடுக்கங்க''ன்னு சொல்லிட்டு குரங்கும் முயலும் கிளம்பினாங்க.

நீங்க எப்படி சுட்டீஸ்... எதுவா இருந்தாலும் ஷேர் பண்ணிப்பீங்கதானே!

இந்தக் கதையை ஆடியோவில் கேட்கலாம்...

உங்கள் சுட்டிகளுக்கு இந்தக் கதையைச் சொல்பவர்: அபிநயா ஶ்ரீகாந்த்.