Published:Updated:

சோப் ஏன் கரையுது? கதவு ஏன் புலம்புது? - குழந்தைகளுக்குச் சொல்ல க்யூட்டான கொரோனா கதைகள்

கொரோனா
News
கொரோனா ( pixabay )

``கேட்ட கதைகளையே கேட்டு, பார்த்த வீடியோக்களையே பார்த்து ரொம்ப போர் அடிச்சுப்போச்சு''னு அலுத்துக்க ஆரம்பிச்சுட்டாங்களா உங்க குழந்தைகள்? அவங்களுக்காக, சுடச் சுட உருவாக்கின கொரோனா குட்டிக் கதைகள் இரண்டு இதோ... உங்க ஆக்டிங் திறமைகளைச் சேர்த்து, குழந்தைகளுக்குச் சொல்லுங்க!

1. சூப்பர் ஹீரோ சோப்!

கொஞ்ச நாளா ஷிவானி வீட்டு பாத்ரூமில் இருக்கும் சோப் டப்பாக்களுக்கு ரொம்ப ஆச்சர்யம். அதோடு கொஞ்சம் குழப்பம். அதோடு, கொஞ்சம் வருத்தம்.

ஷிவானி வீட்டு பாத்ரூமில் இருக்கிற சோப் டப்பாக்களில் நீல கலர்ல இருக்கு பாருங்க... அது அப்பாவுடையது. பிங்க் கலர்ல இருக்கிறது அம்மாவுடையது. முயல்குட்டி வடிவுல ஆரஞ்சு கலர்ல இருக்கிறதுதான் ஷிவானியின் சோப் டப்பா.

soap
soap
pixabay

சரிப்பா... இப்போ அதுங்களுக்கு என்ன ஆச்சர்யம்? என்ன குழப்பம்? என்ன வருத்தம்? வாங்க... அதுங்க பேசறதை கேட்போம்.

``இன்னிக்கு மட்டும் இதோடு பத்தாவது முறையா என்னைத் திறந்து சோப் எடுத்துட்டாரு ஷிவானி அப்பா'' - அப்படின்னு ஆச்சர்யப்பட்டுச்சு நீல கலர் டப்பா.

``இவங்களுக்கு என்ன ஆச்சு? எதுக்கு இப்படித் திறந்து திறந்து, இத்தனை முறை சோப் பயன்படுத்தறாங்க?''னு குழப்பமாச்சு பிங்க் கலர் டப்பா.

``நம்மகிட்ட வர்ற சோப் நிலைமையை நினைச்சா பாவமா இருக்கு. முன்னாடி எல்லாம் காலையில குளிக்க, மாலையில முகம் கழுவ, இரவில் கை கழுவ இப்படித்தான் பயன்படுத்துவாங்க. நம்மகிட்ட வர்ற சோப் ரொம்ப நாளைக்கு இருக்கும். ஃப்ரெண்ட்ஸா பேசிட்டு இருப்போம். இப்போ வர்ற வேகத்துல கரைய ஆரம்பிச்சுடறாங்க. நாலு வார்த்தை பேசக்கூட முடியலை''னு வருத்தப்பட்டுச்சு ஷிவானியின் முயல்குட்டி டப்பா.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

``ஓ... இதுதான் உங்க வருத்தமா? உங்க அக்கறைக்கு ரொம்ப நன்றி. நீங்க உள்ளேயே இருக்கிறதால விஷயம் தெரியலை. நாங்க வெளியே இருந்து வந்ததால என்ன நடக்குதுன்னு தெரியும்'' - அப்படின்னு சொல்லிச்சு அப்பாவின் சோப்.

``ஆமா... உலகம் முழுக்க கொரோனா என்கிற வைரஸ் தொற்றுநோயாகப் பரவிட்டிருக்கு. அதைத் தடுக்கும் முக்கிய விஷயங்களில் சுத்தமும் ஒண்ணு. அதுக்கான வேலையில நாங்களும் இருக்கோம்''னு சொல்லிச்சு அம்மாவின் சோப்.

``ஓஹோ... அதனாலதான் எல்லோரும் பலமுறை கை கழுவிட்டே இருக்காங்களா? அப்போ, சீக்கிரமே பிரச்னை தீரட்டும். ஆனா, நீங்க எல்லாம் இவ்வளவு சீக்கிரம் கரைஞ்சு, உங்களை தியாகம் செய்துக்கிறதை நினைச்சா...''னு மறுபடியும் வருத்தப்பட்டுச்சு முயல்குட்டி டப்பா.

soap
soap
pixabay

``நாங்க மட்டுமா தியாகம் பண்ணிட்டிருக்கோம். உலகம் முழுக்க டாக்டர்ஸ், நர்ஸ், க்ளீனர்ஸ், போலீஸ்னு இன்னும் நிறைய வேலையில் இருக்கிறவங்க, இந்தக் கொரோனா கிருமிக்கு எதிரா ஓடி ஓடி உழைச்சுட்டு இருக்காங்க. அதில், எங்களுக்கும் இப்படி ஒரு வாய்ப்பு கிடைச்சு இருக்கிறதை நினைச்சு பெருமைப்படறோம். ஷிவானி மாதிரி உலகத்துல இருக்கிற எல்லாக் குழந்தைகளும், எல்லாப் பெரியவங்களும் பாதுகாப்போடு ரொம்ப நாளைக்கு சந்தோஷமா இருக்கணும். அதுக்காக, எங்களை நாங்க சீக்கிரமே கரைச்சுக்கிறதில் சந்தோஷம்தான்'' - அப்படின்னு சொல்லிச்சு ஷிவானியின் சோப்.

அந்த நேரம் உள்ளே வந்த ஷிவானி, அந்த சோப்பை எடுத்து கையில் தேய்ச்சு கழுவ ஆரம்பிச்சா. அந்த சோப், வாசனையோடு சிரிப்பு நுரைகளை விட்டுக்கிட்டே கரைய ஆரம்பிச்சது.

சோப் டப்பாக்களும் சந்தோஷமா பார்க்க ஆரம்பிச்சதுங்க.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

2. வந்துட்டான்ய்யா... வந்துட்டான்ய்யா...

``ஆஹா... வந்துட்டான்ய்யா... வந்துட்டான்ய்யா... மறுபடியும் வந்துட்டான்ய்யா'' - அப்படின்னு வடிவேலு ஸ்டைலில் புலம்ப ஆரம்பிச்சது அது.

எது?

சரத் வீட்டு வாசல் கதவின் கைப்பிடி.

``என்னது மறுபடியுமா? கொஞ்சம் முன்னாடிதானே வந்தான்? இது என்னடா சோதனை?''னு எரிச்சலாச்சு உள்ளே இருந்த ஹால் கதவின் கைப்பிடி.

man
man
pixabay

``உனக்கு அப்புறம் என்கிட்டதானே வருவான். மறுபடியும் அவன் நாற்றத்தை சுவாசிக்கணுமா?''னு அலுத்துக்கிச்சு ஹாலில் இருந்த சோபாவின் பக்கவாட்டு கம்பிகள்.

``என்னை மட்டும் விடுவானா? என்னோட அழகான பூ டிசைன் உடம்பு முழுக்க போட்டுத் தேய்ப்பானே... கடவுளே''னு கதறிச்சு சோபாக்கு எதிர்ல இருந்த டீப்பாய். அதன்மேலே கிளாஸ், ரிமோட், ஒரு பிஸ்கட் டப்பா எல்லாம் இருந்துச்சு.

``என்னையும் விடமாட்டேங்கறாங்க. என் மேலே தடவித் தடவி நம்பர், எழுத்து எல்லாம் மறைஞ்சுடும் போல'' - அப்படின்னு சலிச்சுக்கிச்சு டிவி ரிமோட்.

``என்னையே தைரியமா தொடறாங்க. நீ என்ன பெரிய இதுவா?''னு கேட்டுச்சு சுவரில் இருந்த சுவிட்ச் போர்டு.

இவங்க இப்படி யாரை நினைச்சு இப்படி அலறராங்க? கதறராங்க? புலம்பறாங்க..?

இதோ நீங்களே பாருங்க... வாங்க, மறுபடியும் வாசல் கதவுகிட்ட போகலாம்.

வாசல் கதவின் கைப்பிடிக்குப் பக்கத்துல சரத் அப்பா வந்து நின்னார். அவர் கையில சின்ன வாளி. அதுல பாதி அளவு தண்ணீர். அதுல தரையைச் சுத்தம் செய்யற கிருமிநாசினியைக் கொஞ்சம் ஊற்றினார். ஒரு துணியை அதுக்குள்ளே விட்டு நனைச்சார். அப்புறம், ஈரத் துணியால் கதவின் கைப்பிடியை அழுத்தமா துடைக்க ஆரம்பிச்சார்.

``ஐயோ... நாற்றம் தாங்கலையே... இன்னும் எத்தனை நாளைக்குடா இந்தக் கஷ்டம்''னு புலம்பிச்சு கதவு கைப்பிடி.

remote
remote
pixabay

``நானும் உங்களை மாதிரி புலம்பிட்டு இருக்கப்போறதில்லே. இன்னிக்கு என்கிட்ட வரட்டும். ஒரு சுவிட்ச்சை தொடட்டும். கரண்ட் விட்டு நான் யாருன்னு காட்டறேன்'' - அப்படின்னு கோபமா சொல்லிச்சு சுவிட்ச் போர்டு.

இவ்வளவு நேரமா இதையெல்லாம் கேட்டுக்கிட்டு அமைதியா இருந்த அந்த டிவி, ``தம்பி... விஷயம் தெரியாம நீங்க இப்படிக் கோபப்படறதும் புலம்பறதும் சரியில்லே. எல்லாம் நல்லதுக்காக நடத்துற விஷயம்''னு பேச ஆரம்பிச்சது.

``என்ன நல்லது?''னு கேட்டுச்சு ரிமோட்.

``நீயே விஷயம் புரியாம இப்படிக் கேட்கலாமா? என்னைத் திறந்தாலே கொரோனா, கொரோனானு சொல்லிட்டிருக்கேனே கவனிக்கலையா? அந்தக் கிருமி வெளியே போய்ட்டு வர்றவங்க, அவங்க வெளியே தொட்டுட்டு வர்ற பொருள்கள் மூலம், உங்களைத் தொடறப்போ உங்ககிட்டேயும் தங்கிடும். அதுக்கு அப்புறம், உங்களைத் தொடற ஒவ்வொருத்தர் மூலமும் வீட்டுல இருக்கிற அத்தனை பேருக்கும் பரவும். அப்படி நடக்காம இருக்கணும்ன்னா, வீட்டுல எல்லோரும் அடிக்கடித் தொடும் பொருள்கள் மேலே இப்படிச் சுத்தம் பண்ணனும். அதைத்தான் சரத் அப்பா செஞ்சுட்டிருக்கார். அது தப்பா?''னு பொறுமையோடு சொல்லிச்சு டிவி.

clean
clean
pixabay

``அடடா... இதுதானா விஷயம்? நம்ம வீட்டுல இருக்கிறவங்க நல்லா, ஆரோக்கியமா இருக்கிறது ரொம்ப முக்கியம். அதுக்காக, நாற்றம், அழகுன்னு பார்த்துட்டு இருக்காம இதை ஏற்றுப்போம்''னு சொல்லிச்சு சுவிட்ச் போர்டு.

சரத் அப்பா வந்து துடைத்தபோது அமைதியா, புன்னகையோடு இருந்துச்சு.