Election bannerElection banner
Published:Updated:

காகம் கயலும் குட்டிப் பாப்பாவும் - சுட்டிகளுக்கான குட்டிக்கதை #DailyBedTimeStories #VikatanPodcast

காகம்
காகம்

உங்கள் செல்லக் குழந்தைகளுக்கு, தினமும் இரவில் ஒரு குட்டிக் கதை சொல்வதன்மூலம், அவர்களின் கற்பனைத் திறனை வளர்க்கலாமே... தினமும் தனக்கு உணவு வைக்கும் வீட்டில் இருக்கிற அம்மாவுக்கு, காகம் கயல் ஒரு உதவி செய்தது. அது என்ன?

தன் கூட்டிலிருந்து மெதுவாக தலையைத் தூக்கிப் பார்த்துச்சு காகம் கயல்.

அந்தக் கூடு, ஒரு புங்கை மரத்தில் இருந்தது. நீங்க புங்கை மரத்தைப் பார்த்திருக்கீங்களா சுட்டீஸ்?

புங்கன் என்கிற புங்கை மரம், இந்தியா போன்ற ஆசிய நாடுகளில் அதிகமாக வளரும். வெப்பத்தைத் தடுத்து குளிர்ச்சியைக் கொடுக்கிறது மரம். காற்றில் இருக்கும் கார்பன்-டை-ஆக்சைடை இழுத்து, சுத்தமான காற்றைக் கொடுக்கும் மரம்.

Vikatan Podcast
Vikatan Podcast

ஆனால், இப்போதெல்லாம் இந்த மரம் குறைஞ்சுட்டே வருது. அதிலும், நகரங்களில் இந்த மரங்களைப் பார்க்கிறதே ரொம்ப அதிசயமாகிவருது. அப்படி ஒரு மரத்தில்தான் காகம் கயல், கூடு கட்டி தன் குஞ்சுகளுடன் வசிக்குது.

அதோ... கயல் தலையைத் தூக்கினதும் அதன் சிறகுகளுக்குக் கீழே குட்டிக்குட்டியா மூன்று உருவங்கள் தெரியுது பாருங்க... அவைதான் கயலின் குஞ்சுகள்.

அது ஒரு மதிய நேரம். என்னதான் புங்கன் மரமாக இருந்தாலும், வெயில் ரொம்ப அதிகம் இருந்தது. தன் குஞ்சு மேலே கொஞ்சம் வெப்பமும் படக்கூடாதுன்னுதான் சிறகுகளால் மூடிட்டு இருந்துச்சு கயல்.

கயல் எழுந்ததும் சிறகுகள் விலகி, வெளிச்சம் பட்டதும் கண் விழித்த அந்தக் குஞ்சுகள், `அம்மா பசிக்குது... அம்மா பசிக்குது...'ன்னு கேட்க ஆரம்பிச்சதுங்க.

கூட்டைவிட்டு கிளைக்குத் தாவின காகம் கயல், தரையில் விழும் மரத்தின் நிழலை கவனிச்சது. எதுக்குன்னு தெரியுமா சுட்டீஸ்? சொல்லுங்க பார்ப்போம்...

ம்... கரெக்ட்! காகம் கயல் நேரம் பார்க்குது. முற்காலத்தில், சூரியன் மற்றும் சந்திரனின் நிழலை வெச்சுதான் மனிதர்களே நேரம் கண்டுபிடிப்பாங்க. அப்புறம்தான் மணல் கடிகாரம் வந்துச்சு.... சுவர் கடிகாரம் வந்துச்சு... கைக் கடிகாரம், டிஜிட்டல் கடிகாரம் என வந்துச்சு.

காகம்
காகம்
pixabay
ஆண்கள் இல்லாத நாடு - சுட்டிகளுக்கான குட்டிக் கதை #DailyBedTimeStories

இதெல்லாம் மனிதர்கள் கண்டுபிடித்தவை. ஆனால், பறவைகளும் விலங்குகளும் இப்பவும் இயற்கையை வெச்சுதான் நேரம் தெரிஞ்சுக்கும். அப்படித்தான் காகம் கயலும் இப்போ நேரம் பார்க்குது.

``அம்மா பசிக்குது... அம்மா பசிக்குது''ன்னு மறுபடியும் குஞ்சுகள் கத்த ஆரம்பிச்சது.

`ம்... சரியான நேரம்தான்' என மனசுக்குள்ளே நினைச்சுக்கிட்ட காகம் கயல், ``கொஞ்சம் பொறுங்க செல்லங்களா... அம்மா சாப்பாட்டுடன் வரேன்'' எனச் சொல்லிவிட்டு, `படபட' னு சிறகை அடிச்சுக்கிட்டு பறந்துச்சு.

அந்த புங்கன் மரம் இருக்கிறது ஒரு நகரத்தில். பெரிய பெரிய கட்டடங்கள் நிறைந்த நகரம். அதனால், அங்கே பறவைக் குஞ்சுகளுக்கு இயற்கையாகக் கிடைக்கவேண்டிய புழுக்களோ, தானியங்களோ கிடைப்பது ரொம்ப கஷ்டம். அப்புறம் பறவைகளும் குஞ்சுகளும் என்ன சாப்பிடும்?

அவை மனிதர்களைச் சார்ந்து, அவங்க கொடுக்கும் உணவைச் சார்ந்து இருக்கும். நீங்ககூட பார்த்திருப்பீங்களே... புறாக்களுக்கு அரிசி கொடுக்கிறது, காகங்களுக்கு உணவு வைக்கிறது...

ஆங்... அப்படித்தான் காகம் கயலும் இந்த நேரத்தில் வழக்கமாக உணவு வைக்கும் ஒரு வீட்டுக்கு போகப்போகுது. அந்த உணவைத் தன் அலகால் எடுத்துவந்து, நல்லா அரைச்சுக் கூழாக்கித் தன் குஞ்சுகளுக்குக் கொடுக்கும்.

crow
crow
pixabay

நம்ம வீட்டுல அம்மா, சாதத்தைக் கிண்ணத்தில் போட்டு, கையால் நல்லா பிசைஞ்சு ஊட்டுவாங்க. பறவைகளுக்குத்தான் கை இல்லியே... அதனால், வாயிலேயே அரைச்சுக் கொடுக்கும்.

சரி சரி வாங்க... காகம் கயல் எந்த வீட்டுக்குப் போகுதுனு பின்னாடியே போய் பார்ப்போம்.

பறந்துபோன காகம் கயல், ஒரு கோயிலைக் கடந்துச்சாம். அடுத்து, வரிசையாக இருந்த கடைகளைக் கடந்துச்சாம்... அப்புறம் ஒரு தெருவுக்கு வந்துச்சாம். அங்கே, இடது பக்கத்தில் எட்டாவதாக இருந்த ஒரு வீட்டின் மொட்டைமாடியில் வந்து இறங்கிச்சு.

அந்த வீட்டுல இருக்கும் ஒரு அத்தைதான் காகத்துக்கு தினமும் சாப்பாடு வைப்பாங்க. அந்த அத்தைக்கு ஒரு குட்டிப் பாப்பா இருக்கு. பிறந்து சில மாசங்களே ஆகியிருக்கும் பாப்பா அது.

மொட்டைமாடிக்கு வந்த காகம் கயலுக்கு ஏமாற்றமா இருந்துச்சு. ஏன்னா, அங்கே வழக்கமா சின்ன சிமென்ட் மேடை மேலே சாப்பாடு வைக்கும் இடம் காலியா இருந்துச்சு.

`என்ன ஆச்சு... ஏன் சாப்பாடு வைக்கலை? நாம சீக்கிரம் வந்துட்டோமா? இல்லே... அவங்க லேட்டா வைப்பாங்களா...' என நினைச்ச கயல், `க்கா... க்கா... கா... கா...' எனக் குரல் கொடுத்துச்சு.

``இந்தாம்மா... எதுக்கு கத்தறே? இன்னிக்கு உனக்கு புவ்வா கிடையாது'' என்ற குரல் கேட்டு, தலையைத் திருப்பிப் பார்த்துச்சு காகம் கயல்.

cat
cat
pixabay
காட்டுப் பள்ளியில் நடந்த கலகல மாறுவேடப் போட்டி - சுட்டிகளுக்கான குட்டிக்கதை #DailyBedTimeStories

அங்கே, சுவர் ஓரமா ஒரு பூனை படுத்திருந்துச்சு. கயல் இங்கே வரும்போதெல்லாம் இந்தப் பூனையைப் பார்க்கும். அதற்குப் பக்கத்தில் ஒரு கிண்ணத்தில் இருக்கும் பாலை குடிச்சுக்கிட்டு இருக்கும்.

காகத்துக்கு சாப்பாடு வைக்கும் அதே அத்தைதான் இந்தப் பூனைக்கும் பால் வைப்பாங்க. ஆனால், இப்போ அந்தக் கிண்ணமும் காலியா இருந்துச்சு. அதனால், அந்தப் பூனையும் சோகமா இருந்துச்சு.

``எ... என்னது... இன்னிக்கு புவ்வா கிடையாதா... ஏன்?'' எனக் கேட்டுச்சு காகம் கயல். தன் குஞ்சுகளுக்கு சாப்பாடு கிடைக்காதோ என்கிற கவலை.

``இந்த வீட்டு பாப்பா அழுதுட்டு இருக்கே... உன் காதுல விழலையா?'' என அலுத்துக்கிச்சு பூனை.

அப்போதுதான் காகம் கயல் கவனிச்சது. அட ஆமாம்!

`ங்ஙா... ங்ஙா... ங்ஙா...' எனக் குழந்தையின் அழுகைச் சத்தம் கேட்டுச்சு.

``அடடா... அந்தப் பாப்பாவுக்கு என்ன ஆச்சு?'' எனக் கேட்டுச்சு கயல்.

``யாருக்குத் தெரியும்? ரொம்ப நேரமா அழுதுட்டே இருக்கு'' என சலிச்சுக்கிச்சு பூனை.

baby
baby
pixabay

காகம் கயல் அந்த இடத்துல இருந்து பறந்து, வீட்டின் ஜன்னல் பக்கம் வந்துச்சு. அங்கிருந்த சின்ன இடத்துல உட்கார்ந்து பார்த்துச்சு.

வீட்டுக்குள்ளே அந்த அத்தை தன் குழந்தையை மடியில்வெச்சு தட்டிக்கிட்டு இருந்தாங்க.``அழாதடா செல்லம்... என்னடா ஆச்சு? வயிறு வலிக்கிதா? பசியா, எதுக்கு அழற?'' எனக் கேட்டுட்டு இருந்தாங்க.

ஆனால், அந்தப் பாப்பா அழுதுட்டே இருந்துச்சு. ``ங்ஙா... ங்ஙா... ங்ஙா...''

இதைப் பார்த்த காகம் கயலுக்கு எதுவும் புரியலை. அப்போ, உள்ளே ஜன்னலை ஒட்டி சுவரில் இருந்த ஒரு பல்லியைப் பார்த்துச்சு கயல்.

``பல்லியே... பல்லியே... என்ன ஆச்சு... பாப்பா ஏன் அழுவுது?'' எனக் கேட்டுச்சு.

``அந்தப் பாப்பாவின் கழுத்துக்குப் பக்கத்துல ஒரு எறும்பு தெரியாமல் ஏறிடுச்சு. அங்கிருந்து இறங்கத் தெரியாமல் பாப்பாவை கடிச்சுட்டு இருக்கு. அது தெரியாம இந்த அத்தை, வேற என்னென்னமோ பண்றாங்க'' எனச் சொல்லிச்சு பல்லி.

``அடடா...'' என வருத்தப்பட்டுச்சு காகம் கயல்.

``நானும் குரல் கொடுத்து சொல்லிப் பார்த்தேன். நம்ம மொழிதான் மனிசங்களுக்குத் தெரியாதே'' எனச் சொல்லிச்சு பல்லி.

காகம் கயலுக்கு உடனே ஒரு யோசனை வந்துச்சு. ``கா... கா... க்கா... க்கா...'' என சத்தமா கத்த ஆரம்பிச்சது.

அந்த அத்தை, ``அடடா... விஷயம் புரியாம இந்தக் காக்கா வேற கத்திட்டிருக்கே'' எனச் சொல்லிக்கிட்டாங்க.

ஆனாலும் காகம் கயல், விடாமல் கத்த ஆரம்பிச்சது.

``பாவம்... நம்ம கஷ்டம் அதுக்கு என்ன தெரியும்? வாயில்லா ஜீவன். சாப்பாடு வைப்போம்'' என்று சொல்லிக்கிட்டே, குழந்தையைத் தூக்கிக்கிட்டு சமையல் அறைக்குப் போனாங்க அத்தை.

தன் திட்டம் பலிச்சுட்டதை நினைச்சு, சந்தோஷமா மொட்டைமாடிக்கு வந்துச்சு காகம் கயல்.

baby
baby
pixabay

கொஞ்ச நேரத்துல, ஒரு கையில் சாப்பாட்டுக் கிண்ணத்துடனும், இன்னொரு கையில் குழந்தையைத் தோளில் அணைச்சுக்கிட்டும் வந்தாங்க அந்த அத்தை.

சாப்பாடை அந்த சின்ன மேடை மேலே வைக்க குனிஞ்சாங்க. அப்படிக் குனியும்போது, பாப்பாவின் கழுத்துப் பக்கம் விரிஞ்சு நல்லா வெயில் பட்டுச்சு. இவ்வளவு நேரம் அங்கே சுருண்டு இருந்த எறும்பு மேலேயும் வெயில் பட்டுச்சா... அது உடனே உடம்பை குலுக்கிச்சு.

அவ்வளவுதான்... பாப்பாவின் கழுத்துப் பகுதியில் இருந்து நழுவி, அத்தையின் கையில் விழுந்துச்சு.

``அடடா... இவ்வளவு நேரம் எறும்பு கடிச்சுதான் அழுதியா தங்கம்'' என்று சொன்ன அந்த அத்தை, கையை உதறினாங்க.

எறும்பு கீழே விழுந்து ஓடிச்சு. பாப்பாவும் வலி நீங்கி, காகம் கயலைப் பார்த்து சிரிச்சது. இதைப் பார்த்த பூனை, `மியாவ்' எனக் குரல் கொடுத்துச்சு.

``அடடா... உனக்கும் பால் வைக்கலையா? இரு கொண்டு வரேன்'' என்று சொல்லிட்டு சந்தோஷமா போனாங்களாம் அந்த அத்தை.

crow
crow
pixabay
யானைத் தலைவன் மகன் தும்பு ஏன் சோகமா இருக்கான்? - சுட்டிகளுக்கான குட்டிக்கதை #DailyBedTimeStories  

``ரொம்ப நன்றி காகமே... நான் எனக்குக் கிடைக்கலையேன்னு மட்டும் கவலைப்பட்டுட்டு இருந்தேன். அந்த அத்தையின் பிரச்னையை யோசிக்கலை. ஆனால், நீ ஒரே நேரத்தில் அவங்க பிரச்னையையும் தீர்த்துட்டே. நம்ம பிரச்னையையும் தீர்த்துட்டே'' எனச் சொல்லிச்சு பூனை.

சிரிச்ச காகம், தனக்கும் தன் குஞ்சுகளுக்கும் சாப்பாட்டை எடுத்துக்கிட்டு பறந்துபோச்சாம்!

என்ன சுட்டீஸ்... கதை பிடிச்சிருந்துச்சா?

இந்தக் கதையை அழகான குரலில் கேட்க...

கதை சொல்பவர்: அபிநயா ஶ்ரீகாந்த்

Today
Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு