Published:Updated:

திவ்யாவின் கனவு! - உங்கள் சுட்டிகளுக்கு சொல்ல ஒரு குட்டிக் கதை #DailyBedTimeStories #VikatanPodcast

குழந்தைகளுக்கான கதைகள்

தினமும் உங்கள் செல்லக் குழந்தைகளுக்கு, இரவில் ஒரு கதை சொல்வதன் மூலம் கற்பனைத்திறனை வளர்க்கலாமே...

திவ்யாவின் கனவு! - உங்கள் சுட்டிகளுக்கு சொல்ல ஒரு குட்டிக் கதை #DailyBedTimeStories #VikatanPodcast

தினமும் உங்கள் செல்லக் குழந்தைகளுக்கு, இரவில் ஒரு கதை சொல்வதன் மூலம் கற்பனைத்திறனை வளர்க்கலாமே...

Published:Updated:
குழந்தைகளுக்கான கதைகள்

அன்றைக்கு, கனவுலகில் ஒரே பரபரப்பா இருந்துச்சு. மேகத்தால் செய்த அந்தப் பெரிய கதவுள்ள அறைக்கு வெளியே, எட்டி எட்டிப் பார்த்துக்கிட்டும், யதேச்சையாக அந்தப் பக்கம் போற மாதிரியும் இருந்தாங்க டிடி (DD- Dream Delivery) ஆட்கள்.

நம்ம எல்லோரும் தூங்கறப்போ கனவுகள் வருதில்லியா? அந்தக் கனவுகளைக் கொடுக்கிறதுக்காக, ஓர் உலகமே இயங்கிட்டு இருக்கு. அங்கே, பல டிப்பார்ட்மென்ட்ஸ் இருக்கு. அந்த உலகத்தில் முதன்மை கனவுப் பொறுப்பாளர், தலைமை கனவுப் பொறுப்பாளர்கள், கனவு வடிவமைப்பாளர்கள், கனவு கண்காணிப்பாளர்கள், கனவுகளைக் கொண்டுசேர்க்கும் டெலிவரி ஆட்கள் என நிறைய பேர் இருக்காங்க.

story
story

இவங்க எல்லோரின் வேலையுமே முக்கியமானதுதான். ஆனாலும், இந்த டிடி ஆட்கள் வேலை ரொம்ப முக்கியமானது. அந்த நாளில் யார் யாருக்கு எந்த எந்தக் கனவுகள் கொடுக்கப்படணும்னு முடிவாகித் தயாரானதும், இவங்ககிட்ட ஒப்படைப்பாங்க. நாம எல்லோரும் அசந்து தூங்கற இரவில்தான் இவங்க வேலை சுறுசுறுப்பாகும். (சிலர் பகலில் தூங்கி, பகல் கனவுகள் காண்பாங்க. அவங்களுக்கும் வியர்க்க வியர்க்க கொண்டுபோய் சேர்க்கணும்)

dream
dream

இந்த டெலிவரி ஆட்களிலும், பெரியவங்களுக்கான கனவுப் பிரிவைச் சேர்ந்தவங்க, இளைஞர்கள் பிரிவு, குழந்தைகள் பிரிவு என இருக்கு. அதிலும் கலைஞர்கள், தொழிலதிபர்கள், அரசியல்வாதிகள், ரவுடிகள் என ஏகப்பட்ட உட்பிரிவுகள் இருக்கு. இந்த உட்பிரிவுகள் எல்லாம் பெரியவங்களில்தான். குழந்தைகள் பிரிவில் அப்படியில்லை. அதனால், அதில் நிறைய பேர் ஒரே டீம்தான்.

அந்த டீமில்தான் இப்போ சலசலப்பு. திவ்யா என்கிற ஒரு குட்டிப் பொண்ணுக்கு நேற்று இரவு போயிருக்கவேண்டிய கனவு, போய்ச் சேரலை. அதை டெலிவரி செஞ்சிருக்கவேண்டியது, `மியா' என்கிற டெலிவரி பாய். அந்த விசாரணைதான் முதன்மை கனவுப் பொறுப்பாளர் அறையில் நடந்துட்டிருக்கு.

rabbit
rabbit
pixabay

கனவு சரியாகத் தயாரிக்கப்படாதது, நேரம் தவறுவது, மாறிப்போறது என்பது அடிக்கடி நடக்கறதுதான். பெரும்பாலும் டீம் லீடராலே எச்சரிக்கப்பட்டு பிரச்னை தீர்ந்துடும். அதையும் தாண்டி, முதன்மை கனவுப் பொறுப்பாளரிடம் போகுதுன்னா, விஷயம் ரொம்பப் பெருசுன்னு அர்த்தம்.

டீம் லீடரான குவா, டெலிவரி பாய் மியா ரெண்டு பேரும் கைகளைக் கட்டிட்டு நின்னுட்டிருக்க, ``அந்த திவ்யாவுக்கு என்ன கனவு கொடுக்கப்பட இருந்துச்சு தெரியுமா?'' - கரகரப்பான குரலில் கேட்டார், முதன்மை கனவுப் பொறுப்பாளர்.

girl
girl
pixabay

``தெ... தெரியும்... ஐஸ்க்ரீம் சாப்பிடற மாதிரி...'' என்றது மியா.

``ஏன் அதைக் கொண்டுபோய் சேர்க்கலை?''

``ரெண்டு டெலிவரி முடிச்சேன். ரொம்ப சோர்வா இருந்ததால, நாளைக்குப் போகலாம்னு திரும்பிட்டேன்''

``எப்பவுமே உனக்கு மூணு டெலிவரிதானே?''

``ஆமா''

``எப்பவும் இருக்கிற அதே சோர்வுதான் இருந்திருக்கும். நேற்று மட்டும் என்ன ஸ்பெஷல்?''

பதில் பேசாமல் நின்றான் மியா.

``ஆக, சோர்வு விஷயமில்லை. சரியாகச் சொல்லு, அந்தச் சோர்வுக்கும் திரும்பிட நினைச்சதுக்கும் நடுவுல உன் எண்ணம் என்னவாக இருந்துச்சு'' என்று கேட்டவர் குரலில் அழுத்தம்.

``மன்னிச்சுடுங்க... ஐஸ்க்ரீம் சாப்பிடுற மாதிரிதானேன்னு...''

``இன்னும் சரியா சொல்லு. அதாவது, குடிசையில் இருக்கிற ஒரு சாதாரண பொண்ணு, சாதாரண ஐஸ்க்ரீம் சாப்பிடுற மாதிரிதானேன்னு நினைச்சுட்டே சரியா?''

மியா, தலையை இன்னும் குனிந்துகொண்டான்.

flying
flying
pixabay

``நீ, அந்தக் கனவை சரியாகச் சேர்த்திருந்தா இன்னிக்கு என்ன நடந்திருக்கும்னு தெரிஞ்சுக்க ஆசைப்படுறியா?''

முதன்மை கனவுப் பொறுப்பாளர் இப்படிக் கேட்டதும், மியா தலையாட்டிக்கிட்டே அங்கே சுவரில் இருக்கும் பெரிய திரையின் பக்கம் பார்த்தான்.

அவர் ஒரு சொடுக்கு போட்டதும், திரையில் காட்சி ஓட ஆரம்பிச்சது. ஒரு பங்களாவில் அந்த வேலைக்கார அம்மா பாத்திரங்களைத் துலக்கிக்கிட்டே...

``இன்னிக்குக் காலையிலே என் பேத்தி ஐஸ்க்ரீம் சாப்பிடுற மாதிரி ஒரு கனவு கண்டதா சொல்லிச்சும்மா. `வாங்கித் தர்றியாம்மா?'ன்னு என் பொண்ணுகிட்ட கேட்டுச்சு. `இப்போ அது ஒண்ணுதான் குறைச்சல் போடி'ன்னு திட்டிட்டா என் பொண்ணு. பேத்தி மூஞ்சு சுண்டிப்போச்சு'' என்று அந்த அம்மா வருத்தமான குரலில் சொன்னாங்க.

moon
moon
pixabay

இதைக் கேட்டதும் முதலாளி அம்மா, ``இதுக்காகவா குழந்தையைத் திட்டுறது? நாளைக்கு என் பிறந்தநாள். நாளைக்கு சாயந்திரம் உன்னோடு வர்றேன். உன் பேத்தி திவ்யாவுக்கு மட்டுமில்லே, அங்கே இருக்கிற அத்தனை குழந்தைகளுக்கும் ஐஸ்க்ரீம் வாங்கித் தர்றேன். அங்கே எத்தனை பேர் இருக்காங்கன்னு சொல்லு'' என்றார்.

திரையில் காட்சி நீங்கிவிட, வெட்கத்துடன் தலையைத் திருப்பி முதன்மை கனவுப் பொறுப்பாளரைப் பார்த்தான் மியா.

``திவ்யாவின் ஒரு கனவால் 20 குழந்தைகளுக்கு ஐஸ்க்ரீம் கிடைச்சிருக்கும். உன்னோட அலட்சியத்தால அது நடக்காமப் போயிருச்சு'' என்றார் முதன்மை கனவுப் பொறுப்பாளர்.

dolphin
dolphin
pixabay

``என்னை மன்னிச்சிடுங்க. சின்ன விஷயம்தானேன்னு அலட்சியப்படுத்திட்டேன்'' என்று அழுதான் மியா.

``இப்போ, திவ்யாவுக்கு அந்தக் கனவை கொடுக்க வேற வழியே இல்லையா?'' என்று கேட்டார் டீம் லீடர் குவா.

``ம்... இருக்கு. இப்போ, திவ்யாவின் வகுப்பில் வரலாறு பாட நேரம். அதாவது, கடகடன்னு ஆசிரியர் நடத்திட்டே போக, திவ்யா கண்கள் சொக்கி குட்டித் தூக்கம் போடுற நேரம்'' என்று புன்னகைத்தார் மு.க.பொ.

``இதோ... இப்பவே கிளம்பறேன்'' என்ற மியா, அந்தப் பெரிய கதவை படார் எனத் திறந்துகொண்டு பறந்தான்.

என்ன விஷயம்னு உங்களுக்குப் புரியுதா? வகுப்பில் தூங்கும் திவ்யாவுக்கு அந்தக் கனவை மியா கொடுப்பான். அந்தக் கனவு பற்றி திவ்யா தன் அம்மாவிடம் சொல்வாள். அதைக் கேட்கும் பாட்டி, முதலாளி அம்மாவிடம் சொல்வார். அவங்க ஐஸ்க்ரீம் வாங்கித் தருவாங்க.

திவ்யாவின் ஃப்ரெண்ட்ஸ் எல்லோருக்கும் ஐஸ்க்ரீம் கிடைக்கப் போகுது!

இந்தக் கதையை அழகான குரலில் ஆடியோவாகவும் கேட்க...

உங்கள் சுட்டிகளுக்கு இந்தக் கதையைச் சொல்பவர்: அபிநயா ஶ்ரீகாந்த்