Published:Updated:

காட்டுப் பள்ளியில் நடந்த கலகல மாறுவேடப் போட்டி - சுட்டிகளுக்கான குட்டிக்கதை #DailyBedTimeStories

உங்கள் செல்லக் குழந்தைகளுக்கு, தினமும் இரவில் ஒரு குட்டிக் கதை சொல்வதன் மூலம், அவர்களின் கற்பனைத் திறனை வளர்க்கலாமே... இன்றைக்கு, காட்டுக்குள்ளே பள்ளியில் நடந்த மாறுவேடப் போட்டியில் ஒரு அப்பா செய்த கலாட்டாவைப் பார்க்கலாமா?

மாறுவேடப் போட்டி
மாறுவேடப் போட்டி ( pixabay )

ஹாய் சுட்டீஸ்... உங்க பள்ளியில் ஆண்டு விழா, பண்டிகை நாள்களில் கலை நிகழ்ச்சிகள் நடக்கும்தானே... பாட்டு, டான்ஸ் என விதவிதமான போட்டிகள் இருக்கும்தானே... அப்படியான போட்டிகளில் ரொம்பவே ஜாலியானது மாறுவேடப் போட்டி, கரெக்ட்டா?

இந்தக் கதையிலும் ஒரு மாறுவேடப் போட்டி நடக்குது. இது நடக்கறது காட்டுல இருக்கும் ஒரு ஸ்கூலில். என்ன நடக்குதுன்னு பார்ப்போமா?

மாறுவேடப் போட்டி
மாறுவேடப் போட்டி
pixabay

நம்ம ஊர் மாதிரி காட்டுல நிறைய ஸ்கூல்ஸ் கிடையாது. ஒரே ஒரு ஸ்கூல்தான். அரசுப் பள்ளி, தனியார் பள்ளி, அந்தப் பள்ளி, இந்தப் பள்ளி என வித்தியாசமும் கிடையாது. காட்டு ராஜாவின் சிங்கக்குட்டிகளும் அதே ஸ்கூல்லதான் படிக்கணும்... புசுபுசு முயல்குட்டிகளும் அதே ஸ்கூல்தான் படிக்கணும்.

இங்கே மாதிரி எல்லாரும் சயின்ஸ் படிக்கணும், மேத்ஸ் படிக்கணும்னு கட்டாயமும் கிடையாது. யார் யாருக்கு என்ன வருமோ, யார் யாருக்கு எதில் திறமையும் ஆர்வமும் இருக்கோ, அதுல நல்லா பயிற்சி கொடுக்கிறதுதான் அங்கே இருக்கிற டீச்சர்களுக்கான வேலை.

அப்படித்தான் அந்த காட்டுப் பள்ளியில் எல்லாக் குட்டிகளும் ஜாலியா படிச்சுட்டிருந்தாங்க. நம்ம ஊர் ஸ்கூல் மாதிரி வருஷத்துக்கு பல நிகழ்ச்சிகள் கிடையாது. வருஷா வருஷம் ஆண்டு விழாவும் கிடையாது. ஆனா, இப்போ ஆண்டு விழா கொண்டாடப்போறாங்க. ஏன் தெரியுமா?

மாறுவேடப் போட்டி
மாறுவேடப் போட்டி
pixabay

``இது, நம்ம ஸ்கூலின் நூறாவது வருஷம். அதனால, சிறப்பா கொண்டாடணும்''னு சொன்னாங்க யானை அம்மா.

இவங்கதான் இந்த ஸ்கூலை முதன்முதலில் ஆரம்பிச்ச பெரிய யானையாரின் மகள்.

``ஓ... ரொம்ப சிறப்பா செஞ்சுடலாம். காட்டுல இருக்கிற எல்லா விலங்குகளுமே இப்படி ஒரு நிகழ்ச்சியை எதிர்பார்த்துட்டு இருக்காங்க. எல்லா விதமான போட்டிகளையும் நடத்தி, பரிசுகளை அள்ளிக்கொடுப்போம்''னு சொன்னார் கரடியார்.

கரடியாருதான் இந்த ஸ்கூலின் ஆல் இன் ஆல் இன்சார்ஜ்.

சொல்லி முடிச்ச கையோடு, எல்லா டீச்சர்ஸையும் வரவெச்சு திட்டம் போடவும் ஆரம்பிச்சுட்டார் காரடியார். அந்தத் திட்டத்தில் இருந்த பலவிதமான போட்டிகளில் ஒண்ணுதான் மாறுவேடப் போட்டி.

காடு முழுக்கவே பள்ளியில் நடக்கப்போகும் நூறாவது ஆண்டு விழா பற்றிய பேச்சாக இருந்துச்சு. எல்லா விலங்குகளின் குட்டிகளும், எல்லாப் பறவைகளின் குஞ்சுகளும் தாங்கள் கலந்துக்கப்போகும் போட்டிகளுக்காக, `அது வேணும், இது வேணும்'னு கேட்க ஆரம்பிச்சாங்க.

எப்படி நம்ம ஸ்கூலில் ஒரு போட்டின்னா, அதுக்கு நம்மளைவிட நம்ம அப்பா, அம்மாக்கு வேலை அதிகம் இருக்குமோ அப்படி பெரிய விலங்குகளும் பரபரப்பாகிடுச்சு.

lion
lion
pixabay
கிருத்திக் ஆசையாக வரைஞ்ச `அழகு' ஓவியம் என்ன ஆச்சு? - சுட்டிகளுக்கான குட்டிக்கதை #DailyBedTimeStories

``என் பையனுக்கு மூங்கில் வேணுமாம். நம்ம காட்டுல மூங்கிலே இல்லையே. எங்கே கிடைக்கும்?''னு கேட்டுச்சு சிறுத்தை.

``ஆற்றுக்கு அந்தப் பக்கமா இருக்கு''ன்னு சொல்லிச்சு கரடி.

``என் பொண்ணுக்கு தேவதை டிரெஸ் வேணுமாம். நம்ம காட்டுல யார் நல்லா டிரெஸ் தைப்பா?''ன்னு விசாரிச்சது மைனா.

``தூக்கணாங்குருவிகிட்ட போய்டாதே, ஆள் ரொம்ப பிஸி. வாங்கி வெச்சுக்கிட்டு 150-வது வருஷத்துக்குதான் கொடுப்பான். மரங்கொத்தி மீனா, நல்லாவே தைக்கும். சீக்கிரமே கொடுத்துடும்''னு சொல்லிச்சு கிளி.

இப்படி ஒரு பக்கம் இருக்க... நடனப் பயிற்சி, நாடகப் பயிற்சி, பாட்டுப் பயிற்சி என ஓடிட்டு இருந்துச்சு.

``என்னப்பா நீர்யானை, ரெட்டை காலுல நின்னுட்டு என்ன பண்றீங்க?''னு கேட்டுச்சு காட்டெருமை.

``என் பையன் ஆண்டு விழா டான்ஸ்ல கலந்துக்கறான். அவனுக்கு புது ஸ்டெப் கத்துக்கொடுக்க நான் முதல்ல கத்துக்கணுமே... அதுக்காக, மயில்கிட்ட பயிற்சிக்கு வந்தேன். இப்படி ரெட்டை காலுல நிற்கவெச்சுட்டு, எங்கேயோ போச்சு இன்னும் வரலை''ன்னு புலம்பிச்சு நீர்யானை.

இப்படிப் பல அப்பா, அம்மாக்கள் மாதிரியே நரி சொக்கனும் நரிக்குட்டியிடம் மாட்டிக்கிட்டு இருந்துச்சு. ஆமாம்! காடு முழுக்க பந்தா பண்ணிக்கிட்டு, எல்லோரையும் திணறவைக்கும் சொக்கனே திணறிட்டு இருக்கு.

animals
animals
pixabay

காரணம், நரிக்குட்டியும் மாறுவேடப் போட்டியில் கலந்துக்குது. இந்த மாறுவேடப் போட்டி எப்படித் தெரியுமா...

ஒரு விலங்கோ பறவையோ, வேறு ஒரு விலங்கு அல்லது பறவை மாதிரி வேடம் போடணும். அதேமாதிரி நடிச்சுக் காட்டணும். சிறப்பான மாறுவேடப் போட்டிக்கு சிறப்புப் பரிசு காத்திருக்காம்.

நரிக்குட்டி போடப்போகும் வேடம் என்ன தெரியுமா? முயல் வேடம்.

``ஏன்டா, உனக்கு வேற வேடமே கிடைக்கலையா? முயலுக்கும் நமக்கும் ஆகவே ஆகாது. நம்மளைப் பார்த்தாலே ஓடி ஒளிவாங்க. அவங்ககிட்ட போய் உன்னோட முடி வேணும், நடையைக் கத்துக்கணும்னு கேட்க முடியுமா?''ன்னு புலம்பிச்சு சொக்கன்.

``அதெல்லாம் எனக்குத் தெரியாது! மாறுவேடப் போட்டியில நான் முதல் பரிசு வாங்கணும்'' எனச் சொல்லி அழுதுச்சு நரிக்குட்டி.

சொக்கன் நரி, தன்னோட பந்தாவை எல்லாம் விட்டுட்டு, முயல்களைத் தேடிப்போய் கெஞ்சிக் கூத்தாடி சில விஷயங்களைத் தெரிஞ்சுட்டு வந்துச்சு. முயலுக்கான ஆடையையும் ரெடி பண்ணி நரிக்குட்டிக்குக் கொடுத்துச்சு. நரிக்குட்டியும் நல்லா பயிற்சி எடுத்துச்சு.

ஒருவழியாக, காட்டுப் பள்ளியின் நூறாவது ஆண்டு விழா நாளும் வந்துச்சு. காடே வண்ணமயமாக இருந்துச்சு. பாட்டு, பேச்சு, நடனம், நாடகம் என வரிசையாக நிகழ்ச்சிகள் நடந்துச்சு. எல்லா குட்டிகளின் பெற்றோரும் நிகழ்ச்சியைப் பார்த்துட்டு இருந்தாங்க. அதுல நம்ம நரி சொக்கனும் இருந்துச்சு.

animals
animals
pixabay

``அடுத்ததா மாறுவேடப் போட்டி... ஒவ்வொரு விலங்குக் குட்டியும் ஒவ்வொரு பறவைக் குஞ்சும் வேற மாதிரி வரப்போறாங்க. அவங்களோட நிஜ உருவம் எதுன்னு கண்டுபிடிக்க முடியாமல் நீங்கள் திணறப்போறீங்க'' என அறிவிப்பு வந்ததும், உற்சாகமான கைதட்டல்.

சொக்கனும் கைகளைத் தட்டிக்கிட்டே தனக்குப் பக்கத்து இருக்கையைப் பார்த்துச்சு. அங்கே ஒரு நீர்யானை உட்கார்ந்து இருந்துச்சு.

``என் பையன் இந்தப் போட்டியில கலந்துட்டு இருக்கான்'' எனப் பெருமையோடு சொல்லிச்சு சொக்கன்.

``ஓ... சபாஷ்!'' எனத் தலையை ஆட்டிச்சு அந்த நீர்யானை.

மேடையில் ஒரு சிங்கக்குட்டி வந்து, `கிர்ர்ர்... கிர்ர்ர்...'னு கர்ஜனை செய்துகாட்டிச்சு.

``இங்கே, சிங்கக்குட்டியாக கர்ஜனை செஞ்சது, நிஜத்துல ஒரு கரடிக்குட்டி'' என மைக்கில் சொன்னதும், எல்லோரும் கைதட்டினாங்க.

சொக்கன் மட்டும் கையைத் தட்டலை. ``ஆமா... பெரிய சிங்கம். போட்டியில கலந்துக்கிட்ட பல விலங்குகள் சிங்கக்குட்டி வேஷம்தான் போட்டிருக்காங்க போல. அதுல என்ன பெருமையோ'' என அலுத்துக்கிச்சு நரி சொக்கன்.

``ஏன்ப்பா... உனக்கு அதுல என்ன அலுப்பு?'' எனக் கேட்டுச்சு நீர்யானை.

``ரொம்பக் காலமா இந்தச் சிங்கங்கள் ராஜாவா பந்தா பண்ணிக்கிட்டு திரியறாங்க. அப்படி என்ன எங்ககிட்ட இல்லாத திறமைகள் இருக்காம். என்னிக்கோ ஆரம்பிச்சு வெச்சது அப்படியே பரம்பரை பரம்பரையா தொடருது. உங்களுக்கு ஒண்ணு தெரியுமா?'' எனச் சொல்லிக்கிட்டே நீர்யானையின் காதருகே குனிஞ்சது சொக்கன்.

``நம்ம காட்டு சிங்கராஜாவுக்கு எல்லா ஆலோசனைகளையும் சொல்றது நான்தான். நான் ஒருநாள் இல்லாட்டியும், அந்த ராஜா வெறும் கூஜா''னு சிரிச்சது நரி சொக்கன்.

``ஓகோ...''ன்னு சொல்லிக்கிச்சு நீர்யானை.

lion
lion
pixabay
யானைத் தலைவன் மகன் தும்பு ஏன் சோகமா இருக்கான்? - சுட்டிகளுக்கான குட்டிக்கதை #DailyBedTimeStories  

மாறுவேடப் போட்டி தொடர்ந்துச்சு. முயல்குட்டியாக வந்த நரிக்குட்டி மேடையில் துள்ளி விளையாட, சொக்கன் விசிலடிச்சது.

``இவன்தான் என் பிள்ளை. எப்படி வேஷமும் நடிப்பும்'' எனக் கேட்டுச்சு சொக்கன்.

``ம்... பிரமாதம் பிரமாதம்''னு சொல்லிச்சு நீர்யானை.

``பின்னே... என் பிள்ளையாச்சே. ஆமா, உங்க பிள்ளை என்ன நிகழ்ச்சியில வருது?'' எனக் கேட்டுச்சு நரி சொக்கன்.

``அதோ... என் பொண்னு மேடைக்கு வந்தாச்சு''னு சொல்லிச்சு நீர்யானை.

மேடையில் ஒரு நீர்யானைக்குட்டி... அழகா நடந்து காண்பிச்சு, வாயைத் திறந்து காண்பிச்சு பாட்டும் பாடிச்சு.

``என்னங்க இது... மாறுவேடப் போட்டிக்கு எதுவுமே பண்ணலையா உங்க பொண்ணு?'' எனக் கேட்டுச்சு சொக்கன்.

``என்ன அவசரம்... அங்கே கவனி!'' எனச் சொல்லிச்சு நீர்யானை.

மேடையில் அறிவிப்பு... ``இப்போ நீர்யானையாக வந்து நம்மளை எல்லாம் மகிழ்வித்தது வேற யாருமில்லே... நம்ம காட்டு ராஜாவின் பொண்ணு'' எனச் சொன்னதும் பலத்த கைதட்டல்.

ஆலா செஞ்ச காகிதக்கொக்கு என்ன பண்ணுச்சு? - சுட்டிகளுக்கான குட்டிக்கதை #DailyBedTimeStories

``எ... என்னது சிங்கப் பெண்ணா...? அப்போ நீ... நீங்க...'' எனச் சொல்லிக்கிட்டே நடுக்கத்தோடு திரும்பிப் பார்த்துச்சு நரி சொக்கன்.

``பொண்ணு மாதிரியே நாமும் வேடம் போட்டுக்கிட்டு நிகழ்ச்சியைப் பார்க்கலாம்னு வந்தேன்'' எனச் சொல்லிக்கிட்டே தனது வேடத்தை நீக்கியது நீர்யானையாக உட்கார்ந்திருந்த சிங்க ராஜா.

அவ்வளவுதான்... நம்ம பந்தா சொக்கன் எடுத்துச்சு ஓட்டம்... பிள்ளை பரிசு வாங்கினானா இல்லையான்னுகூட பார்க்கலை. சரியான ஓட்டம்!

அவ்வளவுதான் கதை!

இந்தக் கதையை அழகான குரலில் கேட்க...

கதை சொல்பவர்: அபிநயா ஶ்ரீகாந்த்