Published:Updated:

வேலு கோமாளி ஆனது எப்படி? - சுட்டிகளுக்கான குட்டிக்கதை #DailyBedTimeStories

வேலு

உங்கள் செல்லக் குழந்தைகளுக்கு, தினமும் இரவில் ஒரு குட்டிக்கதை சொல்வதன் மூலம், அவர்களின் கற்பனைத் திறனை வளர்க்கலாமே... தன் உருவத்தைக் கேலி செய்தவங்களே பாராட்டுகிற அளவுக்கு வேலு என்ன செய்தான்?

வேலு கோமாளி ஆனது எப்படி? - சுட்டிகளுக்கான குட்டிக்கதை #DailyBedTimeStories

உங்கள் செல்லக் குழந்தைகளுக்கு, தினமும் இரவில் ஒரு குட்டிக்கதை சொல்வதன் மூலம், அவர்களின் கற்பனைத் திறனை வளர்க்கலாமே... தன் உருவத்தைக் கேலி செய்தவங்களே பாராட்டுகிற அளவுக்கு வேலு என்ன செய்தான்?

Published:Updated:
வேலு

வேலு ரொம்ப சோகத்தோடு உட்கார்ந்திருந்தான். கொஞ்ச தூரத்துல பசங்க கிரிக்கெட் விளையாடிட்டு இருந்தாங்க. அவர்களின் சந்தோஷமான, சில சமயம் சண்டை போடும் சத்தம் அடிக்கடி கேட்டுட்டு இருந்துச்சு.

அவங்க எல்லாம் வேலுவின் நண்பர்கள்தான். ஆனால், யாருமே வேலுவை விளையாட்டுக்கு சேர்த்துக்கலை. அதுக்குக் காரணம், வேலு ரொம்ப குண்டாக இருப்பான்.

வேலு
வேலு

``டேய்... உன்னை விளையாட்டுல சேர்த்து என்னடா செய்யறது? பெளலிங் பண்ண முடியாது. ஃபீல்டிங்கிலும் ஓட முடியாது'' எனச் சொன்னான் ஒருத்தன்.

``பேட்டிங் பண்ணவும் விடமுடியாது. ஸ்டெம்ப், விக்கெட் கீப்பர் எல்லாரையும் சேர்த்து மறைச்சுடுவே'' என இன்னொருத்தன் சொல்ல, எல்லோரும் சிரிச்சாங்க.

வேலுவுக்கு இந்த மாதிரி கேலியும் சிரிப்பும் புதுசு இல்லே. பல இடங்களில் நடந்திருக்கு. பள்ளியில் பல விளையாட்டுகளில் ஆசிரியர்களே சேர்க்க மாட்டாங்க.

பேருந்திலோ, பொதுஇடங்களிலோ போகும்போது, பல முறை கேலிகளைச் சந்திச்சிருக்கான். அதெல்லாம் அவனுக்கு கொஞ்சம் கொஞ்சமா பழக ஆரம்பிச்சிடுச்சு.

ஆனால், இன்றைக்கு அவனது நண்பர்களே விளையாட்டில் சேர்த்துக்காமல் கிண்டல் பண்ணினதும் ரொம்ப வருத்தமாகிட்டான்.

`நான் என்ன வேணும்னா குண்டா இருக்கேன்? இத்தனைக்கும் இப்போவெல்லாம் சரியா சாப்பிடுறதே இல்லே. அப்படியும் உடம்பு குறைய மாட்டேங்குது. என்ன பண்றது?' என நினைச்சப்போ அழுகை அழுகையா வந்துச்சு.

clown
clown

``ஹேய்ய்ய்ய்ய் சிக்சர்... சிக்சர்'' - அப்படின்னு சத்தம் கேட்டுச்சு.

`சே... இதுக்கு மேலே இங்கே உட்கார்ந்திருக்க வேணாம். வீட்டுக்குப் போய்டலாம்' என நினைச்ச வேலு, எழுந்து விடுவிடுன்னு கிளம்பினான்.

அவன் வீடு இருக்கிறது 10 போர்ஷன்கள் இருக்கிற ஒரு இடத்துல. அங்கே,உள்ளே போறதுக்கு நீளமான, சின்ன சந்து மாதிரியான வராண்டா இருக்கும். அங்கே போகும்போதுகூட வேலு மனசு கஷ்டப்படும்.

ஏன்னா, அந்தச் சந்துக்குள்ளே வேலு நுழைஞ்சுட்டா, முக்கால்வாசி இடத்தை அடைச்சுப்பான். அந்த நேரத்துல எதிர்ல யாராவது வந்துட்டா கிராஸ் பண்ணமுடியாது. சுவரோடு ஒட்டி நிற்கணும். அப்போ, அவங்களும் கேலியா பார்த்துக்கிட்டே போவாங்க.

அந்த வராண்டாவுல குட்டிப்பசங்க விளையாடிட்டு இருப்பாங்க. இப்போ வேலு போனபோதும் ஒரு குட்டிப்பொண்ணு மூணு சக்கர சைக்கிளை ஓட்டிக்கிட்டே வேகமா வந்தாள்.

உடனே வேலு என்ன செஞ்சான் தெரியுமா? சந்தின் இரண்டு பக்கச் சுவர்களிலும் உள்ளங்கைகளைத் தாங்கி வெச்சுக்கிட்டு கிடுகிடுன்னு கொஞ்சம் மேலே ஏறிவிட்டான். கால்களையும் அகலமா விரிச்சுக்கிட்டான்.

clown
clown

வேகமா வந்த சைக்கிள், அந்த இடைவெளியில் நுழைஞ்சு அந்தப் பக்கம் போச்சு. உடனே அங்கிருந்த சுட்டிப்பசங்க எல்லாம் சிரிச்சுக்கிட்டே கை தட்டினாங்க.

``வேலு அண்ணா... சூப்பர்... ஸ்பைடர்மேன் மாதிரியே ஸ்பீடா ஏறிட்டீங்க'' என்று சொன்னாள் ஒரு குட்டிப்பெண்.

``ஆமாம்... குண்டு ஸ்பைடர்மேன்'' - அப்படின்னு சொல்லிக்கிட்டே ஒரு குட்டிப்பையன், வாயையும் கைகளையும் குவிச்சு, குண்டு உருவம் மாதிரி நடிச்சான்.

எல்லா குட்டிப்பசங்களும் சிரிச்சாங்க. உடனே வேலு, `தொம்' எனக் கீழே குதிச்சு, வேணும்னே தரையில் விழுந்தான். எல்லா குட்டிப்பசங்களும் இன்னும் சிரிச்சாங்க.

``நான் ஸ்பைடர்மேன் இல்லே... குங்ஃபூ பாண்டா'' எனச் சொல்லிக்கிட்டே கை கால்களை அசைச்சு குங்ஃபூ பண்ணினான்.

எல்லாக் குழந்தைகளும் இன்னும் நல்லா சிரிச்சு கைகளைத் தட்டினாங்க.

`அட... இது நல்லா இருக்கே. நம்மளைப் பார்த்து சிரிக்கிறவங்களை நினைச்சு நாம ஏன் வருத்தப்படணும்? சிரிச்சுடுவாங்களோன்னு ஏன் ஒதுங்கி ஒளியணும்? நாமே சிரிக்கவைக்கிற மாதிரி செஞ்சா, ரசிக்க ஆரம்பிப்பாங்களே...' என நினைச்சான் வேலு.

clown
clown

``கொஞ்சம் இருங்க வரேன்'' - அப்படின்னு சொல்லிட்டு குடுகுடுன்னு அவனோட போர்ஷனுக்குப் போனான்.

முகப்பவுடரை முகத்துல நிறைய பூசிக்கிட்டான். அதோடு, அம்மாவின் மேக்கப் பாக்ஸை எடுத்து, அதிலிருந்த கண் மை, மஸ்கரா, லிப்ஸ்டிக் எல்லாத்தையும் முகத்துல கோடுகள் மாதிரியும் மூக்கு நுனியில் வட்டமாகவும் போட்டுக்கிட்டான்.

அந்த நேரம் அறைக்குள்ளே வந்த அம்மா, ``டேய் வேலு... இது என்னடா கோலம்? என்னடா ஆச்சு உனக்கு?'' என்று கேட்டாங்க.

``அம்மா... இது எப்படி இருக்கு?'' என அம்மா முகத்துக்குப் பக்கத்தில் ஒட்டகம் மாதிரி கழுத்தை நீட்டிக் காண்பிச்சான்.

``ம்... கோமாளி மாதிரி இருக்கு'' எனச் சிரிச்சாங்க அம்மா.

``நிஜமாவே கோமாளி மாதிரி இருக்கா? சூப்பர்!'' என்று சொல்லிவிட்டு, அங்கிருந்த தாத்தாவின் ஸ்டிக்கையும் எடுத்துக்கிட்டு ஓடினான்.

`இவன் என்ன பண்ணப்போறான்?' எனக் குழம்பிய அம்மாவும் பின்னாடியே போனாங்க.

மறுபடியும் அந்தச் சந்து மாதிரி இருந்த வராண்டாவுக்கு வந்தான் வேலு.

clown
clown

``ஹோய்ய்ய்ய் பசங்களா... நான்தான் கோமாளி ராஜா வந்திருக்கேன். என் அரண்மையில வெச்சிருந்த தேன்மிட்டாய் பெட்டியைக் காணோம். யார் எடுத்தது?'' எனச் சத்தமாகக் கேட்டான்.

``நான் எடுக்கலை... நான் எடுக்கலை'' என குட்டிப்பசங்க சிரிச்சுக்கிட்டே சொன்னாங்க.

வேலு விடலை... ஒவ்வொருத்தர் பக்கத்திலும் போய், ``நீ எடுத்தியா? எங்கே சட்டை பாக்கெட்டை காண்பி'',

``நீ எடுத்தியா... எங்கே டவுசர் பாக்கெட்டை காண்பி'' என்று சொல்லிக்கிட்டே அவங்களைத் தூக்கியும் பாக்கெட்டில் கையை விட்டும் பார்த்தான்.

எல்லோரும் விழுந்து விழுந்து சிரிச்சாங்க. வேலு கையில் மாட்டிக்காம இருக்க, அப்படியும் இப்படியும் ஓடினாங்க.

சத்தம் கேட்டு எட்டிப்பார்த்த சில பெரியவங்களும், ``ஹா... ஹா... பிரமாதம் வேலு'' என்று கைகளைத் தட்டினாங்க.

அம்மாவும் ஓடிவந்து வேலுவை அணைச்சு முத்தம் கொடுத்தாங்க.

ஆமாம்... வேலு தன்னோட பலம் என்ன, தன்னோட திறமை என்ன, தன்னோட சந்தோஷம் என்ன என்பதைக் கண்டுபிடிச்சுட்டான்.

clown
clown

இப்போ, வேலு அந்த போர்ஷனில் மட்டுமில்லே, அந்தத் தெரு முழுக்கவே ஃபேமஸ்... அவனோட பள்ளியிலும் ஃபேமஸ்... சின்னக் குழந்தைகளைத் தேடிப்போய் கோமாளி மாதிரி நடிக்கிறான்.

வேலுவைப் பார்த்தாலே, ``ஹேய்ய்ய்ய் கோமாளி அண்ணா... கோமாளி அண்ணா'' என எல்லோரும் குஷியோடு கைகளைத் தட்டறாங்க.

என்ன சுட்டீஸ்... கதை எப்படி இருக்கு? இப்படி இருக்கோமே... அப்படி இருக்கோமே... நாம இப்படி இல்லையே... அப்படி இல்லையேன்னு நினைக்காமல், நம்ம திறமையைக் கண்டுபிடிச்சு, அதில் எல்லோரையும் சந்தோஷப்படுத்தலாமா...

இந்தக் கதையை அழகான குரலில் கேட்க...

இந்தக் கதையை உங்களுக்குச் சொல்பவர்: அபிநயா ஶ்ரீகாந்த்