Published:Updated:

`அந்தக் காட்டின் இசை அரசன் யார் தெரியுமா?' சுட்டிகளுக்கான குட்டிக்கதை! #DailyBedTimeStories

fox
fox ( pixabay )

உங்கள் செல்லக் குழந்தைகளுக்கு தினமும் இரவில் ஒரு குட்டிக் கதை சொல்வதன்மூலம், அவர்களின் கற்பனைத் திறனை வளர்க்கலாமே...

காட்டில் எல்லோரிடமும் நல்ல பெயர் வாங்கறதுக்காக, நரி நலன் என்ன செய்தது எனப் பார்க்கலாமா?

எப்பவும் போல சோகமா கன்னத்துல கையை வெச்சுக்கிட்டு, அந்த மரத்தின் கீழே உட்கார்ந்து இருந்துச்சு நரி நலன்.

கொஞ்சம் பக்கத்தில் மண்ணைக் கிளறி இரையைத் தேடிட்டு இருந்துச்சு சேவல் சென்றாயன்.

``ஏன்ப்பா சென்றா... நான் தினமும் புலம்பிட்டே இருக்கேனே... உருப்படியான யோசனை ஒண்ணாவது சொல்ல மாட்டேங்கறியே''னு ஆரம்பிச்சது நலன்.

குட்டிக் கதை
குட்டிக் கதை
pixabay

மண்ணுக்குள்ளிருந்து வந்த ஒரு மண்புழுவைப் பிடிச்சு `லபக்' என விழுங்கிய சென்றாயன், ``ம்... ம்... சொல்லு, உனக்கு என்ன பிரச்னை?''னு கேட்டுச்சு.

``சரியாப்போச்சு. விடிய விடிய ஹாரி பாட்டர் கதையைக் கேட்டுட்டு, டம்பிள் டோருக்கு வால்ட்மார்ட் சித்தப்பாவான்னு கேட்கறியே''னு இன்னும் அலுத்துக்கிச்சு நலன்.

``உன்னை எல்லோரும் வில்லனாவே பார்க்கறாங்க, யாரும் நம்பி பக்கத்துல சேர்த்துக்க மாட்டேங்கறாங்க. எல்லோர்கிட்டேயும் நல்ல பெயர் வாங்கணும். எல்லோரும் பாராட்டணும், அதானே'' என்று இறக்கையைப் படபட என அடித்து, உடம்பைக் குலுக்கிக்கிச்சு சென்றாயன்.

``அதான்ப்பா... இந்த மனுசங்கதான் என்னைத் தந்திரக்காரன், ஏமாத்துக்காரன், அது இதுன்னு கதை கதையா எழுதி சம்பாதிக்கறாங்கன்னா, விலங்குகளும் நம்பமாட்டேங்குதே. இப்போ பாரேன், நானும் நீயும் எவ்வளவு நாளா நண்பர்களா இருக்கோம். ஒரு நாளாவது என் நகம் உன் மேல பட்டிருக்கா? அஞ்சு நிமிஷத்துல பத்து மண்புழுக்களை முழுங்கிட்டே. நீ பசிக்குச் சாப்பிட்டா தப்பில்லே, நான் சாப்பிட்டா தப்பா?''னு கேட்டுச்சு நலன்.

Rooster
Rooster
pixabay

``அதுக்கு, என்னை என்னப்பா பண்ணச் சொல்றே? நானும்தான் உன்னைப் பத்தி எங்க கூட்டத்துல போய்ச் சொன்னேன். `அந்த நரிப் பயல் உன்கிட்ட நல்லவன் மாதிரி நடிச்சு, எங்களையும் சேர்த்துச் சாப்பிட பிளான் பண்றான் போலிருக்கு'னு பயப்படறாங்க'' - அப்படின்னு சொல்லிச்சு சென்றாயன்.

``சரிதான்... உங்க கூட்டம் ஓவரா பஞ்சதந்திரக் கதைகளைப் படிக்கறாங்க போலிருக்கு''னு வருத்தப்பட்டுச்சு நரி நலன்.

அப்போது...

``நான் ஒரு யோசனை சொல்லட்டுமா?'' என்று மரத்தின் மேலிருந்து ஒரு குரல் வந்துச்சு.

நிமிர்ந்து பார்த்தால், மரத்தின் கிளையில் ஒரு கிளி உட்கார்ந்து இருந்துச்சு.

``சொல்லுப்பா என்ன யோசனை?''னு கேட்டுச்சு நலன்.

parrot
parrot
pixabay

``இசைக்கு மயங்காதவங்க யாருமே இல்லைன்னு சொல்வாங்க. நீ ஏன் பாட்டு கத்துக்கக் கூடாது? கையில ஒரு கிடார் வெச்சுக்கிட்டு, ஸ்டைலா பாடினே-ன்னு வெச்சுக்கோ, எல்லோர் மனசையும் அள்ளிடலாம்''னு சொல்லிச்சு கிளி.

நலன் முகம் பிரகாசமாச்சு. ``அருமையான யோசனைப்பா. ஆனா, எனக்கு யாரு இசை கத்துக்கொடுப்பா?''னு கேட்டுச்சு.

``கவலைப்படாதே... எனக்குத் தெரிஞ்ச வீட்டுல ஒரு மியூஸிக் மாஸ்டர் இருக்கார். அவர்கிட்ட கேட்கறேன். நிச்சயம் சொல்லிக் கொடுப்பார்''னு சொல்லிச்சு கிளி.

நலனுக்கு ரொம்ப குஷியாகிடுச்சு. உடனே கிளியுடன் கிளம்பிப் போச்சு. காட்டை ஒட்டி ஒரு தனி வீட்டில் இருந்தார் அந்த இசை ஆசிரியர். கிளி விஷயத்தைச் சொன்னதும், நலனை நம்பாமல் பார்த்தார்.

fox
fox
pixabay

``ஒண்ணும் பயப்படாதீங்க. ரொம்ப நல்ல பயல். நான் நாலு வருஷமா இவனுக்கு நண்பனா இருக்கேன்'' என்று சொல்லிச்சு சேவல் சென்றாயன்.

``ஓ... உன்னையே ஒண்ணும் பண்ணலையா? அப்போ பிரச்னை இல்லை. நாளையிலிருந்து காலையில் வந்துடு. உனக்கு சொல்லித் தரேன்''னு சொன்னார் அந்த மாஸ்டர்.

``ரொம்ப நன்றிங்க'' என்று சொல்லிட்டு துள்ளலோடு போச்சு நரி நலன்.

எல்லோரிடமும் நல்ல பெயர் வாங்க வேண்டும் என்ற நலனின் ஆசை, வேகமா இசையைக் கத்துக்கவெச்சது. மாஸ்டரே அசந்துபோனார். அவ்வளவு சீக்கிரம் அருமையாக கிடார் வாசிச்சு, பாட்டுப் பாட ஆரம்பிச்சிடுச்சு.

fox
fox
pixabay

``உன்னோட ஆர்வத்தைப் பார்த்து ஆச்சர்யமா இருக்கு நலன். இந்தா, உன் திறமைக்கு என்னோட பரிசு''னு சொல்லி ஒரு புது கிடாரைக் கொடுத்தார் மாஸ்டர்.

நன்றி சொல்லி வாங்கிக்கிட்ட நலன், நேராக சேவல் சென்றாயனை வந்து சந்திச்சது. அழகா கிடார் வாசிச்சு பாட்டு பாடிக் காண்பிச்சது.

``சூப்பர் நலன். சிங்க ராஜாகிட்ட சொல்லி நாளைக்கே ஒரு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு பண்ணலாம்''னு சொல்லிச்சு சென்றாயன்.

ரெண்டு பேரும் சிங்க ராஜாவை சந்திச்சு விஷயத்தைச் சொன்னாங்க. நலனின் பாட்டைக் கேட்டு ரசிச்ச சிங்க ராஜாவும் உடனே சம்மதிச்சார். காடு முழுக்க தகவல் பரப்ப ஏற்பாடு செய்தார்.

செய்தியைக் கேட்ட பல விலங்குகளும் சிரிச்சதுங்க. ``என்னது... நரிப் பயல் பாடறானா? அவனுக்கெல்லாம் அந்த அளவுக்கு ஞானம் வருமா? எதுக்கோ சதி பண்றான்'' எனப் பேசிக்கிச்சுங்க.

மறுநாள்...

கச்சேரிக்கு சிங்க ராஜா, சென்றாயன், கிளியைத் தவிர வேற யாரும் வரலை. நலன் ரொம்ப சோகமாயிடுச்சு.

``நலன், நீ நல்லவனா இருக்கிறது உன் மனசுக்குத் தெரிஞ்சா போதும். யார்கிட்டேயும் நிரூபிக்கணும்னு தேடிப்போகாதே. உன் திறமையை, உன் செயலால் தொடர்ந்து வெளிப்படுத்து. உன்னைத் தேடி வருவாங்க'' என்று சொல்லிச்சு கிளி.

animals
animals
pixabay

நலனும் சோகத்தைத் தள்ளிவெச்சுட்டு பாட ஆரம்பிச்சது. காடு முழுவதும் அந்த இசை ஒலிக்க ஆரம்பிச்சது. ஆங்காங்கே இருந்த விலங்குகள் எல்லாம் ஒவ்வொண்ணா வர ஆரம்பிச்சது.

நேரம் நகர நகர, அந்த இடத்தில் மொத்த விலங்குகளும் வந்து சேர்ந்துடுச்சுங்க. நலனின் பாடலில் மயங்கி ஆட ஆரம்பிச்சதுங்க. நலன் உற்சாகமாகித் தொடர்ந்து பாடப் பாட, மகிழ்ச்சி ஆரவாரம் கூடிட்டே போச்சு.

ஆமாம்!

இப்போதெல்லாம், தினமும் மாலையில் நலனின் இசை இல்லாமல் அந்தக் காட்டில் யாரும் தூங்கப்போறதில்லை. இப்போ, அந்தக் காட்டுல நலனுக்கு என்ன பெயர் தெரியுமா?

இசை அரசன் நலன்!

இந்தக் கதையை அழகான குரலில் ஆடியோவாகக் கேட்க...

கதை சொல்பவர்: அபிநயா ஶ்ரீகாந்த்

அடுத்த கட்டுரைக்கு