Published:Updated:

சாய்க்கும் பல்லவிக்கும் என்ன பிரச்னை..? - சுட்டிகளுக்கான குட்டிக் கதை #DailyBedTimeStories

உங்கள் செல்லக் குழந்தைகளுக்கு, தினமும் இரவில் ஒரு குட்டிக் கதை சொல்வதன் மூலம், அவர்களின் கற்பனைத் திறனை வளர்க்கலாமே... சாய்ராமுக்கு ஏன் பல்லவியைப் பிடிக்கலை? ரெண்டு பேருக்கும் என்ன பிரச்னை?

சாய்ராம்
சாய்ராம் ( pixabay )

``அம்மா... என் பார்ட்னர் பல்லவியை எனக்குப் பிடிக்கவே இல்லேம்மா'' - அப்படின்னு சோகத்தோடு ஆரம்பிச்சான் சாய்ராம்.

அது பள்ளிக்குக் கிளம்பும் காலை நேரம். சாப்பிட்டு முடிச்ச சாய்ராமுக்கு அம்மா சீருடை போட்டுட்டு இருந்தாங்க.

``என்னடா சாய்... ஏன் இப்படிச் சொல்றே?'' எனக் கேட்டாங்க அம்மா.

சாய்ராம்.
சாய்ராம்.
pixabay

சாய்ராம் முதலாம் வகுப்பு படிக்கிறான். அவன் படிக்கிறது ஒரு தனியார் பள்ளியில். அந்தப் பள்ளியில் ஒரு பழக்கம் இருக்கு. ஒவ்வொரு வகுப்பிலும் ஒவ்வொரு இருக்கையிலும், ஒரு பையன்- ஒரு பொண்ணு என ரெண்டு பேரை உட்கார வைப்பாங்க. அவங்களுக்கு, `பார்ட்னர்' என்று பெயர்.

கிளாஸ் வொர்க், புராஜெக்ட் எது செய்றதா இருந்தாலும் ரெண்டு பேரும் பேசி, திட்டம் போட்டு செய்யணும்.

சின்ன வயசிலிருந்தே ஆண்-பெண் பேதம் இல்லாமல் பழகணும், விட்டுக்கொடுத்து குழுவாகச் செயல்படணும் என்கிற காரணத்துக்காக, இப்படி ஒரு நடைமுறை அந்த ஸ்கூலில் இருக்கு. ஆண்டு இறுதியில், ஒவ்வொரு வகுப்பிலும் `பெஸ்ட் பார்ட்னர்ஷிப்' எனத் தேர்ந்தெடுத்து பரிசும் கொடுப்பாங்க.

சாய்ராமுக்கு எல்.கே.ஜி பார்ட்னரா இருந்தது, தாரா. யு.கே.ஜி பார்ட்னரா இருந்தது, நந்தினி. இப்போ இருக்கிறது பல்லவி.

``ஏன் சாய்... அந்தப் பல்லவியை நானும் பார்த்திருக்கேனே... பேசியிருக்கேனே... குட் கேர்ள் மாதிரிதானே தெரியுது?'' - அப்படின்னு சொல்லிக்கிட்டே சாய்ராம் முகத்துல பவுடர் பூச ஆரம்பிச்சாங்க அம்மா.

kids
kids
pixabay

கண்களையும் உதடுகளையும் இறுக்கமா மூடிட்டு இருந்தான் சாய்ராம். அப்புறமா, ``இல்லேம்மா... ரொம்ப ஓவரா பண்றாம்மா'' என்று சொன்னான்.

``அப்படி என்ன பண்றா?'' என்று கேட்டுக்கிட்டே சாய்ராமின் தலைமுடியை வாரிவிட்டாங்க அம்மா.

``பாட்டி மாதிரி பேசறாம்மா?'' என்று சாய்ராம் சொல்ல, அம்மாவுக்கு ஒண்ணும் புரியலை.

``என்ன சொல்றே சாய்... பாட்டி மாதிரின்னா எப்படி?'' - அப்படின்னு கேட்டுக்கிட்டே சாக்ஸ் போட்டு ஷூவை மாட்டிவிட்டாங்க அம்மா.

பேலன்ஸ் பண்றதுக்காக அம்மா தோளை கெட்டியாப் பிடிச்சுட்டிருந்த சாய், ``நேத்து அந்தப் பல்லவிக்கும் சேர்த்து நீ சாக்லேட் கொடுத்திருந்தேதானே...'' எனக் கேட்டான்.

``ஆமா... கேட்கவே மறந்துட்டேன், கொடுத்தியா?" எனக் கேட்டாங்க அம்மா.

``கொடுத்தேம்மா... அதுக்கு அந்தப் பல்லவி, `நான் சாக்லேட் சாப்பிட மாட்டேன். சாக்லேட் சாப்பிட்டா பல் சொத்தையாகிடும். நீயும் சாக்லேட் சாப்பிடாதே'னு சொல்றாம்மா'' - அப்படின்னு அலுப்போடு சொன்னான் சாய்ராம்.

kids
kids
pixabay

``சரியாகத்தானே சொல்லியிருக்கா சாய். எனக்கும்தான் சாக்லேட் கொடுக்க இஷ்டமில்லே. நீ ரொம்ப அடம்பிடிக்கிறேன்னுதான் கொடுத்தேன்'' - அப்படின்னு சொன்னாங்க அம்மா.

``போம்மா... வீக்லி ஒன்ஸ்தானே சாப்பிடறேன். அதை விடும்மா... அந்தப் பல்லவிகிட்ட பேசறப்போ நம்ம பாட்டிகிட்ட பேசற மாதிரியே இருக்கும்மா. இன்னும் நிறைய அட்வைஸ் பண்ணிட்டே இருக்காம்மா'' - அப்படின்னு சாய்ராம் சொல்ல, அம்மா சிரிச்சுட்டாங்க.

``சரி வா... ஸ்கூலுக்கு நேரமாகுது. போய்க்கிட்டே பேசலாம்'' - அப்படின்னு சொன்ன அம்மா, புத்தகப் பை, வண்டிச் சாவி, ஹெல்மெட்டை எடுத்துக்கிட்டாங்க.

சாய்ராமுக்கும் தொப்பி மாதிரி இருந்த சின்ன ஹெல்மெட்டை மாட்டிவிட்டாங்க.

சாய்ராமின் அப்பா, ஆபீஸ் விஷயமா வெளியூர் போயிருக்கார். அவர் ஊரில் இல்லாதப்போ, அம்மாதான் ஸ்கூலில் கொண்டுபோய் விடுவாங்க.

வீட்டைப் பூட்டிட்டு வெளியே வந்து, ஸ்கூட்டியை எடுத்தாங்க அம்மா. சாய்ராம் பின்னாடி ஏறி உட்கார்ந்துக்கிட்டு, அம்மா இடுப்பை கெட்டியா பிடிச்சுக்கிட்டான்.

girl
girl
pixabay

ண்டி ரோட்டுல போக ஆரம்பிச்சதும், ``அம்மா... ப்ளீஸ்ம்மா... மிஸ்கிட்ட சொல்லி எனக்கு வேற பார்ட்னரை மாத்திடும்மா... ப்ளீஸ்ம்மா'' எனக் கெஞ்சினான் சாய்ராம்.

``சாய் கண்ணு... நான் மிஸ்கிட்ட இதைச் சொன்னா, என்ன காரணம், ஏன் மாத்தணும்னு கேட்பாங்க. இந்தக் காரணத்தைச் சொன்னா சிரிப்பாங்க. அதுக்காக எல்லாம் மாற்றமாட்டாங்க'' - அப்படின்னு சொன்னாங்க அம்மா.

``இன்னும் நிறைய இருக்கும்மா. அன்னிக்கு, பென்சில் பாக்ஸை மூடினேன். அதுக்கு அந்தப் பல்லவி, `மெதுவா மூடு சாய்... ஏன் இவ்வளவு முரட்டுத்தனமா பண்றே. அதுக்கு வாய் இருந்தா அழும். மெதுவா மூடு'னு சொல்றாம்மா.'' - அப்படின்னு அலுத்துக்கிட்டான் சாய்ராம்.

``ஓஹோ... வேற என்னவெல்லாம் சொல்றா அந்தப் பல்லவி?'' என்று கேட்டாங்க அம்மா.

``புக்ஸை பேக்ல வைக்கறப்போ, `க்ளீனா... நேரா வை சாய். ஏன் இப்படி கிராஸ் கிராஸா வைக்கிறேங்கறா. ஏன் குனிஞ்சு உட்காருறே? நிமிர்ந்து உட்காருங்கறா. இப்படி எப்போ பாரு அட்வைஸ்... அட்வைஸ்... அட்வைஸ்... அதான் சொன்னேன். அந்தப் பல்லவி பக்கத்துல இருக்கிறது, நம்ம பாட்டி பக்கத்துல இருக்கிற மாதிரியே இருக்கு'' என்று சலிச்சுக்கிட்டான் சாய்ராம்.

``ம்... ம்...''- அப்படின்னு மட்டும் தலையாட்டின அம்மா, வேற எதுவும் பேசலை.

girl
girl
pixabay

ஏன்னா, இப்போ அவங்க மெயின் ரோட்டுக்கு வந்திருந்தாங்க. அப்போ பேசக்கூடாதுன்னு அம்மா சொல்லியிருக்காங்க. அதனால், சாய்ராமும் அமைதியா இருந்தான்.

வண்டி சிக்னலில் நின்னதும், ``சாய்... மெயின் ரோட்டுல வண்டி ஓட்டும்போது ஏன் பேசக் கூடாதுன்னு சொல்லியிருக்கேன்?''- அப்படின்னு கேட்டாங்க அம்மா.

``ம்...'' என யோசிச்ச சாய்ராம், ``பேசிட்டே போறப்போ நம்ம கான்ஸன்ட்ரேஷன் குறைஞ்சுடும். அப்போ, வண்டி ஓட்டுறவங்களுக்கு பிராப்ளம் ஆகும்'' - அப்படின்னு சொன்னான்.

``கரெக்ட்! நம்ம கவனம் சிதறினா, அந்த ஒரு நிமிஷத்துல என்ன வேணும்னாலும் நடக்கலாம். நமக்கு மட்டுமில்லாம, முன்னாடி பின்னாடி வர்றவங்களுக்கும் பிரச்னை ஏற்படலாம். அதனால்தான் பாட்டு கேட்டுக்கிட்டு போகக்கூடாது, போனில் பேசிட்டே வண்டியை ஓட்டக்கூடாது. ஸ்பீடா ஓவர்டேக் பண்ணிட்டுப் போகக்கூடாது, ஹெல்மெட் இல்லாமல் போகக் கூடாதுன்னு பல ரூல்ஸ் இருக்கு. அதெல்லாமே நம்மோட நன்மைக்குத்தான்'' - அப்படின்னு சொன்னாங்க அம்மா.

சாய்ராமுக்கு குழப்பமா இருந்துச்சு. ``அதெல்லாம் ஓ.கேம்மா. இதை எதுக்கு இப்போ சொல்றே? நான் பல்லவி பற்றித்தானே பேசிட்டிருக்கேன்'' என்று கேட்டான் சாய்ராம்.

girl
girl
pixabay

``பல்லவியும் உனக்கு, கிளாஸ்ல எப்படி இருக்கணும்னு சொல்றா. நீ அவளோட பார்ட்னரா இருக்கே இல்லியா... அந்த அக்கறையில நீ நல்லா இருக்கணும், சரியா இருக்கணும்னு நினைக்கிறா. யாருக்கு நம்ம மேலே ரொம்ப அக்கறை இருக்கோ, அவங்கதான் நமக்கு அட்வைஸ் பண்ணுவாங்க. பாட்டி பாட்டின்னு சொன்னே இல்லியா? பாட்டி மாதிரி பெரியவங்களுக்கும் நம்ம மேலே ரொம்ப அக்கறை. அதனால்தான் அப்படிச் சொல்றாங்க. அதைத் தொந்தரவா நினைக்காம, என்ன சொல்ல வர்றாங்கன்னு யோசிச்சுப் பார்க்கணும். அதை ஃபாலோ பண்ணணும்.''

அம்மா இப்படி சொல்லிட்டிருக்கும்போதே, க்ரீன் சிக்னல் விழுந்துச்சு. எல்லா வண்டிகளும் நகர ஆரம்பிச்சது. அம்மாவும் அமைதியாகி வண்டியை ஓட்ட ஆரம்பிச்சாங்க.

சாய்ராம் நிறுத்திட்டு யோசிக்க ஆரம்பிச்சான்.

`ம்... ஆமா! பல்லவி அப்படியெல்லாம் அட்வைஸ் பண்றப்போ பிடிக்காம இருந்தாலும், நிறைய ஹெல்ப் பண்றப்போ பிடிக்குது. நாம எழுத மறந்துட்டதை ஞாபகப்படுத்தறா. நம்ம நோட்புக்ல பேப்பர் முனை மடங்கிட்டா, அதை சரிசெஞ்சு கொடுக்கிறா. அதுக்கு நாம தேங்க்ஸ் சொல்லாட்டியும் ஸ்மைல் பண்றா!'

இப்படி நினைச்சுப் பார்க்கப் பார்க்க பல்லவியை சாய்ராமுக்குப் பிடிக்க ஆரம்பிச்சது. யோசிச்சுட்டு இருக்கும்போதே ஸ்கூலும் வந்துடுச்சு.

சரியா இவங்க போன நேரத்தில், பல்லவியும் அவ அப்பாவின் பைக்ல வந்து இறங்கினாள். ``ஹாய் சாய்...'' எனக் கையாட்டி சிரிச்சா.

``ஹாய் பல்லவி'' எனச் சாய்ராமும் கையசைச்சு சிரிச்சான்.

``ஸாரி சாய்...''னு பல்லவி சொல்ல, ``எதுக்கு பல்லவி?''னு புரியாமல் கேட்டான் சாய்ராம்.

kids
kids
pixabay

``இன்னிக்குத்தான் என் அப்பாகிட்ட, `எனக்கு பார்ட்னரைப் பிடிக்கலை... மிஸ்கிட்ட சொல்லி மாத்திடுங்கப்பா, சாய் நிறைய விஷயத்துல கிளீனாவே நடந்துக்கறதில்லேன்னு சொன்னேன். அதுக்கு அப்பா, `அப்படியெல்லாம் சொல்லக்கூடாது. ஒருத்தர் மாதிரியே இன்னொருத்தர் இருக்க மாட்டாங்க. எல்லார்கிட்டேயும் கொஞ்சம் கொஞ்சம் டிஃபரெண்ட் இருக்கும். அதை நாம அட்ஜஸ்ட் செஞ்சுக்கணும். பிடிக்காத விஷயத்தை அன்போடு சொல்லி மாத்தணும்னு சொன்னார். இனிமே, உன்னை நான் எதுவும் சொல்ல மாட்டேன் சரியா''

அப்படின்னு பல்லவி சொல்ல, ``ச்சே... ச்சே... நீ எல்லாமே நல்லதுதானே சொன்னே. எனக்கு அது புரிஞ்சது. நாம பெஸ்ட் பார்ட்னரா இருந்து பரிசு வாங்கலாம்'' என்று சொன்னான் சாய்ராம்.

ரெண்டு பேரும் அம்மா, அப்பாவுக்கு டாட்டா காண்பிச்சுட்டு, கையைப் பிடிச்சுக்கிட்டு ஸ்கூலுக்குள்ளே நடக்க ஆரம்பிச்சாங்க.

சாய்ராம் அம்மாவும் பல்லவி அப்பாவும் சந்தோஷமா கிளம்பினாங்க.

இந்தக் கதையை அழகான குரலில் கேட்க...

இந்தக் கதையைச் சொல்பவர்: அபிநயா ஶ்ரீகாந்த்