Published:Updated:

கராத்தே மான் - உங்கள் சுட்டிகளுக்குச் சொல்ல ஒரு குட்டிக்கதை #DailyBedTimeStories #VikatanPodcast

குட்டிக் கதை
News
குட்டிக் கதை

உங்கள் செல்லக் குழந்தைகளுக்கு தினமும் ஒரு குட்டிக் கதை சொல்வதன் மூலம், அவர்களின் கற்பனைத் திறனை வளர்க்கலாமே... இன்றைய கதை... காட்டுக்குள்ளே வம்பு செய்துகொண்டு திரியும் புலி, கரடி, குள்ளநரிகளுக்கு, நம்ம நாயகன் மான் கொடுக்கும் அடி என்னவென்று தெரிஞ்சுக்கலாமா?

Published:Updated:

கராத்தே மான் - உங்கள் சுட்டிகளுக்குச் சொல்ல ஒரு குட்டிக்கதை #DailyBedTimeStories #VikatanPodcast

உங்கள் செல்லக் குழந்தைகளுக்கு தினமும் ஒரு குட்டிக் கதை சொல்வதன் மூலம், அவர்களின் கற்பனைத் திறனை வளர்க்கலாமே... இன்றைய கதை... காட்டுக்குள்ளே வம்பு செய்துகொண்டு திரியும் புலி, கரடி, குள்ளநரிகளுக்கு, நம்ம நாயகன் மான் கொடுக்கும் அடி என்னவென்று தெரிஞ்சுக்கலாமா?

குட்டிக் கதை
News
குட்டிக் கதை

``மான் முகேஷை யாராவது பார்த்தீங்களாடா?''

பற்களுக்கு நடுவுல சிக்கியிருந்த இறைச்சித் துணுக்குகளை, கழுகு நகத்தால் குத்திக் குத்தி எடுத்துக்கிட்டே கேட்டுச்சு புலி பூபாளன்.

``நாங்களும் அவனைத்தான் தேடிட்டு இருக்கோம். நாலு நாளா கண்ணுலயே படலை''ன்னு சொல்லிச்சு குள்ளநரி குட்டன்.

குட்டிக் கதை
குட்டிக் கதை

காட்டுக்குள் இருந்த அந்தப் பாறை மேல் கால்மீது கால் போட்டு உட்கார்ந்திருந்துச்சு பூபாளன். பாறையின் வலது பக்கம் சாய்ந்து நின்னுட்டிருந்துச்சு குட்டன். இடது பக்கம் கரடி காத்தவராயன். இன்னொரு குள்ளநரியான மொட்டையன், தரையில் கால்களை நீட்டி உட்கார்ந்திருந்துச்சு.

இதுதான் அவங்களோட மீட்டிங் ஸ்பாட். தினமும் மதியச் சாப்பாட்டை முடிச்சதும் இங்கே ஒண்ணுகூடுவாங்க. அன்றைக்குக் காலையிலிருந்து என்னவெல்லாம் செஞ்சாங்கன்னு பேசுவாங்க. ஒண்ணும் பெரிய சாகசமெல்லாம் இருக்காது.

``இன்னிக்கு, காலைக் கடனைக் கழிக்க ஆற்றுப் பக்கம் போனேனா... சாரைப்பாம்பு ஜித்து, புற்களுக்குள்ளே படுத்துட்டிருந்தான் போல. யாருக்குத் தெரியும்? நான் கவனிக்காம அவன் மேலேயே காலைக் கடனைக் கழிக்கப் போக, ஜஸ்ட் மிஸ்... சடக்குன்னு ஓடினான் பாரு... அந்த அதிர்ச்சியில எனக்கு எதுவுமே வரலை''ன்னு ஆரம்பிக்கும் குட்டன்.

fox
fox

புலி பூபாளன் விழுந்து விழுந்து சிரிக்கும். மொட்டையன் சும்மா இரு! தன் பங்குக்கு கம்பு சுத்தும். அடுத்து, காத்தவராயன் `கரடி' விடும். இவங்களோட நோக்கம்... தலைவன் பூபாளனை சிரிக்கவைக்கிறதுதான்.

ஆனால், பூபாளன் சொல்றதெல்லாம் பெரிய சாகசமாகத்தான் இருக்கும். அது நிஜமோ பொய்யோ தெரியாது. மத்த மூணு பேரும், `ஆஹா... ஓஹோ... சூப்பர் தல... அடுத்த காட்டு ராஜா நீங்கதான்'னு பாராட்டுவாங்க.

இப்படி பேசிட்டிருக்கும்போது அந்தப் பக்கமாகப் போகும் மான்கள், முயல்கள் எனக் கண்ணில் சிக்கும் அப்பிராணிகளைக் கூப்பிட்டு வம்பு செய்வாங்க. அதில் ஒரு ஆள்தான் மான் முகேஷ். அந்த முகேஷைத்தான் நாலஞ்சு நாளா காட்டுக்குள்ளே காணலை.

``அவனை எப்படியாவது தேடிப்புடிச்சு இழுத்துட்டு வாங்கடா. மத்தவங்களைவிட அவனை வம்புபண்றது நல்லா டைம் பாஸ் ஆகும்''ன்னு சொல்லிச்சு பூபாளன்.

bear
bear

சரியாக அந்த நேரம் பார்த்து ரெண்டு முயல்குட்டிகள் அந்தப் பக்கமாக வந்துச்சுங்க.

``அடேய் பசங்களா, இங்கே வாங்க'' என அதட்டலுடன் கூப்பிட்டது கரடி காத்தவராயன்.

`ஆஹா... இன்னிக்கு எவ்வளவு நேரம் இவங்ககிட்ட சிக்கப்போறோமோ'ன்னு பயந்துட்டே, ரெண்டு முயல்களும் பக்கத்தில் போனாங்க.

``எங்கேடா அந்த முகேஷ் பயலைக் காணலை?''ன்னு உறுமிச்சு புலி பூபாளன்.

``எங்களுக்குத் தெரியலை வருங்கால ராஜா'' என்று நடுங்கிக்கிட்டே சொல்லிச்சு ஒரு முயல்.

பூபாளன்கிட்ட யார் பேசினாலும் `இந்த வருங்கால ராஜா'வை முன்னாடியோ பின்னாடியோ போட்டுத்தான் பேசணும்.

tiger
tiger

``எங்களுக்கே கதை சொல்றீங்களா... எப்பவும் ஒண்ணாத்தானேடா சுத்துவீங்க. உங்களுக்குத் தெரியாம எங்கே போயிருப்பான்'' என்று ஒரு முயலின் காதுகளைப் பிடித்து தூக்கிச்சு குள்ளநரி குட்டன்.

அப்போது...

``டேய் குட்டா... அவனை விடு''ன்னு ஒரு குரல்.

நிமிர்ந்து பார்த்தால், கொஞ்சம் தள்ளி நின்னுட்டிருந்துச்சு மான் முகேஷ். அது நின்னுட்டிருந்த தோரணையைப் பார்த்து எல்லோருக்கும் ஆச்சர்யம். வழக்கமாகக் கண்களில் இருக்கும் மிரட்சி, தளர்ந்த உடல் கிடையாது. கம்பீரமாக நின்னுட்டிருந்துச்சு.

deer
deer

``என்னடா சவுண்டு பெருசா இருக்கு''ன்னு கேட்டுச்சு புலி பூபாளன்.

``ஏன்னா, நான் இப்போ சாதாரண முகேஷ் இல்லே... கராத்தே முகேஷ். கராத்தேன்னா என்ன தெரியுமா?'' எனச் சொல்லிட்டு, கால்களைக் காற்றில் சுழற்றி, உடம்பை வளைச்சு சின்னதா வித்தை காட்டிச்சு.

குட்டன் வாயைப் பிளந்துக்கிட்டே, கையில் பிடிச்சிருந்த முயலை விட்டுடுச்சு. மத்தவங்களும் திகைச்சுப் போய்ட்டாங்க.

பூபாளன் மெதுவா குனிஞ்சு காத்தவராயனின் காதுக்குள், ``இது என்ன டான்ஸுடா வித்தியாசமா இருக்கு''ன்னு கேட்டுச்சு.

``வருங்கால ராஜா... இது டான்ஸ் இல்லே. கராத்தேங்கற தற்காப்புக் கலை. இதைச் சரியா பண்ணி தாக்கினா, யானை அண்ணாச்சியையே சாய்ச்சுபுடலாம். இதை இவன் எங்கிருந்து கத்துட்டு வந்தான்னு தெரியலையே''ன்னு நடுங்கிச்சு காத்தவராயன்.

``என்னங்கடா முழிக்கறீங்க... சந்தேகமா இருந்தா பக்கத்துல வாங்க. குட்டா நீ வர்றியா?''ன்னு முகேஷ் கேட்டதும், குட்டன் பிளந்த வாயை `டபக்'குனு மூடிக்கிச்சு.

deer
deer

``இந்தாப்பா தம்பி... நாலஞ்சு நாளா ஆளைக் காணோமே... பாவம், மனுசங்க புடிச்சுட்டுப் போய்ட்டாங்களோன்னு தெரிஞ்சுக்கத்தான் கேட்டேன். நம்ம ஆள் ஒருத்தர் இப்படி கராத்தே தெரிஞ்சுட்டு வந்தது சந்தோஷம். மைண்ட்ல வெச்சுக்கறேன். நான் ராஜாவானதும் நீதான் என்னோட கறுப்புப் படை மான். போய்ட்டு வா''ன்னு பயத்தை மறைச்சுக்கிட்டு, கைகளைத் தூக்கி ஆசீர்வாதம் செஞ்சது புலி பூபாளன்.

மான் முகேஷ் கம்பீரமாக நடக்க, ரெண்டு முயல்களும் அதோடு சேர்ந்து நடக்க ஆரம்பிச்சதுங்க. கொஞ்ச தூரம் போனதும், ``சூப்பர் அண்ணே... எப்படிண்ணே இந்த கராத்தேவை கத்துக்கிட்டீங்க?'' எனக் கேட்டது ஒரு முயல்.

``நாலு நாளுல எப்படிடா கத்துக்க முடியும். ஒரு இடத்துல பார்த்ததை சும்மா சுத்திவிட்டேன். இவங்க வம்பு பண்றது பற்றி என் அம்மாகிட்ட சொல்லி அழுதப்போ, எல்லா நேரமும் நான் உன்னோடு இருக்க முடியாது. உனக்கான வழியை, தைரியத்தை நீதான் தேடிக்கணும்னு சொன்னாங்க. நிஜமா ஒரு நாள் கத்துப்பேன். இந்த அறிவாளிகளுக்கு இப்போதைக்கு இது போதும்'' என்று சிரிச்சது முகேஷ்.

அவ்வளவுதான் கதை!

இந்தக் கதையை அழகான குரலில் ஆடியோவாகக் கேட்க...

சுட்டிகளுக்கு இந்தக் கதையைச் சொல்பவர்: அபிநயா ஶ்ரீகாந்த்