Published:Updated:

உயரம் உணர்ந்த கீக்கி கழுகு - சுட்டிகளுக்கான குட்டிக் கதை #DailyBedTimeStories #VikatanPodacast

கழுகு ( pixabay )

உங்கள் செல்லக் குழந்தைகளுக்குத் தினமும் இரவில் ஒரு குட்டிக் கதை சொல்வதன் மூலம், அவர்களின் கற்பனைத் திறனை வளர்க்கலாமே... தன்னை மிஞ்ச யாரும் இல்லைன்னு சொல்லும் கீக்கி கழுகு, தன் உயரத்தை எப்போது உணர்ந்துச்சு?

உயரம் உணர்ந்த கீக்கி கழுகு - சுட்டிகளுக்கான குட்டிக் கதை #DailyBedTimeStories #VikatanPodacast

உங்கள் செல்லக் குழந்தைகளுக்குத் தினமும் இரவில் ஒரு குட்டிக் கதை சொல்வதன் மூலம், அவர்களின் கற்பனைத் திறனை வளர்க்கலாமே... தன்னை மிஞ்ச யாரும் இல்லைன்னு சொல்லும் கீக்கி கழுகு, தன் உயரத்தை எப்போது உணர்ந்துச்சு?

Published:Updated:
கழுகு ( pixabay )

வானத்தில் பறக்கும் `கீக்கி' கழுகு தன்னைப் பற்றி பெருமையா நினைக்கும்.

`பறவை இனத்திலேயே நாமதான் ரொம்ப உயரத்துல பறக்கிறோம். நம்மோடு போட்டியிட எந்தப் பறவையாலும் முடியறதில்லே'

அப்படின்னு நினைச்சு ரொம்ப பெருமைப்படும். அதுமட்டுமா? மற்ற பறவைகளை ரொம்பவே கிண்டல் பண்ணும்.

``என்னப்பா வெள்ளைப் பையா... நல்லா இருக்கியா? ஏன் எப்பவும் தரையில கால் ஊன்றிக்கிட்டே பறக்கிறே. இதுக்கு நீ நடந்தே போகலாம்'' - அப்படின்னு கொக்குவை வம்புக்கு இழுக்கும்.

கழுகு
கழுகு

``பரவாயில்லேப்பா... நான் இப்படியே பறந்துக்கிறேன்'' - அப்படின்னு சொல்லும் கொக்கு.

``இதுக்குப் பேரு பறக்கறதில்லே... பறக்கறதுன்னா எப்படின்னு நான் காட்டறேன் பாரு'' எனச் சொல்லிட்டு, ராக்கெட் விட்ட மாதிரி `ஜிவ்வ்வ்வ்'னு மேலே போகும்.

தன்னோட இறக்கைகளை அகலமாக விரிச்சு `சர்ர்ர்ர்ர்ர்ர்'னு ஒரு வட்டம் அடிக்கும்.

அப்படியே காற்றில் ஒரு குட்டிக்கரணமும் போட்டுட்டு, `சரக்'னு கீழே வந்து, கொக்குவை மோதற மாதிரி நெருங்கி `சடார்'னு விலகும்.

அப்புறமா சிரிச்சுக்கிட்டே, ``என்ன பயந்துட்டியா? பறக்கறதுன்னா இதுதான். நான் நினைச்சா அந்த மேகங்களையும் துளைச்சுட்டு போய்வருவேன் தெரியுமா?'' எனச் சொல்லும்.

கொக்கு எதுவும் பேசாமல் கிளம்பிடும்.

``பயந்து ஓடறான் பாரு'' எனச் சிரிக்கும் கீக்கி கழுகு.

தன்னுடைய பார்வையின் கூர்மையை நினைச்சும் ரொம்ப பெருமிதம்.

bird
bird
pixabay

``என்னப்பா கறுப்பா... கீழே எதையாவது தொலைச்சுட்டியா... உற்று உற்றுப் பார்த்துட்டே வரே'' என்று காகத்தை நெருங்கி கேட்கும்.

பிறகு அதுவே, ``ஓ... புரிஞ்சுப்போச்சு. இரையைத் தேடறியோ... ஏதாவது செத்த எலி, புழு பூச்சி கண்ணுல தென்படுதான்னு பார்க்கறியோ... நான் எல்லாம் ரொம்ப உயரத்துல இருந்தே பார்த்துடுவேன்'' - அப்படின்னு கர்வத்தோடு சொல்லும்.

``உன் அளவுக்கு எனக்குப் பார்வை நுணுக்கம் இல்லைதான்'' எனச் சொல்லும் காகம்.

``பார்வை நுணுக்கமா? உனக்கு இருக்கிறது பார்வையே இல்லைப்பா. என்னால் நிலாவுக்குப் பக்கத்திலிருந்தே பூமியில என்ன நடக்குதுன்னு பார்த்துட முடியும். அதுமட்டுமா? ஒரு கோழியையே அலேக்கா தூக்கிட்டுப் போய்டுவேன். அவ்வளவு பலசாலியாக்கும். சரி... சரி... வரட்டுமா?'' எனச் சொல்லிட்டுப் போகிறபோக்கில், இறக்கையால் காகத்தைத் தட்டிட்டுப் போகும்.

eagle
eagle
pixabay

ப்படியே குருவி, மைனா, கிளி, மரங்கொத்தி, தூக்கணாங்குருவி என கீக்கி கழுகு கிண்டல் பண்ணாத பறவைகளே இல்லை. அட... பட்டாம்பூச்சி, வெளவால் எனப் பறக்குற ஒண்ணையும் விடாம துரத்திட்டுப்போய் வம்புக்கு இழுக்கும்.

இதனால் எல்லாப் பறவைகளுக்கும் ரொம்ப வருத்தப்பட்டுச்சுங்க. ஆனாலும் என்ன செய்ய?

``கழுகுதான் பறவை இனங்களிலேயே வலிமைக்கும் வேகத்துக்கும் பேர் போனவை. அதை நாம் எதிர்த்து சண்டை போடமுடியாது'' எனச் சொல்லிச்சு ஒரு கிளி.

``எதிர்த்து சண்டை போடமுடியாதுதான். ஆனால், எதுவும் பேசாமல் அவனை ஒதுக்கிட முடியுமில்லியா?'' எனச் சொல்லிச்சு புறா.

``நீ என்ன சொல்றே?'' எனக் கேட்டுச்சு மைனா.

``இனிமே நாம யாரும் கீக்கி கழுகுடன் பேசவேணாம். அவனைப் புறக்கணிப்போம். அவனுடைய தப்பை உணர்ந்து எப்போ அன்பாப் பேசறானோ அப்போ சேர்த்துப்போம்'' - அப்படின்னு சொல்லிச்சு புறா.

``இது நல்ல யோசனைதான். பேச்சு கொடுக்க, அன்பாக நடந்துக்க யாரும் இல்லைன்னு தெரிஞ்சா அவன் தவற்றை உணரலாம்'' - அப்படின்னு சொல்லிச்சு தூக்கணாங்குருவி.

bird
bird
pixabay

துக்கு அப்புறம் எந்தப் பறவையும் கிக்கி கழுகுவோடு பேசறதில்லே. கீக்கியும் எதுக்கும் கவலைப்படலை.

``ஆமா... இவங்க பேசலைன்னா எனக்கு விடியாதா? சூரியன் வராதா? நேரம் போகாதா? நான் வானம் வரைக்கும் போய்ட்டு வந்தா அதுக்கே நேரம் சரியாக இருக்கும். இவங்க என்ன பேசறது?'' என்று தனக்குத்தானே சொல்லிக்கிச்சு.

அன்றையிலிருந்து வானத்துல உயரமா... ரொம்ப உயரமா... ரொம்ப ரொம்ப உயரமா... பறக்கும். அங்கே யாருமே இருக்க மாட்டாங்க. வெட்டவெளியா இருக்கும். மேகங்கள் மட்டுமே இருக்கும். அவையெல்லாம் கீக்கி கழுகை கண்டுக்காது.

``ஹலோ வணக்கம்'' - அப்படின்னு சொன்னாலும், ``தம்பி ஒதுங்கிப் போ... நிறைய வேலை இருக்கு. அடுத்த ஊருக்குப் போய் மழை கொடுக்கணும். சூரியனை மறைச்சு வெயிலைக் குறைக்கணும்'' - அப்படின்னு சொல்லிட்டுப் போய்ட்டே இருப்பாங்க.

கீக்கி கழுகு பறந்து பறந்து களைச்சுப்போய் தன்னோட கூட்டுக்கு வந்து தூங்கிடும். இப்படியே நாள்கள், மாதங்கள், வருடங்கள் என ஓடுச்சு. தினமும் தன்னோட வழக்கமான பறக்கும் திறனைவிட அதிகமா பறந்துட்டே இருந்ததால், உடம்பு தளர்ந்துப் போச்சு. அதிகமாக வெயிலைப் பார்த்து பார்த்து கண் மங்க ஆரம்பிச்சது.

அப்புறமா கீக்கி கழுகு உயரத்தில் பறக்கறதில்லே... ஆனாலும், முன்பு மாதிரி இரையைச் சரியாகப் பார்க்க முடியலை. ரொம்ப கிட்டே போனால்தான் இரையே தெரியுது. அப்படி வேகம் குறைவாக இரையை நெருங்கும்போது, உஷாராகி இரை ஓடிடும்.

bird
bird
pixabay

கீக்கி கழுகுவுக்கு அழுகையா வந்துச்சு. ஒருமுறை சரியாக இரை கிடைக்காமல் ரொம்ப பசிச்சது. பக்கத்துல வந்த சத்தத்தை வெச்சு குருவி இருக்கிறதைத் தெரிஞ்சுக்கிச்சு.

``குருவியே... குருவியே... எனக்கு ரொம்ப பசிக்குது. ஏதாவது சாப்பிட கிடைக்குமா?'' எனக் கேட்டுச்சு.

``அடடா... கீக்கி நீ எவ்வளவு வலிமையா, கம்பீரமா இருந்தே. இப்போ இப்படி ஆகிட்டியே. நம்மோட நாலு பேர் இருக்கிறதும், நாலு பேரிடம் நாம் அன்பு செலுத்தறதும்தான் உண்மையான பலம். நீ கவலைப்படாதே... உனக்கு நண்பர்கள் நாங்க இருக்கோம்'' எனச் சொல்லிச்சு குருவி.

கீக்கி கழுகின் நிலைமை மற்ற பறவைகளுக்கும் தெரிஞ்சது. எல்லாம் ஒண்ணா வந்து உதவி செய்ய ஆரம்பிச்சது. கீக்கி கழுகுக்கும் உண்மை புரிஞ்சது.

மற்ற பறவைகளின் அன்பான கவனிப்பால் கிக்கி பழைய பலத்துக்குத் திரும்பிச்சு. ஆனால், கீக்கி பழைய கீக்கி இல்லே. இப்போவெல்லாம் எல்லாப் பறவைகளுக்கும் உதவி செய்துக்கிட்டு, அன்போடு ஒரு வழிகாட்டியாக இருக்கு.

இந்தக் கதையை அழகான குரலில் கேட்க...

இந்தக் கதையை உங்களுக்குச் சொல்பவர்: அபிநயா ஶ்ரீகாந்த்