Published:Updated:

மியா வீட்டு விழாவில் மிஸ்ஸி - சுட்டிகளுக்கான குட்டிக்கதை #DailyBedTimeStories #VikatanPodcast

உங்கள் செல்லக் குழந்தைகளுக்குத் தினமும் இரவில் ஒரு குட்டிக்கதை சொல்வதன் மூலம், அவர்களின் கற்பனைத் திறனை வளர்க்கலாமே... மியா வீட்டு விழாவில் திடீர் பரபரப்பு... என்ன ஆச்சு, என்ன காரணம்? தெரிஞ்சுக்கலாம் வாங்க...

மியா
மியா ( pixabay )

ந்த வீடு முழுக்க அவரைக் கொடிகளின் தோரணங்களாலும் சின்னச் சின்ன வண்ணப் பூக்களாலும் அலங்காரம் செய்யப்பட்டிருந்துச்சு. அந்தத் தோரணங்களில் பறந்தவாறு மின்மினிப்பூச்சிகள் தங்கள் ஒளியைச் சிந்திய விதம் பார்க்கவே அவ்வ்வ்வ்வளவு அழகா இருந்துச்சு.

அது ஒரு பூனை வீட்டுக் கல்யாண வரவேற்பு. `மியா’ பூனையின் அக்கா `யாமி' பூனைக்குத்தான் காலையில் கல்யாணம். இப்போ வரவேற்பு... அதாவது ரிசப்ஷன்.

#VikatanPodcast
#VikatanPodcast

நிறைய உறவுக்காரப் பூனைகளும் நட்புப் பூனைகளும் பளபளன்னு மேக்கப் போட்டுக்கிட்டு வந்திருந்தாங்க. மேடையில் `யாமி' பூனையும் அதன் கணவன் `ஜாம்' பூனையும் சந்தோஷமா நின்னுகிட்டிருந்தாங்க.

வயதான பூனைகள் உறவினர்களைப் பார்த்த சந்தோஷத்துல பழைய சாகசங்களையும் சோகங்களையும் ஞாபகப்படுத்திப் பேசிக்கிட்டாங்க.

ஆனால், இளம் பூனைகள் மேடையையும் பார்க்கலை. வயசான பூனைகள் வர்றதையும் கவனிக்கலை. அப்புறம் என்னதான் செஞ்சுட்டிருந்தாங்களாம்?

அவங்க கைகளில் இருந்து, `டிங்... டிங்... குபுக்... குபுக்.... கீச்... கீச்...' - இப்படிச் சத்தங்கள் வந்துச்சு.

கையில் இருந்துன்னா கையில் இருந்தில்லே... அவங்க கையில் வெச்சிருந்த ஸ்மார்ட்போனிலிருந்து குறுஞ்செய்திகள் வர்ற சத்தம்தான் அது.

இன்னும் சில பூனைகள் வாயைக் கோணி, மூக்கை உறிஞ்சி, கால்களை வளைச்சு விதவிதமாக போஸ் கொடுத்து செல்ஃபி எடுத்துக்கிட்டாங்க.

cats
cats
pixabay
மக்கு மாடசாமி நிஜமாகவே மக்குதானா? - சுட்டிகளுக்கான குட்டிக்கதை #DailyBedTimeStories #VikatanPodcast

``இந்தத் தலைமுறைக்கு போன்லதான் உலகமே இருக்கு'' என்று ஒரு பாட்டி பூனை, ஒரு தாத்தா பூனையிடம் புலம்பிச்சு.

அப்போ, செல்ஃபி எடுத்துக்கிட்டே பின்னாடி நகர்ந்த ரெண்டு பூனைகள், தாத்தா பூனையின் கால்களை மிதிச்சுடுச்சு.

``மிஆ...''னு தாத்தா பூனை கத்த, ``ஸாரி தாத்ஸ்... அப்படியே இந்தப் பக்கம் பாருங்க'' எனச் சொல்லி அவரையும் செல்ஃபியில் சேர்த்துக்கிட்டாங்க.

இவையெல்லாம் மியா பூனைப் பார்த்துட்டே இருந்துச்சு. அதுக்கு ரொம்ப வருத்தம். ஆனாலும், என்ன செய்யறது? வந்திருக்கிறவங்க விருந்தாளிகள்... அதுவுமில்லாமல், மியா ஒரு குட்டிப் பூனைதானே.

இசை நிகழ்ச்சி நடத்தும் குழு, அவங்க யாருக்கு வாசிக்கிறோம் எனத் தெரியாமலே வாசிச்சுட்டு இருந்தாங்க. அதையும் யாரும் கவனிக்கலை. திருமண வரவேற்புக்கு முக்கிய விருந்தினராக ‘மேஜர்’ பூனை, குடும்பத்தோடு வந்திருந்துச்சு.

மியாவின் பெற்றோர் ஓடிப்போய் அவங்களை வரவேற்றாங்க. அவங்களின் குட்டிப் பூனையான `மிஸ்ஸி'யும் வந்திருந்துச்சு. அது பார்க்கவே அவ்வளவு அழகா இருந்துச்சு.

எல்லாப் பூனைகளும், `நான்... நீ...' எனப் போட்டிபோட்டுக்கிட்டு அந்தக் குட்டியோடு செல்ஃபி எடுத்துக்கிட்டாங்க.

அப்புறம் மேஜர் பூனையோடும் மனைவி பூனையோடும் எடுத்துக்க ஆரம்பிச்சாங்க. அந்தக் குழப்பத்துல மிஸ்ஸி குட்டிப் பூனையை யாரும் கவனிக்கலை.

cat
cat
pixabay

அரை மணி நேரத்துக்கு அப்புறம்தான் மேஜர் பூனை, ``மிஸ்ஸி எங்கே?'' - அப்படின்னு கேட்டுச்சு.

``உங்களோடு இல்லையா?'' எனத் திருப்பிக் கேட்டுச்சு மனைவி பூனை.

அவ்வளவுதான் அந்த இடமே பரபரப்பாகிடுச்சு!

``மிஸ்ஸி... மிஸ்ஸி...” எனக் குரல் கொடுத்துக்கிட்டே ஆளாளுக்கு தேட ஆரம்பிச்சாங்க.

சில பூனைகள் வீட்டுக்கு வெளியே ஓடிச்சுங்க. சில பூனைகள் மாடிக்கு ஓடிச்சுங்க... சில பூனைகள் நாற்காலிகளுக்குக் கீழே தேடிச்சுங்க. சில பூனைகள் மேடைக்குக் கீழே தேடிச்சுங்க.

அப்போ, ``யாராவது இங்கே வாங்க... யாராவது இங்கே வாங்க'' இப்படி ஒரு பதற்றமான குரல். ஆமாம்! அது சமையல் அறைக்குப் பக்கத்திலிருந்து வந்த மியா குட்டியின் குரல்தான். எல்லோரும் அங்கே ஓடினாங்க.

என்ன நடந்துச்சு தெரியுமா சுட்டீஸ்..?

சமையல் அறைக்கு வந்து ஒவ்வொரு உணவையும் பார்த்துக்கிட்டிருந்த மிஸ்ஸிக்கு, ஒரு பெரிய பாத்திரத்திலிருந்து வந்த வாசனை ஈர்த்துச்சு. அதில் என்ன இருக்குன்னு பார்க்க நினைச்சு ஜம்ப் பண்ணிச்சு.

பாத்திரத்தின் முனையில் நிற்கிறதுதான் திட்டம்... ஆனால், கால்கள் வழுக்கி பாத்திரத்துக்குள்ளே விழப்போச்சு.

நல்லவேளை... பின்னாடியே வந்த மியா குட்டி, ஒரே ஜம்ப்...

உள்ளே விழப்போன மிஸ்ஸியின் ஒரு காலை கெட்டியாப் பிடிச்சுடுச்சு.

பாத்திரத்துக்குள்ளே தொங்கிக்கிட்டே மிஸ்ஸி பூனையும் வெளியே தொங்கிக்கிட்டே மியா பூனையும் இருந்ததுங்க. வேற ஒரு பாத்திரத்துல பாயசம் நிறைஞ்சுட்டதால மிச்சத்தை இதுல ஊற்றியிருந்தாங்க. அதனால், பாதி அளவு பாயசம் அந்தப் பாத்திரத்தில் இருந்துச்சு.

cat
cat
pixabay

மிஸ்ஸி தவறி உள்ளே விழுந்தால் அவ்வளவுதான்... சூடான பாயசத்தில் வெந்துப்போய்டும். வெளியே தொங்கின மியா பூனைக்கும் பாத்திரத்தின் சூட்டால் உடம்பெல்லாம் வலிச்சது.

அந்த நிலையிலும், ``மிஸ்ஸி... பயப்படாதே... கெட்டியாகப் பிடிச்சுக்கோ... உன்னால் முடியும். தைரியமா இரு'' என்று ஊக்கம் கொடுத்துச்சு.

``யாராவது வாங்க... யாராவது வாங்க...' - அப்படின்னு ரொம்ப நேரமாகவே கத்திகிட்டும் இருந்துச்சு.

அந்த நேரத்திலும் ரெண்டு பூனைகள் இந்தக் காட்சியை செல்போனில் வீடியோ எடுக்க...

மியாவின் அப்பாவுக்குப் பயங்கர கோபம். வீட்டுக்கு வந்த விருந்தாளி என்றும் பார்க்காமல் போனைப் பிடுங்கி தூக்கிப் போட்டுச்சு.

``உங்க வீட்டுக் குட்டிகளுக்கு நடந்தாலும் இப்படித்தான் செய்வீங்களா?'' என்று கத்திச்சு.

``மன்னிச்சுடுங்க... ஏதோ ஒரு ஆர்வத்துல செஞ்சுட்டோம்'' - அப்படின்னு ரெண்டு பூனைகளும் தலைகுனிஞ்சதுங்க.

cat
cat
pixabay
சிங்கம் பிடரி ஏன் உதிருது? - சுட்டிகளுக்கான குட்டிக்கதை #DailyBedTimeStories #VikatanPodcast

இதற்குள்ளே மிஸ்ஸியையும் மியாவையும் பத்திரமா கீழே இறக்கிட்டாங்க.

``மன்னிச்சுடு மிஸ்ஸி செல்லம்... உன்னைக்கூட கவனிக்காம நாங்க செல்ஃபி எடுத்துகிட்டிருந்தோம்'' - அப்படின்னு மேஜர் பூனையும் அம்மா பூனையும் மிஸ்ஸியைக் கட்டிப் பிடிச்சுக்கிட்டாங்க.

அந்த நாளிலிருந்து பூனைகள் கூட்டத்தில் ஒரு முடிவு பண்ணினாங்க. விஷேசத்துக்கு வர்ற இடத்துல யாரும் போனை யூஸ் பண்ணக் கூடாது. பெரியவங்களோடு பேசிக்கிட்டும் குட்டிகளோடு விளையாடிக்கிட்டும் இருக்கணும் என்பதுதான் அந்த முடிவு.

என்ன சுட்டீஸ்... இந்தப் பூனைக் கதை எப்படி இருந்துச்சு?

சிட்டு வீட்டு கிச்சன்ல என்ன சத்தம்? - சுட்டிகளுக்கான குட்டிக்கதை #DailyBedTimeStories  

இந்தக் கதையைச் சொல்பவர்: அபிநயா ஶ்ரீகாந்த்