Published:Updated:

திராட்சைப் புளித்த நரி கதை - பார்ட் டூ - சுட்டிகளுக்கான குட்டிக்கதை #DailyBedTimeStories

நரி ( pixabay )

உங்கள் செல்லக் குழந்தைகளுக்குத் தினமும் இரவில் ஒரு குட்டிக் கதை சொல்வதன் மூலம், அவர்களின் கற்பனைத் திறனை வளர்க்கலாமே... `ச்சீ... ச்சீ... இந்தத் திராட்சைப் பழம் புளிக்கும்' எனக் கிளம்பின நரி, அப்புறம் என்ன செய்தது?

திராட்சைப் புளித்த நரி கதை - பார்ட் டூ - சுட்டிகளுக்கான குட்டிக்கதை #DailyBedTimeStories

உங்கள் செல்லக் குழந்தைகளுக்குத் தினமும் இரவில் ஒரு குட்டிக் கதை சொல்வதன் மூலம், அவர்களின் கற்பனைத் திறனை வளர்க்கலாமே... `ச்சீ... ச்சீ... இந்தத் திராட்சைப் பழம் புளிக்கும்' எனக் கிளம்பின நரி, அப்புறம் என்ன செய்தது?

Published:Updated:
நரி ( pixabay )

ஹாய் சுட்டீஸ்... உங்களுக்குத் திராட்சைப் பழம் புளிச்ச நரி கதை தெரியும்தானே?

ஒரு தோட்டத்தின் வேலி ஓரமாகத் திராட்சைக் கொடியில் திராட்சையைப் பார்க்கிற நரி, அதைச் சாப்பிட தாவித் தாவிப் பார்க்கும்.

அது எட்டாமல் போகவே, `ச்சீ... ச்சீ... இந்தப் பழம் புளிக்கும்' எனச் சொல்லிட்டுப் போகுமே... எஸ்... அந்த நரி கதையின் பார்ட் டூ கதைதான் இது.

நரி
நரி

பழம் எட்டாமல் போகவே சோகத்தோடு காட்டுக்குள்ளே போய், ஒரு கல் மேலே உட்கார்ந்து அழுதுட்டு இருந்துச்சு. அப்போ அந்த வழியாக வந்த நரியின் நண்பர்களான சிங்கமும் சிறுத்தையும் நரியைப் பார்த்தாங்க.

``என்ன பிரதர் என்ன ஆச்சு? ஏன் அழறே?' - அப்படின்னு கேட்டுச்சு சிங்கம்.

அந்த நரியைப் பற்றித்தான் நமக்கு நல்லா தெரியுமே... வாயைத் திறந்தாலே பொய்யும் பந்தாவும்தானே வரும்.

`ஆகா... நாம அங்கே அவமானப்பட்ட விஷயத்தைச் சொன்னா விழுந்து புரண்டு சிரிப்பாங்க. இந்தச் சிங்கம், ஒரு நடமாடும் வாட்ஸ்அப். சிறுத்தையோ ஒரு லைவ் வீடியோ. காடு முழுக்க சொல்லிடுவாங்க. இவங்களை வேற மாதிரி சமாளிப்போம்'

இப்படி நிமிஷத்துல மனசுக்குள்ளே திட்டம் போட்டுருச்சு.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

``என்ன பிரதர்... பதிலையே காணோம். எங்காவது பலமா அடி வாங்கினியா?'' என்று கேட்டுச்சு சிறுத்தை.

``சே... சே... உங்களுக்கு அருமையான ஒரு உணவை தேடி வெச்சிருக்கேன். அதை நினைச்சு சந்தோஷத்துல ஏற்பட்ட ஆனந்தக் கண்ணீர் இது. பார்க்கிறதுக்கு அழற மாதிரி தெரியுது. உங்களுக்காகத்தான் காத்திருந்தேன். சரியான நேரத்துல வந்துட்டீங்க'' - அப்படின்னு சொல்லிச்சு நரி.

lion
lion
pixabay

சிங்கமும் சிறுத்தையும் ஒருத்தரை ஒருத்தர் பார்த்துக்கிச்சுங்க.

``அப்படி என்ன அருமையான உணவு. அது எங்கே இருக்கு?'' எனக் கேட்டுச்சு சிங்கம்.

இவங்களுக்கு இன்னும் கொஞ்சம் பந்தா காட்டலாம்ன்னு நினைச்சது நரி.

``போகலாம்... ஆனா, ஒரு கண்டிஷன். அதுக்குச் சம்மதிச்சா அங்கே கூட்டிட்டுப் போறேன்'' - அப்படின்னு சொல்லிச்சு நரி.

``என்ன கண்டிஷன்? நல்ல சாப்பாடு கிடைக்குதுன்னா, எந்த கண்டிஷனா இருந்தாலும் எனக்குச் சம்மதம்தான்'' - அப்படின்னு சொல்லிச்சு சிறுத்தை.

``பெருசா ஒண்ணுமில்லே... உங்க கண்களைக் கட்டி, கூட்டிட்டுப் போவேன். ஏன்னா, அது நான் கண்டுபிடிச்ச இடம். அந்த இடத்துக்கு நான் இல்லாமல் நீங்க போகக் கூடாது அதுக்குத்தான்'' - அப்படின்னு பந்தாவாகச் சொல்லிச்சு நரி.

சிங்கமும் சிறுத்தையும் மறுபடியும் ஒருத்தரை ஒருத்தர் பார்த்துக்கிச்சுங்க.

``சரி... சரி... நீ சொல்ற மாதிரியே வர்றோம். ஆனா, அந்த உணவு மட்டும் நல்லா இல்லைன்னா...'' - அப்படின்னு முறைச்சது சிங்கம்.

cheetah
cheetah
pixabay

நரிக்கு உள்ளுக்குள்ளே நடுக்கமா இருந்தாலும் அதை வெளியே காட்டிக்கலை.

`திராட்சை ரொம்ப இனிப்பா இருக்கும்னு கேள்விப்பட்டிருக்கேன். இவங்களைப் பயன்படுத்தி நாமளும் சாப்பிடலாம்' - அப்படின்னு நினைச்சது.

``அதெல்லாம் பிரமாதமா இருக்கு. நான் நேத்து சாப்பிட்டது. இன்னும் நாக்குல இருந்து சுவை போகலை'' எனச் சொல்லிச்சு நரி.

அதுக்கு அப்புறமா அங்கிருந்த ஆலமரத்திலிருந்து பெருசு பெருசா நான்கு இலைகளைப் பறிச்சது. அவற்றை இரண்டு இரண்டாக ஒரு கொடியால் இணைச்சது.

அது பார்க்க எப்படி இருந்துச்சு தெரியுமா சுட்டீஸ்? விமானத்தில் போகும்போதும் ஓய்வு எடுக்கும்போதும் சிலர் வெளிச்சம் படாமல் இருக்க, முகமூடி மாதிரி கறுப்புப் பட்டை ஒன்றை மாட்டிப்பாங்க. மூக்குக் கண்ணாடி மாதிரியும் இருக்கும். அந்த மாதிரி இருந்துச்சு.

அப்படி ரெண்டு முகமூடி செஞ்சு, சிங்கத்துக்கும் சிறுத்தைக்கும் கட்டிவிட்டுட்டு, ``சரி போகலாமா?'' எனக் கேட்டுச்சு நரி.

``பார்த்து கூட்டிட்டுப் போ நண்பா... ஏதாவது பள்ளத்துல தள்ளிடப்போறே?'' எனச் சொல்லிச்சு சிறுத்தை.

``பயப்படாதீங்க. என் கையைப் பிடிச்சுக்கங்க'' எனச் சொல்லி, சிங்கத்தையும் சிறுத்தையையும் கூட்டிட்டுப் போச்சு நரி.

grape
grape
pixabay

வங்க நடந்து நடந்து அந்தத் திராட்சைத் தோட்டத்தின் வேலி பக்கம் வந்து சேர்ந்தாங்க.

``அந்த இடத்துக்கு வந்தாச்சு. இப்போ ஒரு கண்டிஷன், உங்களுக்கு இந்த உணவை நான்தான் காண்பிச்சேன். அதனால், நீங்க எடுத்துக்கிற உணவில் பாதியை எனக்குப் பங்கு கொடுக்கணும் சரியா?'' எனக் கேட்டுச்சு நரி.

``ஒரு உணவை அடையாளம் காட்டறதுக்கு எத்தனை கண்டிஷன்டா. சரி... சரி... கட்டை அவிழ்த்துவிடு'' எனச் சொல்லிச்சு சிங்கம்.

ரெண்டு பேரின் இலை கட்டுகளையும் அவிழ்த்துவிட்டுச்சு நரி. சிங்கமும் சிறுத்தையும் நிமிர்ந்து பார்த்தாங்க.

உயரமான கொடியில கறுப்பு, பச்சை எனத் திராட்சைகள் தொங்கிச்சு.

``ஆஹா... வித்தியாசமான உணவாகத்தான் இருக்கும்போல. ஆனா, இவ்வளவு உயரத்துல இருக்கே. எப்படிப் பறிக்கிறது?'' எனக் கேட்டுச்சு சிறுத்தை.

``நீங்க ரெண்டு பேரும்தான் பாயும் புலிகளாச்சே...'' என்று நரி சொல்லி, ``என்னது புலியா?'' என்று ரெண்டும் திரும்பிப் பார்த்து முறைச்சதுங்க.

``தப்பு... தப்பு... பாயும் சிங்கம்... பாயும் சிறுத்தை... ஹைஜம்ப் பண்ணி இந்தப் பழங்களைப் பறிங்க'' என்று சொல்லிச்சு நரி.

``கறுப்பு... பச்ச...

பச்ச... கறுப்பு...

கறுப்பு... பச்ச...''

அப்படின்னு பாடிக்கிட்டே சிங்கம் ஒரே பாய்ச்சல்... அது மறுபடியும் தரையில் இறங்கினப்போ, கையில் கொத்தாகப் பச்சை திராட்சைகள்.

grape
grape
pixabay

``பிரமாதம்... பிரமாதம்...'' என்று கைதட்டுச்சு நரி.

``இப்போ ஐயாவின் திறமையைப் பாரு'' என்று சொன்ன சிறுத்தை...

``பச்ச... கறுப்பு...

கறுப்பு... பச்ச...

பச்ச... கறுப்பு...'

அப்படின்னு பாடிட்டே பாய்ஞ்சு போய் ஒரே பிடி. சிறுத்தை தரையில் இறங்கினப்போ அதன் கையில் கறுப்பு திராட்சைகள்.

``பிரமாதம்... பிரமாதம்!'' என விசிலடிச்சது நரி.

`ஆகா... ரெண்டு பேர்கிட்ட இருந்தும் நமக்குப் பங்கு கிடைக்கும். சூப்பர்டா... முதல் பார்ட் கதையில் தோற்றுப்போய்ட்டாலும், ரெண்டாவது பார்ட்ல சாதிச்சுட்டே. திராட்சையைச் சாப்பிடப்போறே' என்று தனக்குத் தானே முதுகில் தட்டிக்கிச்சு நரி.

சுட்டீஸ்... இப்போ நீங்க சொல்லுங்க... சிங்கம் கையில் என்ன கலர் திராட்சை இருக்கு?

ஆமாம்! பச்சை திராட்சைகள். அதிலிருந்து கொஞ்சம் பிச்சு எடுத்து, `லபக்'னு வாயில போட்டு கடிச்சுது. திராட்சையின் சாறும் கொட்டைகளும் தெறிச்சது.

அவ்வளவுதான்... சிங்கத்தோடு முகம் போன போக்கை பார்க்கணுமே... கண்ணெல்லாம் பிதுங்கி... முகம் கோணி போச்சு.

fox
fox
pixabay

`பார்க்கவே அழகா இருக்கிற பழத்தைச் சாப்பிட்டதும் சிங்கம் மூஞ்சி எதுக்கு அப்படி போகுது? என்னமோ போடா மாதவா' என்று நினைச்சுக்கிச்சு சிறுத்தை.

சிறுத்தை கையில எந்த கலர் திராட்சை இருக்கு சுட்டீஸ்?

ஆமாம்! கறுப்பு திராட்சைகள். அதிலிருந்து கொஞ்சம் பிச்சு எடுத்து, `லபக்'னு வாயில போட்டு கடிச்சது சிறுத்தை. திராட்சையின் சாறும் கொட்டைகளும் தெறிச்சது.

அவ்வளவுதான்... சிறுத்தையின் முகம் போன போக்கை பார்க்கணுமே... கண்ணெல்லாம் பிதுங்கி... முகம் கோணி போச்சு.

இதைப் பார்த்துட்டிருந்த நரிக்கு ஒரே குழப்பம். அது தலையைச் சொறிஞ்சுக்கிட்டே, ``நண்பாஸ்... என்ன ஆச்சு? எவ்வளவு அருமையான, இனிப்பான உணவை உங்களுக்காகக் கஷ்டப்பட்டு கண்டுபிடிச்சிருக்கேன். எனக்குப் பங்கு கொடுக்காம இருக்க சதி பண்றீங்களோ?'' எனக் கேட்டுச்சு.

சிங்கமும் சிறுத்தையும் ஒருத்தரை ஒருத்தர் பார்த்துக்கிச்சுங்க. அப்புறம் நரி பக்கம் திரும்பினாங்க.

``என்னது அருமையான உணவா? இனிக்கும் உணவா? பங்கு வேணுமா? மொத்தமே கொடுக்கிறோம்'' - அப்படின்னு சொல்லிக்கிட்டே நரி மேலே பாய்ஞ்சதுங்க.

பச்சை திராட்சைகளையும் கறுப்பு திராட்சைகளையும் நரியின் வாய்க்குள்ளே திணிச்சுட்டு கிளம்பிட்டாங்க.

அவ்வளவுதான்... நரியின் முகம் போன போக்கை பார்க்கணுமே... கண்ணெல்லாம் பிதுங்கி... முகம் கோணி...

``ச்சே... தூ... தூ... தூ... இந்தத் திராட்சைகள் நிஜமாவே புளிக்குதுப்பா... இந்த நிலமும் தண்ணியும் சரியில்லை போலிருக்கு'' - அப்படின்னு சொல்லிக்கிட்டே துப்பிச்சு.

அப்புறமா, `ம்... திராட்சை நரியின் கதை- பார்ட் த்ரீ'யிலயாவது நல்ல முடிவு கொடுங்கப்பா' என்று மனசுக்குள்ளே புலம்பிக்கிட்டே நடக்க ஆரம்பிச்சது.

என்ன சுட்டீஸ் கதை பிடிச்சிருந்துச்சா?

இந்தக் கதையை அழகான குரலில் கேட்க...

இந்தக் கதையை உங்களுக்குச் சொல்பவர்: அபிநயா ஶ்ரீகாந்த்