Published:Updated:

பூசணிக்காய் நகரம்- உங்கள் சுட்டிகளுக்குச் சொல்ல ஒரு குட்டிக்கதை #DailyBedTimeStories #VikatanPodcast

உங்கள் செல்லக் குழந்தைகளுக்குத் தினமும் இரவில் ஒரு குட்டிக் கதை சொல்வதன் மூலம், அவர்களின் கற்பனைத் திறனை வளர்க்கலாமே... ஒரு நகரம் முழுக்கவே பூசணிக்காய்கள். அங்கே ஒரு புதிய காய் ஒன்று வந்ததும் என்ன நடக்கிறது என்பதுதான் இன்றைய கதை!

pumpkin
pumpkin ( pixabay )

அந்த நகரத்தில் எல்லாமே பூசணிக்காய்கள்தான்.

குண்டு பூசணிக்காய், ஒல்லி பூசணிக்காய், வட்ட பூசணிக்காய், சதுர பூசணிக்காய், செவ்வக பூசணிக்காய், முக்கோண பூசணிக்காய், நட்சத்திர பூசணிக்காய்... இப்படிப் பல வடிவங்களில் பூசணிக்காய்கள்!

Chutti Bedtime Stories
Chutti Bedtime Stories

அதிலும் பல வண்ணங்கள்... சிவப்பு குண்டு பூசணிக்காய்... மஞ்சள் குண்டு பூசணிக்காய்... பச்சை ஒல்லி பூசணிக்காய்... நீல வட்ட பூசணிக்காய்... கறுப்பு சதுர பூசணிக்காய்... வெள்ளை சதுர பூசணிக்காய்... ஆரஞ்சு செவ்வக பூசணிக்காய்... கருநீல முக்கோண பூசணிக்காய்... இளம் மஞ்சள் நட்சத்திர பூசணிக்காய்!

அதிலும் பல வகைகள்... சிறிய விதை சிவப்பு குண்டு பூசணிக்காய்... பெரிய விதை ஒல்லி பூசணிக்காய்... இரு விதை நீல வட்ட பூசணிக்காய்... பொடி விதை ஆரஞ்சு முக்கோண பூசணிக்காய்!

அந்த நகரத்தில் பூசணி விதைகளைத் தவிர, வேற விதைகள் ஏதும் இல்லை. அந்த நிலத்தில் பூசணி செடிகளைத் தவிர, வேற செடிகள் இல்லை... அந்த இடத்தில் பூசணிப் பூக்களைத் தவிர, வேற பூக்கள் இல்லை... பூசணிக்காய்களைத் தவிர, வேற காய்கள் இல்லை.

இப்படி இருக்கிறப்போ, ஒரு நாள் ஓர் இளம் மஞ்சள் வட்ட பூசணிக்காய் தன் வீட்டுக்குப் போய்ட்டிருந்துச்சு. அப்போ, வானத்திலிருந்து `தொப்' என ஏதோ அதன் தலை மேலே விழுந்துச்சு.

இ.ம.வட்ட பூசணிக்காய் பதறிப்போய் நிமிர்ந்துப் பார்த்துச்சு. அந்தப் பக்கமாகப் பறந்துட்டிருந்த ஒரு பறவை, குனிஞ்சுப் பார்த்துட்டுப் போய்டுச்சு. அந்தப் பறவையின் கால் விரல்களில் கவ்வியிருந்த ஏதோ ஒண்ணுதான் விழுந்திருக்குன்னு புரிஞ்சுக்கிட்டு தரையில் பார்த்துச்சு.

bird
bird
pixabay

தலை மேலே விழுந்த வேகத்தில் ஒரு ஜம்ப் செஞ்சு அந்த ஏதோ ஒண்ணு, அங்கிருந்த சதுர பூசணிக்காய் செடி மேலே விழுந்திருந்துச்சு. அதுவும் வட்ட பூசணிக்காய் மாதிரியே வட்டமாகத்தான் இருந்துச்சு. ஆனா, ரொம்ப சின்னதாக, சிவப்பு நிறத்தில் இருந்துச்சு.

``ஏய்... யார் நீ? இவ்வளவு சின்ன வட்ட பூசணிக்காயை நான் பார்த்ததே இல்லையே... எங்கிருந்து வர்றே?'' என்று கேட்டுச்சு வட்ட பூசணிக்காய்.

``நான் பூசணிக்காயே இல்லை. என் பெயர் தக்காளி. மலைக்கு அந்தப் பக்கம் இருந்தவள்'' என்றது அது.

``தக்காளியா... அப்படி ஒரு பெயரா? உன்னை விசாரிக்கணுமே. எங்களோட திடலுக்கு வா'' என்று அழைச்சுட்டுப் போச்சு வட்ட பூசணிக்காய்.

வழக்கமாகக் காலையிலும் மாலையிலும் ஒன்றுகூடி கதைகள் பேசும் இடம்தான் திடல். அங்கே எல்லா வகையான பூசணிக்காய்களும் வரும். இப்பவும் அதேபோல பெரிய விதை ஒல்லி பூசணிக்காய், சிறிய விதை சிவப்பு குண்டு பூசணிக்காய், கறுப்பு சதுர பூசணிக்காய் எனப் பலவும் அங்கே இருந்துச்சுங்க.

 tomato
tomato
pixabay

தக்காளியை ஆச்சர்யத்துடன் சூழ்ந்து, ஆளாளுக்கு கேள்வி கேட்க ஆரம்பிச்சதுங்க. தக்காளியும் அசராமல் பதில் சொல்லிச்சு.

``எங்களால் நம்பவே முடியலை. பூசணிக்காய்களைத் தவிர, வேற காய்களும் பழங்களும் உலகத்தில் இருக்கா?'' எனக் கேட்டுச்சு நட்சத்திர பூசணிக்காய்.

``ஆமாம்! உதாரணமா முருங்கைக்காய் என்று ஒரு காய். ஒல்லியா இருக்கும்'' என்றது தக்காளி.

``ஒல்லியான்னா... என்னை மாதிரி இருக்குமா?'' எனக் கேட்டது பச்சை ஒல்லி பூசணிக்காய்.

``இல்லே... இல்லே... உன்னைவிட ஒல்லியா இருக்கும்?''

``என்னைவிட ஒல்லியா இருக்க முடியுமா?'' எனக் கேட்டுச்சு அந்த ஒல்லி பூசணிக்காய்.

``சரி, அதன் விதை என்னை மாதிரி பெருசா இருக்குமா?'' என்று காட்டியது பெரிய விதை ஒல்லி பூசணிக்காய்.

``இல்லே... இல்லே... அந்த விதை வேற மாதிரி இருக்கும்'' என்றது தக்காளி.

Vegetables
Vegetables
pixabay

``ஒரு ஒல்லி முருங்கைக்காய்க்குள் இதைவிட வேற மாதிரி விதை இருக்க முடியுமா?'' என வியந்துச்சு அது.

இப்படியே நிறம், வடிவம் என ஒவ்வொண்ணும் ஒவ்வொரு கேள்வி கேட்டு ஆச்சர்யப்பட்டதுங்க.

``நீங்க எல்லோரும் எல்லாத்தையும் உங்களிலிருந்தே பார்க்கறீங்க. உங்களோடு ஒப்பிட்டே கேட்கறீங்க. உலகில் இருப்பவை அப்படியில்லை. ஒவ்வொண்ணும் ஒரு சிறப்போடு இருக்கு. என்னோடு மலைக்கு அந்தப் பக்கம் வந்து பாருங்க. நாங்க எங்களின் விதைகளைக் கொடுக்கிறோம். அதை உங்க நகரத்தில் கொண்டுவந்து விதையுங்க. விதவிதமான காய்களை இங்கே உருவாக்கலாம்'' என்றது தக்காளி.

பூசணிக்காய்கள் ஒண்ணுகூடி `கிசு கிசு' எனப் பேசிச்சுங்க. அப்புறம், ``நீ சொல்றதை நம்பமுடியலை. சும்மா விடவும் முடியலை. உன்னோடு நாலு பேர் மட்டும் வரோம். உண்மையாக இருந்தால் அப்புறம் மத்தவங்க வருவாங்க'' என்றது சின்ன விதை சிவப்பு குண்டு பூசணிக்காய்.

pumpkin
pumpkin

அப்புறம் என்ன ஆச்சுன்னு நினைக்கறீங்க...

அங்கே போன நாலு பூசணிக்காய்களும் தக்காளி சொன்னது உண்மைதான்னு புரிஞ்சுக்கிச்சுங்க. நிறைய காய்களின் விதைகளைக் கொண்டுவந்து பூசணிக்காய் நகரத்தில் விதைச்சாங்க.

அப்புறம் என்ன ஆச்சு?

இப்போ, பூசணிக்காய் நகரத்தில் வேற செடிகளும் இருக்கு... பூசணிக்காய் நகரத்தில் வேற காய்களும் இருக்கு... பூசணிக்காய் நகரத்தில் வேற பூக்களும் இருக்கு... பூசணிக்காய் நகரத்தில்...

pumpkin
pumpkin
pixabay

"போதும்... போதும் இன்னமும் பூசணிக்காய் நகரம்ன்னே சொல்லிட்டிருந்தா எப்படி? இப்போ நாங்களும்தானே இருக்கோம். வேற பெயர் வைக்கலாமே'' என்றது ஒரு கத்திரிக்காய்.

"நீ சொல்றதும் சரிதான். என்ன பெயர் வைக்கலாம்? யாருக்கும் அதிருப்தி இல்லாத மாதிரி பொதுவா ஒரு பெயர் வைக்கணும். ஆளுக்கு ஒரு பெயர் சொல்லுங்கப்பா'' என்றது நட்சத்திர பூசணிக்காய்.

நீங்களும் ஏதாவது அருமையான பெயரைச் சொல்லுங்களேன்!

உங்கள் சுட்டிகளுக்கு இந்தக் கதையைச் சொல்பவர்: அபிநயா ஶ்ரீகாந்த்