Published:Updated:

காட்டுக்குள்ளே டாக்டர் முயலின் வைத்தியம்- சுட்டிகளுக்கான குட்டிக்கதை #DailyBedTimeStories

வைத்தியம் ( pixabay )

உங்கள் செல்லக் குழந்தைகளுக்குத் தினமும் இரவில் ஒரு குட்டிக் கதை சொல்வதன் மூலம், அவர்களின் கற்பனைத் திறனை வளர்க்கலாமே... காட்டுக்குள்ளே டாக்டர் முயல், நவீன முறையில் வைத்தியம் பார்க்கிறார். அவர் எப்படி வைத்தியம் செய்யறார் என்று பார்க்கலாமா?

காட்டுக்குள்ளே டாக்டர் முயலின் வைத்தியம்- சுட்டிகளுக்கான குட்டிக்கதை #DailyBedTimeStories

உங்கள் செல்லக் குழந்தைகளுக்குத் தினமும் இரவில் ஒரு குட்டிக் கதை சொல்வதன் மூலம், அவர்களின் கற்பனைத் திறனை வளர்க்கலாமே... காட்டுக்குள்ளே டாக்டர் முயல், நவீன முறையில் வைத்தியம் பார்க்கிறார். அவர் எப்படி வைத்தியம் செய்யறார் என்று பார்க்கலாமா?

Published:Updated:
வைத்தியம் ( pixabay )

செண்பகத் தோப்பு என்கிற காட்டில் இருந்த அந்த மருத்துவமனையின் கதவுகள் திறந்து இருந்துச்சு. உள்ளே இருந்து வந்த காட்டுக்கோழி கனகா, `மருத்துவர்' என்ற அறிவிப்புப் பலகையில் இருந்த ஒரு பொத்தனை நகர்த்தினாங்க. அங்கே, `உள்ளே' என்கிற வார்த்தை வந்துச்சு.

கொஞ்ச நேரத்தில் சோர்வோடு வந்த மயில் மதன், ``இங்கே `டாக்டர் மெய்' யாரு?'' எனக் கேட்டான்.

டோக்கன் எண்களை எழுதிட்டிருந்த கனகா, ``உங்களுக்கு என்ன பிரச்னை சொல்லுங்க'' எனக் கேட்டாங்க.

வைத்தியம்
வைத்தியம்

காட்டுக்கோழி கனகாதான் மெய் மருத்துவரின் உதவியாளர். அந்த மயில் பதில் சொல்ல வாய் திறக்கிறதுக்குள்ளே ஓடிவந்த குரங்கு குபீரன், மயிலையும் காட்டுக்கோழியையும் தாண்டிக்கிட்டு, டாக்டரின் அறைக் கதவை `படார்'னு திறந்தான்.

தன்னோட இருக்கையில் உட்கார்ந்து ஒரு குட்டித் தியானத்தில் இருந்த மருத்துவர் மெய், நடுங்கிப்போய் கண்களைத் திறந்தார்.

அந்த மருத்துவர் யார் தெரியுமா? வயதான காட்டு முயல்.

``ஏய்... யப்பா... கதவை மெதுவாகத் திறக்க மாட்டியா? டாக்டருக்கே ஹார்ட் அட்டாக் வரவெச்சுடுவே போலிருக்கே'' எனக் கொஞ்சம் கோபத்தோடு கேட்டார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

``டாக்டர் அவசரம்... புலி 14, காட்டாறு ஓரத்தில துடிச்சுட்டு இருக்கு. சரியான வயிற்று வலியாம். எந்திரிச்சு நடக்கவும் முடியலையாம்” எனச் சொன்னான் குரங்கு குபீரன்.

குபீரனை ஆசுவாசப்படுத்திய முயல் மெய், ``புலிக்குக் குடிக்கத் தண்ணீர் தந்தீங்களா? முதலுதவி செய்தீங்களா?” எனக் கேட்டுக்கிட்டே தனது மடிக்கணினியைத் திறந்தார்.

peacock
peacock
pixabay

மடிக்கணினி என்றால் தெரியும்தானே சுட்டீஸ்... லேப்டாப். காட்டில் வாழும் எல்லா விலங்குகள் பற்றிய தகவல்களும் அதில் இருக்கும். ஒவ்வொரு விலங்குக்கும் அடையாள எண் கொடுத்திருக்கார் மெய். அந்த லேப்டாப் வழியாவே `புலி 14' பற்றிய விவரங்களைப் பார்க்க ஆரம்பிச்சார்.

``இதயத் துடிப்பு... சரியா இருக்கு. உடல் வெப்ப அளவு... ஓகே! ரத்த அழுத்தம்... நார்மல்தான். நாடித் துடிப்பும் சரியாக இருக்கு. ம்... அப்புறம் என்ன பிரச்னை?'' என உற்றுப்பார்த்தார் மெய்.

``ஆஹா... தெரிஞ்சுப்போச்சு. `புலி 14' வயிற்றில் நோய்த்தொற்று இருக்கு. நேரங்கெட்ட நேரத்தில் சாப்பிட்டிருக்கார். அது சரியாக ஜீரணமாகலை. கனகா, அந்த `ஜீரண சூரணம்' பாட்டிலை எடு. ஒரு ஸ்பூனை பேப்பரில் மடிச்சு குபீரனிடம் கொடு'' என்றார்.

காட்டுக்கோழி கனகா கொடுத்த ஜீரண சூரணத்தை வாங்கிக்கொண்ட குபீரனிடம், ``இதைக் கொஞ்சம் தண்ணி விட்டு நல்லா குழைச்சு சாப்பிடச் சொல்லு சரியாகிடும். அப்புறம் என்னை வந்து பார்க்கச் சொல்லு'' என்றார் மெய் முயல்.

குரங்கு குபீரன் தலையாட்டிட்டுவிட்டு கிளம்பினான். இதையெல்லாம் வாயைப் பிளந்துப் பார்த்துட்டிருந்தான் மயில் மதன்.

monkey
monkey
pixabay

`காட்டாறு இங்கிருந்து ரெண்டு கிலோமீட்டர் தூரத்தில் இருக்கு. இந்த டாக்டர் உட்கார்ந்த இடத்திலேயே அந்தப் பெட்டியைப் பார்த்து வயிறு வலிக்கான காரணத்தை எப்படிக் கண்டுபிடிச்சார்?' என நினைச்சான்.

காட்டுக்கோழி கனகாவின் காதுக்குப் பக்கத்தில் குனிஞ்சு அந்தச் சந்தேகத்தைக் கேட்டும்விட்டான் மதன்.

``நீங்க முதல் தடவையாக டாக்டரைப் பார்க்க வர்றீங்களா?” எனக் கேட்டாங்க கனகா.

``ஆமாம்… இதுவரைக்கும் எந்த வைத்தியரிடமும் போனதில்லை. ஆனா, இப்போதெல்லாம் முன்னமாதிரி தோகையை நல்லா விரிச்சு ஆட முடியலை. ரொம்ப பாரமா இருக்கு. அதனால்தான் டாக்டரைப் பார்க்க வந்தேன்'' என்றான் மதன்.

இவங்க கிசுகிசு எனப் பேசினாலும் அதைக் கேட்டுவிட்ட மருத்துவர் மெய், ``உங்க சந்தேகத்துக்கும் பிரச்னைக்கும் நானே பதில் சொல்றேன்'' என ஆரம்பிச்சார்.

`` அறிவியல் வளர்ந்துட்ட காலம் இது. நான் ஒரு ஸ்பெஷல் ஸ்டிக்கர் கண்டுபிடிச்சு இருக்கேன். அதை என்னிடம் முதல்முறை சிகிச்சைக்கு வரும் விலங்குகளின் உடம்பில் ஒட்டிடுவேன். அந்த ஸ்டிக்கரில் சென்சார் இருக்கு. அது, உடம்புக்குள் என்ன நோய் இருக்குன்னு காண்பிக்கும். இங்கிருந்தே தெரிஞ்சுப்பேன்'' எனச் சொன்னார்.

hen
hen
pixabay

மயில் மதனுக்கு விஷயம் புரிஞ்சது. ``அது சரி டாக்டர்... இன்னொரு சந்தேகம்...'' எனத் தயக்கத்தோடு வார்த்தையை இழுத்தான்.

``ம்... எதுவா இருந்தாலும் கேளுங்க. நான் கோபப்படவே மாட்டேன். ஏன்னா, நோயாளிகளின் எல்லாக் கேள்விகளுக்கும் பொறுமையாகப் பதில் சொல்லி சந்தேகம் போக்கறதுதான் ஒரு டாக்டருக்கான முதல் தகுதி. வைத்தியம் பார்க்கிறது அப்புறம்தான்'' என்றார் முயல் மெய்.

உடனே மயில் மதன், ``மருத்துவத்தில் இவ்வளவு டெக்னிக் வெச்சிருக்கீங்க. ஆனா, மருந்தாக சூரணம், மூலிகை எனக் கொடுக்கறீங்களே. நவீன மாத்திரைகள் கிடையாதா?” எனக் கேட்டான்.

சிரித்த டாக்டர் மெய், ``நீ கேட்கிறதில் தப்பே இல்லை. அறிவியலையும் நவீனத்தையும் எங்கே எந்த அளவுக்குப் பயன்படுத்தணுமோ அப்படிப் பயன்படுத்தணும். நம்ம காட்டில் கிடைக்காத மூலிகைகளே இல்லே. அதில் மருத்துவக் குணங்கள் நிறைஞ்சு இருக்கு. அப்படி இருக்கிறப்போ எதுக்கு ரசாயனம் கலந்த மாத்திரைகளைப் பயன்படுத்தணும்?'' என்றார்.

rabbit
rabbit
pixabay

``ஆஹா... விஷயம் புரிஞ்சது டாக்டர். சத்தான உணவும், நம்மைச் சுற்றி இயற்கையில் கிடைக்கும் பொருள்களுமே மருந்துன்னு சொல்றீங்க'' என்றான் மதன்.

``அதேதான்... இப்போ உங்களுடைய தோகையின் பிரச்னைக்கு வரேன் தம்பி. நீங்களும் முன்னே மாதிரி சத்தான உணவைச் சாப்பிடறதில்லே போலிருக்கு. அதனாலதான் உடம்பு பலவீனமாகி தோகையைத் தூக்கி ஆட முடியலை'' என்றார் டாக்டர் மெய்.

``ஆமாம் டாக்டர். ரொம்ப நன்றி. நான் இனிமே சத்தான உணவைச் சாப்பிடறேன்'' எனச் சொல்லிட்டு சந்தோஷமாகக் கிளம்பினான் மயில் மதன்.

``கனகா... நான் என்னுடைய தியானத்தை தொடரப் போறேன். அடுத்த பேஷன்ட் வந்தா மெதுவா கதவைத் தட்டு'' எனச் சொல்லிட்டு கண்களை மூடிக்கிட்டார் மருத்துவர் மெய் முயல்.

என்ன சுட்டீஸ் கதை பிடிச்சிருந்துச்சா... இதுல இருந்து என்ன புரிஞ்சது?

இந்தக் கதையை அழகான குரலில் கேட்க...

கதை சொல்பவர்: அபிநயா ஶ்ரீகாந்த்