அந்தக் காட்டுல சுப்பு என்கிற ஒரு முயலுக்குக் கல்யாணம் ஏற்பாடு நடந்துச்சாம். அதுக்காக, தன் நண்பர்கள் எல்லோருக்கும் பத்திரிகை வைக்க வந்துச்சாம் சுப்பு முயல்.
அந்த மரத்துக்குக் கீழே வந்து நின்னு...
``டொக் டொக் மரங்கொத்தி...
டொக் டொக் மரங்கொத்தி...
வீட்டுல இருக்கியா?'' என்று கூப்பிட்டுச்சாம்.
மரப்பொந்திலிருந்து தலையை நீட்டின மரங்கொத்தி...
``சொல்லு சுப்பு முயலே...
சொல்லு சுப்பு முயலே...
என்ன விஷயம்?'' என்று கேட்டுச்சாம்.
``அடுத்த வாரம் அதிகாலையிலே
எனக்குக் கல்யாணம் அதுக்கு
நீ தவறாம வந்துடணும்'' என்று சொல்லி, பனையோலையில் செஞ்ச பத்திரிகையை நீட்டுச்சாம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
பொந்திலிருந்து பறந்துவந்த மரங்கொத்தி, அந்தப் பத்திரிகையை அலகில் வாங்கிக்கிட்டு...
``கட்டாயம் நானும் வந்துடுவேன்.
உன் கல்யாணத்திலே
மேளம் நானும் கொட்டுவேன்'' என்று சொல்லிச்சாம்.
மரங்கொத்திக்கு நன்றி சொல்லிட்டு, அடுத்த மரத்துக்குக் கீழே போச்சாம் சுப்பு முயல்.

``குக் குக் குயிலே...
குக் குக் குயிலே...
எங்கே நீ மறைஞ்சிருக்கே?'' என்று கூப்பிட்டுச்சாம்.
இலைகளுக்கிடையே ஒளிந்திருந்த குயில் வெளியே வந்து...
``சுட்டி சுப்பு முயலே...
சுட்டி சுப்பு முயலே...
முகத்தில் என்ன சந்தோஷம்?'' என்று கேட்டுச்சாம்.
``ஆலமரத்து அடியிலே
அடுத்த வார அதிகாலையிலே
எனக்குக் கல்யாணம் அதுக்கு
அவசியம் நீ வந்துடணும்'' என்று சொல்லிச்சாம் சுப்பு முயல்.
``நிச்சயமா நானும் வந்துடுவேன்.
உன் கல்யாணத்திலே
பாட்டு நானும் பாடுவேன்'' என்று சொல்லிச்சாம் குயில்.
குயிலுக்கு நன்றி சொல்லிவிட்டு, அங்கிருந்த புற்றுக்கு அருகே வந்த சுப்பு முயல்...
``புஸ் புஸ் பாம்பு...
புஸ் புஸ் பாம்பு...
புற்றுக்குள் நீயும் இருக்கியா?'' என்று கேட்டுச்சாம்.
உள்ளே இருந்து தலையை நீட்டிய அந்த நல்ல பாம்பு...

``அடடே அழகு சுப்பு...
அடடே அழகு அழகு...
பேச்சில் என்ன பிரகாசம்?'' என்று கேட்டுச்சாம்.
``ஒரு கல் தொலைவிலே
ஆலமரத்து அடியிலே
அடுத்த வார அதிகாலையிலே
எனக்குக் கல்யாணம் அதுக்கு
கட்டாயம் நீ வந்துடணும்'' என்று சொல்லிச்சாம் சுப்பு முயல்.

``சத்தியமா நானும் வந்துடுவேன்.
உன் கல்யாணத்திலே
தோரணமாக நானும் வரவேற்பேன்'' என்று சொல்லி, பத்திரிகையை நாக்கை நீட்டி வாங்கிக்கிச்சாம் பாம்பு.
பாம்புக்கு நன்றி சொல்லிவிட்டு, புல்வெளியில் மேய்ந்துகொண்டிருந்த புள்ளிமானிடம் வந்த சுப்பு...
``துள்ளும் புள்ளிமானே...
துள்ளும் புள்ளிமானே...
கொஞ்சம் இப்படித் திரும்பறியா?'' என்று கூப்பிட்டுச்சாம்.
பக்கத்திலேயே வந்த புள்ளிமான்...
``செல்லம் சுப்பு முயலே...
செல்லம் சுப்பு முயலே...
சொல்லு என்ன விசேஷம்?'' என்று கேட்டுச்சாம்.
``ஓடம் ஒட்டி கரையிலே
ஒரு கல் தொலைவிலே
ஆலமரத்து அடியிலே
அடுத்த வார அதிகாலையிலே
எனக்குக் கல்யாணம் அதுக்கு
குடும்பத்தோடு நீ வந்துடணும்'' என்று சொல்லிச்சாம் சுப்பு முயல்.
பத்திரிகையைக் கொம்புக்குள் வாங்கிக்கொண்ட புள்ளிமான்...
``மகிழ்ச்சி நானும் வந்துடுவேன்.
உன் கல்யாணத்திலே
கோலமிட்டு நானும் அலங்கரிப்பேன்'' என்று சொல்லிச்சாம்.

புள்ளிமானுக்கு நன்றி சொல்லிவிட்டு கிளம்பிய சுப்பு முயல், அங்கிருக்கும் குகைக்கு அருகே வந்து...
``கர்ஜிக்கும் சிங்கமே...
காட்டின் அரசனே...
குகைக்குள் நீயும் இருக்கியா?'' என்று கூப்பிட்டுச்சாம்.
குகையிலிருந்து கம்பீரமாக வந்த சிங்கம்...
``சின்ன தம்பி சுப்பு...
சின்ன தம்பி சுப்பு...
என்ன நடையில் துள்ளல்?'' என்று கேட்டுச்சாம்.
``நம்ம காட்டின் எல்லையிலே
ஓடம் ஒட்டி கரையிலே
ஒரு கல் தொலைவிலே
ஆலமரத்து அடியிலே
அடுத்த வார அதிகாலையிலே
எனக்குக் கல்யாணம் அதுக்கு
முன்னதாக நீயும் வந்துடணும்'' என்று சொல்லிச்சாம் சுப்பு முயல்.

``தவறாமல் நானும் வந்துடுவேன்
உன் கல்யாணத்தை
தோழனாகப் பாதுகாத்து நடத்திடுவேன்'' என்று சொல்லி, பத்திரிகையைப் பிடரியில் வெச்சுக்கிச்சாம்.
சிங்கத்துக்கு நன்றி சொல்லிட்டு கிளம்பிய சுப்பு முயல், மரத்தை ஒடிச்சு சாப்பிட்டுட்டு இருந்த யானையிடம் வந்து...
``உருவில் உயர்ந்த யானையே...
உருவில் உயர்ந்த யானையே...
கொஞ்சம் குனிந்து கவனிக்கிறியா?'' என்று கூப்பிட்டுச்சாம்.
தும்பிக்கையால் முயலை தூக்கிக்கிட்ட யானை...
``காது நீண்ட பையா...
கண்கள் அழகு பையா...
என்ன இந்தக் கலகலப்பு?'' என்று கேட்டுச்சாம்...
``நல்லோர்களின் நடுவினிலே
நம்ம காட்டின் எல்லையிலே
ஓடம் ஒட்டி கரையிலே
ஒரு கல் தொலைவிலே
ஆலமரத்து அடியிலே
அடுத்த வார அதிகாலையிலே
எனக்குக் கல்யாணம் அதுக்கு
அன்பாக நீயும் வந்துடணும்'' என்று சொல்லிச்சாம் சுப்பு முயல்.
காதுகளை ஆட்டியவாறு யானை...

``அற்புதம் நானும் வந்துடுவேன்
உன் கல்யாணத்தை
காட்டுக்கே முழங்கி சொல்லிடுவேன்'' என்று ஆசீர்வாதிச்சதாம்.
யானைக்கு நன்றி சொல்லிவிட்டு, அந்தப் பக்கம் கடந்த நரியிடம் வந்த சுப்பு முயல்...
``கொஞ்சம் நில்லு நரியே...
கொஞ்சம் நில்லு நரியே...
சொல்வதை காதில் வாங்கறியா?'' என்று சொல்லிச்சாம்.
``ஆஹா சுட்டி முயலே...
ஆஹா சுட்டி முயலே...
சொல்லு என்ன கையிலே?'' என்று கேட்டுச்சாம் நரி.
``நம்பிக்கை நிறைந்த நாளிலே
நல்லோர்களின் நடுவினிலே
நம்ம காட்டின் எல்லையிலே
ஓடம் ஒட்டி கரையிலே
ஒரு கல் தொலைவிலே
ஆலமரத்து அடியிலே
அடுத்த வார அதிகாலையிலே
எனக்குக் கல்யாணம் அதுக்கு
யோசிக்காம நீயும் வந்துடணும்'' என்று சொல்லிச்சாம் சுப்பு முயல்

``பிரமாதம் நானும் வந்துடுவேன்
உன் கல்யாணத்தில்
விருந்தை நானும் பரிமாறுவேன்'' என்று சொல்லி பத்திரிகையை வாங்கிக்கிச்சாம் நரி.
இப்படியே குரங்கு, கரடி, ஆமை என எல்லோருக்கும் பத்திரிகையைக் கொடுத்துச்சாம் சுப்பு முயல்.
சொன்ன நாளில் அத்தனை பேரும் சுப்பு கல்யாணத்துக்கு வந்தாங்களாம். தேன் நிறைந்த சட்டியுடன் வந்த கரடி, எல்லோருக்கும் வெல்கம் டிரிங் கொடுத்துச்சாம். மணமகள் முயலை, பறவைகள் அலங்கரிக்கும் பொறுப்பை எடுத்துக்கிச்சாம்.
இப்படி ஒவ்வொருவரின் பங்களிப்பில்...

உற்சாகம் மிக்க பொழுதினிலே
நம்பிக்கை நிறைந்த நாளிலே
நல்லோர்களின் நடுவினிலே
அந்தக் காட்டின் எல்லையிலே
ஓடம் ஒட்டி கரையிலே
ஒரு கல் தொலைவிலே
ஆலமரத்து அடியிலே
அந்த நேர அதிகாலையிலே
சுப்பு முயலின் கல்யாணம்
கொண்டாட்டமாக நடந்துச்சாம்!
இந்தக் கதையை அழகான குரலில் ஆடியோவில் கேட்க...
கதை சொல்பவர்: அபிநயா ஶ்ரீகாந்த்