Published:Updated:

யானைத் தலைவன் மகன் தும்பு ஏன் சோகமா இருக்கான்? - சுட்டிகளுக்கான குட்டிக்கதை #DailyBedTimeStories  

தும்பு ( pixabay )

உங்கள் செல்லக் குழந்தைகளுக்குத் தினமும் இரவில் ஒரு குட்டிக்கதை சொல்வதன் மூலம், அவர்களின் கற்பனைத் திறனை வளர்க்கலாமே... இன்றைய கதை... யானைகளின் தலைவன் மகனான தும்பு எதுக்கு சோகமா இருக்கு?

யானைத் தலைவன் மகன் தும்பு ஏன் சோகமா இருக்கான்? - சுட்டிகளுக்கான குட்டிக்கதை #DailyBedTimeStories  

உங்கள் செல்லக் குழந்தைகளுக்குத் தினமும் இரவில் ஒரு குட்டிக்கதை சொல்வதன் மூலம், அவர்களின் கற்பனைத் திறனை வளர்க்கலாமே... இன்றைய கதை... யானைகளின் தலைவன் மகனான தும்பு எதுக்கு சோகமா இருக்கு?

Published:Updated:
தும்பு ( pixabay )

``தும்புவுக்கு என்ன ஆச்சு? சேட்டை பண்ணிக்கிட்டு, ஓடியாடித் திரிஞ்சுட்டு இருந்தவன், கொஞ்ச நாளா அமைதியா இருக்கானாமே'' - அப்படின்னு கேட்டுச்சு அப்பா யானை.

``என்னத்த சொல்ல... எல்லோருக்கும் முன்னாடி எழுந்து போய், நண்பர்களைத் தட்டியெழுப்பி விளையாடக் கூப்பிடுவான். இப்போ, அவங்க வந்து கூப்பிட்டாலும் வரலைன்னு சொல்லிட்டு படுத்துக்கறான்'' - அப்படின்னு சொல்லிச்சு அம்மா யானை.

தும்பு
தும்பு
pixabay

இவங்க ரெண்டு பேரும் இப்படிக் கவலையோடு பேசிக்கிறது, அவங்களோட செல்லக் குட்டியான தும்பு பற்றிதான்.

தும்பு ரொம்ப சுட்டியான யானைக்குட்டி. மற்ற யானைக்குட்டிகளுக்கு எல்லாம் தலைவன் மாதிரி. தலைவன் மாதிரி என்ன... தலைவனேதான். எந்த விளையாட்டுன்னாலும் தும்பு சொல்றதுதான் ரூல்ஸ். உதாரணமா, தேங்காய்ப் பந்தாட்டம்...

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

தேங்காயைப் பந்து மாதிரி அடிச்சு விளையாடுவாங்க. கால்பந்தாட்டம் மாதிரிதான் அந்த விளையாட்டு. எதிரெதிரே ரெண்டு ஆலமரங்களின் விழுதுகளை வலையாக முடிச்சுப் போட்டு வெச்சிருப்பாங்க. அதுதான் கோல் போஸ்ட். தும்பு எந்த அணியில் இருக்கானோ, அந்த அணியில் மத்தவங்களும் சேரத் துடிப்பாங்க. ஏன்னா, எப்படியும் அந்த அணிதான் ஜெயிக்கும்.

யாரெல்லாம் தன் அணியில் இருக்கணும்னு தும்புதான் முடிவு பண்ணுவான்.

தும்பு
தும்பு
pixabay

அட அதுகூட பரவாயில்லே... எதிர் அணியில் யாரையெல்லாம் செலக்ட் பண்ணணும் என்பதையும் தும்புதான் முடிவு பண்ணுவான்.

`கோல்ல்ல்ல்ல்ல்ல்' எனத் தும்பு கத்தினால் அது கோல்தான்.

``ஏய்ய்... அது விழுதுகள் மேலே படவே இல்லே''ன்னு சொன்னால் ஒப்புக்கவே மாட்டான் தும்பு.

``எட்ஜ்ல பட்டுச்சு, அங்கே பட்டாலும் கோல்தான்'' - அப்படின்னு சொல்வான்.

அட அதுகூட பரவாயில்லே... சில சமயம் தும்பிக்கையால் தூக்கிப் போடுவான் தும்பு.

``ஹேய்... என்னப்பா இப்படிப் போடறே. இது என்ன கூடைத்தேங்காய் ஆட்டமா?'' - அப்படின்னு கேட்டால்...

``ஹாங்... தேங்காய்ப் பந்தாட்டம் விளையாடி போர் அடிக்குது. அதனால, இதைக் கூடைத் தேங்காயாட்டமா வெச்சுப்போம்'' - அப்படின்னு அசால்ட்டா சொல்வான்.

இப்படி எல்லாத்திலும் தும்பு சொல்றதைக் கேட்டுக்கணும். இல்லைன்னா கோவிச்சுப்பான். அப்படிப்பட்டவன் கொஞ்ச நாளாக ஆளே மாறிட்டான். யார்கிட்டேயும் சரியா பேசறதில்லே... விளையாடப் போறதில்லே... தனியாக, ஆற்றங்கரைக்குப் போயிடறான். மரத்தடியில் ரொம்ப நேரம் இருந்துட்டு வீட்டுக்கு வந்துடுறான்.

elephant
elephant
pixabay

அங்கே இருக்கும் யானைகள் கூட்டத்துக்கு தும்புவின் அப்பாதான் தலைவன். அதனால, அந்த அப்பா யானைக்கு எப்பவும் நிறைய வேலை இருக்கும். யானைகளுக்குள் நடக்கிற பிரச்னைகளைப் பேசி சரிசெய்யறது, யானைகளுக்கும் மனுஷங்களுக்கும் பிரச்னை நடந்துட்டா அங்கே போய்ப் பார்க்கிறது...

இப்படி ஓயாமல் ஓடிட்டே இருக்கும் அப்பா யானை. கொஞ்ச நேரம்தான் குடும்பத்துக்கே ஒதுக்க முடியும். இப்போதான் அப்பா யானைக்கு ஓய்வு கிடைச்சது. தும்புவின் பிரச்னை பற்றி தெரிஞ்சது.

``சரி, இப்போ தும்பு எங்கே?''ன்னு கேட்டுச்சு அப்பா யானை.

``அநேகமா, ஆற்றங்கரையில்தான் இருப்பான்'' - அப்படின்னு சொல்லிச்சு அம்மா யானை.

அப்பா யானை ஆற்றங்கரைக்கு நடக்க ஆரம்பிச்சது. கொஞ்சம் தூரத்திலேயே ஆற்றுக்குள் இரண்டு கால்களையும் தொங்கப் போட்டுக்கிட்டு தும்பு உட்கார்ந்து இருக்கிறது தெரிஞ்சது.

`பக்கத்துல போய் ஏதாவது விளையாட்டு காட்டுவோம்'னு நினைச்ச அப்பா யானை, சுற்றியும் பார்த்துச்சு.

elephant
elephant
pixabay

அங்கிருந்த ஒரு மூங்கிலை மெ...து...வா... உடைச்சு தும்பிக்கையில் பிடிச்சுக்கிச்சு. சத்தம் போடாமல் தும்புவுக்குப் பின்னாடி கொஞ்சம் தூரத்திலேயே நின்னுக்கிச்சு.

ஆற்றில் துள்ளித் துள்ளிப் போகும் மீன்களையே பார்த்துட்டு இருந்தான் தும்பு. மெதுவா அவன் காதுக்குப் பக்கத்தில் மூங்கிலின் ஒரு முனையைக் கொண்டுபோச்சு அப்பா யானை. மறுமுனை துளை வழியே 'உப்ப்ப்ப்' எனக் காற்றை ஊதிச்சு.

ஒரு நிமிஷம் அப்படியே ஜம்ப் பண்ணி சிலிர்த்து சிரிச்சான் தும்பு. ஆனா, திரும்பிப் பார்த்த அடுத்த நிமிஷமே, தன்னுடைய தும்பிக்கையால் மூங்கில் குச்சியை ஒதுக்கிட்டு, மறுபடியும் மீன்களைப் பார்க்க ஆரம்பிச்சுட்டான்.

இதுவே பழைய தும்புவாக இருந்தால், துள்ளிட்டுப்போய் அதே மூங்கில் குச்சியால் அப்பா யானையின் காதுகளில் ஊதி இருப்பான். ஆனால், இன்றைக்கு அமைதியாக இருக்கான்.

elephant
elephant
pixabay

அப்பா யானை தும்பு பக்கத்துல போய் உட்கார்ந்துச்சு. ``தும்பு, அப்பா மேலே உனக்குக் கோபமா?'' - அப்படின்னு கேட்டுச்சு.

``ம்ஹூம்...'' - அப்படின்னு தலையாட்டினான் தும்பு.

``வேற யாரு மேலே கோபம்? ஏன் கொஞ்ச நாளா நீ இப்படி இருக்கே? என் பையன் ஒரு தலைவன் யானைக்கான துள்ளலோடு இருக்கான்னு சந்தோஷப்பட்டுட்டு இருந்தேன். இப்போ என்ன ஆச்சு?'' - அப்படின்னு தன் தும்பிக்கையால், தும்புவின் தலையைத் தடவிக்கொடுத்துச்சு அப்பா யானை.

``எனக்கு யார் மேலேயும் கோபமில்லப்பா. என் மேலேயே கோபம்''னு சொன்னான் தும்பு.

``என்னது... உன் மேலேயே கோபமா? அதுக்கு என்ன காரணம்?'' - அப்படின்னு ஆச்சர்யப்பட்டுச்சு அப்பா யானை.

``ஆமாம்ப்பா... நான் நண்பர்களோட விளையாடும்போது எவ்வளவோ பிரச்னை வந்திருக்கு. அவங்க என்கிட்ட கோவிச்சுக்கிட்டு இருக்காங்க. அதுக்கு எல்லாம் நான் பதிலடி கொடுத்திருக்கேன். ஆனா, கொஞ்ச நாள் முன்னாடி ஒரு வண்டு, என்னைப் பார்த்து பேசின பேச்சும் கேட்ட கேள்வியும் என் மேலேயே கோபம் வரவெச்சிருக்கு''ன்னு சொன்னான் தும்பு.

elephant
elephant
pixabay

அப்பா யானைக்கு ஒரே ஆச்சர்யம்... ``என்ன தும்பு சொல்றே? ஒரு வண்டு பேசின பேச்சுக்கு ஆளே மாறிட்டியா? அப்படி என்ன நடந்துச்சு?''

``அன்றைக்கு நான் பூச்செடிகள் பக்கம் உட்கார்ந்து படிச்சுட்டிருந்தேன். ஒரு வண்டு சுற்றி சுற்றி வந்துச்சு. ஏய்... எதுக்கு காதுக்குப் பக்கத்தில் வந்து நொய்ய்ய் நொய்ய்ய்ய்னு கத்திட்டு இருக்கேன்னு கேட்டேன். அதுக்கு அந்த வண்டு, `என் இடத்துல உட்கார்ந்துக்கிட்டு நீதான் தொந்தரவா இருக்கே. நான் என் வேலையான தேன் சேகரிக்கும் செயலில் இருக்கேன்னு சொல்லிச்சு. எனக்கு உடனே கோபம் வந்துடுச்சு. நான் யாருன்னு தெரியுமில்லே''ன்னு கேட்டேன். அதுக்கு, `நீயே சொல்லேன்னு சொல்லிச்சு''

தும்பு இப்படிச் சொன்னதும், ``அடடா... அப்புறம்?'' எனக் கேட்டுச்சு அப்பா யானை.

``நான் யானைத் தலைவரின் மகன் எனச் சொன்னேன். உடனே வண்டு, `அது உன் அப்பாவின் பெருமை. அதுல உன்னோட பெருமை என்ன? நீ யானைத் தலைவரின் மகனா இருக்கிறதாலதான் என்ன சொன்னாலும் மத்தவங்க எதுவும் பேசறதில்லே. இதுவே, நீ பக்கத்து காட்டுக்குப் போனால் உன்னை ஒரு கொசுகூட மதிக்காது.

elephant
elephant
pixabay

உன் அப்பா தலைவனாக இருக்க காரணம், அவர் எல்லோரையும் வழிநடத்தறார். எல்லோரின் கருத்துக்கு ஏற்ற மாதிரி செய்யறார். நீ அப்படி இல்லியே. உன் விருப்பத்துக்கு ஏற்ற மாதிரியெல்லாம் இருக்கணும்னு நினைக்கிறே. அப்படின்னு சொல்லிட்டு பறந்து போய்டுச்சு.''

தும்பு இப்படிச் சொன்னதும்... ``ஓஹோ... இதுதான் விஷயமா? தும்பு, அந்த வண்டு சொன்னது ஒரு வகையில் உண்மைதான். விளையாட்டாக இருந்தாலும் சரி, வேற எதுவா இருந்தாலும் சரி, எல்லோரின் கருத்துக்கும் ஆசைக்கும் மதிப்பு கொடுத்து, கூடிப்பேசி முடிவுசெய்யணும். அது எல்லோருக்கும் பிடிச்சதா இல்லைன்னாலும் சரியானதா இருக்கும். ஆனா, ஒண்ணு சொல்லட்டுமா தும்பு.''

இப்படிச் சொல்லிட்டு தும்புவைப் பார்த்த அப்பா யானை, ``இப்போதான் நீ அடுத்த தலைவனுக்கான தகுதியை அடைய ஆரம்பிச்சு இருக்கே''ன்னு புன்னகை செய்தது.

தும்புவுக்கு ஆச்சர்யம்... ``என்னப்பா சொல்றே... எனக்கு தலைவன் தகுதி வந்துருச்சா?''ன்னு கேட்டான்.

``ஆமா... உன் மேலே உனக்குக் கோபம் வந்தப்பவே உன்னோட தப்புகள் பற்றி நீ சிந்திக்க ஆரம்பிச்சுட்டே. இனி, அடுத்தவங்களுக்கு மதிப்பு கொடுப்பே. எல்லோரையும் சேர்த்துகிட்டு சந்தோஷமா விளையாடு''- அப்படின்னு சொல்லிச்சு அப்பா யானை.

துள்ளி எழுந்த தும்பு... ``எனக்குப் புரிஞ்சு போச்சுப்பா. இனிமே நண்பர்களோடு விளையாடும்போது, அவங்க சொல்றதையும் கேட்பேன். இப்பவே போய் எல்லோர்கிட்டேயும் பேசறேன். அதுக்கு முன்னாடி அந்த வண்டு கண்ணில் பட்டால் நன்றி சொல்றேன்''

தும்பு உற்சாகத்தோடு ஓட ஆரம்பிச்சது. நீங்க எப்படி சுட்டீஸ்... விளையாடும்போது எல்லோரும் சொல்றதை கேட்பீங்கதானே?

இந்தக் கதையை அழகான குரலில் கேட்க...

கதை சொல்பவர்: அபிநயா ஶ்ரீகாந்த்